27. இணை கற்பித்தல் - மாநபி அறிவித்த மறைவான
செய்திகள்
உரை:
பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம். ஐ. எஸ். சி.
நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த மறைவான
விஷயங்கள் எல்லாமே அவர்கள் மட்டும் தெரிந்து கொள்வதற்காக அல்ல. நாமும் அதைத்
தெரிந்து கொள்வதற்காத் தான்.
உதாரணமாக, சொர்க்கம் இருக்கிறது என்று நாம் நம்புகின்றோம். இது மறைவானது. இதை நமக்கு
வழங்கப்பட்ட ஐம்புலன்களைக் கொண்டு பார்க்க முடியாது. ஆறவாது அறிவைக் கொண்டு
சிந்தித்தாலும் கூட சொர்க்கத்தை அறிய முடியாது.
அப்படியானால் நாம் எவ்வாறு சொர்க்கத்தை
நம்புகின்றோம்? சொர்க்கம் இருக்கிறது, அதை நம்ப வேண்டும் என்று படைத்தவன் சொல்லிவிட்டான்
என்பதற்காக நம்புகிறோம்.
அவன் நமக்கு இதைச் சொல்லவில்லையானால் சொர்க்கம், நரகம் அதில் உள்ள பாலம், அர்ஷ், மஹ்ஷர் மைதானம், அதில் நடக்கும் விசாரணை இவை அனைத்தும் நமக்குத் தெரிந்திருக்காது.
நபியவர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்திருக்கிறான். அதை அவர்கள் நமக்கு
அறிவித்ததினால் நாம் அதை நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் இந்த மறைவான
விஷயங்களை நம்பிக்கை கொள்ளுமாறு முதலில் நமக்குக் கட்டளையிடுகின்றான்.
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை
நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்)
செலவிடுவார்கள்.
(அல்குர்ஆன் 2.3)
இந்த உலகத்தில் யார் யார் என்ன செய்கிறார்கள்? எவ்வளவு சம்பாதித்தார்கள்? என்ன சாப்பிட்டார்கள்? என்பதைக் கண்கானிப்பது இறைவனால் அனுப்பப்பட்ட
தூதர்களுடைய வேலை அல்ல. மக்கள் அனைவருக்கும் சொல்லித்தர வேண்டிய மறைவான விசயங்களை
அல்லாஹ் தூதர்களுக்கு அறிவிப்பான். இறைவன் அறிவித்த அந்த மறைவான விசயங்களை அவர்
வைத்துக் கொள்வதற்காக இல்லை. மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக
அறிவிக்கிறான். அவர் அந்தச் செய்திகளை மக்களுக்கு சொல்கின்றாரா என்பதை
கண்காணிக்கவும் மலக்குகளை நியமித்திருக்கின்றான்.
அந்த தூதர்கள் மறைவான விஷயங்களைப் பற்றி
மக்களுக்கு சொல்லித் தராமல் தனக்குத் தானே வைத்துக் கொண்டால் அல்லாஹ் சும்மா
விடுவானா? அவ்வாறு அவர் செய்து விடக் கூடாது என்பதற்காக
கண்காணிப்பதற்கு மலக்குமார்களையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாக இருந்தாலும் வேறு எந்த நபிமார்களாக இருந்தாலும்
அல்லாஹ் எதை மறைவானது என்று அறிவித்துக் கொடுத்தானோ அவை அனைத்தையும் நமக்கும்
சொல்லி விட்டார்கள். என்ன வித்தியாசமென்றால், அவர்கள் நேரடியாக அல்லாஹ்விடமிருந்து அறிந்து கொள்வார்கள். நாம் நபியவர்கள்
நமக்கு அறிவித்ததனால் அவற்றை அறிந்து கொள்கிறோம். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து
கேட்டு அதை நமக்கு சொல்லித் தருகின்றார்கள்.
எதுவெல்லாம் ஹதீஸ்களில் சொல்லப்பட்டு
இருக்கிறதோ அதைத் தவிர வேறு மறைவான விஷயங்கள் எதுவும் நபியவர்களுக்குத் தெரியாது.
அவர்களுக்குத் தெரிந்த மறைவான விஷயங்கள் அனைத்தும் நமக்கும் தெரியும். நாம்
ஹதீஸ்களைத் தேடிப் பார்த்தோமென்றால், அவர்களுக்குத் தெரிந்த அத்தனை மறைவான விஷயங்களையும் மக்களுக்குச்
சொல்லியிருப்பார்கள்.
உதாரணத்திற்கு நாம் இதற்கு முன் பார்த்த ஒரு
சம்பவத்தையே இங்கு குறிப்பிடலாம். பத்து பேர் சுவர்க்கவாசி என்பது மறைவான விஷயம்
தானே! அது நபியவர்களுக்கு மட்டுமா தெரியும்? நமக்கும் தெரியும். நாம் உறுதியாக அடித்துச் சொல்லலாம். ஏன் இவ்வாறு
சொல்கிறோம்? நபியவர்கள் நமக்கு சொல்லித்
தந்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கும் அது தெரியும்.
அதே போன்று நபியவர்களுக்குத் தெரிந்த எந்த
மறைவான விஷயமாவது நமக்குத் தெரியாமல் இருக்குமா? இருக்கவே முடியாது. அதை அவர்கள் நமக்குக் கூறாமல் மறைக்கவும் முடியாது.
ஏனென்றால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்கள், தம் மீது அருளப்பெற்ற(வேதத்)தி-ருந்து எதையும் மறைத்தார்கள்
என்று உங்கüடம் யாரும் சொன்னால் அவர் பொய்
சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ "தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு
அருளப்பெற்றதை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்!'' என்று கூறுகிறான்.
நூல்: புகாரி 4612
நபிகளார் மறைவானதை அறிவார்கள். பூமியில் எங்கு
என்ன நடந்தாலும் அவர்கள் இருந்த இடத்திலிருந்தே அறியக்கூடியவர்களாக
இருக்கின்றார்கள் என்று சிலர் கூறிவருகிறார்கள்.
இப்போதும் (இறந்த பிறகும்) நபியவர்கள் மறைவானதை
அறிவார்கள் என்று சொன்னால் அதையும் நமக்குச் சொல்லியாக வேண்டும். அதை நமக்குச்
சொல்லவேண்டியது அவர்களுக்குக் கட்டாயக் கடமை அல்லவா? அவ்வாறு சொல்லவில்லையானால் அவர்கள் தூதுத்துவத்தில் குறை வைத்ததாக ஆகிவிடுமே?
இதைப்பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில்
கூறுகிறான்.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு
அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர்
எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.
(தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 5.67)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு
சொல்லியிருக்க, இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாம்
செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; நம்முடைய மனதில் நினைப்பதை அறிவார்கள் என்று சொல்கிறார்கள்.
எனவே நபியவர்கள் தமக்கு அருளப்பட்ட எல்லா
மறைவான விஷயங்களையும் நமக்குச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் அவ்வாறு
சொல்லவில்லையென்றால் தூதுத்துவத்தை ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்றாகிவிடும்.
அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான
விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.
அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை
அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான்.
அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால்
அறிவான்.
அல்குர்ஆன் 72:26,27,28
இந்த வசனங்களில் அல்லாஹ் தான் பொருந்தி கொண்ட
தூதர்களுக்குத்தான் மறைவானதை அறிவித்துக் கொடுப்பேன். அவர்களை தவிர வேறு
யாருக்கும் அறிவித்துக் கொடுக்க மாட்டேன் என்று தானே சொல்கிறான்.
இந்த வசனத்தின் அடிப்படையில் நபியவர்களுக்கு மறைவான
ஞானம் இருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் இறந்து போன
அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது
என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர்கள் என்ன
இறைவனின் திருப்தியைப் பெற்றவர்களா? அல்லது அவர்கள் இறைநேசர்களா? நாகூர்
ஆண்டவருக்கு மறைவானது தெரியும் என்றால் அவர்கள் என்ன அல்லாஹ்வால்
தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதரா?
மேலும் இவர்கள், நபிகளார் மறைவானதை அறிவார்கள் என்று வாயளவில் சொல்லி விட்டு அந்தத் தன்மையை
அப்படியே அவ்லியாக்கள் என்ற பெயரில் இறந்து போன மனிதர்களுக்கு கொடுத்து
விடுவார்கள். நாகூர் ஆண்டவர் மறைவானதை அறிவார்; அப்துல் காதர் ஜீலானி மறைவானதை அறிவார் என்கிறார்கள்.
அவர்கள் அவ்லியாக்கள், மகான்கள், இறைநேசர்கள்
என்றால் திருக்குர்ஆனில் அல்லாஹ் எந்த வசனத்திலாவது இந்த மாதிரியான பெயர்களைக்
கொண்டவர்கள் என்னுடைய நேசர்களாவர் என்று சொல்லியிருக்கின்றானா? அல்லது நபியவர்களாவது எனக்குப் பின்னால் இன்ன இன்ன பெயரைக்
கொண்ட மனிதர்கள் வருவார்கள். அவர்கள் மறைவானதை அறிவார்கள் என்று எங்கேனும்
சொல்லியிருக்கிறார்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆக இவர்கள், எந்த வசனத்தை (72:26,27) ஆதாரமாகக் காட்டி
நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்று சொல்கிறார்களோ அந்த வசனம் அந்த
அர்த்தத்தைச் சொல்லவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக்
காட்டாமல் நீங்கள் எப்படி (கெட்டவருடன் கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே
(கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டுவிட மாட்டான். மறைவானதை
அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில்
தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு
(இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
(அல்குர்ஆன் 3.179)
இந்த வசனத்தை அவர்கள் ஆரம்பத்திலிருந்து
படிக்காமல் பாதியிலிருந்து மேலோட்டமாகப் படித்து விட்டு, "இறைத்தூதர்களில் தான் நாடியோரை தேர்வு செய்து அவர்களுக்கு
மறைவானதை அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பதாகச் சொல்கிறான்; அப்படியானால் நபியவர்களுக்கும் மறைவானது தெரியும்' என்று வாதிடுகிறார்கள். ஆனால் இந்த வசனத்தின் ஆரம்பம் என்ன
சொல்கிறது. அல்லாஹ் எதை அறிவித்துக் கொடுப்பதாகச் சொல்கிறான்? என்பதை விளங்காமல் வாதம் செய்கிறார்கள்.
வசனத்தின் ஆரம்பத்தைப் படித்துப் பார்த்தாலே
இவர்கள் வைக்கின்ற வாதம் எந்த அளவுக்கு பயங்கரமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நபியவர்கள் வாழும் காலத்தில் முஸ்லிம்களோடு
முனாஃபிக்குகளும் கலந்திருந்தார்கள். அவர்கள் தம்மை இஸ்லாமியர்கள் என்று அடையாளப்படுத்திக்
கொண்டே பல நயவஞ்சகக் காரியங்களில் ஈடுபட்டனர். அல்லாஹ் அதை அறிவித்துக் கொடுக்கும்
வரை நபியவர்கள் அவர்களை அறியாதவர்களாக இருந்தார்கள். நபித்தோழர்களும் அவர்கள்
முஃமின்கள் தான் என்று நினைத்திருந்தார்கள். எனவே தான் அவர்களில் முஃமின்கள் யார், முனாஃபிக்குகள் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதாக மேற்கண்ட
வசனத்தில் சொல்கிறான்.
அனைத்து மக்களும் நம்பிக்கை கொள்ளக்கூடிய
மறைவான விஷயங்களை அல்லாஹ் நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். ஆனால் அது
நமக்காக அறிவித்துக் கொடுப்பது. அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக அறிவித்துக்
கொடுத்ததல்ல. நமக்கு அந்தச் செய்திகள் வந்து சேர வேண்டும் என்பதற்காக அதைத் தனது
தூதர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். அவர்களும் எதையெல்லாம் நமக்கு அறிவிக்க
வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டானோ அவை அனைத்தையும் மீதம் வைக்காமல் நமக்குச்
சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த அத்தனை மறைவான
விஷயங்களையும் நமக்கும் சொல்லிவிட்டார்கள். இந்தச் செய்தி யாருக்குச்
சென்றடையவில்லையோ அவருக்கு வேண்டுமானால் இது தெரியாமல் இருக்கும்.
நபியவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும்
என்பதற்கு ஆதாரமாக வழிகேடர்கள் எடுத்துக் காட்டும் இரு வசனங்களின் நிலை இதுதான்.
ஒன்று முனாபிக்குகள் யார் என்ற விபரத்தை நபிகள்
நாயகத்துக்கு அறிவித்துக் கொடுப்பதைப் பற்றி பேசுகிறது. மற்றொன்று சொர்க்கம் நரகம்
போன்ற மறைவான விஷயங்களை நமக்காக நபிமார்களுக்கு அறிவித்துக் கொடுக்கப்படும் என்று
கூறுகிறது. நபிகள் நாயகத்துக்கோ, மற்ற
நபிமார்களுக்கோ மறைவான அனைத்தும் தெரியும் என்றோ அனைத்தையும் அல்லாஹ் அறிவித்துக்
கொடுப்பான் என்றோ இவ்வசனங்கள் கூறவில்லை.
அதே போன்று மற்றொரு ஹதீஸையும் அவர்கள்
ஆதாரமாகக் காட்டுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
நான் இந்த (கிப்லா) திசையில் முன்னோக்கிக்
கொண்டிருக்கிறேன் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் நீங்கள் செய்வதையெல்லாம்
நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கüன் பணிவும் (சஜ்தாவும்) உங்கüன் குனிவும் (ருகூஉம்) எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை.
நிச்சயமாக எனது முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 418
இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு, "பார்த்தீர்களா! பின்புறம் நடப்பது எல்லாமே நபிகளாருக்குத்
தெரிகிறது. முதுகுக்குப் பின்னாலும் அவர்களுக்கு மூன்றாவதாக ஒரு கண் உண்டு. அதனால்
அவர்கள் மறைவானதை அறிவார்கள்' என்று
வாதிடுகிறார்கள்.
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி தான்.
அதில் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் இதை அவர்கள் தவறாகப் புரிந்து
வைத்துள்ளார்கள்.
விஷயம் என்னவென்றால், தொழுகையில் நீங்கள் ருகூவு செய்வதையும், ஸஜ்தா செய்வதையும் தான் நான் பார்ப்பேன் என்று சொன்னார்களே
தவிர நீங்கள் தொழுகையில் செய்கின்ற அனைத்து செயல்களையும் நான் பார்ப்பேன் என்று
சொல்லவில்லை. ஏன் அவ்விரண்டை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார்கள் என்றால், ஒருவர் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது பின்னால்
இருப்பவர்களும் நம் கண்ணுக்கு தெரிவார்கள். அவர்கள் ஒழுங்காக ருகூஉ செய்கிறார்களா
இல்லையா என்பது தெரியும். நம்மாலும் இதைப் பார்க்க முடியும். இதைத்தான்
நபியவர்களும் சொன்னார்களே தவிர தனக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்ற
அர்த்தத்தில் சொல்லவில்லை.
நீங்கள் ருகூவு செய்யும் போது நீங்கள் சரியாகச்
செய்கிறீர்களா என்று நான் பார்ப்பேன். நீங்கள் தொழுகையில் கவனக் குறைவாக இருந்து
விடக்கூடாது என்று ஒரு எச்சரிக்கைக்காக சொன்னார்கள். அவ்வாறு நபியவர்களுக்கு
மறைவான ஞானம் இருக்கிறது என்றால் இதற்கு முன் நாம் பார்த்த எத்தனையோ சம்பவங்கள்
நேர் முரணமாக அல்லவா அமைந்திருக்கின்றன?
மேலும், மற்றொரு வசனத்தையும் நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்பதற்கு
ஆதாரமாகக் காட்டுவார்கள். இந்த வசனம் பின்வருமாறு,
"(செய்பவற்றைச்) செய்யுங்கள்!
உங்கள் செயலை அல்லாஹ்வும், அவனது தூதரும், நம்பிக்கை கொண்டோரும் அறிவார்கள். மறைவானதையும், வெளிப் படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள்.
நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 9.105)
இந்த வசனத்தை வைத்துக் கொண்டு, எதிரிகளுடைய, காஃபிர்களுடைய எல்லா செயல்களையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருப்பதை போல
நபியவர்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் வீட்டிற்குள் உட்கார்ந்து இரகசியம்
பேசினால் எவ்வாறு அதை அல்லாஹ் அறிவானோ அந்த மாதிரி நபிகளாரும் அறிவார்கள் என்று
இந்த வசனம் கூறுகின்றது. எனவே நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்று வாதிடுகிறார்கள். இதிலும்
அவர்கள் குறைமதி உடையவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
இவர்களுடைய பாணியே என்னவென்றால் எந்த
வசனத்தையும் முழுவதும் படிப்பதே கிடையாது.
அந்த வசனத்தில் வெளிப்படையாக அவர்கள்
செய்யக்கூடிய காரியங்களைத் தான் அல்லாஹ்வும் அவனது தூதரும் பார்ப்பார்கள் என்று
சொல்கிறான். ஒரு பேச்சுக்கு நபிகளாரும் அல்லாஹ் அறிவதைப் போன்று அறிவார்கள்
என்றால், நம்பிக்கை கொண்ட முஃமின்களும் அறிவார்கள் என்று
அந்த வசனத்தில் வருகின்றதே! அப்படியானால் நம்பிக்கை கொண்ட
எல்லோருக்கும் அல்லாஹ் அறிவதை போன்று மறைவானதை அறியக்கூடிய ஆற்றல் இருக்கிறது
என்று இவர்கள் சொல்வார்களா?
மேலும் அந்த வசனத்தின் தொடர்ச்சியில், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தது
பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் என்று வருகின்றது. வெளிப்படையானது, மறைவானது என இரண்டையும் அறியக்கூடியவன் அல்லாஹ் மட்டும்
தான் என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?
EGATHUVAM JAN 2015