Mar 6, 2017

ஷியாக்கள் ஓர் ஆய்வு 3 - மகான்களும் மறைவான ஞானமும்

ஷியாக்கள் ஓர் ஆய்வு-3 மகான்களும் மறைவான ஞானமும்
அபூஉஸாமா

அல்லாஹ்வுடைய பண்புகளில் யூதர்கள் விளையாடுகிறார்கள். அது போன்று அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் விளையாடுகின்றனர். இதன் விளைவாக அல்லாஹ்வுக்கு அறியாமையும் மறதியும் உள்ளதாக இவர்கள் நம்புகிறார்கள்.

இது போன்ற விளையாட்டை இன்று நம்மை உக்கிரமாக  எதிர்க்கின்ற சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோரும் செய்கின்றனர். பெயர் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்று வைத்துள்ளனர். ஆனால் இவர்களது செயல்பாடுகள் அனைத்தும் ஷியாயிஸத்தை அடிப்படையாகக் கொண்டது தான்.

இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரிடம், "நீங்கள் ஏன் அவ்லியாக்களிடம் கேட்கிறீர்கள்?அல்லாஹ்விடம் கேட்கக் கூடாதா?' என்று நாம் கேட்டால் அதற்கு அவர்கள் ஓர் உதாரணத்தைக் கூறுகிறார்கள்.

அல்லாஹ் நீதிபதியைப் போன்றவன். இந்த அவ்லியாக்கள் வக்கீல்களைப் போன்றவர்கள். அதாவது நீதிபதியாகிய அல்லாஹ்விடம் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் நம்முடைய கோரிக்கையை எடுத்துக் கூறி அவனிடம் உத்தரவு பெற்றுத் தருவார்கள்.

இது தான் இவர்கள் கூறும் உதாரணமாகும்.

இந்த உதாரணத்தில் இவர்கள் கொண்டிருக்கும் கடவுள் கொள்கை அப்படியே பளிச்சிட்டுத் தெரிந்து பல்லிளிக்கின்றது.

நீதிபதிக்கு வழக்கில் சம்பந்தப்பட்டவரைப் பற்றிய விபரம் தெரியாது. அதனால் அவரைப் பற்றி, அவரது தரப்பை எடுத்துச் சொல்ல ஒரு வக்கீல் - வழக்கறிஞர் தேவை.
ஒருவர் குற்றமே செய்திருந்தாலும் வழக்கறிஞர் தன்னுடைய வாதத் திறமையினால் நீதிபதியிடம் தனது கட்சிக்காரரை நல்லவராகச் சித்தரித்து விடுதலை வாங்கிக் கொடுத்து விடுவார். நீதிபதியும் உண்மை தெரியாததால் குற்றவாளிக்கு விடுதலை அளித்து விடுவார்.

இந்த நீதிபதியின் ஸ்தானத்தில் அல்லாஹ்வை வைத்துப் பார்க்கிறார்கள் என்றால் இதற்கு என்ன பொருள்? அல்லாஹ்வுக்கு தன்னுடைய அடியார்களைப் பற்றிய விளக்கம் தெரியாது. அவனுக்கு அறியாமை உள்ளது என்பது தானே இதன் பொருள்!
இவர்கள் இப்படி விளங்கி இருப்பதால் தான் அவ்லியாக்கள் பக்தியிலிருந்து விடுபடவில்லை; விலகவில்லை. அதில் அழுத்தமான பிடிப்புடன் இருக்கிறார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வின் பண்புகளில் - ஆற்றல்களில் விளையாடுபவர்கள் ஷியாக்கள். அந்த ஷியாக்களின் விளையாட்டைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் கையில் எடுத்திருக்கின்றனர்.

ஆனால் அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் அவனது பண்புகளில் கடுகளவு கூட குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்கள். அப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் "உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்'' என்று அவர்கள் (தம்மில்) ஒருவரையொருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களை தம் இறக்கைகளால் முதல் வானம்   வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன், "என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?'' என்று கேட்கின்றான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவன் ஆவான். "அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும். உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்'' என்று வானவர்கள் கூறுகின்றனர்..... (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6408

இந்த ஹதீஸில் அல்லாஹ் மலக்குகளிடம் விசாரிப்பதை வைத்து அல்லாஹ்வுக்கு அறியாமை இருக்கிறது என்று யாரும் விளங்கி விடக் கூடாது என்பதற்காக,அல்லாஹ்வின் மீது "அறியாமை' என்ற சாயல் கூட வந்து விடாமல் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் தான், வஹுவ அஃலமு - அவன் அடியார்களைப் பற்றி நன்கறிந்தவன் என்ற விளக்கத்தையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
அல்லாஹ்வின் பண்புகளில் அவனது அறிவுக்கு, ஆற்றலுக்குக் கடுகளவு கூட பாதகம் வராத அளவுக்குப் பார்க்கின்ற இந்த மார்க்கத்தில் தான் அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பிக்கும் அபத்தமான உதாரணங்களை சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோர் சேர்த்து அழகு பார்க்கின்றனர் என்றால் இவர்கள் கடவுள் கொள்கை விஷயத்தில் ஷியா விஷத்தையே பக்காவாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது இங்கு உறுதியாகின்றது. இதன் மூலம் இவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற போர்வையில் இருக்கும் ஷியாக்கள் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனி ஷியாக்கள் பற்றிய ஆய்வுக்கு வருவோம்.

இமாம்களின் மறைவான ஞானம்?
கடவுள் கொள்கையில் ஷியாக்கள் விளையாடும் அடுத்த விளையாட்டு மறைவானஞானம் சம்பந்தப்பட்டதாகும்.

மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அவனிடமே அனைத்துக் காரியமும் திருப்பப்படும். எனவே அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக! நீங்கள் செய்பவற்றை உமது இறைவன் கவனிக்காதவனாக இல்லை.
அல்குர்ஆன் 11:123

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 16:77

"அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 18:26

இந்த வசனங்களிலும், இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்களிலும் மறைவான ஞானம் தனக்கே உரியது என்று ஏக இறைவன் உரிமை கொண்டாடுகின்றான்.

அதாவது இந்தத் தன்மை கடவுளாகிய தனக்கு மட்டுமே உண்டு; இந்தத் தன்மையை தன்னிடமிருந்து யாரும் தட்டிப் பறிக்க முடியாது; யாருக்கும் இந்தத் தன்மையை வழங்கி அவர்களைக் கடவுளாக ஆக்கவும் மாட்டேன் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

ஆனால் இந்த ஷியாக்களோ தங்களது இமாம்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறி அவர்களை மனிதர்கள், இறைத் தூதர்கள், மலக்குகளை விட உயர்த்துகின்றனர்.

"தாங்கள் அறிய வேண்டும் என்று நினைத்தால் (எல்லாவற்றையும்) இமாம்கள் அறிந்து கொள்வார்கள்' என்றொரு தலைப்பிட்டு ஷியா இமாம் கலீனி என்பவர் தன்னுடைய நூலான அல்காஃபி என்ற நூலில் குறிப்பிடுவதாவது:

அறிய வேண்டும் என்று நினைக்கும் போது இமாம் கண்டிப்பாக அறிந்து கொள்கிறார். இமாம்கள் தாங்கள் எப்போது மரணமாகப் போகின்றோம் என்பதை அறிவார்கள்.
அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம் 258

"தங்களின் சுய விருப்பத்தின் படியே இமாம்கள் மரணிக்கிறார்கள்' என்ற தலைப்பின் கீழ் கலீனி தெரிவிப்பதாவது:

மறைவானவற்றையும், தனக்கு இனி என்ன நேரப் போகிறது என்பதை அறியாத இமாம் அல்லாஹ்வின் படைப்பில் ஓர் ஆதாரமிக்கவர் அல்லர்.
அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம் 196, 258

ஷியாக்கள் அல்லாஹ்வுடைய பண்பை எப்படித் தங்கள் இமாம்களுக்குத் தாரை வார்க்கிறார்கள் என்று பாருங்கள். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மறைவான ஞானத்தில் அவர்கள் செய்கின்ற விளையாட்டைப் பாருங்கள். அதிலும் குறிப்பாக ஷியா இமாம், தாம் எப்போது மரணிக்கப் போகிறோம் என்பதை அறிந்து கொள்வாராம்.
அற்புத ஆட்சியாளர் சுலைமான் நபி

சுலைமான் நபியவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா அளித்த ஆட்சியைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்கள்.
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். "நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று அவ்விருவரும் கூறினர்.

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். "மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்'' என்று அவர் கூறினார்.

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது.

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!'' என்றார்.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். "ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.

"அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்'' (என்றும் கூறினார்).

(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்'' என்று கூறியது.
அல்குர்ஆன் 27:15-22

பறவைகளின் பேச்சு, எறும்புகளின் பேச்சு ஆகியவற்றை அறியும் ஆற்றல், மனிதர்கள்,ஜின்கள் ஆகியோர் அவர்களுக்கு வசப்பட்டிருந்தது என சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சொரிந்த அருள் மழைகளை, அற்புத நிலைகளை சூரத்துந் நம்ல் என்ற அத்தியாயம் அள்ளித் தெளிக்கின்றது.

உங்கள் போரின் போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா?வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.
அல்குர்ஆன் 21:80, 81

இந்த வசனங்களில் சுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

இவ்வளவு மேன்மையைப் பெற்ற சுலைமான் நபியவர்களுக்கு ஹுத்ஹுத் என்ற பறவை எங்கு சென்றது என்ற விபரம் தெரியவில்லை. அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அதைப் பற்றி விசாரித்திருக்க மாட்டார்கள்.

மேலும் அந்தப் பறவை திரும்பி வந்து, "உங்களுக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்'' என்று கூறுகின்றது.

தனது கட்டுப்பாட்டில் உள்ள பறவைக்குத் தெரிந்த ஒரு விஷயம் சுலைமான் நபிக்குத் தெரியவில்லை. ஆனால் ஷியாக்களின் இமாம் மறைவான செய்திகள் அனைத்தையும் அறிவார்கள் என்று ஷியாக்கள் நம்புகின்றனர்.

சுலைமான் நபியவர்களின் மரணத்தைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.

அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. "தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' என்று கூறினோம்.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.
அல்குர்ஆன் 34:1, 2, 3

பறவைகளின் பேச்சு, எறும்புகளின் பேச்சு, காற்றின் கட்டுப்பாடு, ஜின்கள் மீது ஆட்சி என்று பேராட்சி செய்த பேரரசர் சுலைமான் (அலை) அவர்கள் தாம் விரும்பியபடி மரணிக்கவில்லை. ஆனால் ஷியாக்களின் இமாம்கள் நினைப்பதை அறிவார்களாம்;விரும்பியபடி மரணிப்பார்களாம். இப்படிக் கதை அளந்துள்ளார்கள் ஷியாக்கள்.

மறைவானவற்றை அறியாத ஒருவர் இமாமே கிடையாதாம்! என்ன நெஞ்சழுத்தம்?உண்மையில் இது யூதர்களின் நெஞ்சழுத்தமாகும். அந்த நெஞ்சழுத்தத்தை இவர்கள் அனந்தரமாகப் பெற்றிருப்பதால் அவற்றை இவர்கள் அப்படியே பிரதிபலிக்கின்றனர்.

இன வாதமும் இறை வாதமும்
கலீனியின் கைச்சரக்கை இன்னும் பாருங்கள்.
தனக்கு ஷியாக்களின் 8வது இமாம் அலீ பின் மூஸா எழுதினார் என அப்துல்லாஹ் பின் ஜுன்துப் அறிவிப்பதாவது:

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர்களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.
அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

இது கலீனி கக்கிய விஷக் கருத்தாகும்.
யூதர்களைப் போன்று தங்கள் ஜாதியை உயர்த்திப் பேசுகின்ற இன வாதம் இந்த வார்த்தைகளில் அப்படியே பிரதிபலிக்கின்றன என்பதை இதைப் பார்த்தவுடனேயே விளங்கிக் கொள்ளலாம்.

இன வாதம் பேசினால் பேசி விட்டுப் போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் இந்த ஷியாக்கள் இறை வாதம் பேசுகின்றார்கள்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
அல்குர்ஆன் 31:34

அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ள இந்த ஞானத்தைத் தங்கள் இமாம்களுக்கு இருப்பதாகப் பறை சாற்றுகின்றார்கள்.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
அல்குர்ஆன் 57:22

மனிதனுக்கு ஏற்படும் சோதனைகள் அனைத்தும் தன்னுடைய பதிவேட்டில் பதிந்து இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் ஷியாக்களோ அவற்றைத் தங்களது இமாம்கள் பார்த்து விட்டதாகக் கதையடிக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் படித்ததும் கடவுள் கொள்கையில் ஷியாக்கள் இவ்வளவு பெரிய விளையாட்டை விளையாடுகிறார்களா? என்ற அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படலாம். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற விதத்தில் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்வோர் ஓதும் மவ்லிது கிதாபுகளில், குறிப்பாக முஹய்யித்தீன் மவ்லிது என்ற பாடலில் புதைத்து வைத்திருக்கின்றனர். அதையும் கொஞ்சம் தோண்டிப் பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM APR 2007