Mar 1, 2017

35. இணை கற்பித்தல் - அல்லாஹ்வும் அவ்லியாவும் ஒன்றா?

இணை கற்பித்தல்              தொடர்: 35 - அல்லாஹ்வும் அவ்லியாவும் ஒன்றா?
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
அல்லாஹ் மனிதனுக்கென்று சுயமாக அற்புதம் செய்ய எந்த ஆற்றலையும் கொடுக்கவில்லை. அல்லாஹ் வேறு, மனிதன் வேறு தான். நபிமார்களுக்குக் கூட அல்லாஹ் தான் அற்புதங்களையே வழங்கினான்.
நபிமார்களும் சில நேரங்களில் செய்த தவறுகளுக்காக அல்லாஹ் விடத்தில் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இருக்கும் போது சாதாரண மனிதர்களை எப்படி அவ்லியாக்கள் என்றும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும் அவர்களுடைய கை, கால்கள், செவிப் புலன்கள், பார்வைப் புலன்கள் அனைத்தும் அல்லாஹ்வுடையது என்றும் சொல்ல எப்படி மனது வருகின்றது?
சரி! அல்லாஹ்வின் கையும் அவ்லியாக்களின் கையும் ஒன்று என மேற்கண்ட ஹதீஸிற்கு ஒரு தவறான வியாக்கியானத்தை - விளக்கத்தைக் கொடுக்கிறார்கள் என்றால்  பின்வரும் ஹதீஸிற்கு என்ன விளக்கத்தைக் கொடுப்பார்கள்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?" என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய் வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
நூல்: முஸ்லிம் 5021
இந்த ஹதீஸையும் இவர்கள் நேரடியாக விளங்குவார்கள் என்றால் பிச்சைக்காரர்கள் அனைவரும் அல்லாஹ்வா? அப்படியானால் அவர்கள் அனைவருக்கும் கப்ரு கட்டுவீர்களா?
அதாவது இந்த ஹதீஸை நேரடியாகப் புரிந்து கொள்வதாக இருந்தால் இவர்களுடைய வாதப்படி நோயாளியாக இருந்தது, பசியாக இருந்தது, தாகமாக இருந்தது அனைவரும் அல்லாஹ் தான். ஏனென்றால் அந்த ஹதீஸிலேயே அல்லாஹ், அவனை நலம் விசாரிப்பது என்னை நலம் விசாரிப்பது போலாகும்; அந்த பிச்சைக்காரனுக்கு உண வளிப்பது எனக்கு உணவளிப்பதாகும்;  அவனுக்கு தாகத்துக்கு நீர் கொடுப்பது எனக்குத் தாகம் தீர்ப்பதாகும் என்று சொல்லிவிட்டான்.
நாம் கேட்பது என்னவென்றால், இதற்கு முன் நாம் சொன்ன ஹதீஸை நீங்கள் நேரடியாக விளங்கியதைப் போன்று இந்த ஹதீஸையும் நீங்கள் நேரடியாக விளங்கிக் கொள்வீர்களா?
அவ்வாறு நீங்கள் இதையும் நேரடியாக விளங்கிக் கொள்வீர்கள் என்றால் உங்களுடைய வாதப்படி அவ்லியாக்களுக்கெல்லாம் மிகப் பெரிய அவ்லியா பிச்சைக்காரர்கள் தான் என்று சொல்வீர்களா?
அப்படியானால் இந்த ஹதீஸை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? அல்லாஹ்விற்கு எதுவும் தேவை யில்லை. அவன் அனைத்துத் தேவைகளை விட்டும் தூய்மையான வன். எந்தத் தேவைகளுமற்றவன்.
ஆக, எனக்கு வழங்கினால் எந்த அளவுக்குக் கூலியை நான் தருவேனோ அந்த அளவுக்கு கூலியை பிச்சைக்காரனுக்கு நீ வழங்கினால் உனக்குத் தருவேன் என்று  நாம் பொருள் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி விளங்க வேண்டிய விஷயங்களை ஒரு சில ஹதீஸ்களை வைத்துக் கொண்டு வழிகெட்டுப் போவதற்கு ஆதாரம் காட்டுகின்றார்கள்.
அது போன்று,  நபிகளாரை ஒளி என்று அல்லாஹ் சொல்கிறான்.
அந்த வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம், நபிகளார் மதீனாவில் நடந்து சென்றால் அந்தத் தெரு முழுவதும் வெளிச்சமாகி விடும் என்று சொல்வார்கள்.
அல்லாஹ் சொல்லக்கூடிய ஒளிக்கு இதுதான் அர்த்தமா? ஒளி என்றால் கல்வி, ஞானம், நேர்வழி என்று அர்த்தம்.
அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடந்தார்கள் என்று நாம் சொல்வோம். இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம். இருட்டாக இருக்கும் போது எப்படி எதுவும் தெரியாதோ, அது போன்று அறியாமையிலும் ஒன்றும் தெரியாத வர்களாக இருந்தார்கள் என்றுதான்.
அறிவு என்றால் வெளிச்சம் என்று சொல்வார்கள். அதாவது வெளிச்சம் என்றால் எப்படி எல்லாம் தெரிகிறதோ அது போன்று கல்வி ஞானம் இருந்தால் எல்லாம் தெரியும் என்று அர்த்தம்.
குர்ஆனை அல்லாஹ் (நூர்) வெளிச்சம் என்று சொல்கிறான். அப்படியானால் இந்த வசனத்தை நபிகளாருக்கு சொன்ன விளக்கத்தைப் போன்று இதற்கும் சொல்வீர்களா? குர்ஆனைத் திறந்தால் இருட்டாக இருப்பது எல்லாம் வெளிச்சமாகும். நம்முடைய வீடு, அறைகளில் நாம் குர்ஆனை திறந்தால் போதும் வெளிச்சமாகி விடும் என்று சொல்வீர்களா?
அப்படியானால் இனிமேல் பள்ளிவாசலில் லைட் பல்பு எதுவும் போட வேண்டாம். பள்ளிவாசல்களில் ஒரு பத்து குர்ஆனைக் கட்டி தொங்கப் போடுங்கள். நன்றாக வெளிச்சமாகிவிடும். கரன்ட் பில்லும் கட்ட தேவையில்லை. மின்சாரத்தையும் சிக்கனமாக்கலாம்.
இப்படிச் சொன்னால் அறிவுடைய யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அனைத்தையும் நேரடியாகத் தான் விளங்க வேண்டும் என்று சொல்கின்ற நீங்கள் தான் ஏற்றுக் கொள்வீர்களா?
குர்ஆனை அல்லாஹ் ஒளி என்று குறிப்பிடுவதற்கு விளக்கம் என்னவென்றால், அதில் உள்ள விஷயங்கள் ஒளியை, வெளிச்சத்தை ஏற்படுத்துவதைப் போன்று நமக்கு நேர்வழி காட்டும் என்பதுதான்.
"நபிகள் நாயகம் (ஸல்) தொழும் போது நான் குறுக்கே படுத்து உறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது என் காலைத் தமது விரலால் தொடுவார்கள். உடனே என் காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்று வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை'' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி 513, 519, 1209
நபிகளார் ஒளி என்பதற்கு நீங்கள் கொடுக்கின்ற விளக்கம் சரியென்றால், அவர்களுடைய வீட்டில் விளக்கு எரியாமல் ஏன் இருட்டாக இருந்தது? நபிகளார் தொழும் போது குறுக்கே படுத்துக் கிடந்த ஆயிஷா (ரலி) அவர்களுடைய காலில் கையால் குத்த வேண்டும்?
இவ்வாறு இவர்கள் இலக்கியமாக சொல்லப்பட்ட விஷயங்களையெல்லாம் நேரடி அர்த்தம் கொடுத்து தானும் வழிகெட்டு மக்களை வழி கெடுக்கின்றார்கள். நேரடியான விஷயங்களை நாம் பல எடுத்துக் காட்டியிருக்கின்றோம். உவமையாகச் சொல்லப்பட்ட சில ஹதீஸ்களை வைத்துக் கொண்டு இப்படித் தவறாக விளங்கியிருக்கின்றனர்.
வானளாவிய மரம் என்று சொல்வோம். அப்படி ஒரு மரம் உண்டா? அதே போன்று விண்ணை முட்டும் கோபுரம் என்று சொல்வோம். அது என்ன வானத்தை முட்டிக் கொண்டா இருக்கிறது? இதை நாம் எவ்வாறு உவமையாக விளங்கிக் கொள்வோமா அதை போன்று மேற்கூறப்பட்ட ஹதீஸ்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதிலும் மேற்கண்ட ஹதீஸில் நான் கையாக மாறிவிடுவேன். காலாக மாறிவிடுவேன் என்று சொல்லிவிட்டு  கடைசியாக முடிக்கும் போது, "என்னிடம் கேட்டால் அவனுக்கு நான் கொடுப்பேன்'' என்று அல்லாஹ் முடிக்கின்றான்.
இவனுடைய கை கால்கள் அல்லாஹ்வுடைய கை கால்களாக மாறிவிடும் என்றால் ஏன் அல்லாஹ் விடத்தில் கேட்க வேண்டும்? அல்லாஹ் ஏன் அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும்?
கடைசியில் அந்த வார்த்தையைச் சொன்னதிலிருந்தே அல்லாஹ் வேறு; மனிதன் வேறு என்று ஆகிவிட்டதா இல்லையா?
நபிமார்கள் அல்லாதவர்கள் மூலமாகவும் சில அற்புதங்கள் நிகழும். வித்தியாசம் என்னவென்றால், நபிமார்களிடமிருந்து நிகழும் அற்புதத்தை  அவர்கள் மூலமாக அல்லாஹ் செய்ய வைப்பான். மற்றவர்களிடம் நிகழக்கூடிய அற்புதங்களெல்லாம் அவர்களிடத்தில் அல்லாஹ்வே செய்வானே தவிர அவர்களாக அறிவித்து, முடிவெடுத்து செய்வதாக இருக்காது. இந்த மாதிரியான அற்புதங்கள் எல்லா மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்க வாய்ப்பிருக்கின்றது என்பதை இதுவரை பார்த்தோம்.
இந்த அற்புதங்கள் நல்லவர் களுக்கு மாத்திரமல்லாமல் கெட்டவர்களுக்கும் நடக்குமா என்றால் கெட்டவர்களுக்கும் நடக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திற்கு முன்னாலும் சரி! பின்னாலும் சரி! கெட்டவர்களுக்கும் அற்புதங்கள் நடக்கும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்...

EGATHUVAM NOV 2015