3. இணை கற்பித்தல் – இறைநேசர்களின் இலக்கணம்
நாம் உயிர் மூச்சாக கருதக்கூடிய
தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை. இதில் என்னென்ன தவறான வாதங்களை வைக்கிறார்கள்?
நமது மார்க்கத்தில் மிகப்பெரும்
குற்றமாகக் கருதக்கூடிய பாவம் இணை வைப்பு. இந்த இணை வைத்தலை நியாயப்படுத்துவதற்காக, தவ்ஹீதைத் தவறு என்று காட்டுவதற்காக, ஷிர்க்கை அவர்கள் தவ்ஹீத் என்று
எவ்வாறெல்லாம் நியாயப்படுத்திப் பேசுகிறார்கள்? என்று நாம் விளங்கிக் கொண்டால் நமக்கு பாரதூரமான, நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடிய
அந்த விஷயத்திலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதிலும் ஷிர்க்கைப் பொறுத்தவரை
மனிதன் செய்யக்கூடிய பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாக இருப்பதால் இந்தத் தலைப்பை நாம்
முதலில் தேர்வு செய்திருக்கின்றோம். இறைவன் கூறுகின்றான்:
"நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில்
ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி
அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 39:65,66)
நாம் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டால்
நாம் செய்த அனைத்து நன்மைகளும் அழிந்து விடும் என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
நாம் தொழுத தொழுகைகள், நாம் பல வருடங்களாக நோற்ற நோன்புகள், நாம் செய்த தர்மங்கள் என அனைத்துமே
இதன் காரணத்தினால் அழிந்து, நமக்கு எந்த நன்மையும் இறைவனிடத்தில்
கிடைக்காமல் போய்விடும். மேலும் இறைவன் கூறுகிறான்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க
மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
(அல்குர்ஆன்: 4:48)
நாம் இணை கற்பித்துவிட்டு மரணித்தோம்
என்றால் மன்னிப்பே கிடையாது. நிரந்தர நரகம் தான். அதிலிருந்து மீளவே முடியாது என்று
இந்த வசனத்தில் கூறுகிறான்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை
அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு
எந்த உதவியாளர்களும் இல்லை.
(அல்குர்ஆன்: 5:72)
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த
(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.
(அல்குர்ஆன் 6:88)
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது
"என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
(அல்குர்ஆன் 31:13)
மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும்
இறைவன், தனக்கு இணை கற்பிப்பது பாரதூரமான, மாபெரும் அநியாயம் என்றும், அவ்வாறு இணை கற்பித்தால் நிரந்தர
நரகம் தான் பரிசு, சொர்க்கத்தில் நுழைய முடியாது
என்றும் எச்சரிக்கை செய்கிறான்.
இவ்வாறு படுபாதாளத்தில் நம்மைத்
தள்ளக்கூடிய இந்த இணை வைத்தலை முஸ்லிம்களிலேயே பலர் சரி என்று வாதிக்கின்றனர். தர்காவிற்குச்
சென்று வழிபடலாம்; அவ்லியாக்களை வணங்கலாம்; அவர்களுக்கு மிகப்பெரிய ஆற்றல்
இருக்கிறது; அதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது; ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது என்று
சொல்லி தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துகிறார்கள்.
இந்தத் தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவதற்காக
அவர்கள் என்னென்ன வாதங்களை வைக்கிறார்கள்? அது எப்படியெல்லாம் தவறாக இருக்கிறது? அதை முறியடிக்கும் விதமாக அல்லாஹ் என்னென்ன வாதங்களை தன்னுடைய திருமறையில் சொல்கிறான்
என்பதை முதல் அம்சமாக எடுத்துக் கொண்டு இது பற்றி நாம் பார்ப்போம்.
இணை கற்பித்தலின் நுழைவு வாயில்
முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்தவரை
ஏகத்துவம் (தவ்ஹீது) தான் உயிர் மூச்சாக இருந்த போதும் இந்தச் சமுதாயத்திற்குள்ளேயும்
இணை கற்பிக்கக்கூடிய காரியங்கள் நுழைந்திருக்கின்றன. இந்தச் சமுதாயத்தில் அவை எப்படி
நுழைந்திருக்கின்றன என்று கேட்டால், ஒரு கல்லை வைத்துக் கொண்டு இது கடவுள் என்று சொன்னால் இந்தச் சமுதாயத்தில் யாரும்
அதனை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சூரியனைக் கடவுளாக வழிபடுங்கள் என்று கேட்டால் மற்ற
சமுதாய மக்கள் அதை ஏற்றுக் கொள்வதைப் போல நம்முடைய சமுதாயத்தினர் அதை ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள்.
இந்தச் சமுதாயத்தில் உள்ளவர்கள்
எந்த வகையில் இணை கற்பிப்பார்கள் என்றால், இங்குள்ள உள்ள ஒருவரை மகான் என்றும், பெரியார் என்றும், அல்லாஹ்வுடைய நேசர் என்றும் இவர்கள்
நினைக்கும்போது அவர்களைக் கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரில் தான் இந்தச் சமுதாயத்திற்குள்
இணை கற்பித்தல் நுழைந்திருக்கின்றது. வேறு வகையில் இந்த சமுதாயத்திற்குள் இணை வைத்தல்
வராமல் நாம் கவனமாக இருக்கின்றோம்.
இந்தச் சமுதாயத்தில் இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்ற பெயர் இல்லாமல்
வேறு விதமான இணை கற்பித்தல்கள், வேறு வகையான
போலி தெய்வங்கள் வந்து நுழைய முடியுமா என்று கேட்டால் அவை நுழைய முடியாத அளவுக்கு நாம்
தெளிவாக இருக்கின்றோம். இது எப்படிக் கடவுளாகும்? இதற்கு எப்படி சக்தி இருக்கும்? என்றெல்லாம் மற்ற விஷயங்களில் தெளிவாகக் கேட்டு விடுகிறோம்.
பிரச்சனை எங்கிருந்து வருகின்றது? அவ்லியாக்கள், மகான்கள், ஷைகுமார்கள், பெரியார்கள், ஞானிகள் என சிலரை நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு நிறைய ஆற்றல்கள் இருப்பதாகவும்
நினைத்துக் கொண்டு, நல்லடியார்களைப் பாராட்டி வரக்கூடிய
திருக்குர்ஆன் வசனங்களையும், அவர்களைப்
பாராட்டி இடம்பெறும் ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டி, இந்த அளவுக்கு அவர்கள் சிறந்தவர்களாக இருப்பதால் அவர்களிடம் நாம் பிரார்த்தனை செய்யலாம்; அவர்களுக்குச் சிரம் பணியலாம்; அவர்களுக்கு நேர்ச்சை செய்யலாம்; நம்முடைய கோரிக்கைகளை அவர்களிடம்
வைத்து முறையிடலாம் என்று சொல்லித் தான் நமது சமுதாயத்தில் இணை வைத்தல் முதன் முதலாக
நுழைகின்றது.
எனவே, இறைநேசர்கள் என்றால் யார்? அவர்களுக்கு மார்க்கத்தில் உள்ள
எல்லை என்ன? அவர்களுடைய சிறப்புகளை வைத்து
இணை கற்பித்தலை நியாயப்படுத்துகிறார்களே அந்த இணை வைத்தலுக்கும் இவர்களுடைய சிறப்புகளுக்கும்
தொடர்பு இருக்கிறதா? இவர்கள் சொல்லக்கூடிய கருத்தை
திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் சொல்கின்றதா? என்பதை முதலில் தெளிவுபடுத்திக்
கொள்ள வேண்டும்.
இறைநேசர்கள் என்று சிலரை நினைத்துக்
கொண்டு, அவர்களுக்கு நிறைய ஆற்றல்கள் இருப்பதாக
நினைத்துக் கொள்வதை நாம் பல கூறுகளாகப் பிரித்து ஆய்வு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.
இறைநேசர்கள் யார்?
முதலாவதாக, ஒருவர் அல்லாஹ்வுடைய நேசர் என்று
வைத்துக் கொள்வோம். இவர் அல்லாஹ்வுடைய நேசர் என்று எந்த மனிதராவது அறிந்து கொள்ள முடியுமா? ஒருக்காலும் முடியாது.
ஒருவரை அல்லாஹ்வுடைய நேசர் என்று
முடிவு செய்வதாக இருந்தால் அதற்கு ஏதாவது மார்க்கத்தில் அளவுகோல் சொல்லப்பட்டிருக்கின்றதா? இன்னின்ன அடையாளங்கள் இருந்தால்
தான் இறைநேசர் என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இறைநேசர்கள் என்பதற்கு இரண்டு
அர்த்தங்கள் இருக்கின்றன. ஒன்று இறைவன் இவரை நேசிக்கிறான், அதனால் இவர் இறைநேசர் என்று சொல்லலாம்.
அல்லது இவர் இறைவனை நேசிக்கிறார், இதனால் இவர்
இறைநேநசர் என்று சொல்லலாம். இந்த இரண்டில் எந்த அர்த்தத்தைக் கொடுப்பதாக இருந்தாலும்
இதை நம்மால் முடிவு செய்ய இயலாது. நமக்கு அதிகாரமும் கிடையாது. இறைநேசர்களுக்குரிய
இலக்கணமாக இறைவன் தன்னுடைய திருமறையில் கூறும்போது,
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு
எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 10:62)
இந்த வசனத்தைக் காட்டித்தான் ஷிர்கை
நியாயப்படுத்தக்கூடிய, தர்கா வழிபாட்டைத் தூக்கி நிறுத்தக்கூடிய
எல்லாருமே வாதிக்கின்றார்கள். அவ்லியாக்கள் என்றால் யார் தெரியுமா? அவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.
அவர்களுக்குப் பயமே கிடையாது. எதற்கும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்று அல்லாஹ்வே
சொல்லி விட்டான். இவர்கள் தான் அவ்லியாக்கள் என்று சொல்லி இணை கற்பித்தலை நியாயப்படுத்துகிறார்கள்.
இவர்கள் இந்த வசனத்தை மட்டும்
வைத்துக் கொண்டு, அதற்கு அடுத்துள்ள வசனத்தைக் கவனிக்காமல்
விட்டு விடுகிறார்கள். அவ்வாறு அரைகுறையாக விளங்குவதால் தான் நமக்குள் குழப்பம் ஏற்படுகிறது.
மேற்கண்ட வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் அதாவது 10:63வது வசனத்தைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் அதில் நமக்குக் கூடுதல் விளக்கம்
கிடைக்கின்றது.
அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக
இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 10:63)
அவ்லியாக்கள் யார் என்பதற்கு அல்லாஹ்
சொல்கின்ற இலக்கணம், அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பார்கள், அவர்களுடைய உள்ளத்தில் ஈமான் இருக்கும்
என்றும், இறைவனுக்கு மட்டுமே பயப்படக்கூடியவர்களாக
இருப்பார்கள், அவர்களுடைய உள்ளத்தில் இறையச்சம்
இருக்கும் என்றும் கூறுகிறான்.
யாருடைய உள்ளத்தில் இறைவனைப் பற்றிய
முழுமையான நம்பிக்கையும், மலக்குமார்களைப் பற்றிய நம்பிக்கையும், நபிமார்களைப் பற்றிய நம்பிக்கையும், வேதங்களைப் பற்றிய நம்பிக்கையும், மறுமை பற்றிய நம்பிக்கையும் சரியான
முறையில் இருக்கிறதோ அவர்களும், எவருடைய உள்ளத்தில்
இறைவனை பற்றிய அச்சம் இருக்கிறதோ அவர்களும் தான் அவ்லியாக்கள்.
நாம் இன்று பார்ப்பது போல் ஜுப்பா
அணிந்திருப்பவர், பெரிய தலைப்பாகை கட்டியவர், பள்ளிவாசலிலேயே அமர்ந்து தவம்
செய்பவர் எல்லாம் இறைநேசர் கிடையாது, அல்லது வருடா வருடம் ஹஜ் செய்பவர், எல்லா நேரமும் வணக்கத்தில் மூழ்கியிருப்பவர், பொருளாதாரத்தை வாரி வாரி வழங்குபவர் போன்றோரெல்லாம் இறைநேசர்கள் ஆகிவிட முடியாது.
அல்லாஹ்வுடைய நேசர்கள் என்றால்
ஒன்று, அல்லாஹ்வை பற்றி நம்பிக்கை கொண்டிருக்க
வேண்டும். இரண்டாவது, அல்லாஹ்வைப் பற்றிய பயம் அவரது
உள்ளத்தில் இருக்க வேண்டும். இதுதான் அல்லாஹ் சொல்லக்கூடிய அளவுகோல் ஆகும்.
ஒருவனுடைய உள்ளத்தில் இறைவனைப்
பற்றிய பயம் இருக்கிறதா? இல்லையா? என்று நம்மால் கண்டுபிடிக்க முடியுமா? ஒரு நபரை நாம் பார்க்கிறோம். அவரை
அவ்லியா என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். அவருடைய உள்ளத்தில் இறையச்சம் இருக்கிறது
என்பதை நாம் எப்படிக் கண்டறிய முடியும்? முதலில் ஒருவரை நாம் இவர் அவ்லியா என்று சொல்லலாமா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள
வேண்டும். அதற்குப் பிறகு தான் அவர்களுக்கு என்னென்ன அந்தஸ்து இருக்கிறது என்பதைப்
பற்றிப் பேச வேண்டும்.
அவ்லியா என்பதற்கு அல்லாஹ் சொல்கின்ற
இலக்கணம் இரண்டுமே வெளிப்படையான அடையாளம் கிடையாது. ஈமானும் இறையச்சமும் உள்ளம் சம்மந்தப்பட்டது
தானே தவிர முகத்திலேயோ, உடலிலேயோ தெரியக்கூடிய விஷயம்
கிடையாது.
இறையச்சத்தை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது நெஞ்சைக் காட்டி தக்வா இங்கே இருக்கிறது, தக்வா இங்கே இருக்கிறது, தக்வா இங்கே இருக்கிறது என மூன்று முறை கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 460)
இறைவனை ஒருவர் அஞ்சுகிறாரா என்பது
முகத்திலோ, உடலிலோ, வெளிச் செயல்களிலோ தெரியாது. அவருடைய
உள்ளத்தில் தான் இருக்கும். ஒரு மனிதனுடைய உள்ளத்தில் உள்ளதை இன்னொரு மனிதரால் அறிய
முடியாது. வெளிப்படையான விஷயங்களை அறியும் அளவில் தான் மனிதனை இறைவன் படைத்துள்ளான்.
அவ்லியாக்களை அறிவது இரண்டாவது
பட்சம். முதலில் நாம் நம்முடைய மனைவியின் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியுமா? அல்லது நம்முடைய கணவன் எதை உள்ளத்தில்
வைத்துக் கொண்டு நம்மிடம் பழகுகிறார் என்பதை மனைவியால் கண்டறிய முடியுமா? பெற்ற பிள்ளைகளுடைய உள்ளத்தில்
என்ன இருக்கிறது என்பதைப் பெற்றோர்கள் அறிய முடியுமா? அல்லது பெற்றோருடைய உள்ளத்தில்
என்ன இருக்கிறது என்பதைப் பிள்ளைகள் அறிய முடியுமா? நகமும் சதையுமாக இருக்கக் கூடிய, நெருங்கிய நண்பர்களுடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று நம்மால் அறிய முடியுமா? முடியவே முடியாது.
வெளிப்படையான செயல்களை வைத்து
தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அறிய முடியும். இன்றைக்கு எத்தனையோ பேர் மனிதனின் வெளித்
தோற்றத்தை நம்பி ஏமாந்திருக்கிறார்கள். "இவனை நம்பி நான் ஆயிரம் ருபாய் கொடுத்தேன்.
என்னை ஏமாற்றி விட்டான்' என்று நாம் சொல்கிறோமே இதற்குக்
காரணம் என்ன? உள்ளத்தில் உள்ளதை நாம் அறிய முடியவில்லை.
அதனால் தான் நாம் ஏமாந்து போகின்றோம்.
ஒருவனை நம்பி நாம் கடையில் சேர்க்கிறோம்.
அவன் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடி விடுகிறான். அவன் ஓடிப் போன பின்பு தான் அவனுடைய
உள்ளத்தில் தவறான எண்ணம் இருந்தது தெரிகிறது. ஓடுவதற்கு முன்னால் அவன் நல்லவனாகத் தான்
தெரிந்தான்.
ஆகவே, ஒருவனுக்கு உள்ளத்தில் நல்ல எண்ணம்
இருக்கிறதா? கெட்ட எண்ணம் இருக்கிறதா என்பதை
அறியும் ஆற்றலை இறைவன் யாருக்கும் தரவில்லை. நாம் ஒருவரை அவ்லியா என்று சொன்னால், அவரை விட நாம் மிகப் பெரிய அவ்லியாவாக
ஆகி விடலாம். ஏனென்றால் அவருடைய உள்ளத்தில் இருப்பதை, அவரை அல்லாஹ் நேசிக்கிறான் என்பதை
நாம் அறிந்து விடுகிறோம். அல்லாஹ் இவரை அவ்லியாவாக ஏற்றுக் கொண்டுள்ளான் என்று நினைத்து
விடுகிறோமே? எனவே அவரை விடப் பெரிய அவ்லியா
நாம் என்றாகி விடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுடைய
தோற்றத்தையோ. உடலையோ பார்க்க மாட்டான். மாறாக அவன் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும்
தான் பார்க்கிறான்.
(நூல்: முஸ்லிம் 460)
ஒருவரை, இவர் அழகானவராக இருக்கிறார், அதனால் இவரை நேசிப்போம் என்று
நாம் சொல்வது போல் இறைவன் சொல்ல மாட்டான். எவ்வளவு அழகானவராக இருந்தாலும் சரி! எவ்வளவு
உடல் வலிமை உள்ளவராக இருந்தாலும் சரி! அவன் உள்ளத்தைத் தான் பார்ப்பான். உள்ளம் ஷைத்தானாக
இருந்தால் அவனை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
சக மனிதன் ஒருவன் தோற்றம் அழகானவனாக, கவர்ச்சியானவனாக இருந்தால் அவனை
நேசிப்பவர்களாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். ஆனால் அல்லாஹ்வுக்கு நம்முடைய தோற்றம், கவர்ச்சி எதுவும் தேவைப்படாது.
அவன் உள்ளத்தை மட்டும் தான் பார்ப்பான்.
ஆக மொத்தத்தில் ஒருவரை இறைநேசர்
என்று சொல்வதாக இருந்தால் அவருக்குரிய தகுதிகளான இறைநம்பிக்கை மற்றும் இறையச்சம் போன்றவை
இருக்க வேண்டும். ஒருவனுடைய உள்ளத்தில் உள்ளதை அறிகின்ற ஆற்றலுடன் நாம் படைக்கப்படவில்லை
என்பதை விளங்கிக் கொண்டால், ஒருவரை பார்த்து இவர் மகான், இவர் இறைநேசர் என்று சொல்ல மாட்டார்கள்.
மகான்களுக்கு கந்தூரி விழா கொண்டாட மாட்டார்கள்.
ஆகவே, அவ்லியாக்கள் என்பவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை நாம் கண்டுபிடிக்க முடியாது. அவர்களை மறுமை நாளில் தான் நாம் காண முடியும்.
அல்லாஹ் யாருக்கு சொர்க்கத்தை நிர்ணயிக்கின்றானோ அவர் தான் அல்லாஹ்வின் நேசர். யாருக்கெல்லாம்
அல்லாஹ் நரகத்தை நிர்ணயிக்கின்றானோ அவர்களெல்லாம் ஷைத்தானுடைய நேசர்கள் என்று மறுமையில்
தான் தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வுலகில் யாரையும் இவர் மகான், இவர் இறைநேசர், இவர் அவ்லியா. இவர் அல்லாஹ்வுக்கு
விருப்பமானவர் என்று சொல்ல முடியாது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
EGATHUVAM AUG 2012