Mar 5, 2017

5. ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு - செருப்பை முத்தமிடும் சுவனத்துப் பேரழகிகள்

5.      ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு - செருப்பை முத்தமிடும் சுவனத்துப் பேரழகிகள்
எம். ஷம்சுல்லுஹா

இதுவரை ஹுஸைன் மவ்லிதில் வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை, நபி (ஸல்) அவர்களின் வீட்டுக் காவலாளி போல் சித்தரித்து மட்டம் தட்டியதைப் பார்த்தோம்.
இப்போது சுவனத்தில் உள்ள ஹூருல் ஈன்களை எப்படி மட்டம் தட்டுகின்றார்கள் என்று பார்ப்போம்.
பெரும் பெரும் அரசர்கள், மன்னர்கள், கிரீடங்கள் யாவும் ஹுஸைனின் கோட்டையிலுள்ள புழுதிக்குக் கூட ஈடாகாது. அது எப்படி ஈடாக முடியும்? சுவனக் கோட்டையில் உள்ள ஹூருல் ஈன்கள், ஹுஸைனின் செருப்பை முத்தமிட ஆவலாக உள்ளனர்.
ஹுஸைன் (ரலி) அவர்கள் மீதுள்ள கண்மூடித்தனமான காதலால் சுவனத்தின் ஹூருல் ஈன்கள் அவரது செருப்பை முத்தமிடும் அளவிற்குத் தரம் தாழ்த்தியுள்ளனர். இவர்களைப் பொறுத்தவரையில் எல்லாமே ஹுஸைன் தான். அவரைப் புகழ்வதற்காக ஜிப்ரயீல், மலக்குமார்கள், ஹூருல் ஈன்கள் என யாரையும் கேவலப்படுத்துவதற்குக் கொஞ்சம் கூடத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு மவ்லிதில் உள்ள இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டாகும்.
இந்தக் கவிதை வரிகள் குர்ஆன், ஹதீசுக்கு முற்றிலும் முரணான கவிதை வரிகளாகும்.
"ஹஸனும் ஹுஸைனும் சுவனவாசிகளான இளைஞர்களின் இரு தலைவர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (நூற்கள்: திர்மிதீ 3701, 3714, முஸ்னத் அஹ்மத் 10576)
இந்த ஹதீஸின்படி ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு சுவனம் கிடைக்கும் என்று ஒவ்வொரு முஃமினும் ஆதரவு வைக்கலாம். நாமும் அவ்வாறு தான் ஆதரவு வைக்கின்றோம்.
ஆனால் இந்த ஷியாக் கவிஞன் எந்த வரம்புக்கும் உட்பட்ட பார்வையைச் செலுத்தவில்லை. வரம்பு மீறிய பார்வையைப் பார்க்கிறான். அவன் சுவனமே ஹஸன், ஹுஸைன் மற்றும் அஹ்லுல் பைத்துக்குப் பட்டா போட்டு கொடுத்து விட்டது போன்ற பார்வையைச் செலுத்துகின்றான்.
சுவனம் என்பது அஹ்லுல் பைத்துக்கு உரியது என்று இந்த ஷியாக் கவிஞன் கருதுவதால் தான் ஹுஸைன் (ரலி) அவர்களின் செருப்பை முத்தமிட சுவனத்து அழகிகள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்று கூறுகின்றான்.
இது ஷியாவிற்கே உரிய திமிரும், தெனாவட்டும், தான்தோன்றித்தனமும் ஆகும். உண்மையில், ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் ஹூருல் ஈனுக்காக தவம் கிடந்தாக வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அற்புதப் படைப்பு! அருட்படைப்பு! குர்ஆனும் ஹதீசும் அந்த அளவுக்கு ஹூருல் ஈன்களைப் பற்றி வர்ணிக்கின்றன.
இனிய குர்ஆன் ஓர் இலக்கியமாக....
இலக்கியம் என்றால் பெண்ணைப் பற்றி வர்ணனை இருக்கும். பெண்ணைப் பற்றிய வர்ணனை இல்லையென்றால் அது இலக்கியமாக இருக்காது. அந்த வர்ணனையும் ஆபாச ரசம் சொட்டும் வகையில் அமைந்திருக்கும்.
குர்ஆன் ஓர் இலக்கிய நூல்! ஆனால் இலக்கியம் என்பது அதன் இலக்கல்ல! பெண்களைப் பற்றிய வர்ணனையும் அதில் விலக்கல்ல!
திருக்குர்ஆன் அந்தப் பெண்களை வர்ணித்திருக்கின்றது. ஆனால் அது அத்தனையும் எந்த ஒரு மனிதக் கண்ணும் பார்க்காத அழகு மங்கையை, எந்த ஓர் ஓவியனும் தூரிகையில் வரைய முடியாத, வடிக்க முடியாத வானழகிகளைப் பற்றிய வர்ணனையாகும். அதில் எள்ளளவும் ஆபாசம் ததும்பவில்லை. சரசம் தலைகாட்டவில்லை.
அந்த அளவுக்கு அல்லாஹ் தன்னுடைய அழகுப் படைப்பினத்தைப் பற்றி அற்புத வார்த்தைகள் கொண்டு அழகு நடையில் அறிமுகப்படுத்துகின்றான்.
அப்பெண்களை (ஹூருல் ஈன்களை) நாமே அழகுறப் படைத்தோம். அவர்களைக் கன்னியராகவும், ஒத்த வயதினராகவும், நேசம் மிக்கோராகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் 56:35-37)
இப்படித்தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்.
(அல்குர்ஆன் 44:54)
முத்துக்களை ஒத்தவர்கள்
ஹூருல் ஈன்களும் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (அல்குர்ஆன் 56:22, 23)
முட்டைகளை ஒத்தவர்கள்
அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள் மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள். (அல்குர்ஆன் 37:48,49)
இவை ஹூருல் ஈன்கள் பற்றிய குர்ஆனின் அற்புத வர்ணனைகளாகும்.
நபி (ஸல்) அவர்களும் தமது வைரமணி வார்த்தைகளால் ஹூருல் ஈன்களை வர்ணித்திருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (சொர்க்கத்தில்) ஒவ்வொரு மனிதருக்கும் "ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களுடைய கால்கüன் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெüயே தெரியும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3245, புகாரி 3254
இந்த ஹதீஸ் ஹூருல் ஈன்களின் கால் அழகைக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றது. கால் அழகே இப்படி என்றால் ஆளழகு எப்படியிருக்கும்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  சொர்க்கவாசிகüல் (ஹூருல் ஈன்கüல்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளது தலையிலுள்ள முக்காடு உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2796
ஹூருல் ஈன் எனும் வானுலகக் கன்னியர் ஒருமுறை பூமியை எட்டிப் பார்த்தால் போதும். பூமியை வெளிச்ச வெள்ளத்தில் நீந்த வைக்கும். மண்ணகத்தை நறுமணமயமாக்கி விடும். அவள் அணிந்திருக்கும் தலைமுக்காடு இந்த உலகம், உலகத்தில் உள்ள அனைத்தை விடவும் சிறந்தது என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள் என்றால் ஹூருல் ஈன்களை என்னவென்று சொல்வது?
எட்டாம் மன்னர் எட்வர்ட்
இங்கிலாந்தின் எட்டாம் மன்னர் எட்வர்ட் என்பவர் சிம்சன் என்ற பெண்ணைக் காதலித்தார். அப்போது இங்கிலாந்து அரசு அவரிடம் "சிம்மாசனம் வேண்டுமென்றால் சிம்சனை மறந்துவிடுங்கள்; சிம்சன் வேண்டும் என்றால் சிம்மாசனத்தை மறந்து விடுங்கள்' என்று நிபந்தனை அளிக்கப்பட்டது. அவர் சிம்மாசனத்தை மறந்து விட்டு சிம்சனை மணந்து கொண்டார். உலகத்தில் ஒருவருக்கு அழகியாகத் தெரிபவர் மற்றவருக்கு அழகியாகத் தெரிவதில்லை. அந்த அழகை அடைவதற்காக ஆட்சியதிகாரத்தைத் துறக்கின்றான்; சொந்த நாட்டையே இழக்கின்றான். இதை உணர்த்தும் விதமாக நபி (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்று அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி), நூல்: புகாரி 1
தான் விரும்பிய பெண்ணை அடைவதற்காகத் தன் தாய்நாட்டைக் கூட ஒருவன் துறந்து விடுவான் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகத் தெரிவிக்கின்றது. அற்ப உலகத்துப் பெண்ணுக்கு இந்தத் தியாகம் என்றால், அழிந்து போகாத மறுமை உலக சுவனப் பேரழகிக்கு ஒரு முஸ்லிம் தவம் கிடக்க வேண்டும்; காத்திருக்க வேண்டும்.
கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது சிணுங்க மாட்டேனா?
இது ஒரு கவிஞன் எழுதிய கவிதை.
ஒருத்தியைக் காதல் கொண்டு விட்டால் அவள் கால் கொலுசாகக் கூட ஆகி விடுகின்றேன் என்றெல்லாம் திருமணம் முடிக்கும் வரை புலம்புவான். திருமணம் முடித்து விட்டால் கால் செருப்பை விட மோசமாக அவளை விளாசுவான். அது வேறு விஷயம்.
இங்கு நாம் பார்க்க வேண்டியது, ஓர் அற்ப ஆயுள் உள்ள பெண்ணை விரும்புபவன் அவளுடைய கால் கொலுசாகத் தயாராக இருக்கிறான் என்பதைத் தான். அழியாத சுவனத்துப் பெண்ணைப் பார்த்தால் அவன் என்ன சொல்வான்? என்ன செய்வான்? அவளின் கால் செருப்பாகவாவது நான் தேய்கின்றேன் என்பான். இது மனிதனின் இயல்பு!
இத்தகைய மனித இயல்பின்படி சொக்க வைக்கும் சுவனத்து சுந்தரிகளான அந்த ஹூருல் ஈன்களை நேசிக்கின்ற எவரும், உன் கண்களுக்கு மையாவேன், காதுகளுக்குத் தோடாவேன் என்று தான் சொல்வார்களே தவிர ஒருபோதும் சுவன அழகிகள் தங்கள் செருப்பை முத்தமிட வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் கூடாது.
அடுத்து, கால் செருப்பை முத்தமிடுவேன், அல்லது கால் செருப்பாய் தேய்வேன் என்றெல்லாம் சொல்வது இந்தியாவில் காணப்படும் அடிமைக் கலாச்சாரமாகும். இந்த மவ்லிதை எழுதிய ஷியா கவிஞன் இந்தியாவைச் சேர்ந்த ஷியா என்பதால் இந்த அடிமைத்தனமான பார்வையைச் செலுத்தி, சுவனத்துப் பேரழகிகளை இழிவுபடுத்தியிருக்கின்றான்.
EGATHUVAM MAY 2015