Mar 27, 2017

உலக நபி ஒளியால் உருவானவர்களா?

உலக நபி ஒளியால் உருவானவர்களா?

பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ

கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழ்ந்து விடாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான் தான். என்னை அல்லாஹ்வுடைய அடியான் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்துவிட்டார்கள்.

மேலும், என் மீது யார் வேண்டுமென்றே பொய்யை இட்டுக் கட்டுகிறார்களோ அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் எதனை எச்சரிக்கை செய்தார்களோ அத்தகைய வழிகேட்டில் சமுதாயம் வீழ்ந்து விட்டது. அத்தகைய வழிகேடுகளில் முதன்மையானது தான் இன்றைய கால கட்டத்தில் பயபக்தியோடு இஸ்லாமிய சமுதாய மக்களால் ஓதப்படுகின்ற மவ்லூது என்ற இணைவைப்பு கவிதை வரிகள் ஆகும்.

இந்த மவ்லூதை எழுதிய கவிஞன் தன்னுடைய இந்தக் கேடு கெட்ட பாடல் வரிகளை நிலைநாட்ட ஹதீஸ் என்ற பெயரால் இட்டுக்கட்டப் பட்ட எத்தனையோ கட்டுக் கதைகளைக் கூறியுள்ளான். அவற்றில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்ற கட்டுக் கதையாகும். இந்தக் கட்டுக் கதைகள் என்ன என்பதைப் பார்த்து விட்டு, அவற்றின் தரத்தையும், அவை எவ்வாறு அல்லாஹ்வுடைய சொல்லுக்கு எதிராக இருக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

மவ்லூது புராணத்தின் நான்காவது ஹிகாயத் பக்கம் பதினாறில் இடம் பெற்றுள்ள கட்டுக் கதையின் மொழி பெயர்ப்பு இதோ:

"ஆதம் (அலை) படைக்கப் படுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இறைவனால் ஒளியால் நான் படைக்கப் பட்டேன். என்னுடைய ஒளி அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து மலக்குகளும் துதி பாடினர். பிறகு இறைவன் என்னை பூமியில் ஆதம் (அலை) அவர்களின் முதுகுத் தண்டில் வைத்தான். பிறகு கப்பலில் நூஹ் (அலை) அவர்களின் முதுகுத் தண்டிலும் அதன் பின் இப்ராஹிம் (அலை) அவர்களின் முதுகுத் தண்டிலும் வைத்தான். பிறகு மரியாதைக்குரியவர்களின் முதுகுத் தண்டிலிருந்து தொடர்ந்து என்னை இடம் மாற்றிக் கொண்டே இருந்தான். பிறகு விபச்சாரம் செய்யாமல் என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோரிடமிருந்து என்னை வெளிப்படுத்தினான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அர்ஷ், குர்ஸியின் ஒளியும், எழுது கோல், சூரியன், சந்திரன், அறிவு, அகப்பார்வை ஆகிய அனைத்தும் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒளியாலேயே படைக்கப்பட்டது. அடக்கியாள்கின்ற, படைப்பாள னாகிய ஏக இறைவனின் அற்புதத்தால் அந்த ஒளி இன்னும் நீடித்துக் கொண்டேயிருக்கின்றது.

சுப்ஹான மவ்லிதின் ஹிகாயத்தில் இந்தக் கட்டுக் கதை இடம் பெற்றுள்ளது.

மவ்லிதுகளில் இடம் பெற்றுள்ள இந்தக் கட்டுக் கதைகளுக்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் கிடையாது.

இதே கருத்தில் உள்ள கட்டுக் கதைகள் சில நூற்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் அவை அனைத்துமே பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும்.

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைப்பதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நானும் அலீயும் ஒளியாக இருந்தோம். அது அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருந்தது. இன்னும் அவனை பரிசுத்தப்படுத்திக் கொண்டிருந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அஸாகிர் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

இது நபி (ஸல்) அவர்கள் கூறாத, அவர்களின் பெயரால், அவர்களின் மீதே இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அல்ஹஸனுப்னு அலிய்யுப்னு ஜகரிய்யா பின் முஹம்மத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக் கட்டக்கூடியவர். மேலும் இவர் உறுதியான அறிவிப்பாளார்கள் கூறியதாக இட்டுக்கட்டி கூறக்கூடியவர். இவ்வாறு இப்னு அதி என்பவர் கூறுகிறார். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம் 2, பக்கம் 257.)

அல்லாஹ் தன்னுடைய ஒளி யிலிருந்து என்னைப் படைத்தான். என்னுடைய ஒளியிலிருந்து அபூபக்கரைப் படைத்தான். அபூபக்கரின் ஒளியிலிருந்து உமரை படைத்தான். உமரின் ஒளியிலிருந்து என்னுடைய உம்மத்தைப் படைத்தான். உமர் சுவர்க்கவாசிகளின் விளக்காவார்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

இதனை அபூ நுஐம் அவர்கள் அமாலியா என்ற நூலில் பதிவு செய்திருப்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் லிஸானுல் மீஸான் என்ற தன்னுடைய நூலில் பாகம் 1, பக்கம் 435ல் குறிப்பிட்டுள்ளார்.

இதுவும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். மேலும் உண்மையாளனாகிய அல்லாஹ்வின் சொல்லுக்கும் எதிரானதாகும்.

இதன் அறிப்பாளர் வரிசையில் அஹ்மது பின் யூசுப் அல்மன்பிஜி என்பவர் இடம்பெறுகிறார். இவரைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் கூறும் போது இவர் யார் என்றே அறியப்படாதவர். இவர் பொய்யான செய்திகளைக் கொண்டு வருபவர் எனக் குறிப்பிடுகிறார். மேலும் அபூ நுஐம் அவர்கள் மேற்கண்ட செய்தி அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணானது எனக் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க: லிஸானுல் மீஸான், பாகம் 1, பக்கம் 435.).

நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப் பட்டார்களா?

நபி (ஸல்) அவர்கள் படைப்பால் நம்மைப் போன்ற மனிதர் தான் என அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். "உங்கள் இறைவன் ஒரே இறைவனே' என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது'' என்று (முஹம்மதே!) கூறுவீராக (அல்குர்ஆன் 41:6)

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 18:110)

உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார்.

(அல்குர்ஆன் 9:128)

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார்.

(அல்குர்ஆன் 3:164)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பதைத் தெளிவு படுத்துகின்றன.

மனித சமுதாயம் முழுவதையும் அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்திருப்பதாகச் சொல்லிக் காட்டுகிறான்.

"களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன்; அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறினான்

(அல்குர்ஆன் 38:71)

மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் மனிதனைப் படைத்தான்.

(அல் குர்ஆன் 55:14)

சேற்றிலிருந்த கருப்புக் களி மண்ணால் வடிவமைக்கப்பட்டு மனிதனைப் படைத்தோம்.

(அல்குர்ஆன் 15:26)

எனவே நபி (ஸல்) அவர்கள் மண்ணால் படைக்கப்பட்டவர்கள் தான் என்பûதை நாம் மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் மலக்குமார்கள் தான் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் (முஸ்லிம் 5414) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப் பட்டார்கள் என்பது திருமறைக் குர்ஆனுக்கும், அவனுடைய தூதரின் பொன் மொழிகளுக்கும் எதிரானதாகும்.

அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.

(அல்குர்ஆன் 5:15)

நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்.

(அல்குர்ஆன் 33:45,46)

இந்த வசனங்களில் நபிகள் நாயகத்தை, ஒளி என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இந்த வசனங்களை ஆதாரமாகக் காட்டி, "நபிகள் நாயகம் இருட்டில் நடந்தால் அவர்களிடமிருந்து வெளிச்சம் வரும்; நபிகள் நாயகம் மனிதர் இல்லை; கடவுள் அம்சம் பொருந்தியவர்'' என்று கூறி சிலர் மக்களை வழி கெடுக்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் கூறும் நேரடியான ஒளி என்ற பொருளில் இந்த வசனங்களில் கூறப்படவில்லை. அப்படி நேரடிப் பொருள் கொடுத்தால், நபி (ஸல்) அவர்கள் எங்கிருந்தாலும் வெளிச்சமாக இருந்திருக்க வேண்டும். இருட்டான பகுதிகளில் அவர்கள் இருக்கும் போது அவர்கள் மீதுள்ள ஒளியின் காரணமாக அந்த இடத்தில் வெளிச்சம் பரவியிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் இருந்ததாக எந்தச் செய்தியையும் நாம் காண முடியவில்லை. ஆனால் அதே சமயம் அவர்கள் இருந்த பகுதி இருட்டாகவே இருந்துள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு நாள் இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் படுக்கையில் நான் காணவில்லை. அவர்களைத் தேடி (துளாவிப்) பார்த்தேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் இரு கால்களையும் நாட்டி வைத்து (ஸஜ்தாவில்) இருந்தனர். அவர்களின் உள்ளங்கால்கள் மீது எனது கைகள் பட்டன என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(நூல்: முஸ்லிம் 751)

இந்த ஹதீஸில் ஆயிஷா (ரலி) அவர்கள் இருட்டில் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் துளாவிப் பார்க்கின்றார்கள். பின்னர் நபியவர்களின் கால்கள் தட்டுப்பட்ட பின்னர் தான் அவர்கள் தொழுகையில் இருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்கின்றார்கள்.

இவர்கள் கூறுவது போன்று நபி (ஸல்) அவர்கள் ஒளியாக, வெளிச்சமாக இருந்திருந்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் இருட்டில் தேடியிருக்க மாட்டார்கள். நபியவர்களின் வெளிச்சத்தை வைத்தே அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதைக் கண்டு பிடித்திருப்பார்கள். எனவே நபி (ஸல்) அவர்களை ஒளி என்று திருக்குர்ஆன் கூறுவது நேரடிப் பொருளில் அல்ல, அது இலக்கியமானது தான் என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

"அவர்கள் அறியாமை இருளைப் போக்க வந்த வெளிச்சம்'' என்ற பொருளில் தான் திருக்குர்ஆன் கூறுகின்றது என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

மனிதர்களின் மொழியிலேயே திருக்குர்ஆன் அருளப்பட்டதால் குர்ஆனிலும் இத்தகைய இலக்கிய நயம் மிகுந்த சொற்களும், வாக்கியங்களும் உள்ளன.

சரியான பார்வையுள்ளவர்கள் இலக்கியமாகக் கூறப்படுவதை இலக்கியமாகவும், நேரடியான பொருளில் கூறப்படுவதை நேரடியான பொருளிலும் புரிந்து கொள்வார்கள்.

முதலாவதாக படைக்கப்பட்டவரா?

ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணிற்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருக்கும் போதே நான் நபியாக இருந்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பரவலாக ஒரு செய்தி மக்களிடத்தில் உள்ளது. இவ்வாறு இவர்கள் குறிப்பிடும் எச்செய்தியும் நம்பத் தகுந்ததல்ல என்று இமாம் ஸர்கஸீ, முல்லா அலீ காரி போன்றோர் கூறியுள்ளார்கள்.

"அல்லாஹ் தன்னுடைய ஒளியிலிருந்து ஒரு கற்றையைப் பிடித்து, நீ முஹம்மதாக ஆகி விடு என்று கூறினான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும், "ஜாபிரே! ஆரம்பமாக அல்லாஹ் படைத்தது உன்னுடைய நபியின் ஒளி தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

நான் ஆதம், தண்ணீர், களிமண் இல்லாமல் இருந்த போதே நபியாக இருந்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியை சுயூத்தி இமாம் அவர்கள் தன்னுடைய தைலுல் அஹாதீஸில் மவ்லூஆ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதுவும் நபி (ஸல்) அவர்கள் கூறாத அவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும். இதைப் பற்றி அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். இது அறிவின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் சரியில்லாததாகும். இதனுடைய பொருளும் அடிப்படையற்றதாகும். இந்த வழிகேடர்கள் நபி (ஸல்) அவர்கள் எல்லாம் படைக்கப்படுவதற்கு முன்பாகவே உருவாகியிருந்தார்கள் என புனைந்து கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அர்ஷைச் சுற்றிலும் ஒளியாக இருந்தார்கள். மேலும், "ஜிப்ரீலே! நான் தான் அந்த ஒளி!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பது போன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் காட்டுகின்றனர். மேலும் இந்த வழிகேடர்கள் ஜிப்ரீல் குர்ஆனைக் கொண்டு வரும் முன்பே நபி (ஸல்) அதனை மனனம் செய்திருந்தார்கள் எனவும் வாதிக்கின்றனர்.

(நூல்: ஸில்ஸிலதுல் அஹாதீசுல் லயீஃபா, பாகம் 1, பக்கம் 474)

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்றும், முதன் முதலாகப் படைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படும் எந்தச் செய்திக்கும் ஆதாரம் இல்லை.

"அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நபித்துவம் எப்போது கடமையானது?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆதம் நபியவர்கள் உயிருக்கும், உடலுக்கும் மத்தியில் இருக்கும் போது'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 3542, அஹ்மத் 16028, 19686, 22128

இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும். இதை ஆதாரமாகக் கொண்டு உலகம் படைக்கப்படும் முன்பே நபி (ஸல்) அவர்கள் தான் முதலில் படைக்கப்பட்டார்கள் என்று சிலர் வாதிக்கின்றனர். ஆனால் இவர்களது இந்த வாதத்திற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமையவில்லை.

நபி (ஸல்) அவர்கள் எப்போது படைக்கப்பட்டார்கள் என்பதைக் குறித்து இந்த ஹதீஸ் எதுவும் கூறவில்லை. அவர்கள் எப்போது நபியாக தீர்மானிக்கப்பட்டார்கள் என்பதையே இங்கு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைப்பதற்கு முன்பே நபி (ஸல்) அவர்களை இறுதித் தூதராக அல்லாஹ் தீர்மானித்து, விதியாக்கி விட்டான் என்பதைத் தான் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இஸ்மாயீல் (அலை) அவர்களின் வம்சத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக்கப்பட்டதை யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காலம் காலமாக இஸ்ரவேல் சமுதாயத்தில் தான் நபிமார்கள் தோன்றியுள்ளார்கள், இப்போது மட்டும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சமுதாயமான அரபியர்களிலிருந்து நபி எப்படி வர முடியும் என்று அன்றைய யூதர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதைக் கீழ்க்காணும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்ராஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்.

(அல்குர்ஆன் 4:54)

யூதர்களின் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாகவே நபி (ஸல்) அவர்கள், தான் எப்போது நபியாக்கப் பட்டேன் என்பதை மேலே நாம் சுட்டிக் காட்டிய திர்மிதீ ஹதீஸில் கூறுகின்றார்கள்.

நபித்துவம் என்பது ஒருவர் தாமாக சம்பாதிக்கும் ஒரு பதவியல்ல! அது இறைவனால் தீர்மானிக்கப்படும் ஒரு பதவியாகும். அவன் யாரை நபியாக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளானோ அவர் தான் நபியாக வர முடியும் என்பதை விளக்கும் விதமாகவே, ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படும் முன்னரே தான் நபியாக்கப்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இது விதி குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறும் செய்தியாகும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்தால் விளங்கலாம்.

ஆதம் நபியவர்களும், மூஸா நபியவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம், மூஸா (அலை) அவர்கள், "ஆதமே! எங்கள் தந்தையான நீங்கள் (பாவம் செய்ததன் காரணமாக) எங்களை இழப்புக்கு உள்ளாக்கி விட்டீர்கள். எங்களை சொர்க்த்திலிருந்து வெளியேற்றி விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான். அவன் தன் கரத்தால் உமக்காக (தவ்ராத்தை) வரைந்தான். நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்து விட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?'' என்று கேட்டார்கள். (இதன் மூலம்) மூஸா (அலை) அவர்களை, ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள், தோற்கடித்து விட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6614

அல்லாஹ் மறுமை நாள் வரைக்கும் இவ்வுலகில் யார் யாரெல்லாம் தோன்றுவார்களோ அவர்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களின் முதுகுத் தண்டிலிருந்து தான் படைத்தான். இக்கருத்தைப் பின்வரும் வசனம் கூறுகிறது.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்)

அல்குர்ஆன் 7:172

நபி (ஸல்) அவர்களும் ஆதமுடைய சந்ததிகளில் உள்ளவர்கள் தான்.

நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி குறிப்பிடும் பொழுது, நான் அரசனாக இல்லை. நான் உப்புக் கண்டத்தை உண்ணும் ஒரு பெண்ணுடைய மகன் தான் என்று கூறினார்கள்.

(இப்னுமாஜா 3303)

எனவே நபி (ஸல் ) அவர்கள் முதலில் படைக்கப்பட்டார்கள் எனக் கூறுவது திருமறைக் குர்ஆனுக்கு எதிரானதாகும்.

நான் படைப்பால் நபிமார்களில் முதலாமவனாவேன். அனுப்பப் பட்டவர்களில் அவர்களில் இறுதியானவனாவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் சில பலவீனமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதுவும் திருமறை வசனங்களுக்கு எதிரானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் நபிமார்களில் இறுதியானவர் தான் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33:40)

பின்வரும் ஹதீஸும் நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி தான் எனச் சான்று பகர்கிறது,

நான் தான் இறுதியானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை

(நூல்: புகாரி 4896, முஸ்லிம் 4342)

ஆதம் (அலை) அவர்கள் தான் முதலாவது படைக்கப்பட்டவர்களும் முதல் நபியும் ஆவார்கள்

ஆதம், நூஹ், இப்ராஹீமின் குடும்பத்தார், மற்றும் இம்ரானின் குடும்பத்தினரை அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான். (அல்குர்ஆன் 3:33)

இவ்வசனத்தில் அல்லாஹ் நபியாகத் தேர்ந்த்தெடுக்கப்பட்டவர்களைப் பற்றித் தான் வரிசைப்படிக் கூறுகிறான். ஆதம் (அலை) அவர்கள் தான் மனிதர்களில் முதலில் படைக்கப் பட்டவர்கள் என்பது நாம் அனைவரும் தெளிவாக அறிந்த உண்மையாகும்.

படைப்புகளில் எழுதுகோல் தான் முதலாவதாக படைக்கப்பட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய சரியான அறிவிப்பு உள்ளது. (அஹ்மத் 21647) இக்கூற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் தான் முதலாவதாக படைக்கப் பட்டார்கள் எனக் கூறும் பலவீமான ஹதீஸ் முரண்படுகிறது. எனவே பலவீனமான இச்செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்த வராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர் (அல்குர்ஆன் 42:82)

உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழி காட்டினான்

(அல்குர்ஆன் 94:7)

மேற்கண்ட வசனங்களில் நபித்துவத்திற்கு முன்பாக நபி (ஸல்) அவர்களுக்கு ஈமானும் தெரியாது; வேதமும் தெரியாது; வழியும் தெரியாது என்று அல்லாஹ் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே நபியாக இருந்தால் 40வது வயதிற்கு முன்பே குர்ஆனைப் பற்றியும் ஈமானைப் பற்றியும் அறிந்திருப்பார்கள். ஏகத்துவக் கொள்கையை ஏற்காத தன் தாய்க்கும் தந்தைக்கும் ஈமானைப் பற்றி கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் தான் முதன் முதலில் படைக்கப்பட்டவர் என்ற கூற்று தோற்றுப் போகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரயீல் (அலை) அவர்களைக் கண்டதும் பயந்தார்கள். அன்னை கதீஜா (ரலி) அவர்கள் பயமுற்ற நபி (ஸல்) அவர்களை வரகத்துப்னு நவ்பலிடம் அழைத்துச் சென்றார்கள். வந்தது ஜிப்ரயீல் என்று வரக்கா கூறும் போது தான் நபி (ஸல்) அவர்களுக்கு, தான் தூதரானது தெரிய வருகிறது. இச்சம்பவம் புகாரியில் இடம் பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள் முதல் நபி என்றால் ஏன் ஜிப்ரயீல் (அலை) அவர்களைக் கண்டு பயப்படவேண்டும்? நடந்ததை அறிய ஏன் வரக்காவிடம் செல்ல வேண்டும்? எனவே நபி (ஸல்) அவர்களுக்கு 40வது வயதில் தான் நபித்துவம் கிடைத்தது என்பதைச் சந்தேக மில்லாமல் உணரலாம்.

நான் தீர்ப்பு நாளில் ஆதமுடைய மக்களுக்குத் தலைவன். எனது மண்ணறை தான் முதலாவதாகப் பிளக்கும். நான் தான் முதலாவதாக பரிந்துரை செய்பவனும் முதலாவதாக பரிந்துரை ஏற்றுக் கொள்ளப் படுபவனும் ஆவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ் முஸ்லிம்(4223)ல் உள்ளது.

இச்செய்தியில், தான் முதன்மையாக இருக்கும் இடங்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் முதலாவதாக படைக்கப் பட்டிருந்தால் அதையும் இங்கு குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு கூறாததன் மூலம் இச்சம்பவம் பொய்யென அறியலாம்.

எனவே திருமறைக் குர்ஆனுக்கும் திருநபி மொழிகளுக்கும் மாற்றமாக அமைந்த இத்தகைய கட்டுக் கதைகளையும் அவற்றை ஆதாரமாகக் காட்டும் மவ்லூது போன்ற புராணங்களும் விட்டொழிக்கப்பட வேண்டியவையாகும். அதுதான் நம்முடைய ஈமானுக்கும் பாதுகாப்பானதாகும்.

காத்தமுன்னபி கத்னா செய்யப்பட்டு பிறந்தார்களா?

சுப்ஹான மவ்லிதில் இடம் பெறும் மற்றொரு கட்டுக் கதை நபி (ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்டு பிறந்தார்கள் என்பதாகும்.

அவர் கத்னா செய்யப் பட்டவராகவும், எண்ணை தேய்க்கப்பட்டவராகவும், சுர்மா இடப்பட்டவராகவும் மகத்தான குணங்களின் மீதும், அழகான பண்புகளின் மீதும் இயற்கையில் படைக்கப்பட்டார்கள்.

இந்தக் கதை சுப்ஹான மவ்லிதின் 8வது ஹிகாயத்தில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு கத்னா செய்யப்பட்டது குறித்து மூன்று விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன.

1. அவர்கள் பிறக்கும் போதே கத்னா செய்யப்பட்டே பிறந்தார்கள்.

2. அவர்கள் ஹலீமாவின் அரவணைப்பில் இருந்த போது, மலக்குகள் நபியவர்களின் நெஞ்சைப் பிளந்த நாளில் கத்னா செய்யப்பட்டது.

3. அவர்கள் பிறந்த ஏழாவது நாளில் அவர்களது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் கத்னா செய்து, விருந்தளித்து, முஹம்மத் என்று பெயரிட்டார்கள்.

ஆக மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

இது தொடர்பாக இமாம் இப்னுல் கய்யூம் அவர்கள் தமது ஸஆதுல் மஆத் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஏழாவது நாள் கத்னா செய்யப்பட்டு பெயரிடப்பட்டு விருந்தளிக்கப்பட்டது என்ற செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இக்ரிமா வழியாக அறிவிப்பதாக ஒரு செய்தி உள்ளது.

இந்தச் செய்தியை ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரையும் சந்தித்து நான் விசாரித்தேன். இப்னு அபீ சதீ என்பவரைத் தவிர வேறு யாரிடமும் இந்தச் செய்தி கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்சனை இரண்டு சிறந்த அறிஞர்களுக்கு மத்தியில் சர்ச்சையாக உருவெடுத்து, அவ்விருவரில் ஒருவர், நபி (ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்டே பிறந்தார்கள் என்று குறிப்பிட்டு, அதை நிலை நாட்ட ஏகப்பட்ட ஹதீஸ்களைக் கொண்டு வந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கின்றார். ஆனால் அதிலுள்ள ஹதீஸ்கள் எதுவுமே ஒன்றுக்கும் உதவாதவையாகும். இந்த நூலை இயற்றிய அறிஞரின் பெயர் கமாலுத்தீன் இப்னு தல்ஹா ஆகும்.

இதற்கு கமாலுத்தீன் இப்னுல் அதீம் என்ற அறிஞர் பதிலளிக்கையில், நபி (ஸல்) அவர்களுக்கு அரபியர்களின் வழக்கப்படி கத்னா செய்யப்பட்டது என்று தெளிவாக விளக்கியுள்ளார். இவ்வாறு அபூ உமர் பின் அப்துல் பர் குறிப்பிடுவதாக இமாம் இப்னுல் கையூம் தமது ஸஆதுல் மஆதில் கூறுகின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்டு பிறக்கவில்லை என்று அபுல் ஃபரஜில் இப்னுல் ஜவ்ஸீ என்பவர் தமது மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

கத்னா செய்யப்பட்டு பிறந்தார்கள் என்பது நபி (ஸல்) அவர்களுக்குரிய சிறப்பு கிடையாது. ஏனென்றால் மக்களில் பலர் கத்னா செய்யப்பட்டே பிறந்துள்ளார்கள் என்று இப்னுல் கையூம் அவர்கள் ஸஆதுல் மஆதில் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்டு பிறந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தியாகும்.

EGATHUVAM APR 2005