சிறு நேரத்தில் பெரு நன்மைகள்
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
மனிதர்களில் பெரும்பான்மையினர் எல்லா
செயல்களும் விரைவாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். எவ்வளவு பெரிய வேலையும் சொற்ப நேரத்தில், இலகுவாக
முடிந்து விடுவதையே அதிகமானோர் விரும்புகின்றனர்.
அதனாலேயே சமையல் வேலையை எளிதாக்கித் தரும்
மிக்ஸி, கிரைண்டர்
போன்ற வீட்டுப் பொருள்களுக்கும், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் பைக், இரயில்
போன்றவை உள்ளிட்ட அனைத்து நவீன சாதகங்களுக்கும் மக்களுக்கு மத்தியில் தனிமவுசு
இருப்பதைக் காண முடிகிறது.
முப்பதே நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம்
எனும் தலைப்பிலான புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும், ஒரு
நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டா என்று விளம்பரம் செய்யப்படும் கடைக்குத் தனியாக
மக்கள் கூட்டம் மொய்ப்பதும் சீக்கிரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்ற
பெரும்பான்மை மக்களின் மனநிலையைக் கண்ணாடியாய் பிரதிபலிக்கின்றது.
மக்களின் இந்த மனநிலையைப் பறைசாற்றும்
அடையாளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் விஷயம் அதுவல்ல. இவ்வாறாக
எல்லாவற்றிலும் சொற்ப நேரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்று
விரும்புவர்களுக்கு இறைவனிடத்தில் நன்மைகளைப் பெறுவதற்கு இதுமாதிரியான வழிமுறைகள்
உண்டா? என்று
கேட்டால் ஆம் என்பது தான் அதற்குச் சரியான பதிலாகும்.
ஒரு நன்மைக்குப் பத்து கூலிகள் தருவதை
(அல்குர்ஆன் 6:160)
வழக்கமாக
வைத்திருக்கும் இறைவனிடம் இது போன்ற சலுகைகள் இல்லாமலிருக்குமா?
நபிகள் நாயகம் கற்றுத் தந்த நல்லறங்களிலும்
சொற்ப நேரத்தில் அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும்படியான ஏராளமான வழிபாடுகளை அறிய
முடிகிறது. அவ்வகையிலான சில நன்மைகளை இங்கே பட்டியலிடுகிறோம்
முதல் தகுதி
அதற்கு முன் முக்கியமான ஒன்றை இங்கே
குறிப்பிட்டு விடுகிறோம்.
குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளைப் பெற
வேண்டும் என்று ஆசை கொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன் முக்கியமாக நம்
நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது தான் மனத்தூய்மை.
செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்காக
என்ற மனத்தூய்மையுடன் செய்யும் போதே அல்லாஹ்விடம் அதற்குரிய கூலியைப் பெற முடியும்
என்பதை எப்போதும் மறந்து விடக் கூடாது.
ஆதமுடைய
இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு
வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம்
ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை)
அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
(அல்குர்ஆன் 5:27)
எனவே சரியான இறைநம்பிக்கையுடனும், மனத்தூய்மையுடனும்
இந்நன்மைகளைப் புரிந்தால் அல்லாஹ்விடம் அதிக நன்மைகளைப் பெற்றிடலாம் என்பதில்
சந்தேகமே இல்லை. அவற்றை
இனி காண்போம்.
சொர்க்கத்தின் எட்டு வாசல்களும்
திறக்கப்பட...
உளூச் செய்த நிலையில் பாங்கிற்குப் பிறகு
அஷ்ஹது அன் லாயிலாஹ என்று துவங்கும் துஆவை ஓதினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும்
அவருக்காகத் திறக்கப்படும் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.
நாங்கள்
(முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்து வந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை
நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு
நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே
நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், "ஒரு
முலிஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி
(பணிந்து, உள்ளச்சத்துடன்)
தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை'' என்று
கூறுவதை நான் கேட்டேன்.
உடனே நான்
"என்ன அருமையான வார்த்தை!'' என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த
ஒருவர் "இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது'' என்றார்.
உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு
வந்தீர்கள்; நான்
பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன்
பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களில்
ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, "அஷ்ஹது
அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர
வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும்
தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின்
எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில்
அவர் நுழைந்து கொள்ளலாம்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல்: முஸ்லிம் 397
சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுவது
விலை மதிக்க இயலாத நன்மை என்பதும், அதற்குரிய வழிமுறையாகச் சொல்லப்பட்டது மிக
எளிமையானது என்பதும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை.
ஒரு நாளுக்கு ஆயிரம் நன்மைகள்
நாளொன்றுக்கு ஆயிரம் நன்மைகளை அள்ளித் தரும்
மிக எளிதான வழிபாட்டை நபிகள் நாயகம் பின்வரும் நபிமொழியில் கற்றுத்தருகிறார்கள்.
அதை உளமாறப் படித்து அது எவ்வளவு எளிதானது என்பதை நீங்கள் உணரும் போது
சுப்ஹானல்லாஹ் என்று கூறத் தயங்க மாட்டீர்கள்.
நாங்கள்
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில்
ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?'' என்று
கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில்
ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?'' என்று
கேட்டார்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை
("சுப்ஹானல்லாஹ்' என்று கூறித்) துதிக்க, அவருக்கு
ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத்
துடைக்கப்படுகின்றன'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 5230
கையளவு தர்மம் - மலையளவு கூலி
தூய்மையான சம்பாத்தியத்தில் மதிப்பில் குறைந்த
பொருளை சிறிய அளவு தர்மம் செய்தாலும் கூட அதற்காக இறைவனிடத்தில் மலையளவு
நன்மைகளைப் பெறலாம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். கையளவு முதலீட்டுக்கு
மலையளவு லாபம் என்பது உண்மையில் பெரிய விஷயம் தானே!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார்
முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -
அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக
அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக்
குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு
வளர்த்துவிடுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),,
நூல்: புகாரி 1410
ஒரு நோன்பும் ஈராண்டு பாவ மன்னிப்பும்
அரஃபா நாளில் நோன்பு நோற்றால் இரு ஆண்டுகள்
புரிந்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாகவும், அதே போல ஆஷூரா தினத்தன்று (முஹர்ரம் 9,10) நோன்பு
நோற்றால் ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என்றும் நபிகள் நாயகம்
அறிவுறுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக்
கேட்கப்பட்டதற்கு, "முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும்
அது பாவப் பரிகாரமாக அமையும்'' என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில்
நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப்
பரிகாரமாகும்''
என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்: முஸ்லிம் 2152
எழுத்து ஒன்று - நன்மைகள் பத்து
திருக்குர்ஆனை ஓதும் போது அதில் உள்ள ஒவ்வொரு
எழுத்திற்கும் பத்து நன்மைகள் வீதம் நமக்குக் கிடைப்பதாக நபிகளார்
போதித்துள்ளார்கள். குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளை அறுவடை செய்ய விரும்பும்
நபர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பே என்பதில் துளியும் சந்தேகமில்லை.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு எழுத்தை
ஓதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என்பது அதைப் போன்று
பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன்.
மாறாக அலிஃப் ஒரு எழுத்தாகும். லாம் ஒரு எழுத்தாகும். மீம் ஒரு எழுத்தாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல்: திர்மிதி (2835)
மூன்று புனிதப் பள்ளிகள்
கஃபா, மஸ்ஜிதுந் நபவீ, பைத்துல் முகத்தஸ் ஆகிய பள்ளிகளில் தொழுவது
ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட அதிக நன்மைகளைப்
பெற்றுத் தரும்.
எனது இந்த
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம்
தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத்
தவிர.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1190
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஸ்ஜிதுல்
ஹராம், மஸ்ஜிதுந்
நபவீ, மஸ்ஜிதுல்
அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை
எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளப்படாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1189
குர்ஆனில் மூன்றில் ஒரு பாகம்
"குல்ஹுவல்லாஹு அஹத்' எனும்
(112ஆவது)
அத்தியாயத்தை ஓதினால் குர்ஆனில் மூன்றில் ஒரு பங்கை ஓதியதற்கு ஈடானதாகும் என்று
நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர்
"குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்
கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர்
விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார்.
அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக
மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர்
எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு
பங்கிற்கு ஈடானதாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 5013
நபி (ஸல்)
அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை
உங்களில் ஒருவரால் ஓத முடியாதா? என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய
நபித்தோழர்கள், அல்லாஹ்வின்
தூதரே! எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்)
அவர்கள், "அல்லாஹ்
ஒருவனே; அல்லாஹ்
தேவைகளற்றவன்'
(என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு
பகுதியாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),
நூல்: புகாரி 5013
பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலிகள்
வழங்குவதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதையும் இந்நேரத்தில் நினைவு கூர்வது
சாலச்சிறந்தது.
நம்பிக்கை
கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு
நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி
கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
அல்குர்ஆன் 39:10
EGATHUVAM APR 2015