காற்று இறைவனின் சான்றே - MAY 2015
எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்
சூரியக் கதிர்கள் சுடும் வெப்பத்தைத் தொடர்ந்து
கொட்டிக் கொண்டிருக்கும் கோடை காலம் இது. அக்னிக் கதிர்களின் ஆவேசத் தாக்குதலில்
இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாள வேண்டிய காலநிலை. அடிக்கடி நீர்
ஆகாரங்களைப் பருகுவது, நிழல்களில் ஒதுங்கி ஓய்வெடுப்பது போன்றவை
கட்டாயமாகிப் போன இக்கட்டான நிலை.
சூழ்நிலை இவ்வாறிருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் கொடுமை வேறு. ஓடாத
மின்விசிறிகளுக்கு கீழே வியர்வை வழிய மனமும் தேகமும் வெந்து, காத்துக் கொண்டிருக்கும் மக்களின் பரிதாப நிலையை என்னவென்று
சொல்வது?
இதனைத் தாக்குப்பிடிக்க இயலாத நபர்கள், தற்காலிக உதவியைத் தேடியவாறு ஓலை விசிறி, காகித விசிறி என்று பழைய சாதனங்கள் பக்கம் செல்லவும்
தயாராகி விடுகிறார்கள். நெருக்கடியான அடுக்குமாடி வீடுகள் பெருகிவிட்ட காரணத்தால், காற்றோட்டத்திற்காக இரவு நேரத்தில் வீட்டு முற்றங்களிலும், மாடிகளிலும் படுத்துறங்கும் மக்கள் கூட்டம்.
இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் உண்மைதான்
என்ன? கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து காத்துக்
கொள்வதற்கு இருக்கும் வாய்ப்புகளில் காற்றும் முக்கியமான ஒன்று என்பதை எவரும்
எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் பட்டியலில் இருக்கும் காற்றின் அருமையைப்
புரிந்து கொள்ள வேண்டிய பொன்னான தருணம் இது. இப்போதாவது, இத்தகைய இன்றியமையாத காற்று குறித்து குர்ஆன் மற்றும்
நபிவழிகளின் துணையோடு சில செய்திகளைத் தெரிந்துக் கொள்வோம்.
காற்றின் முக்கியத்துவம்
திருமறைக் குர்ஆனைப் படித்துப் பார்க்கும் போது, பல்வேறு இடங்களில் ஒரே விதமான வசனங்கள் இடம்
பெற்றிருப்பதைக் காணலாம். அந்த வகையில், உலகிலே இருக்கும் முக்கியமான முக்கியத்துவமான பொருட்கள், காரியங்கள் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறும் வசனங்கள்
ஆங்காங்கே அதிகம் காணப்படுகின்றன. அவற்றுள் ஓர் அங்கமாக, காற்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதை இங்கு நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
வேகமாக புழுதியைப் பரத்துவதன் மீதும், மழையைச் சுமப்பவற்றின் மீதும், எளிதாகச் செல்பவை மீதும், கட்டளைகளைப் பங்கிடுவோர் மீதும் சத்தியமாக! நீங்கள்
எச்சரிக்கப்படுவது உண்மை.
(திருக்குர்ஆன்
51:1-5)
தொடர்ந்து அனுப்பப்படுபவை மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக! பரப்பிவிடுபவை
மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும்
சத்தியமாக! மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின்
(காற்றின்) மீது சத்தியமாக!
(திருக்குர்
ஆன் 77:1-6)
காற்றே இல்லை; அப்படியோ காற்று இருந்தாலும் அது சுவாசிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பதாலேயே
பிற கோள்களில் ஜீவராசிகள் வாழ்வதற்குக் கடுகளவும் வாய்ப்பில்லை என்கிறார்கள்
விஞ்ஞானிகள். நாம் உயிர் வாழ்வதற்குக் காற்று கட்டாயம் இருக்க வேண்டும். அத்துடன்
அது தேவையான அளவில் தகுதியான நிலையில் இருப்பதும் அவசியம். இத்தகைய தன்மை பூமியில்
மட்டுமே நிலவுகிறது.
மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின்
அளவு, சுமார் 15.5. லிட்டர். பெரிய அகன்ற தாவரங்கள் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் காற்றில்
இருக்கும் ஈரப்பதத்தின் மூலம் தான் உயிர் வாழ்கின்றன. காற்றில் ஏற்படும் அழுத்த
மாறுபாடு மழைப் பொழிவுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இப்படி, காற்றின் சிறப்புகளை, நன்மைகளை, பயன்களைச் சொல்வதாக இருந்தால் ஏடுகள் போதாது
என்பதே நிதர்சனம்.
இறைவனை அறிவதற்குரிய சான்று
ஆகாய வெளியில் அங்கும் இங்கும் அலைபாயும்
காற்று அற்பமானதும் அல்ல; அலட்சியம் செய்யத்தக்கதும் அல்ல. இந்தப்
பிரபஞ்சத்தை வடிவமைத்து, கட்டுக்கோப்பாக அடக்கி ஆளும் இறைவன் ஒருவன்
இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளத் துணைபுரியும் அற்புதமான சான்று. அவன்
ஞானமிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன் என்பதை, திசை மாறிமாறி வீசும் காற்றின் மூலம் தெளிவாக விளங்கிக்
கொள்ளலாம். இந்தப் பேருண்மையை எடுத்துரைக்கும் திருமறை வசனங்களைப் பாருங்கள்.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள
மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 2:164)
அவன் தனது அருளை உங்களுக்குச் சுவைக்கச்
செய்வதற்காகவும், கப்பல்கள் அவன் கட்டளைப்படி செல்வதற்காகவும், அவனது அருளை நீங்கள் தேடுவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் நற்செய்தி கூறும் காற்றுகளை
அனுப்பி வைப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. (திருக்குர்ஆன் 30:46)
இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானிலிருந்து அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும்
சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 45:5)
மலைகளைப் போன்று கடலில் செல்லும் கப்பல்களும்
அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் நினைத்தால் காற்றை நிறுத்தி விடுகிறான். உடனே அது
அதன் (கடலின்) மேற்பரப்பில் நின்று விடுகின்றது. சகிப்புத் தன்மையும்
நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 42:32,33)
இறைவனின் கட்டுப்பாட்டில் காற்று
இயற்கையின் கட்டுப்பாடு என்பது இறைவனின்
கைவசத்தில் இருக்கிறது. அதிலே காற்றுக்கு மட்டும் விதிவிதிலக்கு இருக்கிறதா என்ன? அவ்வாறில்லை. அவனே தான் விரும்பும் வகையில் காற்றை
இயக்குகிறான். அதன் மூலம் பல விதமான மாற்றங்களை, விளைவுகளை ஏற்படுத்துகிறான். கடவுளே இல்லை என்று வாதிடுபவர்களும், காண்பதை எல்லாம் கடவுள் என்று சொல்பவர்களும், அழித்துவிட இயலாத காற்றைக் குறித்துக் கொஞ்சமாவது
கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும். பருவ மாற்றத்திற்குத் தோதுவாக வெவ்வேறு
திசைகளில் பயணிக்கும் காற்றின் மாறுதலுக்குப் பின்னணியில் இருக்கும் படைத்தவனின்
நுட்பத்தைப் புரிந்து அவனுக்கு அடிபணிந்து வாழவேண்டும்.
தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே
காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை
ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம்.
இவ்வாறே இறந்தோரையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக்
கூடும்.
(திருக்குர்ஆன் 7:57)
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழிகாட்டியவனா? தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.
(திருக்குர்ஆன் 27:63)
காற்றைக் இயக்கும் அற்புதம்
ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனது ஆணைப்படி அழகிய முறையில் வாழ வேண்டும் என்பதைப்
போதிப்பதற்கு ஏராளமான இறைத்தூதர்கள் வந்துச் சென்றுள்ளார்கள். அவர்களை அடையாளம்
கண்டு கொள்வதற்கு அல்லாஹ் அவர்களுக்குச் சில அடையாளங்களைக் கொடுத்திருந்தான்.
அத்தகைய திருத்தூதர்களில் ஒருவர்தாம் சுலைமான் (அலை) அவர்கள். இந்த நபிக்குக்
காற்றை வசப்படுத்தும் அற்புதம் கொடுக்கப்பட்டு இருந்தது.
மனிதர்களால் ஒருபோதும் செய்ய முடியாத காரியத்தை
சுலைமான் (அலை) அவர்கள் செய்ததன் மூலம், அவர் சத்தியத்தின் பக்கம் அழைக்கும் அல்லாஹ்வின் தூதர் என்பதை விளங்கிக்
கொள்ளும் வாய்ப்பு அன்றைய கால மக்களுக்கு கிடைத்தது. இந்தச் செய்தியை இறைவனே தமது
இறுதி வேதமான திருக்குர்ஆனில் குறிப்பிட்டும் இருக்கிறான்.
வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு
வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி
சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.
(திருக்குர்ஆன் 21:81)
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன்
புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை
ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும்
இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை
அவருக்கு சுவைக்கச் செய்வோம்.
(திருக்குர்ஆன் 34:12)
ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது
சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார்.
"என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத
ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்'' எனக் கூறினார். அவருக்குக் காற்றை வசப்படுத்திக்
கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.
(திருக்குர்ஆன் 38:34-36)
காற்றின் அற்புதங்கள் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் மார்க்கம் கூறும்
செய்திகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.
EGATHUVAM MAY 2015