Mar 22, 2017

குடந்தை தரும் பாடம்

குடந்தை தரும் பாடம்:

குழந்தைகளை மட்டுமல்ல! குடும்பத்தையும் காப்போம்

அடுப்புக்குள் மட்டும் அடக்கமாக நின்று எரிந்து, குழந்தைகளின் பசிக்கு இரை ஆக்கிக் கொண்டிருந்த தீ, திடீரென்று ஆவேசத்துடன் கூரைக்குத் தாவி, பச்சிளங்குழந்தைகள் மீது பந்தாகப் பாய்ந்து, அவர்களைத் தன் கோரப் பசிக்கு இரையாக்கிய கொடூர சம்பவம் கும்பகோணத்தில் நடந்தது.

தொன்னூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பலி கொண்ட இந்த அக்கினி வெறியாட்டம் குடந்தையை மட்டுமல்ல! இந்த உலகத்தையே உலுக்கி விட்டது. அதிலுள்ள மக்களின் உள்ளங்களை உருக்கி விட்டது. காலையில் கைப்பைகளுடன் வந்த மொட்டுக்கள் மாலை நேரத்தில் கரிக்கட்டையாக மாறி விட்டனர். அவர்கள் கொண்டு வந்த தின்பண்டங்கள், நொறுக்குத் தீனிகள் பட்டுத் தெறித்து, தீச்சுவாலைகளில் சுட்டெரிந்த பின்னரும் ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு பெற்றோர்கள் உற்றார்கள் மற்றும் உறவினர்கள் அலறித் துடித்து அழுதது நம் நெஞ்சங்களைப் பிளந்து விட்டது. செந்தோல்களை இழந்த செல்வங்கள் செக்கச் சிவந்த கொவ்வைப் பழமாக, பச்சைக் கறியாக வாழை இலைகளில் துவண்டு கிடந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காட்சிகளை நம் கண்களால் காண முடியவில்லை.

இந்தக் கோரக் காட்சிகளுக்கிடையே ஓர் ஈரக் காட்சி! மெர்சி என்ற மாணவி அக்கினி நாவுகளிலிருந்து தப்பி விட்டாள். பாசம் அவளை இடை மறிக்கின்றது. உன் சகோதரர்கள் இருவர் உள்ளே மாட்டிக் கொண்டார்களே? அவர்களை நீ காப்பாற்ற வேண்டாமா? என்று அவள் மனசாட்சி அவளிடம் கேட்கின்றது. தப்பியள் தன் சகோதரர்களைத் தேடி உள்ளே போகின்றாள். உள்ளே அவளது சகோதரர்களைக் காணவில்லை. மாறாக அவளது வகுப்புத் தோழன் தீயில் வெந்து கொண்டிருந்தான். அவனது உடல் முழுவதும் அரவணைத்துக் கொண்டிருந்த தீயுடன் இவளை ஆரத் தழுவுகின்றான். அவ்வளவு தான். இவளும் 60 சதவிகித தீக்காயங்களுக்கு உள்ளாகின்றாள். அந்தச் சிறுவனோ ஆரத் தழுவிய தீயின் இறுகிய கோரப் பிடியில் ஒரேடியாக அணைந்து போகின்றான். அதே சமயம் இவள் தேடிச் சென்ற சகோதரர்களோ தீயிடம் போய்ச் சேரவில்லை. தன் தாயிடம் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

இந்த சோகக் காட்சியில் நினைவில் நிற்கும் இன்னொரு ஈரக் காட்சி! ஒரு சிறுமி தன் சகோதரனைக் காக்க ஓடி வருகின்றாள். அந்த நேரத்தில் இந்த சின்னஞ்சிறு மழலைகளைக் காக்க மறந்து தப்பித்தோடிய ஆசிரியரின் வெறியோட்டக் காலடியில் இடறி விழுகின்றாள். தன் தம்பி எங்கே போனான் என்று தெரியாமல் இவள் மட்டும் தப்பி விடுகின்றாள். தம்பியோ திரும்ப வரவே இல்லை.

இந்த இடறலில் தான் நம்முடைய நெஞ்சங்களை நெருடுகின்ற ஒரு கேள்வி பிறக்கின்றது. கூரையிலிருந்து குதித்து விழுந்த இந்த அக்கினிப் பறவை என்ன அன்னப் பறவையா? அது தான் தண்ணீரை விட்டு விட்டு பாலை மட்டும் பருகிச் செல்லும் என்று சொல்வார்கள். அதுபோல் இந்த அக்கினிப் பறவை ஆசிரியர்களை விட்டு விட்டு குழந்தைகளை மட்டும் தனது சுவாலைகளால் எப்படி கொத்திச் செல்ல முடிந்தது? இருபத்து நான்கு ஆசிரியர்களும் எப்படி தப்ப முடிந்தது? எப்படி சிறகடிக்கத் தெரியாத இந்த சின்னஞ்சிறு குஞ்சுகள் மட்டும் தணலில் வெந்து வேக்காடாயின?

இந்தக் கேள்வியை எல்லோரும் எழுப்பினாலும், இந்து என்ற ஆங்கிலப் பத்திரிகை தரும் சுடர்மிகு தியாக மேற்கோளை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்.

நீர்ஜா பாணாட் என்ற ஓர் இந்திய விமான பணிப்பெண். இவர் தனது பயிற்சிக் காலத்தில், விமானக் கடத்தலின் போது கடைப்பிடிக்க வேண்டிய யுக்திகள் பற்றி நடந்த பாடத்தைப் பற்றி தன் தாயாரிடம் தெரிவிக்கின்றாள். தாயாரோ எல்லா தாயார்களையும் போலவே, "இது போன்ற கட்டம் வந்தால் நீ எங்கேனும் ஓடி விடு, அல்லது எங்கேனும் ஒளிந்து கொள்'' என்று அறிவுரை கூறுகின்றாள்.

1986ம் ஆண்டு நீர்ஜா பாணாட் பணியில் இருந்த விமானம் எதிர்பாராத விதமாக கடத்தலுக்கு இலக்காகின்றது. "யாராவது அசைந்தால் சுட்டு வீழ்த்தி விடுவோம்'' என்று கடத்தல்காரர்கள் அதிரடி முழக்கமிடுகின்றனர். இந்த சமயத்தில் நீர்ஜா தன் தாயின் அறிவுரையைப் பின்பற்றி ஒளிந்து கொள்ளவில்லை. ஒரு விமான பணிப்பெண் என்ற கடமையைத் தாண்டி பல நூற்றுக்கணக்கான உயிர்களைக் காக்கும் வீராங்கனையாக மாறுகின்றாள்.


சுட்டு விடுவோம் என்ற கடத்தல்காரர்களின் சொல்லை சுண்டைக்காய் அளவுக்குக் கூட மதிக்காமல் சுறுசுறுப்புடன் காரியம் ஆற்ற ஆரம்பித்தாள். விமானத்தில் அவசர வாயில்கள் மூலம் தன்னால் முடிந்த பயணிகளைக் காப்பாற்றுகின்றாள். இந்தச் சாகசம் அவளது உயிர் தியாகத்தில் நடந்தது. பொல்லாத கடத்தல்காரர்கள் பொழிந்த குண்டு மழையில் அவள் பிணமானாள்.

நீர்ஜா பாணாட் செய்த தியாக சாகசத்தில் கடுகளவு இந்த ஆசிரியர்கள் செய்திருந்தாலும் கொத்துக் கொத்தாக குழந்தைகள் கூட்டத்தை சாக்காட்டில் தாரை வார்த்திருக்க மாட்டார்கள் என்பது தான் "இந்து' பத்திரிகை தரும் பொருத்தமான மேற்கோளாகும்.

தீப்பற்றிய இடத்தில் ஆசிரியர்களிடம் கொஞ்சம் தியாக உணர்வு பற்றியிருந்தால் குழந்தைகளின் சாவு எண்ணிக்கையை ஓரளவு குறைத்திருக்கலாம். என்பது எல்லா தரப்பு மக்களும் தெரிவிக்கின்ற கருத்துக்களாகும். ஒரேயொரு ஆசிரியர் மட்டும் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது போன்று ஒரு கொத்தனாரும் குழந்தைகளைக் காப்பாற்ற முனைந்து பலியாகி விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மறு உலகில் ஒரு நிலை தான்

மேற்கண்ட இந்தச் செய்திகளிலிருந்து நாம் பெறுகின்ற பாடம், இவ்வுலகில் இது போன்ற ஆபத்தான கட்டங்களில் தன்னை இழந்தேனும் அடுத்தவரைக் காப்பாற்றும் தியாக நிலை! அடுத்தவருக்கு என்ன நேர்ந்தால் எனக்கென்ன? என்று தன்னை மட்டும் காக்கும் சுயநல மனப்பான்மை கொண்ட நிலை! இந்த இரு நிலைகளையும் இந்த உலகில் தான் பார்க்க முடியும். ஆனால் மறுமையிலோ ஒரேயொரு நிலை தான்! அது தன்னை மட்டும் ஒருவன் காப்பாற்றிக் கொள்ளும் நிலை தான்.

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.
(அல்குர்ஆன் 80:33)


எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். அவர்கள் ஒருவருக் கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.
(அல்குர்ஆன் 70:10-17)


மனிதன் தான் பெற்ற பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் அனைவரையும் ஈடாகக் கொடுத்து விட்டு தன்னைக் காப்பாற்ற நினைப்பான். இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் தான் கும்பகோணம் தீ விபத்து அமைந்திருக்கின்றது.

திருக்குர்ஆன் கூறும் இந்தத் தீ, கும்பகோணம் தீயைப் போன்றதல்ல! இது கொஞ்ச நேரத்தில் அணைந்து போய் விட்ட தீ!

அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும். அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.
(அல்குர்ஆன்77:32,33)

அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரே நேர் வழி பெற்றவர். அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத் நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம்.
(அல்குர்ஆன் 17:97)


இங்கு ஏற்படும் தீக்காயம் ஆறக் கூடியதாகும். கருகிய உடல்களைப் போடுவதற்கு இங்கு வாழை இலைகள் உண்டு. அதன் பிறகு அந்தக் காயங்களுக்கு அருமருந்திட்டதும் ஆறிப் போய் விடுவதும் உண்டு. ஆனால் அங்கு அப்படியல்ல!

நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்4:56)

உலகில் ஒரு மனிதன் தீயில் மாட்டிக் கொண்டு விட்டால் மரணம் அவனுக்கு ஒரு தீர்வாக அமைந்து விடுகின்றது. ஆனால் மறுமையிலோ மரணமே கிடையாது. மரணம் மரணத்தைத் தழுவி விடும். மறுமையில் நரகத் தீயில் மாட்டிக் கொண்டவர்கள் மரணிக்கவும் முடியாது.

ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது.
(அல்குர்ஆன் 14:17)


அவனே பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
(அல்குர்ஆன் 87:12,13)


கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு இனி தீ விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நி எளிதில் தீப்பற்றுகின்ற கூரைகளை அகற்றுதல்

நி நெருக்கடியின் போது மக்கள் தப்பி வெளியே வர அவசர வாயில்கள்

நி பள்ளிக் கட்டடத்திற்குள்ளேயே தீயணைக்கும் கருவிகள், அதற்கான பயிற்சிகள்

நி அமெரிக்காவில் உள்ளதைப் போன்று தீயணைப்பு வண்டிகள் வருவதற்குத் தக்க வசதியான இடங்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வருதல்

போன்ற பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகள் இப்போதே தொடங்கி, தொடர்கின்றன. இந்த முயற்சிகள் கொஞ்ச நேரம் கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கு என்றால் என்றென்றும் கொழுந்து விட்டு எரியும் மறுமை நெருப்புக்காக முஸ்லிம்களாகிய நாம் என்ன முயற்சிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம்?

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)

கோரத் தீயிலிருந்து குழந்தைகளை மட்டுமல்ல! நமது குடும்பத்தையும் காப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோமாக!

EGATHUVAM JUL 2004