ஆஷூரா நாள்
முஹர்ரம்
மாதத்தின் பத்தாம் நாள் சிறந்த மகத்தான ஒரு நாளாகும். ஆஷூரா நாள் என்றழைக்கப்படும்
அந்த நாள் எப்படிப்பட்டது? அது பற்றி
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இவ்வாறு சொல்கின்றது.
நபி (ஸல்)
அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள்.
"இது என்ன நாள்?'' என்று
கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான்
அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி
செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்''என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள்
"நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்'' என்று
கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு
நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்:
புகாரி 3397
இந்தச்
சம்பவம் நமக்கு முற்காலத்தில் நடந்த ஒரு வரலாற்றை நினைவூட்டுகின்றது. அது என்ன?
பனீ
இஸ்ரவேல் சமுதாயத் தவர்களைக் கொத்தடிமைகளாக்கி, கொடுமைப்படுத்திக்
கொண்டிருந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் என்பவனிடமிருந்து மூஸா (அலை) அவர்கள் அந்தச்
சமுதாயத்தை மீட்ட வரலாறு தான் அது.
எகிப்து
நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு
வழங்கப்பட்ட ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான
இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன். இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான்.
அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல்
சமுதாயத்தினர்.
இந்த
அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் மூஸா (அலை) அவர்கள்.
ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதோடு, ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக்
குரல் கொடுத்து,அம்மக்களை
அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு மூஸா நபிக்கு
வழங்கப்பட்டிருந்தது.
அல்லாஹ்
தனது திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான்.
திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.
ஃபிர்அவ்னின்
சர்வாதிகார ஆட்சி
மூஸா
மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக
உமக்கு கூறுகிறோம். ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப்
பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண்
மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக
இருந்தான்.
(அல்குர்ஆன் 28:3,4)
மூஸா
நபியின் பிறப்பு
பனூ
இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, மூஸா (அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். மூஸா
(அலை) அவர்கள் பிறந்த கால கட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண்
மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.
ஆனால்
அல்லாஹ்வின் அற்புதம்! எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்ற ஃபிர்அவ்ன் பிற்காலத்தில்
எதிரியாக வந்து, அவனை
அழிக்கப் போகும் மூஸா (அலை) அவர்களை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான்.
மூஸா
நபியவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவனைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக்
கொண்டிருந்த மூஸா நபியின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக
அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு
பெட்டியில் வைத்து, கடலில்
போட்டு அனுப்பி விடுகின்றார்கள்.
அதன் பின்
அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது. இந்த வரலாற்றை
அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்.
தன் பகையை
தானே வளர்த்த ஃபிர்அவ்ன்
அறிவிக்கப்பட
வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை
(இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில்
சேர்க்கும். எனக்கும் இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்'' (என்று உமது
தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது
என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று, "இக்குழந்தையைப்
பொறுப் பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று
கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர்
கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர்
உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல
வழிகளில் சோதித்தோம். மத்யன் வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே! பின்னர்
(நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.
(அல்குர்ஆன் 20:38-40)
"இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால்
இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப
ஒப்படைத்து,அவரைத்
தூதராக ஆக்குவோம்'' என்று
மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.
தங்களுக்கு
எதிரியாகவும், கவலையாகவும்
ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் தப்புக்
கணக்குப் போட்டு விட்டனர்.
"எனக்கும், உமக்கும்
இவர் கண் குளிர்ச்சியாக இருக்கட்டும்! இவரைக் கொல்லாதீர்கள்! இவர் நமக்குப்
பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று
ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர்.
மூஸாவின்
தாயாரின் உள்ளம் வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்கா விட்டால்
அவர் (உண்மையை) வெளிப் படுத்தியிருப்பார். அவர் நம்பிக்கை கொண்டோரில் ஒருவராக
ஆவதற்கு இவ்வாறு செய்தோம்.
"நீ அவரைப் பின்தொடர்ந்து செல்!'' என்று
மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில்
தொலைவிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாலூட்டும்
பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) விலக்கியிருந்தோம். "உங்களுக்காக
இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான்
உங்களுக்குக் கூறட்டுமா? அவர்கள்
இவரது நலனை நாடுபவர்கள்'' என்று அவள்
கூறினாள்.
அவரது
தாயார் கவலைப் படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின்
வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச்
சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 28:7-13)
அறியாமல்
செய்த தவறு
அவர்
பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும்,கல்வியையும்
அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.
அவ்வூரார்
கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள்
சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச்
சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார்.
உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. "இது
ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார்.
"என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து
விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார்.
அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.
"என் இறைவா! நீ எனக்கு அருள்புரிந்ததால்
குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்'' என்றார்.
அந்நகரத்தில்
பயந்தவராக (நிலைமையை) காலையில் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது முதல் நாள்
அவரிடம் உதவி தேடியவன் (மறுபடியும்) உதவி தேடி அழைத்தான். "நீ பகிரங்கமான
வழிகேடனாக இருக்கிறாய்'' என்று
அவனிடம் மூஸா கூறினார்.
பின்னர்
இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க முயன்ற போது "மூஸாவே! நேற்று
ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா? இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராக ஆக
வேண்டும் என்றே நீர் விரும்புகிறீர். சீர்திருத்தம் செய்பவராக ஆக நீர்
விரும்பவில்லை'' என்று அவன்
கூறினான்.
அந்நகரத்தின்
கடைக் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து "மூஸாவே! பிரமுகர்கள்
உம்மைக் கொன்று விட ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக!
நான் உமது நலம் நாடுபவன்'' என்றார்.
பயந்தவராக
கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். "என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை
விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!'' என்றார்.
(அல்குர்ஆன் 28:14-21)
மணம்
முடித்தல்
அவர்
மத்யன் நகருக்கு வந்த போது "என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டக்கூடும்'' என்றார்.
மத்யன்
நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்த போது மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர்
இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை விட்டு இரண்டு பெண்கள் ஒதுங்கி
நிற்பதையும் கண்டு "உங்கள் விஷயம் என்ன?'' என்று
கேட்டார். "மேய்ப்பவர்கள் விலகும் வரை நாங்கள் தண்ணீர் இறைக்க முடியாது.
எங்கள் தந்தை வயதான முதியவர்'' என்று
அவர்கள் கூறினர்.
அவர்களுக்காக
அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று, "என் இறைவா!
எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்'' என்றார்.
அவர்களில்
ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, "நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத்
தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள்.
அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். "நீர் பயப்படாதீர்!
அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் வெற்றி பெற்று விட்டீர்'' என்று அவர்
கூறினார்.
"என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக்
கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று
அவர்களில் ஒருத்தி கூறினாள்.
"எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய
வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப் படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை
உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச்
சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை
நல்லவராகக் காண்பீர்'' என்று அவர்
கூறினார்.
"இதுவே எனக்கும், உமக்கும்
இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது
குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று
(மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் 28:22-28)
நபித்துவம்
வழங்கப்படுதல்
மூஸா
அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது
குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு
நெருப்பைக் கண்டார். "இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ
அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்'' என்று தமது
குடும்பத்தாரிடம் கூறினார்.
அவர் அங்கே
வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில்
இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து "மூஸாவே! நான் தான் அகிலத்தின்
இறைவனாகிய அல்லாஹ்'' என்று
அழைக்கப்பட்டார்.
(அல்குர்ஆன் 28:29-30)
இரு பெரும்
அற்புதங்கள்
உமது
கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும் பாம்பாகக் கண்ட போது திரும்பிப்
பார்க்காது பின்வாங்கி ஓடினார். "மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர்
அச்சமற்றவராவீர்.''
உமது கையை
உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்கு மின்றி வெண்மையாக அது
வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக! இவ்விரண்டும்
உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது
சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக
உள்ளனர்.
"என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று
விட்டேன். எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' என்று அவர்
கூறினார்.
"என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப்
பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை! அவர் என்னை உண்மைப்
படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்றும்
கூறினார்).
(அல்குர்ஆன் 28:31-34)
துணைத்
தூதராக்கப்பட்ட ஹாரூன் (அலை)
"உம் சகோதரர் மூலம் உமது தோளைப்
பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க
மாட்டார்கள். நமது சான்று களுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும் உங்களைப்
பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்'' என்று அவன்
கூறினான்.
(அல்குர்ஆன் 28:35)
நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்!
என்னை நினைப்பதில் சோர்வடையாதீர்கள்!
இருவரும்
ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான்.
"அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும்
சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்'' (என்றும்
கூறினான்.)
"எங்கள் இறைவா! அவன் எங்களுக்குத்
தீங்கிழைப்பான்; அல்லது
அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என
அஞ்சுகிறோம்'' என்று
இருவரும் கூறினர்.
"அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும்
கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்'' என்று அவன்
கூறினான்.
"இருவரும் அவனிடம் சென்று நாங்கள் உனது இறைவனின்
தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு! அவர்களைத்
துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர்
வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப்
புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று
கூறுங்கள்!
(அல்குர்ஆன் 20:42-48)
அநியாயக்காரனிடம்
அழைப்புப்பணி
தெளிவான
ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை)
இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! "மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே
நான் கருதுகிறேன்'' என்று
அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
"இவற்றை வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே சான்றுகளாக அருளியுள்ளான்
என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான்
கருதுகிறேன்'' என்று அவர்
கூறினார்.
(அல்குர்ஆன் 17:101-102)
"மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?'' என்று அவன்
கேட்டான்.
"ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை
வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர்
கூறினார்.
"முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன்
கேட்டான்.
"அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள)
பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர்
கூறினார்.
(அல்குர்ஆன் 20:49-52)
ஒடுக்கப்பட்டோருக்காக
உரிமைக் குரல்
"ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்'' என்று மூஸா
கூறினார்.
அல்லாஹ்வின்
மீது உண்மை யைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து
தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை
அனுப்பு (எனவும் கூறினார்).
"நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு
வா!'' என்று அவன்
கூறினான்.
அப்போது
அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது.
அவர் தமது
கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.
"இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள்
பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று
ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 7:104-110)
போட்டிக்கு
வந்த சூனியக்காரர்கள்
"இவருக்கும், இவரது
சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல
ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம்
கொண்டு வருவார்கள்'' என்றும்
(ஃபிர்அவ்னிடம்) கூறினர்.
சூனியக்காரர்கள்
ஃபிர்அவ்னிடம் வந்தனர். "நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று
அவர்கள் கேட்டனர்.
அதற்கவன்
"ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என்று
கூறினான்.
"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று
கேட்டனர்.
"நீங்களே போடுங்கள்!'' என்று
(மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்
படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை
அவர்கள் கொண்டு வந்தனர்.
"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று
மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.
உண்மை
நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.
அங்கே
அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்; சிறுமையடைந்தனர்.
(அல்குர்ஆன் 7:111-119)
இஸ்லாத்தை
ஏற்ற சூனியக்காரர்கள்
சூனியக்காரர்கள்
ஸஜ்தாவில் விழுந்தனர்.
"அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின்
இறைவனை நம்பினோம்''என்றும் கூறினர்.
"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை
நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை
வெளியேற்று வதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து
கொள்வீர்கள்!'' என்று
ஃபிர்அவ்ன் கூறினான்.
"உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர்
உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்'' (என்றும் கூறினான்)
(அல்குர்ஆன் 7:120-124)
ஈமானிய
உறுதி
"நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள்'' என்று
அவர்கள் கூறினர்.
"எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது
அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று
ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) "எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக!
எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்.
"இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்ப
தற்காகவும், மூஸாவையும்
அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?'' என்று
ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். "அவர்களின் ஆண் மக்களைக்
கொல்வோம். பெண்(மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம்
செலுத்துபவர்கள்'' என்று
ஃபிர்அவ்ன் கூறினான்.
"அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக
இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை
அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா
தமது சமுதாயத்திடம் கூறினார்.
"நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை
கொடுக்கப்பட்டு வருகிறோம்'' என்று
அவர்கள் கூறினர். "உங்கள் இறைவன், உங்கள்
எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு
செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்'' என்றும்
கூறினார்.
(அல்குர்ஆன் 7:125-129)
அல்லாஹ்
வழங்கிய அடுக்கடுக்கான சோதனைகள்
"படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப்
பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத்
தண்டித்தோம்''
அவர்களுக்கு
ஏதேனும் நன்மை வந்தால் "அது எங்களுக்காக (கிடைத்தது)'' எனக்
கூறுகின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன்
உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். "கவனத்தில் கொள்க. அவர்கள்
பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர்
இதனை அறிவதில்லை.''
"எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச்
சான்றைக் கொண்டு வந்த போதிலும்,நாம் உம்மை நம்பப் போவதில்லை'' என்று
அவர்கள் கூறினர்.
எனவே
அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள்,இரத்தம்
ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த
கூட்டமாகவே இருந்தனர்.
அவர்களுக்கு
எதிராக, வேதனை வந்த போதெல்லாம் "மூஸாவே! உமது
இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை
விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின்
மக்களை அனுப்பி வைப்போம்''என்று அவர்கள் கூறினர்.
அவர்கள்
அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர் களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே
அவர்கள் வாக்கு மாறினர்.
(அல்குர்ஆன் 7:130-135)
மூஸா
நபியும் பனூ இஸ்ரவேலர்களும்
ஃபிர்அவ்ன், தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும், அவனது சபையோருக்கும் பயந்ததால் அவரது
சமுதாயத்தில் சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. ஏனெனில்
ஃபிர்அவ்ன் அப்பூமியில் வலிமையுள்ளவன்; வரம்பு
மீறுபவன்.
"என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே
சார்ந்திருங்கள்!'' என்று மூஸா
கூறினார்.
"அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா!
அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!'' என்று
அவர்கள் கூறினர்.
"உனது அருளால் (உன்னை) மறுக்கும்
கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!'' (என்றும் கூறினர்)
"இருவரும், உங்கள்
சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! உங்கள் வீடுகளை
ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்!
நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!'' என்று
மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம்.
"எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில்
அலங்காரத்தையும், செல்வங்களையும்
அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது
பயன் படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக!
துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா
கூறினார்.
"உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது.
இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!'' என்று
(இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 10:83-89)
ஃபிர்அவ்னின்
ஆணவம்
மூஸாவை
நமது சான்றுகளுடனும், தெளிவான
ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான்,காரூன்
ஆகியோரிடம் அனுப்பினோம். "பெரும் பொய்யரான சூனியக்காரர்'' என்று
அவர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 40:23-24)
"தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவன்
யார் என்பதையும், யாருக்கு
நல்ல முடிவு ஏற்படும் என்பதையும் என் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் வெற்றி
பெற மாட்டார்கள்'' என்று மூஸா
கூறினார்.
"பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு
கடவுளை நான் அறியவில்லை''என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
(அல்குர்ஆன் 28:37-38)
நானே
உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
(அல்குர்ஆன் 79:24)
நம்மிடமிருந்து
அவர்களிடம் உண்மையை அவர் கொண்டு வந்த போது "இவரை நம்பியோரின் ஆண் மக்களைக்
கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு விடுங்கள்!'' எனக்
கூறினர். (நம்மை) மறுப்போரின் சூழ்ச்சி தவறிலேயே முடியும்
"மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்!
அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும்
பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்'' என்று
ஃபிர்அவ்ன் கூறினான்.
"விசாரிக்கப்படும் நாளை நம்பாத ஒவ்வொரு அகந்தை
கொண்டவனை விட்டும் உங்கள் இறைவனிடமும், எனது
இறைவனிடமும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்''என்று மூஸா கூறினார்.
(அல்குர்ஆன் 40:23-27)
இறைத்தூதருக்கு
ஆதரவாகக் குரல் கொடுத்த இறை நம்பிக்கையாளர்
"என் இறைவன் அல்லாஹ்வே'' என்று
கூறும் ஒரு மனிதரைக் கொல்லப் போகிறீர்களா? உங்கள்
இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர்
பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர்
உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும்
பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்'' என்று
ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை
கொண்ட ஒருவர் கூறினார்.
"என் சமுதாயமே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே
இருக்கிறது. பூமியில் மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து
விடுமானால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவன் யார்?'' (எனவும்
அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் "நான் (சரி) காண்பதையே உங்களுக்குக்
காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை'' என்று
கூறினான்.
என்
சமுதாயமே! மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும், நூஹுடைய
சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது
சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட கதி போன்றும் உங்கள்
விஷயத்திலும் நான் அஞ்சுகிறேன் என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார்.
அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை.
என்
சமுதாயமே! அழைக்கப்படும் நாளை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்.
அந்நாளில்
புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான்.
யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.
முன்னர்
யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு
வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் "இவருக்குப் பின்
எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்'' எனக்
கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித் தான் வழி
கெடுக்கிறான்.
அவர்கள்
தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர்.
அல்லாஹ்விடமும், நம்பிக்கை
கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து
அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
"ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு!
வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை
நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்'' என்று
ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்
பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி
அழிவில் தான் முடிந்தது.
"என் சமுதாயமே! என்னைப் பின்பற்றுங்கள்!
உங்களுக்கு நேர் வழி காட்டுகிறேன்''என்று நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.
"என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே.
மறுமையே நிலையான உலகம்.''
யாரேனும்
ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார்.
ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம்
செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.
என்
சமுதாயமே! எனக்கென்ன? நான்
உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகிற்கு அழைக்கிறீர்கள்.
"நான் அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத
ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்'' என்று
என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் அழைக்கிறேன்.
என்னை எதை
நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பிரார்த்திக்கப்படும்
தகுதி இல்லை என்பதிலும், நாம்
திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு
மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
நான்
உங்களுக்குக் கூறுவதைப் பின்னர் உணர்வீர்கள்! எனது காரியத்தை அல்லாஹ்விடம்
ஒப்படைக்கிறேன். அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். (என்றும் அவர் கூறினார்)
(அல்குர்ஆன் 40:28-44)
கடல்
பிளந்தது! கொடியவன் கொல்லப்பட்டான்!
அப்பூமியில்
பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத்
தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு
உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில்
அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை
அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்.
(அல்குர்ஆன் 28:5,6)
காலையில்
அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட
போது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று
மூஸாவின் சகாக்கள் கூறினர். "அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன்
இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர்
கூறினார்.
"உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று
மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று
ஆனது.
அங்கே
மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன்
இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
(அல்குர்ஆன் 26:60-66)
காலம்
கடந்த ஞானோதயம்
இஸ்ராயீலின்
மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது
படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும்
அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது "இஸ்ராயீலின்
மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்'' என்று
கூறினான்.
இப்போது
தானா? (நம்புவாய்!)
இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம்
செய்பவனாக இருந்தாய்.
(அல்குர்ஆன் 10:90-91)
அழியாத
அத்தாட்சி
உனக்குப்
பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று
கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.
இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம்.
(அல்குர்ஆன் 10:92-93)
படைத்தவனின்
வாக்குறுதி பலித்த நாள்
பனூ
இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் கொடுமைப் படுத்திய போது அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம்
சென்று முறையிட்டனர். அப்போது மூஸா (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகள் இதோ:
"உங்கள் இறைவன், உங்கள் எதிரியை
அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி "எவ்வாறு
செயல்படுகின்றீர்கள்' என்பதைக்
கவனிப்பான்'' என்று
(மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் 7:129)
பலவீனர்களாகக்
கருதப்பட்டு வந்த சமுதாயத்தை பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப்
பகுதிகளுக்கு உரிமையாளர் களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக்
கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக
நிறைவேறியது. ஃபிர்அவ்னும் அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு
அழித்தோம்.
(அல்குர்ஆன் 7:137)
மூஸா (அலை)
அவர்கள் மூலமாக இறைவன் பனூ இஸ்ரவேலர்களுக்கு அளித்த அந்த வாக்குறுதி நிறைவேறிய
அந்த நன்னாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். அந்தச்
சிறப்பு நாள் இன்று முஸ்லிம்களால் கருப்பு நாளாகச் சித்தரிக்கப்பட்டு விட்டது.
திருக்குர்ஆன்
கூறும் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கர்பலா நிகழ்ச்சியில்
கரைந்து போய் விட்டது. ஆஷூரா நாள் என்றாலே ஹஸன், ஹுசைன்
(ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம்
தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் காரணத்திற்காக இந்த நாளை நோன்பு நோற்று
கண்ணியப்படுத்தச் சொன்னார்களோ அந்த உண்மையான நோக்கத்தை உணர்ந்து, அல்லாஹ் கூறும் அந்த உண்மை வரலாற்றை நினைவு
கூர்வோமாக!
EGATHUVAM FEB 2005