Mar 27, 2017

"ருவிய' என்று வந்திருக்கும் அவியல்கள்

"ருவிய' என்று வந்திருக்கும் அவியல்கள்

தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப் பெற்று, அமர்க்களப்படும் மவ்லிது கிதாபுகள், குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்தவை என்ற மாயையை ஏற்படுத்துவதற்காக "ருவிய' "ருவிய' என்று கூறி புட்டுக் குழல்களில் பொய்களைப் போட்டு அவித்துத் தள்ளியிருக்கின்றார்கள்.

"ருவிய' என்றால் அறிவிக்கப்பட்டது என்று அர்த்தம். பலப் பல மெட்டுக்களில் தங்கள் பிழைப்புப் பாட்டிற்காக இந்த அரபிப் பாட்டுக்களைப் பாடும் ஆலிம் மற்றும் லெப்பை பஜனைப் பாடகர்கள், இரு பாடல்களுக்கு இடையே வரும் "ருவிய' என்ற பொய் அவியல்களை ஒரு நீண்ட இழுப்பு ராகத்தில் ஓதித் தள்ளுவார்கள்.

"உங்களுக்கு இன்று ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்'' என்று செயல்பாட்டு வினையில் ஓர் ஆலிமிடம் சொல்லப்பட்டால் அவர் என்ன சொல்வார்? "இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி? யார் தருவார்கள்? என்று விபரமாகச் சொல்ல வேண்டாமா?'' என்று கேட்பார். ஆனால் நபி (ஸல்) அவர்களைப் பற்றி "ருவிய'' என்று கூறி ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது என்னவென்று சிந்திக்க மாட்டார். காரணம் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொன்னால் நரகம் தான் பரிசு என்று வந்திருப்பதால் அதில் அவருக்கு அப்படி ஓர் அலட்சியம். இதனால் தான் மவ்லிதுக்கு இவர்கள் இப்படியொரு மகத்துவத்தையும் மரியாதையையும் அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மாயத் தோற்றத்தை, போலி மரியாதையை அடித்து உடைப்பதற்குத் தான் குர்ஆன், ஹதீஸ் என்ற ஆயுதத்துடன் ஏகத்துவம் களமிறங்கி உள்ளது.

இப்போது "ருவிய'' என்ற அவியலுக்கு வருவோம்.

அல்லாஹ் படைப்பினத்தை இரு பங்குகளாகப் பிரித்தான். அல்லாஹ் அவ்விரண்டில் சிறந்த பங்கில் என்னை ஆக்கினான். இது தான் சூரத்துல் வாகிஆவில் வலப்புறத்தில் இருப்பவர்கள், இடப்புறத்தில் இருப்பவர்கள் என்ற அல்லாஹ்வின் சொல்லாகும். எனவே நான் வலது புறத்தில் உள்ளவனாவேன். மேலும் வலது புறத்தில் உள்ளவர்களில் சிறந்தவனாவேன். பிறகு அல்லாஹ் அந்த இரு பங்கினரைப் பிரித்து மூன்று வகையினராக்கினான். இம்மூன்று வகையினரில் சிறந்த வகையில் அல்லாஹ் என்னை ஆக்கினான். இது,

(முதல் வகையினர்) வலப்புறத்தில் இருப்போர். வலப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன? (இரண்டாம் வகையினர்) இடப்புறத்தில் இருப்போர். இடப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன? (மூன்றாம் வகையினர்) முந்தியோர். (தகுதியிலும்) முந்தியவர்களே... என்ற (56:8,9,10) அல்லாஹ்வின் சொல்லாகும். எனவே நான் முந்தியோரில் உள்ளவனாவேன். அந்த முந்தியோர்களிலும் சிறந்தவர்களில் உள்ளவனாவேன். பிறகு அல்லாஹ் மூன்று வகையினரைப் பல கிளை களாக ஆக்கினான். அந்தக் கோத்திரங் களில் சிறந்ததாக எனது கோத்திரத்தை அமைத்தான். இது தான்,

நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அஞ்சுவோரே அல்லாஹ்விடம் சிறந்தவர்... என்ற (49:13) அல்லாஹ்வின் சொல்லாகும்.

ஆதமுடைய மக்களில் நான் மிக இறையச்சம் உள்ளவனும் அல்லாஹ்விடம் மரியாதைக்கு உரியவனும் ஆவேன். பெருமை அல்ல. பிறகு கோத்திரங்களை பல வீடுகளாக ஆக்கினான். அவர்களில் சிறந்த வீட்டாராக என்னை ஆக்கினான். இது தான், இவ்வீட்டினராகிய உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமைப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகின்றான் என்ற அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப் படுகின்றது.

இவ்வாறு சுப்ஹான மவ்லிதில் இடம் பெறுகின்றது. இந்தச் செய்தி இலல் இப்னு அபீஹாத்தம் என்ற நூலில் 395வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸைப் பற்றி என்னுடைய தந்தை அபீஹாத்தமிடம் கேட்ட போது, இது போலியானது என்று தெரிவித்தார் என்று இந்நூலின் ஆசிரியர் இப்னு அபீஹாத்தம் தெரிவிக்கின்றார்.

இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெறும் இபாயா பின் ரிப்ஈ, மூஸா பின் தரீப் ஆகிய இருவரும் ஷியாவின் வெறியர்கள் ஆவர். (நூல்: மீஸானுல் இஃதிதால்)

இபாயா பின் ரிப்ஈ, மூஸா பின் தரீப் ஆகிய இருவரும் ஷியா வெறியர்கள். கடவுள் கொள்கை மறுப்பாளர்கள் ஆவர். (நூல்: உகைலீயின் அல்லுஅஃபா)

இந்த ஹதீஸில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் கைஸ் பின் அர்ரபீஉ என்பவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவராவார். (நூல்: நஸயீயின் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)

எனவே இந்த விமர்சனங்களின் படி இது மவ்லிதில் அச்சேறிய ஆபத்தான ஹதீஸாகும்.

இறைச் செய்தி இனவெறியைத் தூண்டுகிறதா?

"ஸல்லூ பினா பிஹ்திமாமி'' என்ற பாடலுக்குப் பின்னால் ஒரு ஹதீஸைக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

அல்லாஹ் வானங்களை ஏழாகப் படைத்து, அவற்றில் உயர்ந்ததைத் தேர்வு செய்து தன் படைப்பிலிருந்து தான் நாடியவர்களை அவற்றில் குடியமர்த்தினான். பிறகும் படைத்தான். அந்தப் படைப்பில் ஆதமின் சந்ததியினரைத் தேர்வு செய்தான். ஆதமின் சந்ததியினரில் அரபியரைத் தேர்வு செய்தான். அந்த அரபியரில் முளர் கிளையாரைத் தேர்வு செய்தான். முளர் கிளையாரில் குரைஷியரைத் தேர்வு செய்தான். குரைஷியரில் ஹாஷிம் கிளை யாரைத் தேர்வு செய்தான். ஹாஷிம் கிளையாரில் என்னைத் தேர்வு செய்தான். எனவே நான் சிறந்தவர் களுக்கு சிறந்தவர்களில் உள்ளேன். அரபியர்களை நேசிப்பவர் அவர் என்னை நேசிப்பதாலேயே அவர்களை நேசிக்கின்றார். அரபியர்களைக் கோபிப்பவர்கள் என்னைக் கோபிப் பதன் மூலம் அவர்களைக் கோபிக்கின் றார் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இந்தச் செய்தி மட்டும் அறிவிப் பாளர் பெயருடன் வந்திருக்கின்றது)

இந்தச் செய்தி இலல் இப்னு அபீ ஹாத்தமில் 2617வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வீட்டு வாசல் வழியில் இருந்து கொண்டிருந்தோம். ரசூல் (ஸல்) அவர்களின் பெண் மக்களில் ஒருவர் சென்று கொண்டிருந்த போது, "நாற்றத்தின் நடுவில் ரோஜாவைப் போன்றே தவிர ஹாஷிம் கிளையாரின் முஹம்மது அமைந்திருக்கவில்லை'' என்று ஒருவர் சொன்னார். இதை அந்தப் பெண்மணி செவியுற்று ரசூல் (ஸல்) அவர்களிடம் தெரிவித்து விட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமாகக் கிளம்பி, மிம்பர் மீது ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி னார்கள். பிறகு, "சிலரிடமிருந்து சில விமர்சனங்கள் வருகின்றனவே? அவற்றின் விபரம் என்ன?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு.... மேலே மவ்லிதில் நாம் எடுத்துக் காட்டியுள்ள செய்தி இடம் பெற்றுள்ளது.

கோளாறு படைத்த ஹதீஸ்களை அடையாளம் காட்டுவதற்கு எழுதப்பட்டது தான் இலல் இப்னு அபீஹாத்தம் என்ற நூலாகும்.

யஸீத் பின் உவானா அல்கிலாபி வழியாக அப்துல்லாஹ் பின் பக்ர் மூலம் அஹ்மத் பின் அப்துல்லாஹ் அறிவிக்கும் இந்த ஹதீஸைப் பற்றி நான் எனது தந்தை அபூஹாத்தமிடம் கேட்டேன். அதற்கு அவர் இது வெறுக்கப்பட வேண்டிய ஹதீஸாகும் என்று கூறினார். (நூல்: இலல் இப்னு அபீஹாத்தம்) இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெறும் யஸீத் பின் உவானா தொடரப்படாதவராவார் என்று உகைலீ கூறுகின்றார். (நூல்கள்: மீஸானுல்இஃதிதால், லிஸானுல் மீஸான்)

எனவே இந்த விமர்சனங்களின் அடிப்படையில் இது ஒரு பொய்யான ஹதீஸாகும்.


நபி (ஸல்) அவர்கள் மீது தெரிந்தே பொய் சொல்லும் இந்த ஹதீஸ்கள் நிறைந்த சுப்ஹான மவ்லிது நம்மை சுவனத்திற்குக் கொண்டு செல்லாது. சூடான நரகத்திற்கே கொண்டு செல்லும். இனியும் இதை வீடுகளில் ஓதலாமா?

EGATHUVAM APR 2005