Mar 8, 2017

பரவும் பன்றிக் காய்ச்சல் - பாதுகாப்பு அல்லாஹ்விடமே!

பரவும் பன்றிக் காய்ச்சல் - பாதுகாப்பு அல்லாஹ்விடமே!

காட்டுத் தீயை விட மேலாகக் காற்றில் பறக்கும் நோயாக பன்றிக் காய்ச்சல் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவெங்கும் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சலுக்கு ஜனவரி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 60 பேர் பலியாகியுள்ளார்கள்.
நாடு முழுவதிலும் இதுவரை 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 925 பேரை இந்த நோய் தனது பசிக்கு இரையாக்கியுள்ளது.
அண்டை மாநிலமான ஹைதராபாத், தெலுங்கானாவுக்கு வருகையளித்த பன்றிக் காய்ச்சல் தமிழகத்திற்கு வராது என்று தைரியமாக இருக்க முடியுமா? அவ்வாறு இருக்க முடியாது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக கோவையில் 26 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 52 வயதில் ஒரு பெண்ணும் 40 வயதில் ஓர் ஆணும் பலியாகியுள்ளனர். மதுரையில் 55 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார். இதுவரை 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் பலியாகியுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்று கூறப்படுகின்றது. இது தமிழக அளவில் பன்றிக் காய்ச்சல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பும், பலிகளும் ஆகும்.
பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக 24 மணி நேர ஹெல்ப் லைன் எனும் உதவி மையங்களை அமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த அளவுக்குப் பன்றிக் காய்ச்சல் நோயால் அபாயம் அதிகரித்திருக்கின்றது. மலேரியா, டெங்கு, டைபாய்டு, சிக்கன்குனியா என படையெடுத்து வந்த நோய்களில் இது படுபயங்கரமான நோயாக உள்ளது. மேற்கண்ட நோய்கள் அனைத்தும் கொசுவின் மூலமாகப் பரவியது என்றால் இது காட்டுத்தீ போல் காற்று வழியாகப் பரவுகின்றது.
இந்தியா போன்ற மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள நாட்டில் இந்தக் காட்டுத்தீ பரவுமானால் பெருமளவு மக்களை அழித்து விடும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இப்போது தான் விழித்துக் கொண்டுள்ளன. ஆனால் மக்கள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை.
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு ஆபத்தான, அபாயகரமான நோய் வந்த வரலாற்றையும் அது ஏற்படுத்துகின்ற விளைவுகளையும் சற்று நாம் தெரிந்து கொள்வோம்.
பன்றி காய்ச்சல் "சுவைன் புளூ'' என்ற வைரசால் பரவுகிறது.
இது "ஆர் தோமைசோ வெரிடேட்'' என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. "சுவைன் புளூ'' வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை "எச்-1, என்-1'' என்று பட்டியலிட்டு உள்ளனர்.
 இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழிப் பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்நோய் பரவும் வாய்ப்பு அதிகம்.
வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.
இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.
நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாகப் பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியைத் தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரைத் தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமைப் படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.
குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாகப் பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.
இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?
ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப்படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (ரஐஞ) அறிவித்துள்ளது.
இந்நோய் கிருமியால் பாதிக்கப்பட்ட ஒருவர், நோய் தன்னைத் தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் ண்ய்ச்ங்ஸ்ரீற் செய்து விடுகிறார்.
முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.
நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்குத் தடுக்கும்.
பன்றிக் காய்ச்சல் குறித்து இவ்வாறு பல தடுப்பு நடவடிக்கைகளைக் கூறினாவலும் அது பரவாமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் ஏதுமில்லை என்றே தோன்றுகின்றது.
உலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான் பன்றி இறைச்சியைத் தடை செய்துள்ளது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்
அல்குர்ஆன் 2:173
இந்த நோய் காட்டுத்தீ போல் இந்தியாவில் பற்றி எரிகின்றது. இப்போது என்ன செய்வது? இப்போது மனித சமுதாயத்திற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி, படைத்தவனிடம் பணிந்து பாதுகாவல் தேடுவது தான். இதைத் தவிர வேறு வழியில்லை.
இதற்காகத் தனி தடுப்பூசி எதுவுமில்லை, தனி தடுப்பு மருந்துகள் எதுவுமில்லை. இருக்கின்ற தடுப்பு மருந்துகளுக்கு, பன்றிக் காய்ச்சலை முழுமையாகத் தடுக்கின்ற வலிமை இல்லை என்று சுகாதார அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். இதற்கு டாமிஃபுளூ போன்ற மாத்திரைகளைத் தான் பரிந்துரை செய்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தும்மினால் போதும்; பக்கத்தில் நிற்பவரின் நாசியிலுள்ள ஈர நைப்பில் அல்லது உமிழ் நீரில் அந்தக் கிருமிகள் பட்டுவிட்டால் போடும். அவரும் இந்த நோய்க்கு ஆட்பட்டு விடுவார் என்று தெளிவாகத் தெரிவிக்கின்றனர்.
தொட்டால் பன்றிக் காய்ச்சல்! பட்டால் பன்றிக் காய்ச்சல்! ஏன்? மூச்சு விட்டால் போதும் பன்றிக் காய்ச்சல்! இதற்குத் தீர்வு தான் என்ன?
இஸ்லாத்தில் தொற்று நோய் இல்லை. நோயைக் கொடுப்பவன் இறைவன் தான். இதுபோன்ற நோய்கள் கொசுவின் மூலம் பரவினாலும், தண்ணீரின் மூலம் பரவினாலும், காற்றினால் பரவினாலும் அது இறைவனின் நாட்டப்படியே நோயை ஏற்படுத்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொற்று நோய் கிடையாது. "ஸஃபர்' தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது'' என்று சொன்னார்கள்.
அப்போது கிராமவாசியொருவர், "அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்ற (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?'' என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?'' என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5717
"உங்களுக்கு மேலே இருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழே இருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்பிடவும், உங்களைப் பல பிரிவுகளாக்கி ஒருவரின் கொடுமையை மற்றவர் சுவைக்கச் செய்திடவும் அவன் ஆற்றலுடையவன்'' என்றும் கூறுவீராக! அவர்கள் புரிந்து கொள்வதற்காகச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக!
அல்குர்ஆன் 6:65
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று அவன் மக்களைச் சோதிக்கின்றான். இதற்கு அவனிடம் மட்டும் தான் பாதுகாவல் தேடவேண்டும்.
"இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 6:64
நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற தீமைகளிலிருந்து காலையிலும் மாலையிலும் பாதுகாப்புக் கோரியிருக்கின்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி(இ) அஸ்அலு(க்)க கைர மாபீ(எ) ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ப(இ)ஃதஹா, வஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரி மாபீ(எ) ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(இ)ஃதஹா, ரப்பி(இ) அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிப(இ)ரி, ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அதாபி(இ)ன் பி(எ)ன்னாரி, வஅதாபி(இ)ன் பி(எ)ல் கப்(இ)ரி

இதன் பொருள்:
நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நூல்: முஸ்லிம் 4901
இன்னும் இதுபோல் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்காகப் பல்வேறு பிரார்த்தனைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள். நாம் அந்த துஆக்களைச் சொல்லி, பிரார்த்தித்து அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவோமாக!

EGATHUVAM MAR 2015