Mar 5, 2017

ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு!

ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு!
இஸ்லாத்தின் அடிப்படை வஹீ என்னும் இறைச்செய்தி ஆகும். இறைச் செய்திகள் என்பது திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகத்தின் மார்க்கம் தொடர்பான வழிகாட்டுதல்கள் மட்டுமே!
திருமறைக் குர்ஆன், நபியின் வழிகாட்டுதல்கள் இரண்டுமே இறைச் செய்தி என்றாலும் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மட்டுமே எழுதுமாறு கட்டளையிட்டார்கள். நபியவர்களின் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாலும் அவற்றை எழுதுமாறு வலியுறுத்தவில்லை. இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும். என்னைப் பற்றி அறிவியுங்கள். தவறில்லை. யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (5734)
மேற்கண்ட நபிமொழியிலிருந்து ஹதீஸ்களை எடுத்துச் சொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள் என்பதையும் அவற்றை எழுதுவதற்குத்தான் தடை விதித்தார்கள் என்பதையும் நாம் அறியமுடிகிறது.
குர்ஆனுடன், ஹதீஸின் வாசகங்கள் கலந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் நபியவர்கள் அதனை எழுத வேண்டாம் என்று கூறினார்கள்.
ஆனால் குர்ஆனுடன் நபிமொழிகள் கலந்து விடாது என்ற அச்சம் தீர்ந்த உடன் நபியவர்கள் ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
(நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் மக்கமா நகரின் புனிதத்தைப் பற்றி உரையாற்றும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.)
இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக் கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம் என்று கூறினார்கள்.
அப்போது யமன்வாசிகளில் "அபூ ஷாஹ்'' என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவருக்கு (என் உரையை) எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (6880)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான நபிமொழிகளை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்த (அதிகமான) நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதிவைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துக் கொள்வேனே தவிர) எழுதி வைத்துக் கொண்டதில்லை.
நூல்: புகாரி (113)
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
என்றாலும் ஸஹாபாக்கள் காலத்தில் அதிகமாக ஹதீஸ்கள் எழுதப்படவில்லை. அதிகமாக வாய் மொழியாகத் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணத்தினால் நபியவர்கள் கூறாத செய்திகளெல்லாம் அவர்கள் கூறியதாக நபித்தோழர்களுக்குப் பின் வந்தவர்களால் மக்கள் மத்தியில் பரப்பப்படும் நிலை ஏற்பட்டது. பல பொய்யர்கள் நபியவர்கள் கூறாத செய்திகளையெல்லாம் அவர்களின் பெயரில் இட்டுக்கட்டி அறிவித்தனர்.
இந்நிலையில் நபியவர்கள் கூறிய அனைத்து ஹதீஸ்களையும் தொகுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. எனவே நபியவர்கள் கூறியதாக அறிவிப்பவர்களின் நிலைகளை அறிந்து அவர்களின் ஏற்றுக் கொள்ளத் தக்கவர்களின் அறிவிப்புகள் மட்டுமே சரியான ஹதீஸ்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் செய்திகளில் தவறானவற்றிலிருந்து சரியானவற்றைப் பிரித்து அறிவதற்கு உதவும் கல்வியே "ஹதீஸ் கலை' என்பதாகும்.
திருமறைக் குர்ஆனையும், நபிமொழிகளையும் ஆய்வு செய்பவர்கள் ஒரு செய்தியை எவ்வாறு அறிவிக்க வேண்டும், எத்தகையவர்கள் அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கான அடிப்படைகளைத் தெளிவாகப் பெற்றுக்  கொள்ளலாம்.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 49:6)
மேற்கண்ட வசனத்தில் ஒரு செய்தி நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகவும், ஏற்றுக் கொள்ளத் தகுந்த அடிப்படையிலும் வந்தால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை அல்லாஹ் கூறுகிறான்.
செய்தியைக் கொண்டு வருபவர் தகுதியானவராக இருப்பதுடன், அவர் கூறும் செய்தியும் உண்மையானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் எடுத்துரைக்கிறது.
அது போன்று நபி மொழிகளை எடுத்துரைப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, தான் செவியேற்றதைப் போன்றே மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)
நூல்: திர்மிதி (2657)
ஒரு செய்தியைச் செவியேற்றவாறு எதையும் கூட்டாமல், குறைக்காமல் அறிவிக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி)
நூல்: புகாரி 3461
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரி 106
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 110
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)
நூல்: முஸ்லிம் 1
திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸ்களிள் அடிப்படையில்தான்  ஹதீஸ்கலை விதிகள் தொகுக்கப் பெற்றன என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
நபியவர்கள் கூறியவற்றை அவர்கள் கூறியவாறே எடுத்துரைக்க வேண்டும், நபியவர்களின் மீது பொய்யாகக் கூறினால் நிரந்தர நரகமே தங்குமிடம் என்ற நபியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய காரணத்தினால் ஸஹாபாக்கள் நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தியை உறுதிப்படுத்தும் விசயத்தில் மிகப் பேணுதலாக நடந்து கொண்டனர். நபியவர்கள் கூறியதாக சந்தேகம் ஏற்படும் என்றால் அதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது "ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை. ஜீவனாம்சமும் இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்' என்ற ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்.
(அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எறிந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள்: உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள் ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும், நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. பகிரங்கமான வெட்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (65:1) என்று வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)
நூல்: முஸ்லிம் (2963)
உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது:
இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதின் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவே இல்லை) "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக் கின்றனர்' என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங் கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.
"நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்' என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:
(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (35:22)
அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1697)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் போது அதில் முரண்பாட்டைக் காணும் போது நபித்தோழர்கள் அதனை நபியவர்கள் கூறியதாக ஏற்கவில்லை என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
அது போன்றே சில நேரங்களில் நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிப்பதில் சந்தேகம் ஏற்பட்டால் அந்தச் சந்தேகத்தை தெளிவுபடுத்திய பிறகே அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனைப் பின்வரும் சான்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அபூ மூஸா (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் "அபூ மூஸாவின் குரல் கேட்டதே! அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் "இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது'' எனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் "இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.
வயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்டார்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!'' எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 2062, 6245, 7353
ஹதீஸ்களை ஏற்பதிலும் மறுப்பதிலும் அதன் கருத்து குர்ஆனுக்கு முரண்பாடாக இருக்கக் கூடாது என்பதோடு அறிவிப்பாளர் தொடரும் (இஸ்னாத்) மிக மிக முக்கியமானதாகும். ஒரு ஹதீஸை ஏற்பதா? மறுப்பதா? என்று முடிவு செய்வதில் அறிவிப்பாளர் தொடர் மிக முக்கியப் பங்குவகிக்கிறது.
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (ஆரம்பக் காலங்களில் ஹதீஸ்கள் அறிவிக்கப்படும்போது அவற்றின்) அறிவிப்பாளர் தொடர்கள் குறித்துக் கேட்டதில்லை. ஆனால், (பிற்காலத்தில்) குழப்பங்கள் தோன்றியபோது "உங்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் பெயர்களையும் எங்களுக்கு அறிவியுங்கள்'' என்று கூறலாயினர். ஆகவே, அந்த அறிவிப்பாளர்கள் நபிவழிக்காரர்களா என்று கவனித்து, அவ்வாறிருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டும் ஏற்கப்படும். அவர்கள் (நபிவழியில் இல்லாதவற்றைக் கூறும்) புதுமைவாதிகளாய் இருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படாது.
அறிவிப்பவர்:  ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்)
நூல்: முஸ்லிம் முன்னுரை (25)
அறிவிப்பாளர் தொடர் சரியாவதின் அடிப்படையில்தான் ஒரு ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற காரணத்தினால் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அறிவதற்குரிய ''இல்முல் ஜரஹ் வத்தஃதீல்'' (குறை நிறைகள் பற்றிய கல்வி), அறிவிப்பாளர்கள் பற்றிய விமர்சனங்கள், முறிவடைந்த அறிவிப்பாளர் தொடரிலிருந்து முறிவில்லாத அறிவிப்பாளர் தொடரை அறிதல், மறைமுகமான குறைகளை அறிதல் போன்ற கல்விகள் முதன் முதலாக உருவாக ஆரம்பித்தன்.
அதன் பிறகு இத்துறையில் மிக விரிவாக பல விசயங்கள் அலசி ஆராயப்பட்டன. ஒரு ஹதீஸை எப்படி ஏற்றுக் கொள்வது, மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது, மாற்றப்பட்ட சட்டங்கள் (மன்ஸுஹ்) எவை, புதிய சட்டங்கள் (நாஸிஹ்) எவை, அரிதான ஹதீஸ்கள் பற்றிய நிலைப்பாடு இன்னும் பல்வேறு பிரிவுகளில் ஹதீஸ்கலை அறிஞர்கள் விரிவாக விளக்கினர். என்றாலும் இவை அனைத்தும் வாய்மொழியாக இருந்ததே எழுத்து வடிவில் புத்தகங்களாக தொகுப்படவில்லை. 
அதன் பிறகு கால ஓட்டத்தில் ஹதீஸ் கலைச் சட்டங்கள் புத்தக வடிவில் தொகுப்பட்டன என்றாலும் ஹதீஸ் கலை என்று தனியான புத்தகங்களாக தொகுக்கப்பட்டாமல் ஒரே புத்தகத்தில் இல்முல் உஸுல், இல்முல் ஃபிக்ஹ், என்ற வரிசையில் உலூமுல் ஹதீசும் ஒரு பிரிவாக எழுதப்பட்டது.
இதற்குச் சான்றாக இமாம் ஷாஃபி அவர்களின் ''அர்-ரிஸாலா'' மற்றும் ''அல் உம்மு'' போன்ற கிதாபுகளைக் குறிப்பிடலாம். நாம் அறிந்த வரை முதன் முதலாக ஹதீஸ்கலை தொடர்பாக தொகுக்கப்பெற்றது இமாம் ஷாஃபி அவர்களின் ''அர்-ரிஸாலா'' என்ற புத்தகம்தான். என்றாலும் இந்த  நூலில் ஹதீஸ் கலையுடன் சேர்ந்து இல்முல் உஸுல், இல்முல் ஃபிக்ஹ் போன்ற ஏனைய கல்விகளும் இணைந்தே காணப்படுகிறது. ''அல் உம்மு'' என்ற நூலும் இதே அடிப்படையில் தான் தொகுக்கப்பட்டுள்ளது.
பிறகு ஹிஜிரி நான்காம் நூற்றாண்டில்தான் ஒவ்வொரு துறை சார்ந்த நூற்களும் தனித்தனியாக தொகுக்கப்பட ஆரம்பித்தன. ஹதீஸ்கலை தொடர்பாகவும் தனியாக நூற்கள் தொகுக்கப்பட்டன.
ஹதீஸ்கலை தொடர்பாக தனியான ஒரு நூலை முதன் முதலாகத் தொகுத்தவர் ''காழீ அபூ முஹம்மத் அல்ஹஸன் இப்னு அப்துர் ரஹ்மான் அர்ராமஹுர்முசி'' என்பவர் ஆவார். இவர் தொகுத்த நூலின் பெயர் ''அல்முஹத்திசுல் ஃபாஸில் பைனர் ராவி வல் வாயீ''  என்பதாகும்.
ஹதீஸ் கலை தொடர்பான முக்கிய நூற்கள்
1.         அல்முஹத்திசுல் ஃபாஸில் பைனர் ராவி வல் வாயீ - தொகுத்தவர் "காழீ அபூ முஹம்மத் அல்ஹஸன் இப்னு அப்துர் ரஹ்மான் அர்ராமஹுர்முசி''
(மரணம் ஹிஜிரி 360)
2.         மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ். தொகுத்தவர்: இமாம் ஹாகிம் (மரணம் ஹிஜிரி405)
3.         அல் முஸ்தஹ்ரிஜ் அலா மஃரிஃபத்தி உலூமில் ஹதீஸ் - தொகுத்தவர்: அபூ நுஐம் அல்உஸ்பஹானீ (மரணம் ஹிஜிரி 430)
4.         "அல்கிஃபாயா ஃபீ இல்மிர் ரிவாயா'' - தொகுத்தவர்: ஹதீபுல் பக்தாதி (மரணம் ஹிஜிரி463)
5. "அல்ஜாமி லி அஹ்லாகிர் ராவி வஆதாபிஸ் ஸாமிஃ - தொகுத்தவர்: ஹதீபுல் பக்தாதி (மரணம் ஹிஜிரி 463)
6. "அல்இல்மாவு இலா மஃரிஃபத்தி உஸுலிர் ரிவாயா வதக்யீதிஸ் ஸிமாஃ'' - தொகுத்தவர்: காழீ இயாள் பின் மூஸா (மரணம் ஹிஜிரி 544)
7.         "மாலா யஸவுல் முஹத்திஸ ஜஹ்லுஹு'' - தொகுத்தவர்: "அபூ ஹப்ஸ் அம்ருப்னு அப்துல் மஜீது'' (மரணம் ஹிஜிரி 580)
8.         "உலூமுல் ஹதீஸ்'' - தொகுத்தவர்: இப்னுஸ் ஸலாஹ் (மரணம் ஹிஜிரி 643)
9.         "அத்தக்ரீப் வத்தய்சீர் லிமஃரிஃபத்தி ஸுனனில் பஸீர் அந்நதீர்'' - தொகுத்தவர்: முஹ்யித்தீன் அந்நவவீ (மரணம் ஹிஜிரி 676)
10. தத்ரீபுர் ராவி - தொகுத்தவர்: இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூத்தி (மரணம் ஹிஜிரி 911)
11.       "நல்முத் துரர் ஃபீ இல்மில் அஸர்'' - தொகுத்தவர்: ஸைனுத்தீன் அல்இராக்கி (மரணம் ஹிஜிரி 806)
12. "ஃபத்ஹுல் முகீஸ் ஃபீ ஷரஹி அல்ஃபியத்தில் ஹதீஸ் - தொகுத்தவர் முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அஸ்ஸஹாவி'' (மரணம் ஹிஜிரி 902)
13. "நுஹ்பத்துல் ஃபிக்ர் ஃபீ முஸ்தலஹி அஹ்லில் அஸர்'' - தொகுத்தவர்: இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ (மரணம் ஹிஜிரி 852)
14. "அல் மன்லூமத்துல் பைகூனிய்யா'' - தொகுத்தவர்: ''உமர் இப்னு முஹம்மத் அல்பைகூனி'' (மரணம் ஹிஜிரி 1080)
15. "கவாயிதுத் தஹ்தீஸ்'' - தொகுத்தவர்: ''முஹம்மத் ஜமாலுத்தீன் அல்காஸிமி (மரணம் ஹிஜிரி 1332)
ஹதீஸின் வகைகளும் அதன் வரைபடங்களும்
அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.
1. முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)
2. கபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி)

முதவாதிர்
(அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும் பலர் ஒருமித்து அறிவிப்பது)
ஒரு செய்தியை ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். தாபியீன்களிலும் ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். தபவுத் தாபியீன்களிலும் அதேபோன்று பலர் அறிவிக்கின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஏராளமானவர்கள் அறிவித்துள்ளார்கள் எனில் இத்தகைய செய்திகளை ஹதீஸ் கலையில் முதவாதிர் என்று சொல்லப்படும். இந்தத் தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் குறைவாகவே உள்ளன.
             
உதாரணம்:
"என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்து கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ உள்ளிட்ட ஏராளமான நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் அறிவிக்கின்றார்கள்.
இப்படியே ஒவ்வொரு தலைமுறையிலும் எண்ணற்றவர்கள் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒன்பதுக்கும் மேற்பட்டவர்களால் அறிவிக்கப் படுவதே "முதவாதிர்'' என்று குறிப்பிடப்படும். முதவாதிர் குறித்த ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தில் இதுவே பிரபலமான கருத்தாகும்.
 கபருல் ஆஹாத்
(தனிநபர் செய்திகள்)
முதவாதிராக அமையாத ஹதீஸ்களுக்கு கபருல் ஆஹாத் என்று பெயர். இது மூன்று வகையாகப் பிரிகிறது.
1. கரீப்.  2. அஜீஸ். 3. மஷ்ஹூர்.
இவற்றின் விளக்கம், வரைப்படம், உதாரணம் போன்றவற்றை இப்போது பார்ப்போம்.
கரீப்
அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையிலோ அல்லது அனைத்து தலைமுறையிலோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸாகும்.
உதாரணம்:
"பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும், பானத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்தவுடன் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்!'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1804
நபி(ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் "அபூஹுரைரா (ரலி)'' மட்டும் தனித்து அறிவிக்கின்றார்கள்.
அவர்களிடமிருந்து "அபூ ஸாலிஹ்'' என்ற தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கிறார்.
அவரிடமிருந்து "சுமைஇ'' என்பவர் மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.
அவரிடமிருந்து "மாலிக் பின் அனஸ்'' என்ற தபஉத் தாபிஃ மட்டும் தனித்து அறிவிக்கின்றார்.
இவ்வாறு, அனைத்து நிலையிலும் ஒருவர் மட்டும் தனித்து அறிவிப்பதால் ஹதீஸ் கலையில்  இது "கரீப்'' என்று குறிப்பிடப்படப்படுகிறது.
அஜீஸ்
அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையில் இருவர் மட்டுமே அறிவிக்கும் ஹதீஸாகும். இதில் ஏதேனும் ஒரு தலைமுறையில் மூவர் இடம் பெற்றாலும் அல்லது அனைத்து தலைமுறையிலும் இருவர் மட்டுமே இடம்பெற்றாலும் அது அஜீஸ் என்றே சொல்லப்படும்.
உதாரணம்:
"உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி).
நூல்கள்: புகாரி 15, முஸ்லிம் 179.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை நபித்தோழர்களில் "அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி)'' ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து "கதாதா மற்றும் அப்துல் அஜீஸ் பின் சுஹைப்'' என்ற இரண்டு தாபியீன்கள் அறிவிக்கின்றனர்.
கதாதாவிடமிருந்து "ஷுஃபா மற்றும் சயீத்'' என்ற இரண்டு தபஉத் தாபியீன்கள் அறிவிக்கின்றார்கள்.
அப்துல் அஜீஸ் பின் சுஹைபிடமிருந்து "இஸ்மாயில் பின் உலையா மற்றும் அப்துல் வாரிஸ்'' என்ற இரண்டு தபஉத் தாபியீன்களும் அறிவிக்கின்றனர்.
இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டு நபர்கள் இடம்பெற்றுள்ளதால் இது ஹதீஸ் கலையில் அஜீஸ் என்று குறிப்பிடப்படும்.
மஷ்ஹூர்
மஷ்ஹூர் என்பது அனைத்து தலைமுறைகளிலும் இரண்டுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். எந்த ஒரு தலைமுறையிலும் இருவருக்குக் குறைவாக இடம்பெறக் கூடாது.
உதாரணம்:
"நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேடியாக பறித்துவிட மாட்டான். ஆயினும், அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியை கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும் போது அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் முலம்) தாமும் வழிகெட்டு(ப் பிறரையும்) வழிகெடுப்பார்கள்''. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 100
இந்த ஹதீஸில் அனைத்து தலைமுறையிலும் இரண்டுக்கும் அதிகமான நபர்கள் (மூவர், நால்வர்) இடம் பெற்றுள்ளனர். எனவே இது மஷ்ஹூர் எனப்படும்.
யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள்
1.         குத்ஸீ  2. மர்ஃபூஃ  3. மவ்கூஃப்  4. மக்தூஃ
நி    அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்
நி    நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்
நி    நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்
நி    தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.
குத்ஸீ
அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு ஹதீஸ் குத்ஸீ எனப்படும்.
உதாரணம்:
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.  தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, "உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்'' என்று அல்லாஹ் கூறினான்'' எனக் குறிப்பிட்டார்கள்.                
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித்(ரலி), நூல்: புகாரி 1038.
இந்த ஹதீஸில், "அல்லாஹ்  கூறுகிறான்'' என்று அல்லாஹ்வுடன் இணைத்து நபிகள் நாயகம் அவர்கள் கூறுவதால் இது ஹதீஸ் குத்ஸீ எனப்படுகிறது. குத்தூஸ் (பரிசுத்தமானவன்) என்பது அல்லாஹ்வின் பெயராகும்.  அத்தகைய அல்லாஹ்வுடன் இந்த செய்தி இணைக்கப் படுவதால் "ஹதீஸ் குத்ஸீ'' என்று சொல்லப்படுகிறது.
நபிகள் நாயகம் சொல்லும் அனைத்து ஹதீஸ்களும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்ட இறைச்செய்திகள் தான். இறைச்செய்திகளுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. எனவே ஹதீஸ் குத்ஸிக்கு என்று தனிச்சிறப்புகள் ஏதும் கிடையாது.
மர்ஃபூவு
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் பற்றி அறிவிக்கப்படும் ஹதீஸ்களுக்கு மர்ஃபூவு எனப்படும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரும் விடுபட்டிருக்கலாம், விடுபடாமலும் இருக்கலாம். எனவே மர்ஃபூவு தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
உதாரணம்:
"இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
நூல்: புகாரி 9
இந்த ஹதீஸ் நபி (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று நபியவர்கள் சொன்னதாக, செய்ததாக, அங்கீகரித்ததாக வரும் செய்திகள் அனைத்தும் "மர்ஃபூவு'' என்று ஹதீஸ் கலையில் சொல்லப்படும்.
மவ்கூஃப்
நபித்தோழர்களின் சொல், செயல், அங்கீகாரம் என நபித்தோழர்கள் தொடர்பாக மட்டும் அறிவிக்கப்படும் செய்திகள் மவ்கூஃப் என்று சொல்லப்படும். இதில் நபிகள் நாயகம் பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படாது. அறிவிப்பாளர் வரிசை நபித்தோழருடன் நிறுத்தப்படுவதால் மவ்கூஃப் (நிறுத்தப்பட்டது) என்று பெயரிடப்பட்டுள்ளது.
உதாரணம்:
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்தத் தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவுமேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),  நூல்: புகாரி 1022
இது அப்துல்லாஹ் பின் யஸீத் எனும் நபித்தோழரின் செயலாக இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் சம்பந்தப்படவில்லை.
இதுபோன்று நபித்தோழர்கள் சொன்னதாக, செய்ததாக வரும் செய்திகளுக்கு "மவ்கூஃப்'' என்று பெயரிடப்படும்.
மக்தூஃ
தாபீயீன்களின் சொல், செயல் பற்றி அறிவிக்கப்படும் செய்திகளுக்கு மக்தூஃ என்று சொல்லப்படும். இந்தச் செய்தியில் நபிகள் நாயகமோ, நபித்தோழர்களோ சம்பந்தப்பட மாட்டார்கள்.
உதாரணம்:
"மஸ்ருக் என்பவருடைய வாள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்''.
நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (25575)
இந்தச் செய்தி மஸ்ருக் என்ற தாபியை பற்றி அறிவிக்கப்பட்ட செய்தியாகும். இதுபோன்று தாபியைப் பற்றிய செய்திகளுக்கு "மக்தூஃ'' என்று சொல்லப்படும்.
அறிவிப்பாளர் வரிசையில் விடுபடும் அறிவிப்பாளர்களைக் கவனித்து
மறுக்கப்படும் செய்திகளின் வகைகள்
1.         முர்ஸல்  2.          முஃளல்  3.           முன்கதிஃ  4.        முஅல்லக்
முர்ஸல்
அறிவிப்பாளர் வரிசையில் எல்லா அறிவிப்பாளர்களும் இடம் பெற்று நபித்தோழர்கள் மட்டும் விடுபட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு முர்ஸல் எனப்படும். நபித்தோழரை விட்டு விட்டு ஒரு தாபியி, நபிகள் நாயகம் சொன்னதாக இதில் அறிவிப்பார்.
             உதாரணம்:
"நபி (ஸல்) அவர்கள் தனது வலது கண்ணில் மூன்று தடவையும், இடது கண்ணில் மூன்று தடவையும் சுர்மா இடுவார்கள்''.
அறிவிப்பவர்: இம்ரான் பின் அபீ அனஸ். நூல்: தபகாத் 1455.
இந்தச் செய்தியில் அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழரைக் குறிப்பிடாமல், "இம்ரான் பின் அபீ அனஸ்'' என்ற தாபியியே, நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டது போன்று அறிவிக்கின்றார்.
இது போன்ற செய்திகள் "முர்ஸல்'' என்று குறிப்பிடப்படும்.
முஃளல்
அறிவிப்பாளர் வரிசையில் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டிருந்தால் அந்தச் செய்திக்கு முஃளல் எனப்படும்.
உதாரணம்:
"அடிமைக்கு நல்ல முறையில் ஆடையும் உணவும் வழங்க வேண்டும். அவர்களுக்கு இயலாத காரியத்தில் அவர்களை ஈடுப்படுத்தக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஅத்தா 1769
இந்தச் செய்தியில், தொடர்ந்து இரண்டு அறிவிப்பாளர்கள் விடுப்பட்டிருக்கிறார்கள்.
இமாம் மாலிக் அவர்களின் மாணவரான மாலிக் பின் அனஸ் அவர்கள், தனக்கு மேலுள்ள இரண்டு அறிவிப்பாளர்களை விட்டு விட்டு தானே நேரடியாக அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டது போன்று அறிவித்திருப்பதால் இது "முஃளல்'' என்று குறிப்பிடப்படுகிறது.
முன்கதிஃ
முன்கதிஃ என்றால் தொடர்பு அறுந்தது என்று பொருள். அறிவிப்பாளர் வரிசையில் தாபியியோ அல்லது தாபியிக்குக் கீழுள்ள ஏதோ ஒரு அறிவிப்பாளரோ விடுப்பட்டிருக்கும் செய்திக்கு முன்கதிஃ என்று சொல்லப்படும்.
உதாரணம்:
"நபி (ஸல்) அவர்கள் தொழுகையை தக்பீரைக் கொண்டும், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஓதுவதைக் கொண்டும் ஆரம்பிப்பார்கள். ருகூஃவு செய்தால் தலையை உயர்த்தி விடாமலும், தாழ்த்தி விடாமலும் நடுத்தரமாக வைப்பார்கள். ருகூவிலிருந்து நிமர்ந்தால் சீராக நிற்கும் வரை ஸஜதா செய்ய மாட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து  எழுந்தால் சீராக அமரும் வரை மீண்டும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள். தனது இடது காலை விரித்து வலது காலை நட்டி வைத்து ஒவ்வொரு இரண்டாவது ரக்அத்திலும் அத்தஹிய்யாத்தை கூறுவார்கள். இன்னும் ஷைத்தானின் அமர்வை விட்டும், ஒரு மனிதன் குடங்கையை கால்நடை விரிப்பதைப் போன்று (ஸஜ்தாவில்) விரிப்பதை விட்டும் தடுத்தார்கள். மேலும், தொழுகையை ஸலாமைக் கொண்டு முடிப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 768
இந்தச் செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து அபுல் ஜவ்ஸா என்பவர் அறிவித்ததாக அறிவிப்பாளர் தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.
அவருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் மற்றொரு அறிவிப்பாளர் விடுப்பட்டிருக்கிறார்.
எனவே, இந்தச் செய்தி "முன்கதிஃ'' என்று சொல்லப்படும்.
முஅல்லக்
ஒரு நூலாசிரியர் முழு அறிவிப்பாளர் தொடரையோ, அல்லது சிலரையோ விட்டு விட்டு நபிகள் நாயகம் அவர்களின் சொல் அல்லது செயல் தொடர்புடைய அறிவிக்கும் செய்திகளுக்கு முஅல்லக் எனப்படும்.
 உதாரணம்:
"நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்''. என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி
இந்தச் செய்தியை பத்தொன்பதாவது பாடத்தில் (634வது ஹதீஸின் கீழ்) புகாரி இமாம் கொண்டு வந்துள்ளார்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அனைத்தையும் போக்கிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்களை மட்டும் குறிப்பிடுவதால் இது "முஅல்லக்'' எனப்படும்.
(இந்த ஹதீஸின் முழுமையான அறிவிப்பாளர் தொடர் "ஸஹீஹ் முஸ்லிமில்'' இடம்பெறுகிறது.)
இன்னும், இந்த வகை ஹதீஸ்களில் "முதல்லஸ்'' என்று ஒரு வகையுள்ளது. இதைப் பற்றி 40ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.
முதல்லஸ்
(இருட்டடிப்பு செய்யப்பட்டது)
அறிவிப்பாளர் தொடரில் உள்ள குறையை மறைத்து விட்டு, வெளிப்படையில் அழகாகக் காட்டுவதற்கு "தத்லீஸ் (இருட்டடிப்பு செய்தல்)'' என்று சொல்லப்படும்.
இவ்வாறு, எந்தச் செய்தியில் செய்யப்பட்டதோ அதற்கு "முதல்லஸ்'' என்றும், தத்லீஸ் செய்தவருக்கு "முதல்லிஸ் (இருட்டடிப்பு செய்தவர்)'' என்றும் சொல்லப்படும்.
ஒருவர், தனது ஆசிரியரிடம் கேட்காததை அறிவிப்பதும், அறிவிப்பாளர் தொடரில் உள்ள பலவீனமானவரைப் போக்கிவிட்டு ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரைப் போன்று வெளிப்படையில் காட்டுவதும், தனது ஆசிரியரின் பிரபலமான பெயரை மறைத்துவிட்டு பிரபலமில்லாத பெயரைச் சொல்வதும் தத்லீஸ் (இருட்டடிப்பு) ஆகும்.
ஒரு அறிவிப்பாளர் மீது முதல்லிஸ் (இருட்டடிப்பு) செய்பவர் என்ற குறை கூறப்பட்டிருந்தால் அவர், ஹதீஸ் அறிவிக்கும் போது கூறப்படும் தெளிவான வார்த்தைகளான "ஹத்தஸனா, அன்பஅனா, சமிஃத்து'' போன்ற சொற்களைக் கூறினால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளலாம்.
அதேசமயம், மூடலான வார்த்தைகளான "அன், கால'' போன்ற சொற்களை கூறினால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்ற துஆவை ஓதுவார்கள்.    
அறிவிப்பவர்:  அனஸ் (ரலி),
நூல்: அபூதாவூத் 4431
இந்தச் செய்தியின் அறிவிப்பாளரில் ஒருவராக இடம் பெறும் இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர். இந்த செய்தியில் அவர் "அன்'' என்ற மூடலான வார்த்தையைக் கூறியிருப்பதால் இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
முஅன்அன்
ஹதீஸை அறிவிக்கும் போது  ''அன்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது "முஅன்அன்'' எனப்படும்.
''அன் அபீஹுரைரா'' ''அன் ஆயிஷா'' (அபூஹுரைரா வழியாக - ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள்  முஅன்அன் எனப்படும்.
''நமக்குச் சொன்னார்'' ''நமக்கு அறிவித்தார்'' ''நம்மிடம் தெரிவித்தார்'' ''நான் காதால் அவரிடம் செவியுற்றேன்'' என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.
ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.
தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது.
''அவர் வழியாக'' ''அவர் மூலம்'' என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.
அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால். இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அதாவது, முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
மேற்கூறப்பட்ட சட்டங்களில்
ஏற்றுக் கொள்ளத் தக்கவையும்
ஏற்றுக் கொள்ளத் தகாதவையும்
1.         கரீப்
2.         அஜீஸ்
3.         மஷ்ஹுர்
4.         குதுஸீ
5.         மர்ஃபூவு - ஆகிய வகைகளில் அமைந்த ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரும், கருத்தும் சரியாக அமைந்து இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
1.         முர்ஸல்
2.         முஃளல்
3.         முன்கதிஃ
4.         முஅல்லக் - ஆகிய வகைகளைச் சார்ந்த செய்திகளில் அறிவிப்பாளர்கள் விடுபடுவதாலும், விடுபட்டவர்கள் யாரென்றும் அவர்களின் நம்பகத்தன்மை என்னவென்றும் தெரியாததாலும் இந்த வகைகளைச் சார்ந்த செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
"முதல்லஸ்' என்ற வகையில் இருட்டடிப்பு செய்யக்கூடிய அறிவிப்பாளர் தெளிவான வார்த்தைகளை (ஹத்தஸனா, அன்பஅனா, ஸமிஃத்து என்று) கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். மூடலான வார்த்தைகளை (அன், கால) கூறினால் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
1.         மவ்கூஃப்,
2.         மக்தூஃ போன்ற வகைகளைப் பொறுத்த வரையில் அவை ஹதீஸ்களே கிடையாது.
ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள்தான் ஹதீஸ் என்று சொல்லப்படும்.
ஸஹாபாக்கள், தாபியீன்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அஸர் என்றுதான் சொல்லப்படும்.
நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டவைதான் இறைச்செய்தி - வஹியாகும். அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
அதைத் தவிர்த்து, ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்ற மனிதர்களுடைய கூற்றுகளை நாம் மார்க்கமாகப் பின்பற்றினால் அது வழிகேடாகும்.
எனவே மவ்கூஃப், மக்தூஃ போன்ற செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:
"உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கி பின்பற்றராதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்''
(அல்குர்ஆன் 7:3)
முஸல்ஸல் (சங்கிலித் தொடர்)
நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸை ஓர் அறிவிப்பாளர் அறிவிக்கும் போது நபியவர்களிடம் ஏற்பட்ட செயல்ரீதியிலான வெளிப்பாடுகளையும், அங்க அசைவுகளையும் செய்து காட்டி தனக்கு அடுத்த அறிவிப்பாளருக்கு அறிவிப்பார்.
இந்தச் செயல்முறை கடைசி அறிவிப்பாளர் வரை தொடர்வதற்குப் பெயர்  முஸல்ஸல் என்று சொல்லப்படும்.
உதாரணம்:
நபி (ஸல்) அவர்கள் என்னுடைய கையை பிடித்து, முஆதே! அல்லாஹ்வின் மீதானையாக "உன்னை நான் விரும்புகிறேன், அல்லாஹ்வின் மீதானையாக "உன்னை நான் விரும்புகிறேன்' என்று கூறினார்கள். பிறகு, முஆதே! "அல்லாஹும்ம அஇன்னி அலா திக்ரிக்க வஷுக்ரிக்க வஹுஸ்னி இபாத்தத்திக்க'' (பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என்று ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாலும் கூறாமல் இருக்காதே என உனக்கு நான் உபதேசிக்கின்றேன் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல்(ரலி).                                                                                                                                                       நூல்: அபூதாவூத் 1524.
இந்த ஹதீஸில் "உன்னை நான் விரும்புகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி)க்கு சொன்னதைப் போன்றே, அறிவிப்பாளர்கள் அனைவரும் தங்களது மாணவர்களுக்கு அறிவிக்கும் போது "உன்னை நான் விரும்புகிறேன்'' என்று சொல்லி அறிவித்திருக்கின்றார்கள்.
இது ஹதீஸ்களை அறிவிப்பதில் தனிச் சிறப்புமிக்க ஒரு முறையாகும்.
மகனிடமிருந்து தந்தை அறிவித்த ஹதீஸ்கள்
பொதுவாக, தந்தையிடமிருந்து மகன் அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் மகனிடமிருந்து தந்தை அறிவிக்கும் நிகழ்வுகளும் அரிதாக நடந்துள்ளன. அவ்வகை ஹதீஸ்களையும் அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி உள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாகும்.
உதாரணம்:
"நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்துக் கொண்டதற்காக கோதுமை மாவையும் பேரீச்சம் பழங்களையும் வலிமா விருந்தாக கொடுத்தார்கள்''.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதீ 1015.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் "வாயில் பின் தாவூத்'' என்பவர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தனது மகனான பக்ர் பின் வாயில் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். இவர் தபஉத் தாபி ஆவார்.
நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களை காப்பதில் அறிஞர்கள் எடுத்துக் கொண்ட அதிகபட்ச பேணுதலையும், ஆய்வுக் கண்ணோட்டத்தையும் இது வெளிப்படுத்துகிறது.
சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்
ஓர் அறிவிப்பாளர் தன்னை விட வயதில், தரத்தில், கல்வியில் தனக்கு கீழுள்ள அறிவிப்பாளரிமிருந்து அறிவித்த செய்திகளை ஹதீஸ்கலை மேதைகள் அடையாளம் கண்டு வைத்துள்ளனர். இதற்கும் காரணம், அறிவிப்பாளர் வரிசை தவறுதலாக இடம்பெற்றுள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதாகும்.
உதாரணம்:
"கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் "முத்அத்துன்னிஸா' (கால வரம்பிட்டு செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்று தடைவிதித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி). நூல்: நஸாயீ 3314
இந்த செய்தியில் யஹ்யா பின் சயீத் எனும் அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தபஉத் தாபியும் தனது மாணவருமான மாலிக் பின் அனஸ் என்பவர் வழியாக இந்தச் செய்தியை அறிவிக்கின்றார். இவ்வாறு ஆசிரியர் மாணவரிடமிருந்தும், பெரியவர்கள் சிறியவர்களிடமிருந்தும் அறிவித்துள்ள ஹதீஸ்கள் பல உள்ளன.
நன்கு பிரபலமான நான்கு அப்துல்லாக்கள்
"அப்துல்லாஹ்'' என்ற பெயரில் ஹதீஸ்களை அறிவிக்கின்ற நபித்தோழர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களில் நன்கு பிரபலமானவர் பின்வரும் நான்கு அப்துல்லாக்கள் ஆவர். அவர்களை அரபியில் பன்மையாக "அபாதிலா' என்று ஹதீஸ் துறையில் குறிப்பிடுவர்.
நாஸிஹ், மன்ஸூஹ்
புதிய சட்டம் - பழைய சட்டம்
இறைவன் மனிதர்களைப் படைத்து வெறுமனே விட்டுவிடாமல் அவர்கள் இந்த உலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்குரிய வாழ்வியல் சட்டங்களை அளித்துள்ளான். அவ்வாறு சட்டங்களை அளிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பின்னர் அவன் அதை மாற்றி விடுவான்.  அதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்:
ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்து பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றல் உள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
அல்குர்ஆன்- 2:106.
அனைத்தையும் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பிறகு அதை ஏன் மாற்ற வேண்டும்?
பொதுவாக ஒரு மனிதன் 25 வயதை அடைந்த தனது மகனுக்கு அறிவுரை சொல்லும் போது மனைவியுடன நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டும் என்று அறிவுரை சொல்வான்.
அதேவேளை அவன் ஐந்து வயதில் இருந்த போது வேறு விதமாக அறிவுரை செய்திருப்பார். ஐந்து வயதில் கூறிய உபதேசத்தை 25 வயதில் கூறினால் அதில் எந்தப் பலனும் இருக்காது. மனிதன் என்பவன் அனைத்து விஷயத்தையும் பிறந்த உடனே அறிந்து கொள்வதில்லை. மாறாக, கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் படிப்படியாகத்தான் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்கிறான்.
மனிதனுடைய மூளையையும் உள்ளத்தையும் அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை இறைவன் ஒரே சீராக ஆக்கவில்லை. எனவே, அவனது மூளை எதை எப்போது ஏற்றுக் கொள்ளுமோ அதை அப்போது கூற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இறைவன் மனிதர்களுக்கு திருமறைக் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சட்டங்களை அளிக்கின்றான்.
எனவே தான் படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக சட்டங்களைக் கூறும் போது, ஆரம்பத்தில் இலகுவாக இருந்த சட்டம் பின்னர் கடினமாக்கப்படலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்த சட்டம் பின்னர் இலகுவாக்கப்படலாம்.
எனவே, ஆரம்பத்தில் தொழுகையில் மட்டும் மதுவைத் தடை செய்கிறான். பின்னர் அவர்கள் ஒரு பக்குவத்தை அடைந்ததும் முழுவதுமாகத் தடை செய்து விடுகிறான். இது போன்ற நிலையில் முன்னர் சொல்லப்பட்ட சட்டம் மாற்றப்படலாம்.
நாஸிஹ், மன்ஸூஹ் என்பது ஆரம்பத்தில் ஒரு சட்டம் கூறப்பட்டு, பின்னர் மற்றொரு சட்டத்தின் மூலம் முந்தைய சட்டம் மாற்றப்படுவதாகும். இதில் முந்தைய சட்டத்திற்கு மன்ஸூஹ் (மாற்றப்பட்டது) என்றும், புதிய சட்டத்திற்கு நாஸிஹ் (மாற்றியது) என்றும் பெயர் கூறப்படும்.  இதற்கு திருமறைக்குர்ஆனிலிருந்தே அழகிய எடுத்துக்காட்டுகளை நாம் காட்டலாம்.
படிப்படியாக மது தடைசெய்யப்படுதல்
திருமறைக் குர்ஆனிலும் இது போன்ற மாற்றப்பட்ட வசனங்கள் உள்ளன. ஆரம்பத்தில் மது தொழுகையில் மாத்திரம் தடை செய்யப்பட்டது. பின்னர் முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டது என்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
எடுத்த எடுப்பிலே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட கால கட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் முன்வைத்தது.
பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
அல்குர்ஆன் 16:67
இந்த வசனம் மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான்.
இரண்டு பொருட்களைப் பற்றி பேசும் போது ஒன்றை மட்டும் சிறந்தது என்று கூறினால் இன்னொன்று சிறந்ததல்ல என்ற கருத்து வரும். எனவே உணவு, மது ஆகிய இரண்டில் உணவு தான் அழகானது; சிறந்தது. மது சிறந்ததல்ல என்ற கருத்தை முதலில் முன்வைக்கிறான். இந்நேரத்தில் மது அருந்தக் கூடாது என்று குர்ஆன் தடை விதிக்கவில்லை.
இதன் பிறகு மதுவில் கேடு தான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது. என்றாலும் மதுவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை.
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219
இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப்பட்டுள்ளது.
தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டும் என்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவே தான் மனித இயல்பை அறிந்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!
அல்குர்ஆன் 4:43
இந்த வசனம் இறங்குவதற்குப் பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.
அலீ (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரிக் குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவை குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃக்ரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதிவிட்டார். அப்போது தான், "நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! (4:43) என்ற வசனம் இறங்கியது.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: அபூதாவூத் 3186
இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
அல்குர்ஆன் 5:90
எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில் எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட் படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள் இருக்கின்றன.
சட்டங்கள் இடுவது முக்கியமல்ல. எப்போது, எப்படிச் சட்டம் இயற்றினால் பலன் ஏற்படும்? என்ற தூர நோக்குப் பார்வையில் சட்டங்களை இயற்ற வேண்டும். மக்களின் மனநிலைகளை அல்லாஹ் முற்றிலும் அறிந்திருப்பதால் இத்தகைய வழிமுறையைக் கையாண்டுள்ளான்.
நாஸிஹ் மன்ஸுஹ் குர்ஆனில் உள்ளது போன்று ஹதீஸிலும் உள்ளது. அதற்குரிய எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம்.
ஆஷுரா நோன்பு கடமை என்ற சட்டம் மாற்றப்படுதல்
முதலில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் கூறப்பட்டதற்கு உதாரணமாக ஆஷுரா நோன்பு தொடர்பான சட்டத்தைக் கூறலாம்.
ஆரம்பத்தில் ஆஷூரா நோன்புதான் கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு ஆஷுரா நோன்பு விருப்பத்திற்குரியதாக மாற்றப்பட்டது. இதில் ஆஷுரா நோன்பிற்கு மன்ஸூஹ் (மாற்றப்பட்டது) என்றும் ரமலான் நோன்பிற்கு நாஸிஹ் (மாற்றியது) என்றும் சொல்லப்படும்.
அதாவது ஆஷுரா நோன்பு கட்டாயக் கடமை என்ற பழைய சட்டம் மாற்றப்பட்டு ரமலான் நோன்பு கட்டாயக் கடமை என்ற புதிய சட்டம் விதிக்கப்பட்டது.
"ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹாரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்கு புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, "யார் (ஆஷுராவுடைய) நோன்பை நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறரோ அவர் அதை விட்டுவிடட்டும்!'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி 1592.
நாஸிஹ் – மன்ஸூஹ் அறிவதன் முக்கியத்துவம்
நாஸிஹ் மன்ஸூஹ் பற்றி அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனென்றால், இதை ஒருவர் சரியான முறையில் அறியவில்லையென்றால் ஏராளமான மார்க்கச் சட்டங்களை அவர் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய நிலை ஏற்படும்.
மது பற்றிய மன்ஸூஹான வசனத்தை மாத்திரம் ஒருவர் படித்தால் மது ஹலாலானது என்ற அபத்தமான முடிவை எடுதுது விடுவார்.
மன்ஸூஹான மாற்றப்பட்ட சட்டங்களை ஓரிரு நபித்தோழர்கள் கூட அறியாமல் இருந்தார்கள் என்பதைச் சில ஹதீஸ்களின் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம். இதற்கு இப்னு மஸ்வூத்(ரலி) சம்பந்தப்பட்ட பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.
"அல்கமா என்பவரும் அஸ்வத் என்பவரும் இப்னு மஸ்வூத்(ரலி)யிடத்தில் சென்ற போது, "உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் தொழுது விட்டார்களா?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். அதற்கு அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே, அவ்விருவருக்கும் மத்தியில் அவர் நின்றார். அவ்விருவரில் ஒருவரை தனது வலப்பக்கமும் மற்றவரை இடது பக்கமும் ஆக்கினார். பிறகு அவ்விருவரும், கைகளை முட்டுகளின் மீது வைத்து ருகூஃவு செய்தார்கள். உடனே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அவ்விருவரின் கைகளை அடித்தார்கள். பிறகு, தனது இரண்டு கைகளை ஒன்றினைத்து, அவ்விரண்டயும் தனது தொடைகளுக்கு மத்தியில் வைத்தார்கள். தொழுது முடித்தபோது இவ்வாறுதான் நபி(ஸல்) அவாகள் செய்தார்கள் என்றும் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1221.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தொழுகையின் ருகூஃவில் இரண்டு முட்டுக் கால்களை கைகளால் பிடிக்காமல் தொடைகளுக்கு மத்தியில் தனது கைகளை வைப்பர்களாக இருந்தார்கள். ஆனால் இது ஆரம்பத்தில் இருந்த சட்டமாகும். பின்னர் இரண்டு முட்டுக்கால்களையும் பிடிக்க வேண்டும் என்ற சட்டம் அதை மாற்றிவிட்டது பின்வரும் ஹதீஸின் மூலம் நாம் அறிந்துக் கொள்ளலாம்.
நான் என்னுடைய தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூஃவின்போது என்னுடைய இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதைவிட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகளை மூட்டுக் கால்களின் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம் என்றார்.
அறிவிப்பவர்: முஸ்அப் பின் சஅத் (ரலி).
நூல்: புகாரி 790.
எனவே, மார்க்கச் சட்டங்களை விளங்கிக் கொள்வதற்கு நாஸிஹ் மன்ஸூஹ் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
நாஸிஹ் மன்ஸூஹை அறிவதற்குரிய அளவு கோல்கள்
முதல் வழிமுறை
நபி(ஸல்) அவர்களே ஹதீஸே அதை தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகும். 
உதாரணம்:
"கப்ருகளை சந்திப்பதை விட்டும் உங்களை தடுத்திருந்தேன. (இதற்கு பிறகு) அவற்றை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மரணத்தை நினைவுப்படுத்துகிறது'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா(ரலி).
நூல்: முஸ்லிம்1623.
மேற்கண்ட செய்தியில் நபி(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கப்ரை சந்திப்பதைத் தடுத்து பின்னர் அனுமதியளிப்பதின் மூலம் ஆரம்பத்தில் கூறிய சட்டத்தை பின்னர் மாற்றிவிடுகிறார்கள்.
இரண்டாம் வழிமுறை
நபித்தோழர் விளக்கம் அதைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்துவிடும்.
உதாரணம்:
"சமைத்த பொருட்களை உண்பதால் உளூ நீங்காது'' என்பது (உளூ நீங்குமா? நீங்காதா?) என்ற இரண்டு விஷயங்களில் இறுதியானதாக இருந்தது என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள்.
நூல்: நஸாயீ 185
மேற்கண்ட ஹதீஸில் இரண்டு விஷயங்களில் இறுதியானதை ஒரு நபித்தோழர் குறிப்பிடுவதிலிருந்து மாற்றப்பட்ட சட்டத்தை அறிய முடிகின்றது.
மூன்றாம் வழிமுறை
வரலாற்று  குறிப்பு அதைத் தெளிவு படுத்திவிடும்.
உதாரணம்:
"இரத்தம் குத்தி எடுத்தவனும், எடுக்கப் பட்டவனும் நோன்பை விட்டுவிட்டார்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி).
நூல்: அபூதாவூத் 2021.
இந்த ஹதீஸின் சட்டம் பின்வரும் ஹதீஸின்படி மாற்றப்பட்டுவிட்டது.
நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துள்ளார்கள். நோன்பு நோற்று இருக்கும் போதும் இரத்தம் குத்தி எடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி).
நூல்: புகாரி 1939.
இவற்றில், ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மக்கா வெற்றியின் போது நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே சமயம், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டது ஹஜ்ஜத்துல் வதாஃ எனும் இறுதி ஹஜ்ஜின் போதாகும். இறுதி ஹஜ் என்பது மக்கா வெற்றிக்குப் பிறகு நடந்த நிகழ்வாகும்.
எனவே, வரலாறைக் கவனித்தால் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி முதலில் நடந்த சம்பவம் என்றும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி அதற்குப் பின்னால் நடந்தது என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, ஷத்தாத் (ரலி)யுடைய ஹதீஸின் சட்டத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸின் சட்டம் மாற்றிவிட்டது.
குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் முரண்பாடின்றி விளங்கிக் கொள்ள நாஸிஹ், மன்ஸூஹ் பற்றிய அறிவு மிக அவசியம் என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

EGATHUVAM JUN 2015