Mar 14, 2017

துரோகிகளுக்கு எதிராக துஆச் செய்வோம்

துரோகிகளுக்கு எதிராக துஆச் செய்வோம்
எம். ஷம்சுல்லுஹா
இருபதாம் நூற்றாண்டு போலவே இருபத்தோறாம் நூற்றாண்டும் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றே தோன்றுகின்றது. இனவெறி பிடித்த ஹிட்லர், ஃபாசிச வெறி பிடித்த முசோலினி, பயங்கரவாதி ஸ்டாலின் போன்றவர்கள் இருபதாம் நூற்றாண்டில் கடுமையாகப் பேசப்பட்டவர்கள், காலச் சக்கரம் வீசியெறிந்த கசப்புமிக்க தலைவர்கள் அவர்கள்.
அந்த வரிசையில் இடம் பெற்றவர் சீனாவை ஆண்ட மாவோவும்! முன்னோக்கித் தாவுதல்என்ற பெயரில் சீனாவில் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அதில் ஒன்று தான் சீனத்து சிட்டுக் குருவிகளை சுட்டுக் கொல்வது அல்லது சீரழிப்பது என்ற திட்டம்.
குருவிகளைக் கொல்வதில் என்ன புரட்சி வேண்டிக் கிடக்கின்றது? என்று கேட்கலாம். தானிய வித்துக்களைக் கொறித்துத் தள்ளியதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகினராம். விவசாயிகளின் தானியங்கள் கொறிக்கப்பட்டால் அது உணவு தட்டுப்பாட்டிற்கும் வழி வகுத்து விடும் என்று  அவர் தப்புக் கணக்கு போட்டு பார்த்துள்ளார். அதற்கு விடிவும் விடையும் கீச்சென்று குரலெழுப்பி கூட்டை விட்டு புறப்படுகின்ற குருவிகளை நாட்டை விட்டு  அழிப்பது தான் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
அதனால் ஆட்சியாளர் மாவோவிடமிருந்து பறக்கின்ற குருவிகளின்  உயிர்களைப் பறிக்கின்ற உத்தரவு பிறந்தது. அதிகார வர்க்கத்திடம் அந்த உத்தரவு இறக்கை கட்டிப் பறந்தது. அதற்கு ஜால்ரா போட்டு சிங்கி அடிக்கின்ற சில்லறைக் கூட்டம் இது பொருளாதாரத்தை அப்படியே புரட்டி போடுகின்ற புரட்சித் திட்டம். புதுமைத் திட்டம் இது காலத்துக்கேற்ற கட்டாயத் திட்டம் என்றெல்லாம் மாவோவின் உச்சந்தலை குளிரப் புகழ்ந்து தள்ளியது.
ஆம்! அவரைப் புதைகுழியில் தள்ளியது. விளைவு என்ன? சீனாவின் சர்வ வல்லமைக்கு முன்னால் பரிதாபத்திற்குரிய சின்னஞ்சிறு சிட்டுக் குருவி கூட்டம் என்ன சாகசம் செய்து விடமுடியும்? எதிர்த்து நிற்க முடியாத அந்த இளஞ்சிட்டுகள் தானியங்கள் கொறித்த பாவத்திற்காக கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டன. இதனால் மரக்கிளைகளில் மருந்துக்குக் கூட ஒரு குருவி இல்லாமல் மாய்ந்து போய்விட்டன. சிட்டுக் குருவிக்கு இழைக்கப்பட்ட இந்த அநியாயத்திற்கு எதிராக யாரும் குரல் கொடுக்க முன் வரவில்லை.
மாவோவின் மடத்தனம்; மாய்ந்தது மனித இனம் 
சிட்டுக் குருவிக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு எதிராக இறைவனே தன் சித்து வேலைகளை ஆரம்பித்தான். அது என்ன?
இயற்கையின் சமன்பாட்டைக் காப்பதற்கு  இறைவன், உணவுச் சங்கிலி என்ற ஒரு வளையத்தைப் போட்டு வைத்திருக்கின்றான். வயல் வெளியில் உள்ள புழுப் பூச்சுக்களை சாப்பிடுவதற்குத் தவளை!  தவளையைச் சாப்பிடுவதற்குப் பாம்பு! பாம்பைச் சாப்பிடுவதற்குப் பருந்து மற்றும் காகங்கள் என்ற சங்கிலியைப் போட்டு வைத்திருக்கின்றான். இந்தச் சங்கிலியின் ஒரு கன்னி அழிந்து விட்டால், அறுந்து விட்டால் போதும்! இயற்கையின் சமன்பாடு சீர்குலைந்து சின்னாபின்னமாக சிதறிப் போய்விடும். அப்படிப்பட்ட ஒரு சீரழிவையும், பேரழிவையும் சீனா சந்தித்தது.
வயல்வெளிகளின் பயிர்களைக் கடித்து குதறுவதில் முதலிடம் வகிப்பது வெட்டுக் கிளிகள். இந்த வெட்டுக்கிளிகளை விழுங்குகின்ற வேலையை சிட்டு குருவிக் கூட்டம் தான் செய்து கொண்டிருந்தன. சிட்டுக் குருவிகள் புரட்சியாளர் சீரிய சிந்தனையால் அழிந்து போனதால் பயிர்களை வெட்டுக்கிளிகள் அழித்துத் தள்ளின. சிட்டுக் குருவிகளை சுட்டுத் தள்ளிய மாவோவிற்கு வெட்டுக் கிளிகளை அழித்துத் தள்ள முடியவில்லை. அதனால் விளைச்சல் பாதித்தது. சீனா பஞ்சத்தின் பிடியில் சிக்கியது. புரட்சி என்பது வறட்சியாக மாறியது பஞ்சம், பசி, பட்டினி என்று அத்தனையும் சீனாவில் தலைவிரித்தாடியது.
மூன்று ஆண்டுகளில் 45 மில்லியன் மக்கள் சாவின் அகோரப் பசிக்குப் பலியானர்கள். முன்னோக்கித் தாவுதற்குப் பதிலாக, பின்னோக்கி சாவுவதற்குப் பாய்ந்தது. அந்த அளவுக்கு அந்தப் பாதிப்பின் பரிமாணம் பல மடங்காக இருந்தது. வரலாறு மீண்டும் திரும்பும் என்பது போல் இப்படிப்பட்ட பேர்வழிகள் தலை தூக்கி, தாண்டவமாடிய போன நூற்றாண்டு அப்படியே மீண்டும்  திரும்பியிருக்கின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது.
இந்தியாவில் மோடி... இவர் புரட்சி செய்கின்றேன் என்ற பெயரில் உயர் மதிப்புள்ள  1000, 500 நோட்டுகளை ஒரு நொடிப் பொழுதில் செல்லாது அறிவித்து நாட்டை ஸ்தம்பிக்க வைத்தார். ஸ்திரமான பொருளாதாரத்திற்கு இது ஓர் அஸ்திரவாரம் என்ற தனக்குரிய உச்ச ஸ்தாயில் இதை மெச்சிக் கொண்டார்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கருப்புப் பணத்திற்கு எதிராக இதுவரை  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மோடி எடுத்த நடவடிக்கை தான்  துணிகரமான நடவடிக்கை என்று ஜால்ரா கம்பெனிகள் ஜோராக ஜால்ரா தட்டின. வாங்கிய பணத்தைத் திரும்ப வழங்குவதற்கு வக்கில்லாத வங்கிகளாகின.  புரட்டுக்காரர்கள் இதையும் புரட்சி என்று புகழ்ந்து தள்ளினர்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் போட்ட பணத்தை எடுப்பதற்கு வரிசையில் நின்று  தங்கள் உயிர்களைப் பறி கொடுத்தது உலக வரலாற்றில் இது தான் முதல் தடவை என்று சொல்லுமளவுக்கு மோடி மாவோவைப் போன்று இந்தியாவைப்  பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் தள்ளி விட்டு சென்ற நூற்றாண்டை திரும்பிப் பார்க்க வைத்து வரலாற்றை திருப்பிக் கொண்டு வந்திருக்கின்றார்.
தகர்க்கப் பட்ட தடுப்புச் சுவர்
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனியிலிருந்து மக்கள் பெருமளவுக்கு மேற்கு ஜெர்மனிக்குத் தப்பி ஓடினர். இதனால் கிழக்கு ஜெர்மனி இதனைத் தடுக்கும் பொருட்டு, 1961ல் மேற்கு பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது. இதனை, ‘பெர்லின் சுவர்என்றழைத்தனர்.
பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த இந்தச் சுவரின் நீளம் 43.1 கி.மீ., கான்கிரீட்டால் கட்டப்பட்ட இந்தச் சுவரின் உயரம் 4 மீட்டராகும். இதே போன்று மேற்கு பெர்லின் நகரை முற்றிலுமாகத் தடை செய்த கிழக்கு ஜெர்மனியின் எல்லை சுவர் 111.9 கி.மீ. ஆகும். இந்தச் சுவரின் மேல் முள் கம்பிகள் போடப்பட்டன. எல்லையோரத்தில் 302 கண்காணிப்புக் கோபுரங்கள் எழுப்பப்பட்டன. பாதுகாப்புப் பணியில் 14,000 எல்லை வீரர்கள் மற்றும் 601 ரோந்து வாகனங்களும் இருந்தன.
ரொனால்டு ரீகனும் டொனால்டு டிரம்பும்
1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி இரு நாட்டுக்கும் இடையிலிருந்த இந்தச் சுவர் இரு நாட்டு மக்களால் இடித்து தகர்க்கப்பட்டது. 30 ஆண்டுகள் சொந்த பந்தங்களைப் பிரிந்த மக்கள், மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதும் போன நூற்றாண்டு! அது தகர்க்கப்பட்டு, வெட்டப்பட்ட சகோதரத்துவம் மீண்டும் ஒட்டப்பட்டது. பிரிக்கப்பட்ட இரத்தப் பந்தம் மீண்டும் பற்ற வைக்கப்பட்டது.
அப்போது 1987ல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ரொனாலடு ரீகன் சோவியத் அதிபர் கோர்பசவிடம் இந்தச் சுவரை இடித்து இரு நாடுகளிடம் இணைய வேண்டும் என்று  வலியுறுத்தினார். அவரது முயற்சி இரு நாடுகள் இணைவதற்கு வழி வகுத்தது. இது போன நூற்றாண்டு.
ஆனால் இந்த  நூற்றாண்டில்  ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாத்திரத்தில் அமெரிக்கா வுக்கும் மெக்ஸிக்கோவுமிடையில் தடுப்பு சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்தார்.
வட அமெரிக்கா கண்டத்தின் வடக்குப் பகுதியில் கனடாவும் யு.எஸ்ஸும் இவற்றின் தெற்குப் பகுதியில் (அமெரிக்கா கண்டத்தில்) உள்ள நாடுகளை லத்தீன் அமெரிக்கா என்று குறிப்பிடுவார்கள். மெக்ஸிக்கோ இங்கு அமைந்திருக்கும்  நாடாகும்.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே தடுப்பு வேலிகள் ஏற்கனவே இருக்கின்றன. அத்துடன் சென்சார், புகைப்படக் கருவிகளும் பொருத்தப் பட்டுள்ளன. இப்போது 930 கிலோ மீட்டர் நீளத்துக்கு 10 அடி சுவர் எழுப்ப வேண்டும் என்று டிரம்ப் கூறுகின்றார். இதற்கு காரணம் மெக்ஸிக்கோவிலிருந்து மக்கள், குறிப்பாக குற்றப் பின்னணி உள்ளவர்கள் பொய்யான ஆவணங்களைக் கொண்டு அமெரிக்காவிற்குள் நுழைகின்றார்களாம்! அதைத் தடுப்பதற்குத் தான் பல இலட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்தச் சுவர். இப்படி விசித்திரமான திட்டத்தை அறிவித்து டிரம்ப், மோடிக்கு உடன் பிறவா சகோதரராகி சென்ற நூற்றாண்டின் வரலாற்றைத் திருப்பிக் கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட கொடிய ஆட்சியாளர்களை நாம் இந்த நூற்றாண்டில் சந்தித்திருக்கின்றோம்.
மோடி, டிரம்ப் ஓர் ஒற்றுமை
உலகில் உள்ள  அனைவரையும் கடந்த கால கொடுங்கோல் ஆட்சியாளர்ளை நம் மனக் கண்கள் முன்னால் கொண்டு வந்த இவ்விருவர்களுக்கு மத்தியில் முட்டாள் தனத்திலும் மூடத்தனத்திலும் சரியான ஒற்றுமை உள்ளது.
இந்தியாவில் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும்  இந்துத்துவா சக்திகள் கொம்பு சீவி விடப்பட்டிருக்கின்றனர். அதன் விளைவாக உ.பி யில் அக்லாக்  என்பவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒரு பொய்யான காரணம் கூறி அவரை அவரது குடும்பப் பெண்கள் முன்னிலையில் அடித்துக் கொலை செய்கின்றார்கள். ஏன் என்று கேட்பதற்கு நாதியில்லை. அவரது கொலைக்கு இது வரைக்கும் நீதியும் கிடைக்கவில்லை. மனித உயிரை விட மாட்டுயிரைப் புனிதமாக்கும் கொடுமையை வேறெந்த நாட்டிலும் நாம் காணமுடியாது. முஸ்லிம்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று தெரிந்து மாடு சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. இதன் மூலம் இந்துத்துவா சக்திகள் முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் முடக்கி முடமாக்கியுள்ளனர்.
வாழ்வாதரத்தில் கை வைத்த இந்தத் தீய சக்திகள் நம்முடைய உயிருக்கும் மேலான மார்க்கச் சட்டத்திலும் கை வைக்கத் துடிக்கின்றார்கள். அதற்கு ஓர் எடுத்துக் காட்டு அண்மையில் உ.பி யில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வெளியான தேர்தல் அறிக்கையாகும். குஜராத் கொலைகாரன் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டான். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் முத்தலாக் விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அந்தத்  தேர்தல் அறிக்கை தெரிவிக்கின்றது. இதன் மூலம்  நம்முடைய மார்க்கச் சட்டத்திலும் கை வைக்க காத்துக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவில் மோடியின் உடன் பிறவா அண்ணன் டிரம்ப் வெற்றி பெற்றதும் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் கொம்பு சீவி விடப்பட்டன. அதன் விளைவாக முஸ்லிம்களின் பள்ளிவாசல் அடித்து நொறுக்கப்படுகின்றது. இது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்களில் தங்கள் நாட்டவரைக் குடியமர்த்தும் அக்கிரமமான ஆக்கிரமிப்பு வேலையை அரங்கேற்றி வருகின்றது.
ட்ரம்பின் தலைமை உலமகா பயங்கரவாதிகளான யூதர்களுக்கு இப்படி ஒரு   வீரியத்தைக் கொடுத்திருக்கின்றது. மோடி ஆட்சிக்கு வந்ததும் எப்படி இந்துத்துவா சக்திகளுக்கு வீரியம் ஏற்பட்டிருக்கின்றதோ அதுபோல் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் விரோதிகளுக்கும் முஸ்லிம்களின் பரம விரோதியான யூதர்களுக்கும் வீரியம் ஏற்பட்டிருக்கின்றது. சிரியா, சோமாலியா, லிபியா, இராக், ஈரான், சூடான், யமன் ஆகிய  7 முஸ்லிம் நாடுகளிலிருந்து வருவோருக்கு  விசா அனுமதி கிடையாது என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்து தனது முஸ்லிம் விரோதப் போக்கை பகிரங்கப்படுத்தியிருக்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களாகிய  நம்முடைய கடமை என்ன? இந்தியாவில் மோடி ஆட்சிக்கு எதிராக நாம் துஆச் செய்ய வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்கள் ஏற்கனவே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் நாம் பிஜேபியினால் நேரடி பாதிப்பைச் சந்திக்கவில்லை அதனால் அதன் பாதிப்பு நமக்குத் தெரியவில்லை. நமக்கு தான் பாதிப்பில்லையே என்று நாம் அலட்சியமாக இருந்து விடக் கூடாது.
ஒளிரட்டும் உ.பி! ஒழியட்டும் பிஜேபி!
இப்போது தமிழகத்தில் வாலாட்ட கொள்ளைப் புற வாசல் வழியாக நுழைவதற்குரிய அத்தனை வேலைகளையும் ஜெயலலிதா இறந்த பிறகு பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இப்போது  உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கின்றது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பிஜேபி படுதோல்வியை தழுவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். காரணம் ஆட்சியைக் கொடுப்பதும் அதை எடுப்பதும் அல்லாஹ்வின் கையில் இருக்கின்ற அதிகாரமாகும்.
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக!
அல்குர்ஆன்  3:26
 எனவே படைத்த  இறைவனிடம்  இந்தக் கொடியவனின் ஆட்சி உ.பியில் வந்து விடக்கூடாது என்று பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். உ.பி தான்  2014 தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் பிஜெபிக்கு அதிகமான இடங்களை அள்ளிக் கொடுத்தது. அதனால் தான் அது மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. எனவே, அங்கு அதற்கு அடி விழ வேண்டும். மற்ற 4  மாநிலங்களிலும் பிஜேபி  வெற்றி பெற்றால் அது ஒரு பெரிய பாதிப்பை  ஏற்படுத்தாது என்றாலும் உபியில் வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கு இந்திய அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் பிஜேபி முத்தலாக் விஷயத்தில் தலையிடுவோம்; ராமர் கோயில் கட்டுவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தான்.
அதுபோல் உலக அளவில் டிரம்பின் ஆட்சிக்கு எதிராகவும் நாம் துஆச் செய்ய வேண்டும். டிரம்பின் ஆட்சியால் உலகெங்கிலும் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். அதிலும் மிக குறிப்பாக பலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு இன்னல்களையும், இடைஞ்சல்களையும் அனுபவித்து வருகின்றார்கள். அந்த மக்களுக்காகவும் நாம் துஆச் செய்ய வேண்டும்.
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).
அல்குர்ஆன் 2:265
என்ற இந்த துஆ எல்லாவிதமான சோதனைகளுக்கும் உரிய ஒரு பொது துஆவாகும். அல்லாஹ் கூறுகின்ற இந்த துஆவை நமக்கும் நமது சமுதாயத்தின் மக்களுக்காகவும் கேட்போமாக!
உலக அளவில் பாதிக்கப்பட்டு அல்லல் படுகின்ற இராக், சிரியா போன்ற நாட்டு மக்களுக்காக குறிப்பாக நீண்ட நெடுங்காலமாக இன்னலுக்குள்ளாகின்ற பலஸ்தீன மக்களுக்காகவும் இந்தியாவில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோமாக!
தன் முன்னிலையில் இல்லாத முஸ்லிம் சகோதரருக்காக இன்னொரு முஸ்லிமான அடியார் துஆச் செய்கின்ற போது அவருக்காக ஒரு மலக்கு உனக்கு அது போல் ஆகட்டும் என்ற துஆச் செய்கின்றார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி).
நூல்: முஸ்லிம் 4912
இந்த துஆ உண்மையில் அங்கீகரிக்கப்படக் கூடிய ஒரு துஆவாகும் அதனால் இதை நாம் மனதில் கொண்டு பாதிக்கப்பட்டிருகின்ற அந்த மக்களுக்காக துஆச் செய்வோமாக! அல்லாஹ்வின் நல்முடிவை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போமாக!

EGATHUVAM MAR 2017