Mar 8, 2017

முன்னோர்களை பின்பற்றுதல்

முன்னோர்களை பின்பற்றுதல்


பேய் பிசாசு இருப்பதாக நம்புவது, இறந்தவர்களை வழிபடுவது, முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது, தீ மிதிப்பது, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என்று பிறமத மக்களிடம் இருந்து இஸ்லாமியர்களிடம் புகுந்திருக்கும் காரியங்களைப் பெரும்பட்டியல் போடலாம். முன்சென்ற செய்திகளை மறந்தும் புறக்கணித்தும் முஸ்லிம்கள் வாழ்ந்ததின் விளைவால்தான் இந்த மார்க்க விரோதக் காரியங்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்குள் புகுந்திருக்கிறது என்பதே உண்மை.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - அதுவே நேர்வழி என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
(அல்குர்ஆன் 2:120)
(நிராகரிப்பவர்கள்) அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(திருக்குர்ஆன் 2:217)
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத்து அன்வாத்' என்று அதற்குச் சொல்லப்படும்.
நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு "தாத்து அன்வாத்து' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்'' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்'' என்று சொல்லி, "என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், "மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்' என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், "நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்' என்றுபதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலி)
நூல்: திர்மிதீ (2106), அஹ்மத் (20892)
"உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புஹாரி (3456)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து விலக்கிவிடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்துகொண்டிருக்க, "யூதர்களையும்  கிறிஸ்தவர்களையும்  அல்லாஹ் தன் கருணையிலிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புஹாரி (435), (436)

யார் பிறமத மக்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களை சேர்ந்தவரே என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவுத் (3512)