இரவுத் தொழுகை
எம்.ஐ. சுலைமான்
புனித மிக்க ரமளானில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அபரிமிதமான
நன்மைகளை அளிக்கின்றான். இம்மாதத்தின் பகல் காலங்களில் நோன்பு நோற்பதற்கும் இரவில்
நின்று வணங்குவதற்கும் மகத்தான கூலிகளை வழங்குகின்றான்.
ரமளானில் இரவு நேரத்தில் முந்திய பகுதிகளில் தொழும் வழக்கம்
தற்போது நடைமுறையில் உள்ளது. பிந்திய இரவில் தொழுவது தான் மிகச் சிறப்பான வணக்கமாகும்.
எனவே பிந்திய நேரங்களில் தொழுவதன் சிறப்பைத் தெரிந்து கொண்டு அதைச் செயல்படுத்தி, அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டும். ரமளான் மாதத்தில் விடாது
கடைப்பிடிக்கும் இந்த இரவுத் தொழுகையை ரமளானுக்குப் பின்னரும் தொடர வேண்டும்.
விலகி விடும் விலாப்புறங்கள்
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க
அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து
(நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக கண் குளிரும்
வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 32:16,17)
நரகத்திலிருந்து பாதுகாப்பு
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால்
அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்)
அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக்
கூடியவனாவும் இருந்தேன். இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள்.
கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு
இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது
நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன். அப்போது
வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான்
கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது
நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர்
மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!'' என்று கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே
தவிர நான் உறங்குவதில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1121, 1122
பொறாமை கொள்ளத்தக்க அமல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை
கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு
அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2. இன்னொரு
மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான்.
அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர-), நூல் : புகாரி 5025
வல்ல இறைவனின் வானுலக வருகை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு
இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான்
அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும்
என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 1145
கேட்டது கிடைக்கும் நேரம்
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான
மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை
இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1259
சுவனமே கூலி
"ஸலாமைப்
பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில்
நுழையுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
நூல் : திர்மிதீ 2409
தொழத் தொடங்கியவர் விடலாகாது
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ்வே!
இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல் ஆகி விடாதீர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்
(ரலி)
நூல் : புகாரி 1152
ரமளானில் இரவுத் தொழுகை
"யார் நம்பிக்கை
கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய
பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 37
தொழுகையில் சிறந்தது
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப்
பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
"ரமலான் மாதத்திற்குப்
பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும்
நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும்
தொழுகையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1982
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
1.
ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில்
காணப்படுகின்றன.
ரமலான் மாத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்கு பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர்
இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை
முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப்
பற்றி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்.
உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர்
(முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷா தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத்
தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து
பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1216
இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது
11 ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 7452
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில்
எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 376
நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள்.
(ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183
நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும்
வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 996
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
"ரமலானில்
நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், "நபி (ஸல்)
அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை.
நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும்
நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும்
கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.
"அல்லாஹ்வின்
தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?'' என்று நான்
கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா
நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம்
1220?
12+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான
மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க
வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில்
தூங்கினார்கள். இரவின் பாதி வரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி (ஸல்) அவர்கள்
தூங்கினார்கள். பின்னார் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக்
கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து
வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து
(தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள்
செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள்
தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின்
வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள்
தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு
தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து
சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே
சென்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 183, முஸ்லிம்
1275
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள்
தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 1138, முஸ்லிம்
1276
10+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்.
அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக)
தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.
(அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.
அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார
மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1341
9 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா
(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு
ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள்
தொழுவார்கள்)'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139
7 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா
(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், "ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு
ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள்
தொழுவார்கள்)'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139
5 ரக்அத்கள்
"வித்ரு தொழுகை
அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ
அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத்
1212, இப்னுமாஜா
1180
3 ரக்அத்கள்
"வித்ரு தொழுகை
அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ
அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத்
1212, இப்னுமாஜா
1180
1 ரக்அத்
"வித்ரு தொழுகை
அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ
அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத்
1212, இப்னுமாஜா
1180
வித்ர் தொழும் முறை
நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள்
வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க
மாட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா
1182, அஹ்மத் 25281
நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள்.
அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1698
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள்
தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1699
...நபி (ஸல்)
அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது
ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க
மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தை தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர்
இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1700
இரவுத் தொழுகை அதாவது மக்களால் தராவீஹ் என்று அழைக்கப்படும்
தொழுகை 20 ரக்அத்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்குப் பின்வரும்
செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் ஜமாஅத்துடன்
அல்லாமல் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: பைஹகீ 4391
இந்தச் செய்தி மட்டும் தான் தராவீஹ் 20 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்தி
வரும் ஹதீஸாகும். ஆனால் "இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல'' என்று இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே பின்வருமாறு தெளிவு
படுத்தியுள்ளார்கள். இந்தச் செய்தியில் இடம் பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர் என்று
அந்த ஹதீஸின் அடிக்குறிப்பிலேயே தெளிவு படுத்தியுள்ளார்கள்.
அடுத்தாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் உமர் (ரலி) அவர்கள்
தொடர்பு உடையதாகும்.
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுபவர்களாக
இருந்தனர் என்று யஸீத் பின் ரூமான் என்பவர் கூறுகிறார்.
நூல்: முஅத்தா 233
இந்தச் செய்தியைப் பற்றி விமர்சனம் செய்யும் இமாம் பைஹகீ அவர்கள்
யஸீத் பின் ரூமான் என்பவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தை அடையவில்லை. அதாவது உமர் (ரலி)
அவர்கள் காலத்தில் பிறக்கவே இல்லை என்று தனது அல்மரிஃபா என்ற நூலில் குறிப்பிடுவதாக
ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஸைலயீ அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். (நஸபுர் ராயா பாகம்:
2,
பக்கம்: 154)
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத ஒருவர் அவர்கள் காலத்தில்
நடந்த செய்தியை எவ்வாறு கூற முடியும்? எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகிறது,
மேலும் இதற்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் 8+3 ரக்அத்கள் தொழுமாறு
கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி இமாம் மாலிக் அவர்களின் அல்முஅத்தா என்ற
நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உபை பின் கஅப் (ரலி), தமீமுத்தாரீ
(ரலி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்அத்கள்
மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்
நூல்: முஅத்தா (232)
உமர் (ரலி) காலத்தில் மக்கள் தொழுதார்கள், உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற இரண்டு செய்திகளில்
உமர் (ரலி) அவர்கள் எதில் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்? மக்கள் செய்தார்கள் என்பதில் உமர் (ரலி) அவர்களுக்கு எங்கே தொடர்பு
உள்ளது?
உமர் (ரலி) அவர்கள் 8+3 கட்டளையிட்டார்கள் என்பதில் தான் நேரடியான தெளிவான தொடர்பு
உள்ளது. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கும் ஒத்துப் போகிறது.
எனவே இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு ஆதாரப் பூர்மான எந்த ஹதீசும் இல்லை என்பதே
சரியானதாகும்.
EGATHUVAM OCT 2005