நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரைச் சோதனைக்கு உள்ளாக்குகின்றான். (புகாரி 5645)
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, "நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
(நூல் : புகாரி 5652)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் கூறுகிறான் : நான் என் அடியானை, அவனுக்கு விருப்பமான இரு பொருட்களை (கண்களைப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் அதைப் பொறுத்துக் கொண்டால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (நூல் : புகாரி 5653)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமைகின்றன. இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது.
(நூல் : முஸ்லிம் 5726)
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)
சஅது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) "நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்'' என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி 2322