அல்லாஹ்வின் ஒப்பந்தம்
இரண்டாம் ஆண்டு மாணவிகள்
அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
இருவேறு எதிர்பார்ப்புகளுடைய நாடுகளையோ அல்லது
மாநிலங்களையோ அல்லது மனிதர்களையோ இணைப்பதற்கு ஒப்பந்தங்கள் அவசியமாகின்றன.
பெரும்பாலான ஒப்பந்தங்கள் மனித வளத்தைச்
சீரழிப்பதற்காகவே அரங்கேறுகின்றன. வீணான ஒப்பந்தங்களைத் தெரிந்து கொள்வதற்கு
ஆர்வம் காட்டும் நம்மில் பலர், படைத்த
இறைவனிடம் செய்து கொடுத்த ஒப்பந்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம்
காட்டுவதில்லை.
படைத்த இறைவனிடம் நாம் என்ன ஒப்பந்தத்தை
எடுத்துள்ளோம் என்பதை அறிய அனைவருமே கடமைப்பட்டுள்ளோம்.
ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின்
சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். ‘‘நான் உங்கள் இறைவன் அல்லவா?’’ (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோ’’ என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்’’ என்றோ, ‘‘இதற்கு
முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?’’ என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு
உறுதிமொழி எடுத்தோம்.)
அல்குர்ஆன் 7:172, 173
ஆதமுடைய சந்ததிகளாகிய நாம் இவ்வுலகத்திற்கு
வருவதற்கு முன்பே மேற்கூறிய ஒப்பந்தத்தை ஏற்று அதைச் செயல்படுத்துவதாக வல்லோன்
அல்லாஹ்விடம் உறுதி அளித்துள்ளோம்.
விலைக்கு வாங்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை
நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின்
உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக
அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில்
போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி.
அல்லாஹ்வை விட வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில்
மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 9 111
இவ்வுலக வாழ்க்கையை ஒப்பந்தம் என்ற
அடிப்படையில் நம்மிடம் விலைக்கு வாங்கிய இறைவன் அதற்குரிய கூலியாக, பகரமாக சொர்க்கத்தை நமக்கு வாக்களித்துள்ளான்.
பொதுவாக வியாபாரத்தின் போது ஒரு பொருளை
வாங்கினால் அதற்கு ஈடான தொகையையோ, பொருளையோ
கொடுப்பது வியாபார நியதி. ஆனால் அல்லாஹ்விடம் நாம் செய்யும் வியாபாரத்தில் நாம்
போடும் உழைப்பை விட அதிகமாக நம்மால் ஈடுகட்டவே முடியாத லாபத்தை, அதாவது சொர்க்கத்தை அல்லாஹ் நமக்குப் பரிசளிக்கின்றான்.
நம்மில் எத்தனை பேர் இந்த ஒப்பந்தத்தை நினைவில்
நிறுத்தி ஒழுங்காக நிறைவேற்றுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி இறைவனிடம்
வழங்கிய இந்த அற்புத ஒப்பந்தத்தை நிறைவேற்றாதவர்களை அல்லாஹ் பார்க்காமல், பேசாமல் பாவங்களிலிருந்து தூய்மையாக்காமல் மறுமையில்
இழிவுபடுத்துவதாக இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.
அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு
மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும்
மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும்
மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் 3:77
புதுப்பித்து முறிக்கப்படும் ஒப்பந்தங்கள்
மனிதர்கள் அடிக்கடி அல்லாஹ்விடம் பல
ஒப்பந்தங்களைச் செய்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த ஒப்பந்தங்களை முறித்து
விடுகிறார்கள்.
இறைவனிடம் செய்யும் ஒப்பந்தங்களில் அலட்சியம்
கூடாது என்று அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.
நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின்
ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து
விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
அல்குர்ஆன் 16:91
ஒரு சிலர் ரமலான் மாதம் வந்து விட்டால், ‘‘யா அல்லாஹ்! இனி இன்னின்ன பெரும்பாவங்களைச் செய்ய மாட்டேன்’’ என்று ஒப்பந்தம் செய்து விட்டு ரமலான் முடிந்த கையோடு அதை
மீறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இன்னும் சிலரோ இன்னாருக்கு அல்லாஹ்
பொருளாதாரத்தை வழங்கியதைப் போன்று எனக்கும் வழங்கினால் நான் இன்னின்னவாறு தர்மம்
செய்வேன் என்று உறுதிமொழி எடுப்பார்கள்.
அல்லாஹ் அவருக்குப் பொருளாதார வசதியை
ஏற்படுத்தி சோதித்தால் கஞ்சத்தனம் கொண்டு கருமிகளாக மாறிவிடுகின்றார்கள்.
இத்தகைய இழிகுணம் கொண்டோருக்கு இறைவனின்
கண்டனம் என்னவென்று பாருங்கள்.
“அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால்
தர்மம் செய்வோம்; நல்லோர்களாக ஆவோம்’’ என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்தோரும் அவர்களில்
உள்ளனர். அல்லாஹ் தனது அருளை அவர்களுக்கு வழங்கியபோது அதில் கஞ்சத்தனம் செய்தனர்.
அலட்சியம் செய்து புறக்கணித்தனர். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும்
நாள் வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான்.
அல்குர்ஆன் 9:75,76,77
“என் இறைவனது அருளின் கருவூலங்களுக்கு நீங்கள்
உரிமையாளர்களாக இருந்திருந்தால் செலவிட அஞ்சி உங்களிடமே வைத்துக் கொண்டிருப்பீர்கள்!
மனிதன் கஞ்சனாகவே இருக்கிறான்’’ என்று
கூறுவீராக!
அல்குர்ஆன் 17:100
ஒப்பந்தத்தை உண்மைப்படுத்திய நபித்தோழர்
நபித்தோழர்களில் ஒருவர் நபியவர்களிடம் தன்
வாழ்நாள் முழுவதும் பொய் சொல்ல மாட்டேன் என்று ஒப்பந்தம் செய்தார். அந்த
ஒப்பந்தத்தை உண்மைப்படுத்தும் விதமாக அவர் மரணிக்கும் வரை நடந்து கொண்டார் என்று
வரலாறு கூறுகிறது.
அவர் வேறு யாருமல்ல. கஅப் பின் மாலிக் (ரலி)
ஆவார்.
‘‘கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான்
(எனக்காக) வைத்துக்கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தால் தான்
அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவமன்னிப்புக்
கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத்
தவிர வேறெதையும் பேசமாட்டேன்’’ என்று
கூறினேன்.
ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து இன்றுவரை உண்மை பேசியதற்காக எனக்கு
அல்லாஹ் அருள் புரிந்ததைப் போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள்
புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதிமொழியை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து இந்த நாள்வரை நான் பொய்யை நினைத்துப்பார்த்ததுகூட
இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் நாட்களிலும் அல்லாஹ் என்னை (பொய் சொல்ல
விடாமல்) பாதுகாப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நூல்: முஸ்லிம் 5346
ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க ஒவ்வொரு நாளும் வாய்ப்பு
மனிதன் என்ற அடிப்படையில் நாம் செய்கின்ற
ஒப்பந்தத்தை சில சமயங்களில் முறிக்க நேரிடலாம். ஆனால் எந்தப் பாவத்தைச் செய்ய
மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தோமோ அதே பாவத்தை மீண்டும் வாழ்வில் தொடராமல்
இருக்கும் வண்ணம் அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் வகையில் ஒரு அற்புதமான
பிரார்த்தனையை நம்முடைய தூதர் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
இந்த துஆவை ஒருவர் பகலில் ஓதிவிட்டு அப்படியே
மரணித்தால் அவர் சொர்க்கவாசியாவார். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்துவிட்டால்
அவரும் சொர்க்கவாசி என்று நபிகள் நாயகம் சான்றளித்துள்ளார்கள்.
இது தான் அந்த பிரார்த்தனை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா
அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து.
அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ
லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’’
என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ
மன்னிப்புக் கோரலாகும்.
பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத்
தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச்
செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை
நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான்
பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்)
ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.
யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும்
தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக
இறந்து விடுகின்றாரோ அவர் சொர்ககவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை
நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே
இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்.
இதை ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 6306
ஒவ்வொரு நாளும் தவறாது மேற்கண்ட துஆவை நாம் ஓதி
வந்தால் அல்லாஹ்விடம் நாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பை அல்லாஹ்
நமக்கு நல்குவான்.
அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை
நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ்
(தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான்.
அல்குர்ஆன் 3:76
EGATHUVAM MAR 2017