Mar 23, 2017

தொடரட்டும் இன்னொரு சுதந்திரப் போராட்டம்

தொடரட்டும் இன்னொரு சுதந்திரப் போராட்டம்

சுதந்திரப் போராட்டமா? அதற்காக சிந்திய இரத்தம், செய்த தியாகங்கள் கொஞ்சமா? நஞ்சமா? நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் வெடிப்பது போல் இருக்கிறதே! அந்த மாபெரும் சுதந்திரப் போராட்டத்தை இரண்டாவது தடவையும் தொடருட்டும் என்று எழுதியுள்ளீர்களே! என்று கேட்கலாம். ஏற்கனவே பெற்ற சுதந்திரத்தை ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ல் செங்கோட்டையில் கொடியேற்றி கொண்டாடி வருகின்றோமே! அதல்லாம் நடிப்பா? நாடகமா? என்றும் கேட்கலாம்.

அதெல்லாம் நடிப்போ, நாடகமோ அல்ல! உண்மை தான். ஆனால் அந்த சுதந்திரம் இந்த மண்ணுக்குத் தான் கிடைத்திருக்கின்றதே தவிர பெண்ணுக்குக் கிடைக்கவில்லை.

வெளியே சென்ற ஒரு பெண் தன் கற்புக்கும் உடைமைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் எப்போது திரும்ப வருகின்றாளோ அப்போது தான் நம் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்பேன் என்று கூறியவர் வேறு யாருமல்ல! இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய காந்திஜி தான்.

அதாவது வெள்ளையர்களின் ஆட்சியை மாற்றி நமது ஆட்சியைக் கொண்டு வந்ததை, இந்த ஆட்சி மாற்றத்தை, இந்த மண்ணுக்குக் கிடைத்ததை சுதந்திரம் என்று காந்தி சொல்லவில்லை. உண்மையான சுதந்திரம் என்பது ஒரு பெண்ணுக்கு அவளது கற்புக்கும் உடைமைக்கும் கிடைக்கும் பாதுகாப்பு தான்.

பெற்ற சுதந்திரம் பெண்ணுக்கல்ல! இந்த மண்ணுக்கே!

1947 ஆகஸ்ட் 15ம் தேதி நாடு சுதந்திரம் அடைந்தது. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் கொண்டாடி வருகின்றோம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி வெளிவந்த சில முக்கியச் செய்திகளைப் பார்ப்போம். அந்தச் செய்திகள், சம்பவங்கள் அனைத்தும் இந்த நாட்டில் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை - பாலியல் பலாத்காரங்களை படம் பிடித்துக் காட்டுகின்றன. கிடைத்த சுதந்திரம் பெண்ணுக்கல்ல, இந்த மண்ணுக்குத் தான் என்பதை நிரூபித்து நிற்கின்றன.


ஆகஸ்ட் 13

காளிச்சரண் என்றழைக்கப்படும் அப்பு யாதவ் என்பவன் நாக்பூர் கோர்ட்டுக்கு நவம்பர் 7 அன்று கொண்டு வரப்படுகின்றான். அவன் மீது குறைந்தது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் இந்த ரவுடிக்கு எதிராக வேங்கைகள் அல்ல! வெள்ளாடுகள் திரள்கின்றன. ஆம்! வெள்ளாடுகள் என்று கருதப்படும் வீராங்கனைகள் தான் ஒன்று திரள்கின்றனர். கத்தி மற்றும் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு கோர்ட் வளாகத்திலேயே அப்பு யாதவைக் கொன்று விடுகின்றனர்.

கையில் விலங்கு பூட்டிக் கூட்டி வந்த காவலர்கள் பெண்களின் இந்தக் கோரத் தாக்குதலைக் கண்டு பயந்து அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதைத் தொடர்ந்து 5 பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிராகப் பெண்கள் கிளர்ந்தெழுந்து, கைது செய்யப்பட்ட பெண்களை விடுதலை செய்யக் கோரி நீதிமன்றத்தை முற்றுகையிட்டனர். முடிவு அந்த ஐந்து பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர். பெண்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி கண்டனர். பெண்களின் இந்தப் பெரும் கொந்தளிப்புக்குக் காரணம் என்ன? அவர்களின் பெரும்பான்மையானவர்களின் கற்புகளை நினைத்த போதெல்லாம் இந்தக் காமுகன் காவு கொண்டது தான்.

அதனால் தான் அவன் காலடியில் கசங்கிய பூக்கள் புயலாயினர். முடிவில் அந்தக் காமக் கொடூரனைக் கொன்றே தீர்த்தனர். கிடைத்த சுதந்திரம் பெண்ணுக்கல்ல, இந்த மண்ணுக்குத் தான் என்பதே புல்லரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சி நமக்குப் புரிய வைக்கும் பாடமாகும்.

ஆகஸ்ட் 14

கல்கத்தாவில் தனன்ஜய் சட்டர்ஜி தூக்கிலிடப்படுகின்றான். எதற்காக? ஹெடல் பாரக் என்ற சிறுமியைக் கற்பழித்துக் கொன்றதால்! தனன்ஜய் தான் தூக்கிலிடப்பட்டு விட்டானே! அப்புறம் என்ன? என்று கேட்கலாம்.

இது வெளிச்சத்துக்கு வந்த விஷயம். நீதிமன்றத்தில் சாட்சியத்துடன் நிரூபணமான உண்மை விவகாரம். இப்படி வெளிச்சத்திற்கு வராமல் போன விஷயங்கள் லட்சம் தேறும். அவற்றின் தலைவிதிகள் என்ன என்பதை எண்ணிப் பார்க்கவே இந்த எடுத்துக்காட்டு! ஹெடல் பராக்கைப் போன்ற பெண்களின் சுதந்திரம் மட்டும் பறிக்கப்படவில்லை. அவர்களது கற்பும், சுவாசமும் சேர்த்தல்லவா பறிக்கப்படுகின்றது?

இந்தக் கொடூர நிகழ்வு கூறும் செய்தி என்ன? கிடைத்த சுதந்திரம் பெண்ணுக்கல்ல! இந்தியா என்ற மண்ணுக்குத் தான் என்பது தானே!

ஆகஸ்ட் 15

மணிப்பூர் பற்றி எரிகின்றது. பற்றி எரியும் இந்தக் கலவரத் தீயில் மாணவன் சித்ரஞ்சன் என்பவன் தன் மேனியில் பற்ற வைத்த தீயில் வெந்து போன உடலுடன் பந்து போல் தரையில் விழுந்து சாகின்றான். ஏன்?

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டி ஹெந்தாய் என்றழைக்கப்படும் தன்ஜம் மனோரமா என்ற 32 வயதுப் பெண் ஜூலை 10ம் தேதி இராணுவத்தினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றாள். அழைத்துச் செல்லப்படும் நேரம் நள்ளிரவு! சுதந்திரம் இரவில் கிடைத்ததை நினைத்துப் பார்க்கும் விதமாக இரவில் அழைத்துச் செல்லப்படுகின்றாள் போலும்.

போனவள் திரும்ப வரவில்லை. மறுநாள் குண்டுகள் பாய்ந்த வெறும் சடலமாக இம்பால் சாலையில் கிடந்தாள். இதனைக் கண்டு ஆத்திரமுற்ற மூத்த வயதுப் பெண்கள் நிர்வாணமாக பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகைய கொடுமையைத் தாங்க முடியாமல் தான் மாணவன் சித்ரஞ்சன் தீக்குளித்து சாகின்றான். இந்தப் பிரச்சனை ஓயாமல் இன்னும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஏன் சுட்டுக் கொன்றீர்கள்? என்று மக்கள் கூட்டம் கேள்வி கேட்டால் அதற்கு இராணுவம் சொல்லும் பதில், தப்பி ஓடினாள் அதனால் சுட்டோம் என்று! ஒரு பெண் தப்பி ஓடும் அளவுக்கு - தப்பி ஓடும் பெண்ணை துரத்திப் போய் பிடிக்க முடியாத அளவுக்கு இராணுவம் திறனற்றுப் போய் இருக்கின்றது என்பதை யார் தான் ஒத்துக் கொள்ள முடியும்?

ஆனால் உண்மை என்ன என்பதைப் பிரேதப் பரிசோதனை தெளிவு படுத்தி விட்டது. 1. மனோரமாவின் பாவாடையில் இந்திரியத் துளிகள் பரவிக் கிடந்தன. 2. மர்மஸ்தானத்தில் சித்ரவதை செய்ததற்கான தடயங்கள். 3. கொடுமைக்கு உச்சக்கட்டமாக அவளது மர்மஸ்தானத்தில் குண்டு பாய்ந்திருக்கின்றது.



இந்தக் காமுகர்களுக்கு இதயம் இருக்கின்றதா? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? மணிப்பூரின் இந்தக் கோர கொடூர தாக்குதல் சம்பவம் அடிக்கும் எச்சரிக்கை மணி என்ன? மண்ணுக்காக நடந்த சுதந்திரப் போராட்டத்தைப் போன்று மனோரமா போன்ற பெண்ணுக்காக இன்னொரு சுதந்திரப் போராட்டம் அவசியம் என்று தானே!

ஆகஸ்ட் 19

மும்பையில் ஒரு நாள் ரஞ்சனா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கூடம் செல்கின்றாள். அன்று மாலை அவள் வீடு திரும்பவில்லை. தேடிப் பார்க்கின்றனர் பெற்றோர்கள்! அன்று அவள் பள்ளிக்கூடத்திற்கும் செல்லவில்லை என்ற தகவல் கிடைக்கின்றது. கடைசியில் ஒரு சாக்கடையில் பிணமாகக் கிடக்கின்றாள்.

கற்பழிக்கப்பட்டு, அவள் அணிந்திருந்த சீருடையில் இருந்த வார் மூலம் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றாள் என்று பிரேதப் பரிசோதனை தெரிவித்தது. 1994ம் ஆண்டு டிசம்பர் 13 அன்று இந்தக் கொடூரத்தை அரங்கேற்றிய அரக்கன் மான் சிங் ரத்தோர் என்பவனாவான். இவனை மராட்டிய உயர்நீதி மன்றம் விடுதலை செய்கின்றது. இந்தப் பாவியை விடுதலை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, உயர்நீதி மன்றத்தில் மரணித்த வழக்குக்கு மறு உயிர் கொடுத்த நாள் ஆகஸ்ட் 19. இதுவும் இந்த நாட்டில் பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை என்பதைத் தானே காட்டுகின்றது.

செப்டம்பர் 20

சென்னையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த ஸ்டீபெனி அடோனா என்ற வெளிநாட்டுப் பெண்ணை குடிபோதையில் நான்கு மாணவர்கள் காரில் துரத்தி வந்ததால் தனது ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிச் சென்ற போது அந்தக் காரிலேயே அடிபட்டு சாவும் நிலை. இதுவும் பெண்ணுக்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் வேண்டும் என்பதையே காட்டுகின்றது.

செப்டம்பர் 23

ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு பையனிடம் கொள்ளையடித்து விட்டு அவனுடைய தோழியைக் கற்பழித்து விடுகின்றனர். மதுரையில் நடந்த இந்தக் கற்பழிப்பு காட்டுவதென்ன?

இப்படி ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 23 வரை புள்ளி விவர ஆய்வு நடத்தாமல் நுனிப்புல் மேய்வது போல், அதாவது மேலோட்டமாக பத்திரிகை பார்த்ததின் அடிப்படையில் இத்தனை கற்பழிப்புச் செய்திகள்.

அதுவும் வெளிச்சத்துக்கு வந்து பத்திரிகைச் செய்தியானவை தான் இவை. வெளிச்சத்துக்கு வராதவை எவ்வளவோ? இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நாம் பெற்ற சுதந்திரம் மண்ணுக்குத் தான் பெண்ணுக்கல்ல என்பதை விளங்கலாம். பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கும் நாள் தான் உண்மையான சுதந்திர நாள்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் பல நாடுகள் தியாகமிகு சுதந்திரப் போராட்டங்களை நடத்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டிருந்தன. அந்த வெற்றி வரலாறுகள் இந்தியாவின் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட உள்ளுணர்வாக (ஒய்ள்ல்ண்ழ்ஹற்ண்ர்ய்) அமைந்தன.

பொதுவாக இதுபோன்ற முன்மாதிரிகள் மனித வாழக்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். மண்ணுக்குப் பெற்ற இந்த சுதந்திரப் போராட்டத்துக்கு ஏனைய நாடுகளின் முன்மாதிரி உள்ளுணர்வாக அமைந்தது போல் பெண்ணுக்குக் கிடைக்கும் சுதந்திரத்துக்கும் முன்மாதிரியும் உள்ளுணர்வும் வரலாற்றில் மிகப் பிரகாசமாகவே கிடைக்கின்றன. இதோ அந்த முன்மாதிரி!

அதீ இப்னு ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது, ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதுபற்றி எனக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது'' என்று பதிலளித்தேன்.

"நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக ஹீராவிலிருந்து பயணித்து வருவாள். அவள் வழியில் அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள். "அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?'' என்று நான் என் மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்....


.....அதீ இப்னு ஹாத்திம் (ரலி) தொடர்ந்து கூறுகின்றார்கள்: "ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாக பயணம் செய்து வருவதை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்தேன். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 3595

ஆம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடத்தியது இந்த சுதந்திரப் போராட்டம் தான். அந்த சுதந்திரப் போராட்டத்தின் மறு பெயர் தான் இஸ்லாம். அன்று ஏகத்துவத்தை மூலாதாரமாகக் கொண்டு இறைத்தூதர் இறங்கிய அதே போராட்டக் களத்தில் தான் இன்று ஏகத்துவவாதிகளாகிய நாம் இறங்கியிருக்கின்றோம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர் தம் தோழர்களும் கொண்டிருந்த அதே இறை நம்பிக்கையும், இறையச்சமும் உடைய தூய்மையான வாழ்க்கையை நாமும் கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பெண் கொடுமைகளுக்கு மட்டுமல்ல, எல்லாவிதமான தீமைகளை விட்டும் சுதந்திரம் நிச்சயம்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

(அலகுர்ஆன்29:69)

EGATHUVAM OCT 2004