சுப்ஹான மவ்லிதும் சூடான நரகமும்
"ரபீயுல் அவ்வல்' என்றால் முதல் வசந்தம் என்று பொருள். அம்மாதம் நம்மிடம் வருகின்றது.
பெயரை வைத்து அது வசந்த காலத்தில் தான் வரும் என்று கூற முடியாது. கோடை காலத்திலும்
அது வரும். காரணம், சந்திரக் கணக்கு
என்ற சக்கரம் கோடை, குளிர் என்று
காலத்தில் எல்லாப் பருவங்களையும் சுற்றி வரும் காலக் கணக்காகும். எனவே இதற்கு முதல்
வசந்தம் என்ற பெயர் பொருந்துகின்றதோ இல்லையோ தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் இந்தப் பெயர்
வெகுவாகவே பொருந்தும்.
ரபீயுல் அவ்வல் என்றதும் ராக மழையுடன் நபி (ஸல்) அவர்களின் மவ்லிது
என்ற பெயரில் ஓதப்படும் பக்திப் பாடல்களின் சந்தங்கள் முஸ்லிம்களின் வீடுகளிலிருந்து
சப்த அலைகளாக, சங்கீதங்களாக வெளியே கிளம்பி
வரும். அதனால் இதை முதல் வசந்தம் என்பதை விட முதல் சந்தம் என்று கூறலாம். இதை அடுத்து
வரும் மாதத்தில் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி பெயரில் பாட்டுக் கச்சேரிகள்
நடைபெறத் துவங்கி விடுவதால் அதை ரபீயுஸ் ஸானி இரண்டாவது (வ)சந்தம் என்று திட்டமாகச்
சொல்லலாம்.
இந்த மவ்லிதுகள் பள்ளிவாசல் களிலும், ஜமாஅத்தாரின் வீடுகளிலும் தனியாகவோ அல்லது அணியாகவோ ஓதப்படும்.
மவ்லிது ஓதப்படும் வீடுகளில் வீட்டுக்காரர்கள் அதற் கென்று ஓர் இடத்தை ஒதுக்கி விடுவர்.
அந்த இடத்தில் மேற்கட்டு கட்டப் பட்டிருக்கும். அந்த இடம் மவ்லிதுப் பாடகரான மதரஸாவில்
பட்டம் பெற்ற ஆலிம் அல்லது பரம்பரை லெப்பை போன்றவர்கள் மட்டும் பிரவேசிக்கும் Prohibited
zone ஆக மாறி விடும்.
பாதுகாக்கப்பட்ட இந்த சங்கீத சபையைச் சுற்றிலும் சந்தனம் தெளிக்கப்பட்டு
ஒரு சமாதிக்குரிய சகல மரியாதையும் வழங்கப்படும். சங்கீத மவ்லிது ஓதப்படும் போது சாம்பிராணிப்
புகை மண்டும். சரமாரியாக பக்தர்கள் தங்கள் கைகளை சந்தனங்களில் நனைத்து தங்கள் கழுத்துக்களில்
(பட்டை நாமம்) சாத்திக் கொள்வார்கள். மாநபியவர்கள் பிரசன்னமாகி விட்டது போன்ற பிரமையை
மல்லிகைப் பூ மணம் ஏற்படுத்தும். பத்திகள், பத்தி பத்தியாக புகை மண்டலத்தைக் கிளப்பி நறுமணம் பரப்பிக் கொண்டிருக்கும்.
மவ்லிது எனும் கச்சேரி நடத்தப்படும் அந்தப் பன்னிரண்டு நாட்களில்
நாற்றமெடுக்கும் மீன், கருவாடுகள்
சமையல் சட்டிக்குள் வருவதற்கும் அவற்றைச் சாப்பிடுவதற்கும் தடை! ஆட்டுக் கறிக்கு மட்டுமே
அனுமதி! கணவன் மனைவி உறவுக்கு வலுவான கடிவாளம் இடப்பட்டு, இல்லறத்திற்கும் தடையுத்தரவு! நெய் சோறு அல்லது தேங்காய் சோறு
தான் 12 நாட்களும்.
இதற்காக முஸ்லிம் மூதாதையர்கள் சொத்துக்களை வக்ஃப் செய்திருக்கின்
றார்கள் என்றால் அவர்கள் மவ்லிது மீது வைத்திருந்த ஈமானியப் பிடிப்பு சாமானியமானதல்ல
என்பதை விளங்கிக் கொள்ளலாம். பன்னிரண்டு நாட்கள் முடிந்ததும் காணிக்கைகள், கை மடக்குகள் வழங்கப்படும்.
மவ்லிதில் மண்டிக் கிடக்கும் ஷிர்க்கான கருத்துக்கள்
இந்த அளவுக்கு மதிப்பையும், மரியாதையையும் பெற்ற மவ்லிதுகளை ஒரு காலத்தில் நாமும் ஓதிக்
கொண்டிருந்தோம். அல்லாஹ் நமக்கு தவ்ஹீதை நோக்கி வழி காட்டினான்.
அந்த மவ்லிதுகளில் அடங்கியிருக்கும் ஷிர்க் எனும் கொடிய பாவத்தைச்
சிந்திக்கத் தலைப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே கடவுளாக்கி, வணங்கி வழிபடும் கவிதை வரிகளை அடையாளம் கண்டோம். அந்த அநியாயத்தைச்
செய்ய மாட்டோம் என்று வெளியே வந்தோம். மக்களுக்கு அதிலுள்ள ஷிர்க்கான கருத்துக்களை
வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளோம்.
சுப்ஹான மவ்லிது, முஹய்யித்தீன் மவ்லிது போன்ற பாடல்களில் அடங்கியுள்ள ஷிர்க்கான
கருத்துக்களைத் தொகுத்து நூற்களும் வெளியிட்டிருக்கின்றோம். இதற்காக அல்லாஹ்வுக்கு
நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
அதே சமயம் இந்த மவ்லிதுகளில் நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத பல விஷயங்களை அவர்கள் மீது இட்டுக்கட்டி சொல்லப் பட்டிருக்கின்றது.
மவ்லிதில் இடம் பெற்றுள்ள அந்தப் பொய்களை அடையாளம் காட்டும் விதமாக இந்த இதழ் வெளியிடப்படுகின்றது.
பாதுகாக்கப்பட்ட அதி அற்புத வரலாறு
பொய்களை சரமாரியாக அள்ளித் தெளித்திருக்கும் மவ்லிது கவிஞர்கள்
நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது பற்றிக் கூட அஞ்சவில்லை. அதற்குக் கிடைக்கும்
தண்டனை பற்றியும் அலட்டிக் கொள்ளவில்லை.
நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் அவர்கள் சொல்லாததையோ, செய்யாததையோ எந்த நோக்கத்தில் சொன்னாலும் அவர் பெறப் போகும்
தண்டனை சாதாரண தண்டனையல்ல! நரகமாகும்.
அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவோ, செய்ததாகவோ எந்த நூற்றாண்டில் யார் எழுதினாலும் அதை நுண்ணோக்காடி
போட்டுப் பார்த்து அந்த நூலிலேயே அடிக்குறிப்பிட்டு அந்த ஹதீஸின் தரத்தைப் பற்றிப்
பதிவு செய்து விடுவார்கள்.
இஹ்யா உலூமித்தீன் என்ற நூலை எழுதிய கஸ்ஸாலி என்பவர் அந்த நூலில்
ஏராளமான பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட
ஹதீஸ்களைக் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றார். மக்களிடத்தில் கஸ்ஸாலிக்கு ஒரு மரியாதையும்
இருந்து கொண்டிருந்தது. இந்த ஹதீஸ்களை நம்பி மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்று எண்ணி, ஹாஃபிழ் இராக்கி என்ற ஹதீஸ் கலை அறிஞர், இஹ்யா உலூமித்தீன் என்ற நூலின் அத்தனை பாகங்களையும் ஆய்வு செய்து
அதில் இடம் பெற்றுள்ள பலவீனமான ஹதீஸ்களுக்கு அடிக் குறிப்பு இட்டுள்ளார்கள்.
இது போன்று ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளியாகும் நூற்களில் பதியப்பட்டிருக்கும்
ஹதீஸ்களுக்கு, அதிலும் புகாரி, முஸ்லிம், திர்மிதீ
என்பது போன்று நூல் பெயர் குறிப்பிடாமல் மொட்டையாகச் சொல்லப்பட்ட ஹதீஸ்களுக்கும் கம்ப்யூட்டர்
இல்லாத காலத்தில், ஹதீஸ் கலை
அறிஞர்கள் அவற்றைக் கண்டறிந்து அடையாளம் காட்டியிருப்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்
விஷயமாகும். இதற்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணம் செய்துள்ளார்கள் என்றால் இது சாதாரண
விஷயமல்ல! மாபெரும் தியாகமாகும். இதற்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
இப்படிக் களமிறங்கி அவர்கள் ஹதீஸ் கலை என்னும் கடலில் மூழ்கினார்கள் என்றால் அதற்குக்
காரணம் இந்த வசனம் தான்.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
(அல்குர்ஆன் 15:9)
ஹதீஸ்கள், ஹதீஸ்
கலை அனைத்தும் கணிணி மயமாக்கப்பட்ட இந்தக் கம்ப்யூட்டர் காலத்தில் இம்முயற்சியில் இறங்கும்
போது இறங்கும் போது தான் அந்த ஹதீஸ் கலை அறிஞர்களின் அளவிட முடியாத தியாகத்தை எண்ணி
நாம் வியக்க வேண்டியுள்ளது.
இப்படி நபி (ஸல்) அவர்கள் தொடர்புடைய ஒவ்வொரு செய்தியையும், அதன் அறிவிப்பாளர் வரிசை, அவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் பதிவு செய்து, பாதுகாத்து வைத்திருந்தும், இந்தச் சமுதாயம் நபி (ஸல்) அவர்களின் பெயரால் பொய்யை இட்டுக்
கட்டி அதைப் பரப்பியும் வருவது தான் வேதனைக்குரிய விஷயம். அந்த அடிப்படையில் மவ்லிதுகளில்
இடம் பெற்றுள்ள பொய்யான ஹதீஸ்களை அடையாளம் காட்டும் இந்தச் சிறிய ஆய்வை ஏகத்துவம் உங்களிடம்
சமர்ப்பிக்கின்றது.
சுப்ஹான மவ்லிதும் சூடான நரகமும் என்ற தலைப்பில் சுப்ஹான மவ்லிது
எனும் அரபுக் கவிதைகள், ஹிகாயத் என்ற
பொய்யான உரைத் தொகுப்புகளை உங்களிடம் தருவதுடன் மட்டுமன்றி, நாகூர் ஹனீபா போன்ற கச்சேரிப் பாடகர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது
அவிழ்த்து விட்ட பொய்களையும் படம் பிடித்துத் தருகின்றது.
இதன் மூலம் சுப்ஹான மவ்லிது மட்டுமல்லாமல் புகழ் மாலை என்ற பெயரில்
வந்திருக்கும் இந்தக் கவிதைகள் புகழ் மாலையல்ல! பொய் மாலைகள் தான் என்று தெளிவாகக்
கூறலாம். இந்தப் பொய் மாலைகளை தங்கள் வீடுகளில் ஓதுவதன் மூலம் மக்கள் தங்களின் தங்குமிடத்தை
நரகமாக்கிக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
EGATHUVAM APR 2005