மாநபி மீது
பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்
ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.
அனைத்து
வகை விளைச்சலிலும் பத்தில் ஒரு பங்கு ஜகாத்?
ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில்
நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப்
பார்த்து வருகிறோம்.
அனைத்து
வகை விளைச்சலிலும் பத்தில் ஒன்று?
பூமி தரும் விளைச்சல் குறைவாகவோ, அதிகமாகவோ, மழை நீரில்
விளைந்ததாகவோ, நாம் தண்ணீர் பாய்ச்சியதாகவோ எப்படி இருந்தாலும் அவற்றில் பத்தில் ஒரு பங்கை
ஜகாத்தாக வழங்க வேண்டும் என்று அபூஹனிபா கூறியதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
அபூஹனிபா பெயரில் ஒன்றைச் சொன்னால் அதைப் பற்றி
நாம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அவர் அப்படிச் சொன்னாரா இல்லையா என்றெல்லாம்
ஆய்வு செய்யத் தேவையுமில்லை.
ஆனால் அபூஹனிபாவைத் தாங்கிப் பிடிக்கிறேன்
பேர்வழி என நபிகள் நாயகத்தின் மீது இல்லாததை எல்லாம் அள்ளிவிட்டால்?
ஆம்! அபூஹனிபாவின் இந்தக் கருத்திற்கு நபிகள்
நாயகம் கூற்றில் ஆதாரம் உள்ளதாம்.
இதோ அவர் சொல்வதை பாருங்கள்
الهداية شرح البداية - (1 / 109)
ولأبي حنيفة رحمه الله قوله عليه الصلاة والسلام ما أخرجت الأرض ففيه العشر
பூமி தரும் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு
ஜகாத் உண்டு என்ற நபிகள் நாயகம் கூற்று அபூஹனிபாவுக்கு ஆதாரமாக உள்ளது.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 109
இவர் குறிப்பிட்ட வாசகத்தில் எந்த நபிமொழியும்
இல்லை.
நபிகள் நாயகம் அழகாக, தெளிவாகப்
பிரித்து சொன்ன வேறு நபிமொழியை இவர் தன் கருத்திற்குத் தோதுவாக வாசகங்களை
வளைத்துச் சொல்கிறார்.
அபூஹனிபாவின் பெயரில் சொல்லப்பட்ட உளறலுக்கு, இல்லாத
நபிமொழியை (?) ஆதாரம் என்கிறார்.
நபிகள் நாயகம் விளைச்சலை இரண்டாக வகைப்படுத்தி, தானாக
விளைபவற்றில் பத்தில் ஒன்று என்றும், நீர் பாய்ச்சி விளைபவற்றில் இருபதில் ஒன்று
எனவும் பிரித்துச் சொன்னதாகவே நபிமொழி கூறுகின்றது.
‘மழை நீராலோ, ஊற்று
நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஜகாத்
உண்டு. ஏற்றம், கமலை
கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1483
இதற்கு மாற்றமாக பொத்தாம் பொதுவாக எல்லா
விளைச்சலுக்கும் பத்தில் ஒரு பங்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியதோடு
நில்லாமல் அதை நபியின் பெயரில் முஸ்லிம்களிடம் திணிக்க முற்பட்டது ஏற்றுக் கொள்ள
முடியாததாகும்.
வாயில் வந்ததைச் சொல்வேன் என்ற நிலைப்பாட்டை
எடுத்த பிறகு, அதை வேறு யார் பெயரிலாவது சொல்லி விட்டு போகட்டும்.
தன் மீது எதையும் பொய்யாகச் சொல்லி விடாதீர்கள்
என்று நபிகள் நாயகம் எச்சரித்திருக்க அதைக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இப்படி
நபி மீது அள்ளிவிட அவசியம் என்ன?
இதையும் ஒரு கூட்டம் ஆமோதித்துக் கொண்டும் வாய்
பொத்திக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு நபிகள் நாயகத்தின் மீதான
நேசத்தை விட தங்கள் மத்ஹபு இமாம்களின் மீதான பாசமே வானளாவிய அளவில் மேலாங்கி
இருக்கின்றது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
தவாஃபுல்
குதூம்
கிரான் மற்றும் இஃப்ராத் முறையில் ஹஜ் செய்வோர்
மக்கா வந்ததும் தவாஃப் செய்ய வேண்டும். இதற்கு தவாஃபுல் குதூம் என்று
சொல்லப்படும்.
தவாஃபுல் குதூம் பற்றி ஹிதாயாவில் பேசப்படும்
போது நபிகள் நாயகம் சொல்லாததைச் சொன்னதாக ஓர் அபாண்டமான செய்தி அள்ளி
வீசப்படுகிறது.
وقال مالك رحمه الله إنه واجب لقوله عليه الصلاة والسلام من أتى البيت فليحيه بالطواف
யார் கஃபாவுக்குள்ளே வருகிறாரோ அவர் தவாஃபின்
மூலம் அதற்கு வாழ்த்துச் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே மாலிக் இமாம் அவர்கள் தவாஃபுல் குதூம் கடமை என்று கூறுகிறார்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 141
இது தான் அந்த அபாண்டமான செய்தி.
கஃபாவுக்குள்ளே வருபவர் தஃவாபின் மூலம்
வாழ்த்துச் சொல்லட்டும் என்று நபி சொன்னதாகப் புழுகியுள்ளனர். இப்படி ஒரு செய்தி
எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை. அறவே ஆதாரமில்லாத அடிப்படையற்ற செய்தியாகும்.
இதுபோன்ற எண்ணற்ற பொய்ச் செய்திகளை நபி மீது அள்ளி வீச எப்படித்தான் மனம் வருகிறதோ!
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
முதலில் இது, பிறகு அது...
ஹஜ் தொடர்பான சட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக
அடுக்கிக் கொண்டிருக்கும் வேளையில் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளில் செய்ய வேண்டியது
பற்றி நபியின் பெயரால் ஒரு செய்தியைப் பதிவிடுகிறார்.
الهداية شرح البداية - (1 / 147)
روى عن رسول الله عليه الصلاة والسلام أنه قال إن أول نسكنا في يومنا هذا أن نرمي ثم نذبح ثم نحلق
இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வணக்க
வழிபாடுகளில் முதலாவது கல்லெறிவதாகும். பிறகு அறுத்துப் பலியிடுவதாகும். அதன்
பிறகே தலையை மழிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 147
ஹஜ்ஜின் வணக்கங்களை நிறைவேற்றிடும் போது இந்த
வரிசை முறையில் தான் செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் கூறியதாக ஹிதாயா நூலாசிரியர்
பதிவிடுகிறார். ஆனால் அப்படி ஒரு செய்தி ஹதீஸ் நூல்கள் எவற்றிலும் இல்லை. நபிகள்
நாயகம் இப்படிச் சொன்னார்கள் என்பதற்குப் பலவீனமான செய்தி கூட கிடையாது. இந்த
வரிசைப்படி நபிகள் செய்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இப்படிச் செய்ய
வேண்டும் என்று கட்டளையிட்டதாக ஹதீஸ் இல்லை.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜில்) மினாவிற்குச் சென்ற போது, (முதலில்)
ஜம்ர(த்துல் அகபா)விற்குச் சென்று கற்களை எறிந்தார்கள். பின்னர் மினாவிலிருந்த
தமது கூடாரத்திற்கு வந்து அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு நாவிதரிடம் தமது
தலையின் வலப் பக்கத்தையும் பின்னர் இடப் பக்கத்தையும் காட்டி, ‘எடு’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 2510
நாம் என்ன கேட்கிறோம். ஹதீஸ்களில் என்ன
இருக்கின்றதோ அதை அப்படியே சொல்வதில் இவருக்கு என்ன பிரச்சனை?
முதலில் கல்லெறிந்து, பலி கொடுத்து, பிறகு தலை
மழித்துள்ளார்கள் என்று நபியின் செயலாக உள்ளதை, முதலில் கல்லெறிய வேண்டும், பிறகு பலி
கொடுக்க வேண்டும், அதன் பிறகே தலையை மழிக்க வேண்டும் என்று
நபியின் சொல்லாக ஏன் மாற்றிப் பதிவிட வேண்டும்?
இப்படி ஒன்றிரண்டு அல்ல! பலநூறு செய்திகளை நபி
சொல்லாதவற்றை நபியின் சொல்லாக இணைக்கும் கொடுமையை அரங்கேற்றுகிறார்.
இதன் மூலம் ஹிதாயா நூலாசிரியர் அலட்சியத்தின்
மொத்த வடிவமாகப் பரிணமிக்கின்றார்.
கிரான்
என்பது சலுகையே என்று ஹதீஸ் உண்டா?
பல தலைப்புக்களிலும் உள் நுழைந்து தங்கள்
கைச்சரக்குகளை ஹதீஸ்களாக அள்ளி வீசிய மத்ஹபினர் ஹஜ் கிரான் பற்றியும் ஒரு அவதூறை
நபி மீது வாரியிறைத்துள்ளனர்.
அதற்கு முன் கிரான் என்றால் என்ன என்பதை
அறிவோம்.
கிரான் என்றால் சேர்த்துச் செய்தல் என்பது
பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டிய இடத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டும் போது
ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன் என்று கூறி இஹ்ராம்
கட்டினால் இதுவே கிரான் ஆகும்.
ஒரு இஹ்ராமில் உம்ராவையும், ஹஜ்ஜையும்
நிறைவேற்றுவதால் இது கிரான் (உம்ராவையும், ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்தல்) எனப்படுகின்றது.
இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? குர்ஆன், ஹதீஸை மட்டும்
படிக்கும் போது எந்தப் பிரச்சனையுமில்லை தான். ஆனால் மத்ஹபு என்ற பெயரில்
மனிதர்களின் கருத்துக்கள் நுழையும் போது பிரச்சனை தவிர்க்க முடியாத ஒன்றாகி
விடுகிறது.
இப்போது மத்ஹபினர் அள்ளி வீசிய பொய்ச் செய்தி என்ன
என்பதைப் பார்ப்போம்.
الهداية شرح البداية - (1 / 153)
وللشافعي رحمه الله قوله عليه الصلاة والسلام القران رخصة
கிரான் என்பது சலுகையே என்று நபி
கூறியுள்ளார்கள். இது ஷாபி இமாமுக்கு ஆதாரமாகும்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 153
ஷாபி இமாமின் கருத்திற்கு வலுசேர்க்க இப்படி
ஒரு ஹதீஸ் இருப்பதாக சரடு விடுகிறார்.
கிரான் பற்றி நபி கூறியதாக ஹிதாயாவில்
குறிப்பிடும் இப்படியொரு செய்தி அறவே கிடையாது. எந்த இமாமும் இப்படி ஒரு செய்தி
இருப்பதாகத் தங்கள் நூல்களில் பதிவு செய்யவில்லை.
இதில் இந்த ஹதீஸ் (?) ஷாபி இமாமுக்கு
ஆதாரமாம்.
இல்லாத ஹதீஸ் ஷாபி இமாமுக்கு எப்படி ஆதாரமாக
அமையும் என்கிற விந்தையை மத்ஹபினர்கள் தான் விளக்க வேண்டும்.
பலிப்பிராணி
பலிப்பிராணி பற்றிய பாடத்தில் இருப்பதிலேயே ஆடு
தான் குறைந்த பட்ச பலிப்பிராணி என்ற கருத்தைப் பதிவிட்டு விட்டு, வழக்கம் போல
நபியின் பெயரைப் பயன்படுத்தி புதுச் செய்தியை உருவாக்கி, பரப்பிச்
செல்கிறார் நூலாசிரியர்.
الهداية شرح البداية - (1 / 185)
أنه عليه الصلاة والسلام سئل عن الهدي فقال أدناه شاة
நபி (ஸல்) அவர்கள் பலிப்பிராணி பற்றி
வினவப்பட்டார்கள். அப்போது நபியவர்கள் ஆடு தான் குறைந்த பட்ச பலிப்பிராணி என்று
பதிலளித்தார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 185
இந்தக் கதை பதாயிஉ ஸனாயிஃ என்ற மற்றுமொரு ஹனபி
மத்ஹப் நூலிலும் வார்த்தை மாறாமல் இடம் பெற்றுள்ளது.
பார்க்க: பாகம் 5 பக்கம் 287
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் தான் செய்து விட்டு
டைட்டில் கார்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்துகிறார்.
நபி இப்படி கேட்கப்பட்டார்கள்; அதற்கு நபி
இப்படி பதிலளித்தார்கள் என நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக் கற்பனை செய்து அதை
ஹதீஸ் என மக்களிடையே பரப்புவது எந்த வகையான செயல்?
இவர் குறிப்பிடும்படியான செய்தி எந்த ஹதீஸ்
நூலிலும் இல்லாத நிலையில் நபி இப்படிக் கூறியதாகக் கதை கட்டுகிறார்.
எந்த அறிஞர்களுக்கும் கிடைத்திராத இந்தச்
செய்தி இவருக்கு மட்டும் கிடைத்த மர்மம் என்ன? எப்படிக் கண்டுணர்ந்தார்? மத்ஹபை
ஆதரிப்போரே மர்மத்தை விலக்க வேண்டும்.
நீ மறுமையை நம்பினால்...
உடன் பிறந்த சகோதரிகள் இருவரை சமகாலத்தில்
திருமணம் செய்ய கூடாது எனும் இஸ்லாமியச் சட்டம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
ஹிதாயாவில் இச்சட்டம் சொல்லப்படும் போது
அதற்குரிய ஆதாரமாக குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுகிறார்.
இரு
சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது).
அல்குர்ஆன் 4:23
இதில் மறுப்பேதும் சொல்ல ஒன்றுமில்லை.
சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதைச் சுற்றிவளைத்து
என்றில்லாமல் நேரடியாகவே இவ்வசனம் சொல்லிவிடுகிறது.
அவ்வப்போது குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக்
குறிப்பிடும் மத்ஹபின் போக்கு மெய்சிலிர்க்க செய்கின்றது.
அடுத்து ஹதீஸ்? என்று ஒன்றை ஆதாரமாகக் காட்டுகிறார். இந்த
ஹதீஸ்தான் எங்கே உள்ளது என்று கேட்கிறோம்.
الهداية شرح البداية - (1 / 191)
ولقوله عليه الصلاة والسلام من كان يؤمن بالله واليوم الآخر فلا يجمعن ماءه في رحم أختين
யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும்
நம்புகிறாரோ அவர் தமது இந்திரியத்தை இரு சகோதரிகளின் கருவறையில் ஒன்றிணைத்திட
வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹிதாயா, பாகம் 1, பக்கம் 191
சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யலாகாது
என்பதை அல்லாஹ்வின் தூதர் இவ்வளவு கடுமையுடன் எச்சரித்ததாக நூலாசிரியர்
குறிப்பிடுகிறார்.
நபியின் பெயரால் மக்களை எச்சரித்திடும் போது
அதற்குரிய ஆதாரத்தைக் குறிப்பிட வேண்டாமா? அதுவும் புதிது புதிதான, யாரும்
கேட்டிராத செய்திகளை ரிலீஸ் செய்யும் போது அது எங்கே, எந்த நூலில்
உள்ளது என்பதை எடுத்துரைக்கும் கடமை இவர்களுக்கில்லையா?
உண்மை என்னவென்றால் சகோதரிகளை ஒரே நேரத்தில்
திருமணம் செய்வது குறித்து நபி கூறியதாக இவர் குறிப்பிடும் செய்தி எந்த ஹதீஸ்
நூலிலும் இல்லை.
இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட வஹிச்
செய்தியல்ல இது! முழுக்க முழுக்க நூலாசிரியரின் கற்பனையில் கருவாகி, நூலில்
பிரசவமான கள்ளக் குழந்தையே இது என்பதை உரத்துச்
சொல்கிறோம்.
பெண்கள் பகுதி
மூடப்பழக்கங்கள் முற்றுப் பெறட்டும்
முஸ்லிம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
ஆஃப்ரின்
ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்
இவ்வுலகத்தில் அக்காலம் தொட்டு இக்காலம்
வரையிலும் பல்வேறு மதங்கள் தோன்றியுள்ளன. மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது மதம் தான்
சிறந்தது என புகழ்மாலை சூட்டுகின்றனர். ஆனால் மக்கள் அனைவருக்கும் உகந்த ஓர்
உன்னதமான மார்க்கம் இருக்குமென்று சொன்னால், அது ஓரிறைக் கொள்கையை போதிக்கக்கூடிய, இறைவனால்
வழங்கப்பட்ட இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான்.
இயற்கையோடு இசைந்த இம்மார்க்கத்தில்
சொல்லப்பட்ட போதனைகள் அனைத்தும் மக்களுக்கு எளிமையைப் போதிக்கக் கூடியதாகவும்
மனிதநேயத்தைக் கற்றுத்தரக் கூடியதாகவும் இருக்கிறது. இதை இறைத்தூதர் நபி (ஸல்)
அவர்கள் சிறந்த ஆசிரியராகவும், ஆன்மீக குருவாகவும் இருந்து நமக்கு
கற்றுத்தருகிறார்கள்.
மனிதன் தன் இறைவனுக்காகச் செய்ய வேண்டியவை
பற்றியும், தனக்காகச் செய்ய வேண்டியவை பற்றியும், உறவினர்கள், அண்டை வீட்டார், சக மனிதர்கள் என அப்போதனைகளின் தொடர் நீண்டு
கொண்டே செல்கின்றது. ஆனால் இதற்குச் செயல் வடிவம் கொடுக்கக் கடமைப்பட்ட
இஸ்லாமியர்களோ கடமைகளைக் கண்டு கொள்ளாதவர்களாகவும் போதனையைப் புறக்கணிப்பவர்களாகவும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக பெண்களே இதில் முதலிடம்
பிடித்துள்ளனர். ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பெண்களிடமும் கூட பல
அலட்சியங்கள் காணப்படுகின்றன. அவர்களின் அறியாமையையும், அலட்சியத்தையும்
நாம் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே செல்கிறது.
முதலாவதாக இறைவனுக்குச் செய்ய வேண்டிய
கடமைகளில் பெண்களின் அலட்சியத்தை காண்போம்.
ஈமானில்...
வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை, முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும்
உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத்து
வழங்குதல், ஹஜ்
செய்தல், ரமலானில்
நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 8
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை
நம்பிக்கை, எழுபதுக்கும்
மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது ‘‘வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை” என கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது தொல்லை
தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு
கிளைதான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
இஸ்லாத்தின் முதல் தூணாகவும், ஈமானில்
உயர்ந்த கிளையாகவும் இருப்பது ஏகத்துவம் தான். ஷஹாதத் வாசகங்களை ஒருவர் மொழிவதால்
மட்டும் அவர் ஏகத்துவவாதி என்று கருதப்படமாட்டார். மாறாக இறைவனுக்குரிய பண்பை மற்ற
மனிதர்களுக்கோ, பொருளுக்கோ, உயிரினத்திற்கோ கொடுக்காமல் இருக்க வேண்டும்.
மக்களுக்கு மத்தியில் ஏகத்துவ விதை தூவப்பட்டு
அது அசைக்க முடியாத மரமாக உருவெடுத்த இக்காலத்தில் பெரும்பான்மை பெண்கள்
அறியாமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர். எனினும் அந்தப் பழமையிலிருந்து அவர்களை முற்றிலுமாகப் பிரித்தெடுக்க
முடியவில்லை. ஏனெனில் இணை வைப்பு என்றால் சிலை வணக்கமும் தர்ஹா வழிபாடும் தான்
என்று எண்ணி வைத்துள்ளனர். இந்த அறியாமையினால் தங்களது அன்றாட வாழ்க்கையில்
அவர்கள் செய்யும் பல்வேறு
காரியங்களில் இணைவைப்பின் அம்சங்களே நிறைந்துள்ளன.
ஷஹாதத் வாசகங்களை முன் மொழிவதில் நம் பெண்கள்
எவ்விதக் குறைபாடும் வைக்கவில்லை. ஆனால் அந்த ஈமானை உளப்பூர்வமாக ஏற்று அதை
முழுமைப் படுத்துவதிலும் அதனை உறுதிப்படுத்துவதிலும் தான் தடுமாறுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பாதங்களுக்குக் கீழ் போட்டுப் புதைத்த மடமைக்
காரியங்கள் இன்றளவும் நம்மவர்களிடம் குடிகொண்டிருக்கின்றன.
சகுனம்
பெண்களை ஆட்கொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது சகுனம் பார்ப்பது
தான். அறியாமை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டாலும் சகுனம்
பார்ப்பதில் கல்வி அறிஞர்கள், பாமரர்கள் என எவரும் விதிவிலக்கு பெறுவதில்லை.
1. வெளியே செல்லும் போது பூனை குறுக்கே
வந்துவிட்டால் நினைத்த காரியம் தடைபட்டு விடும்.
2. வெற்றுக்குடம் இருக்கும் போதும், விதவைப்
பெண்கள், அந்தஸ்தில்
தாழ்ந்தவர்கள் முன்னிலையிலும் வெளியே செல்வதை துற்சகுனமாகக் கருதுவது.
3. பல்லி கத்தினால் நல்லது, அது மேலே
விழுந்துவிட்டால் சாவு விழும் என்ற நம்பிக்கை.
4. வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தாளி
வருவார்கள்.
5. ஒரு வீட்டிற்கு முன் சாக்குருவி கத்தினால்
அங்கே மரணம் நிகழப்போகிறது.
6. கை அரித்தால் வீட்டிற்குப் பணம் வரும்.
7. வலது கண் துடித்தால் நல்லதும், இடது கண்
துடித்தால் கெட்டதும் நடக்கும் என்ற நம்பிக்கை.
8. மஃரிப் நேரத்தில் தண்ணீர் உட்பட நம் வீட்டிலுள்ள எந்தப் பொருளாக
இருந்தாலும் எவருக்கும் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது அவ்வாறு செய்தால் நம்
வீட்டிலுள்ள அபிவிருத்தி நம்மை விட்டு போய் விடும் என்ற நம்பிக்கை.
இது போன்ற எண்ணிலடங்கா மடமைகள் நம்
தாய்மார்களின் மனதில் அசைக்க முடியாதவாறு அச்சாரமிட்டு அமர்ந்திருக்கின்றன. சகுனம்
பார்ப்பதின் காரணிகள் வேண்டுமானால் இடத்திற்கு இடம் மாறுபடலாமே தவிர பெண்களின்
மனநிலையில் எவ்வித மாறுதல்களும் ஏற்படவில்லை.
சிறிய, பெறிய எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், எதற்கெடுத்தாலும்
சகுனம் பார்ப்பதைக் கைவிடுவதில்லை நம் சகோதரிகள். ஆனால் இஸ்லாம் இதை முற்றிலுமாகத் தகர்த்தெறிகிறது.
இதோ நம் தூய மார்க்கம் சொல்வதைக் கேளுங்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்று
நோய் கிடையாது, பறவை
சகுனம் கிடையாது. ஸபர் (பீடை) என்பது கிடையாது. ஆந்தையால்
சகுனம் பார்ப்பது கிடையாது.
நூல்: முஸ்லிம் 4465
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்)அவர்கள்
கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. ஆந்தை பற்றிய (மூட) நம்பிக்கையும் இல்லை.
நட்சத்திர இயக்கத்தால் தான் மழை பொழிகிறது என்பதும் (உண்மை) இல்லை. ஸபர் (பீடை)
என்பதும் கிடையாது.
நூல்: முஸ்லிம் 4469
நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது
காலங்களோடும், நேரங்களோடும் தான் மனிதனின் வாழ்க்கை பின்னிப்
பிணைந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க காலத்தை நல்லது கெட்டது என தரம்
பிரிப்பது வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. திருமணம், தொழில் துவங்குதல், புது
வீட்டிற்குச் செல்லுதல் என மார்க்கம் அனுமதித்த காரியங்களிலும் மற்றும்
பூப்பெய்தல், பெயர் சூட்டுதல், குழந்தைப்பேறுக்கு அனுப்புதல் போன்ற மார்க்கம்
அனுமதிக்காத காரியங்களைத் துவங்கும் முன்பாக நல்ல நேரம், கெட்ட நேரம்
பார்க்கும் வழக்கம் பெரும்பான்மையானோரிடம் இருக்கிறது.
உலகில் நிகழக்கூடிய காரியங்கள் அனைத்தும்
ஆட்களைப் பொறுத்தே அமைகின்றன நாட்களைப் பொறுத்து அல்ல. காலம் என்பது மனிதன்
நாட்களை கணக்கிட்டு கொள்வதற்கான ஒரு வழிகாட்டி தான். வெற்றி தோல்வியை, இன்ப
துன்பத்தைத் தீர்மானிக்கும் இலக்கு அல்ல. இதை உணராமல் நம்மவர்கள் காலத்தைக்
குறைகூறுகின்றனர். இதன் மூலம் இறைவனையே நோவினை செய்கின்றனர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்
சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். காலத்தின் கை சேதமே
என்று அவன் கூறுகின்றான். ஆகவே உங்களில் ஒருவர் காலத்தின் கை சேதமே என்று கூற
வேண்டாம். ஏனெனில் நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி
மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி)
விடுவேன்.
நூல்: முஸ்லிம் 4521
ஒரு நாளில் குழந்தை பிறக்கிறது என்றால் அதே
நாளில் அதன் தாய் மரணிக்கிறாள். இப்படி இறப்பும் பிறப்பும் ஒரே நேரத்தில்
சங்கமிக்கும் அந்நாளை நாம் நல்ல நாள் என்று குறிப்பிடுவோமா? அல்லது கெட்ட
நாள் என்று குறிப்பிடுவோமா? நாட்கள் நன்மை, தீமையைத் தீர்மானிக்காது என்பதற்கு இதுவே
தகுந்த ஆதாரமாக இருக்கிறது.
இந்த நாளினால், இந்தப் பொருளினால் தான் நல்லது நடக்கும் என்று
ஒருவர் நம்பினால் அவர் இறை நம்பிக்கையாளர் இல்லை என ஏந்தல் நபி
எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு சுபுஹ் தொழுகை தொழுவித்தார்கள்
அன்றிரவு மழை பெய்திருந்தது தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்கள்
இறைவன் என்ன கூறுகிறான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதருமே
இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என நாங்கள் கூறினோம்.
என்னை
விசுவாசிக்கக் கூடியவர்கள், என்னை நிராகரிக்கக் கூடியவர்கள் என என்
அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். ‘அல்லாஹ்வின் கருணையினாலும், அவனது
அருட்கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை
மறுத்தவர்கள் ஆவர். ‘இந்த நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை
பொழிந்தது’ எனக்
கூறுபவர்கள் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை விசுவாசிக்கக் கூடியவர்கள் ஆவர்
(என்று இறைவன் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள்.)
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித்
நூல்: புஹாரி 846
நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட
வியாபாரங்கள், திருமணங்களில் பலவும் தோல்வியிலும், மனக்கசப்பிலும் முடிவடைவதையும், மக்களால்
ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் அமோக வரவேற்பை பெறுவதையும்
நாம் பார்க்கலாம். இதற்கு அன்னை ஆயிஷாவின் வாழ்க்கை ஓர் முன்மாதிரியாகவுள்ளது.
அறியாமைக் காலத்தில் ஷவ்வால் மாதம் பீடை
மாதமாகவும், துர்க்குறியாகவும் கருதப்பட்டது. அம்மாதத்தில் மக்கள் எவ்வித நற்காரியமும்
செய்ய மாட்டார்கள். மேலும் அம்மாதத்தில் திருமணம் செய்தால் நிலைக்காது என்றும்
நம்பி இருந்தனர். இந்த அறியாமையை அழிப்பதற்க்காகவே நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில்
ஆயிஷாவைத் திருமணம் செய்தார்கள் அனைவரும் மெச்சும் அளவிற்கு வாழ்ந்தார்கள். இதைப் பற்றி
அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள்.
ஆயிஷா (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்: ஷவ்வால்
மாத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னை விட நெருக்கத்திற்குரியவர் யார்?
நூல் : முஸ்லிம் 2782
மனிதனின் வாழ்வில் நடக்கும் அனைத்து
சம்பவங்களும் இறை சித்தாந்தத்தின் அடிப்படையில் தான். இதில் காலத்திற்கும், சகுனங்களுக்கும்
எவ்வித சம்மந்தமும் இல்லை. இவ்வாறு நம்புவது தான் இறை நம்பிக்கையாகும். இதைப்
போன்ற இன்னும் ஏராளமான மடமைகள் நமது பெண்களிடம் இன்றளவும் காணப்படுகிறது. ஆனால்
நம் இஸ்லாம் மார்க்கமோ மூடநம்பிக்கைகள், சமூகத்தீமைகள், அனாச்சாரங்கள் என்று எதையும் விடாமல்
அனைத்தையும் அழித்து ஒழிக்கின்ற சமூகநலன் காக்கும் சுமூக மார்க்கமாகவும் தலைசிறந்த
கோட்பாடாகவும் திகழ்கிறது.
எந்தவொரு பிரச்சனைக்கும், சிக்கலுக்கும்
நிறைவான, நிலையான தீர்வை
இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வழங்குகிறது. தனிமனிதனும் சமூகமும் சீரும் சிறப்பும்
பெற்று எக்காலத்திலும் நலமுடன் வாழ இதன் வழிகாட்டுதல் தான் உகந்தவை எல்லா வகையிலும் மேன்மை மிக்கவை. இத்தகைய
சிறப்புமிக்க மார்க்கத்தில் வாழக்கூடிய நாம் அறியாமைக்குத் தாழிட்டுவிட்டு
அறிவிற்கு வேலை கொடுப்போம், இஸ்லாமியர்களாகவே வாழ்ந்து இஸ்லாமியர்களாகவே
மரணிப்போம்.
EGATHUVAM MAR 2017