Mar 29, 2017

அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்விகளும்

அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்விகளும்

மத்ஹபுகள் அறிவை மழுங்கடிக்கக் கூடியவை. அபின் போதை தலைக்கேறியவர்களைக் கூட அதிலிருந்து காப்பாற்றி, கரையேற்றி விடலாம். ஆனால் மத்ஹபு போதை தலைக்கேறியவர்களை, குர்ஆன் ஹதீஸ் என்ற பாதையை விட்டு மாறியவர்களை எளிதில் மாற்ற முடியாது. மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் உள்ளவர்களிடம் இந்தக் கருத்து புதையுண்டு விட்டதால் இத்தகையவர்கள் குர்ஆன் ஹதீசுக்கும், மனித இயற்கை உணர்வுகளுக்கும் எதிரான முரட்டுத் தனமான, மூர்க்கத்தனமான தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர். எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மார்க்கத்தைப் பற்றி, இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம் (அல்குர்ஆன் 30:30) என்று கூறுகின்றான்.

அப்படிப்பட்ட, ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான, மனித இயல்புக்கும் இயற்கை அமைப்புக்கும் இயைந்த ஓர் இனிய எளிய மார்க்கத்தை மிகக் கொடிய, கடின மார்க்கமாக பத்திரிகைகளும் பார்வையாளர்களும் காட்டுவதற்கு இந்த மத்ஹபுவாதிகள் காரணமாகி விட்டனர்.

இம்ரானா விவகாரத்தில் இப்படியொரு கடினப் போக்கைக் கடைப்பிடித்ததைத் தான் இங்கு குறிபிப்பிடுகின்றோம். இம்ரானா விவகாரத்தில் இந்த மவ்லவிமார்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்பு (?) நாடாளுமன்றத்தையே உலுக்குவதற்குத் தயாராக இருக்கின்றது என்றால் இவர்கள் சுய விருப்பத்தின் படி அளிக்கும் முரட்டுத்தனமான தீர்ப்புகள், வரட்டு வாதங்கள் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளன என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

தாரத்தைத் தாயாக மாற்றும் தாரக மந்திரம்

இம்ரானாவை அவருடைய மாமனார் அதாவது கணவனின் தந்தை கற்பழித்து விடுகின்றார். அல்லது கற்பழித்ததாகக் கூறப்படுகின்றது. இந்த விவகாரம் ஹனபி மத்ஹபின் அகில உலக மையம் என்று கூறப்படும் தேவ்பந்த் தாருல் உலூம் கல்லூரி உலமாக்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரி வருகின்றது.

கணவனின் தந்தை கற்பழித்து விட்டதால் இம்ரானாவுக்கும் அவளது கணவனுக்கும் இனி திருமண பந்தம் கிடையாது என தாருல் உலூம் தேவ்பந்த் தீர்ப்பை அல்ல, திருமண பந்தத்தைச் சுட்டெரிக்கும் தீப்பந்தத்தைக் கொளுத்தி விட்டிருக்கின்றது.

மாமனார் மருமகளிடம் உறவு கொண்டு விட்டதால் அவள் தனது கணவருக்கே தாயாகி விட்டாள். அதனால் தன்னைக் கற்பழித்த காமுகனான மாமனாரிடமே சேர்ந்து வாழ வேண்டும், அதாவது மருமகளை நிரந்தரமாக அடைவதற்கு அவளைக் கற்பழிப்பது தான் சிறந்த வழி என்ற தாரக மந்திரத்தையும் இந்தத் தீர்ப்பு உருவாக்கியுள்ளது.

தாருல் உலூம் தேவ்பந்த் வழங்கிய ஃபத்வாவுக்கும் இந்தத் தாரக மந்திரத்துக்கும் எவ்விதத் தார்மீக சம்பந்தமும் இல்லை. மாமனாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது கிராமப் பஞ்சாயத்து தானே தவிர தேவ்பந்த் மதரஸா அல்ல என்று தேவ்பந்திற்குக் காவடி தூக்கும் இங்குள்ள பக்த கோடிகள் சப்பைக்கட்டு கட்டி, பிரசுரங்களை  சுற்றுக்கு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கணவனின் தந்தையுடன் சேர்ந்து தான் வாழ வேண்டும் என்று தேவ்பந்தி மதரஸா ஃபத்வா கொடுக்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும், கிராமக் கட்டப்பஞ்சாயத்தினர் இவ்வாறு தீர்ப்பளிப்பதற்குக் காரணமாக அமைந்தது தேவ்பந்தின் ஃபத்வா தான். அதாவது தம்பதியர் சேர்ந்து வாழக் கூடாது என்று தேவ்பந்த் வழங்கிய அந்த மார்க்கத் தீர்ப்பு தான். எனவே இந்தப் பாவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறி தேவ்பந்த் தாருல் உலூம் தப்பித்துக் கொள்ள முடியாது. குர்ஆன் ஹதீஸைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ஹனபி மத்ஹபை முன்னால் நிறுத்தியது தான் இந்த நிலை தோன்றியிருப்பதற்குக் காரணம்.

தேவ்பந்த் தாருல் உலூம் ஃபத்வாவுக்குக் பக்காவாக வக்காலத்து வாங்கி அதே போன்ற தீர்ப்பை பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவும் வழங்கியுள்ளது.

மகளிருக்கு எதிரான மத்ஹபுகள்

இம்ரானாவைப் போல் ஆயிரக்கணக்கான பெண்களை தங்கள் கணவன்மார்களையும் பிள்ளைகளையும் விட்டு முத்தலாக் என்ற பெயரில் இந்த மத்ஹபுகள் கதறக் கதற பிரித்து அலைக்கழிக்கின்றன. மத்ஹபுகள் என்ற போர்வையில் மகளிர் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டு பரிதவிக்கின்றனர்? அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் மத்ஹபு சட்டங்கள் எவை என்பதை நாம் அடையாளம் காட்டவுள்ளோம்.

அது மட்டுமல்ல. மத்ஹபுகள் பெண்களை பாலியல் அடிப்படையில் எப்படியெல்லாம் போகப் பொருளாகச் சித்தரித்துக் காட்டுகின்றன? எப்படியெல்லாம் விபச்சாரத்தைத் தூண்டுகின்றன? என்பதை எடுத்துக் கூறி மத்ஹபுகளைத் தோலுரித்துக் காட்டவுள்ளோம்.

ஒரு கணவன் தன்னுடைய மனைவியை ஆத்திரத்தில் முத்தலாக் என்று கூறி விட்டார். பிறகு அதற்காக மிகுந்த வேதனைப் படுகின்றார். இந்நிலையில் இந்த விவகாரம் மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்கின்றது. கணவனும் மனைவியும் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து, காவல் ஆய்வாளரிடம், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றோம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இம்ரானாவுடைய வாழ்க்கையில் குறுக்கே வந்து நின்ற மாமனாரைப் போல் இங்கும் மாமனார் குறுக்கே வந்து நிற்கின்றார். மாமனாருக்கு தன் மகன் அந்தப் பெண்ணுடன் வாழ்வது பிடிக்கவில்லை. அவள் தன் மகனுடன் சேர்ந்து வாழக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார். அதற்கு மத்ஹபு அடிப்படையில் முத்தலாக்கைக் கையில் எடுத்துக் கொண்டு, தன் மகன் முத்தலாக் கூறி விட்டதால் இனி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று வாதிடுகின்றார்.

இந்த வழக்கு முல்லாக்களிடம் வந்த போது, தேவ்பந்த் ஆலிம்கள் ஹனபி மத்ஹபில் உறுதியாக இருந்தால் அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா? நாங்கள் ஷாபி மத்ஹபில் உறுதியானவர்கள் என்று கூறி அதை நிரூபிக்கும் வகையில், "முத்தலாக் கூறி விட்டதால் இருவரும் அறவே சேர்ந்து வாழ முடியாது. பிரிந்து தான் ஆக வேண்டும்'' என்று மாமனாருக்குச் சாதகமாக அந்தப் பெண்ணை கணவனிடமிருந்து பிரித்து விட்டனர். இது தொடர்பாக பெண் வீட்டினர் நம்மை அணுகி மார்க்கத் தீர்ப்பு கோரினர். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒரு தலாக் தான் நிறைவேறியுள்ளது. எனவே அவ்விருவரும் சேர்ந்து வாழலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு மகளிர் காவல் ஆய்வாளர் நேரடியாக நமது அலுவலகத்திற்கே வருகையளித்தார். அவரிடம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தலாக் பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

இதை இங்கே குறிப்பிடக் காரணம், இதுபோல் ஆயிரமாயிரம் பெண்களின் வாழ்க்கையைக் கருவறுத்தது இந்த முத்தலாக். இந்த முத்தலாக்கைத் தூக்கிப் பிடிப்பது மத்ஹபுகள் தான்.

பெண்களின் வாழ்க்கைக் கப்பலை நடுக்கடலில் முத்தலாக் என்ற ஓட்டையைப் போட்டு மூழ்கடிக்கும் கொடுமையை இந்த இதழ் விலாவாரியாக விவரித்து மத்ஹபுவாதிகளின் முகமூடியைக் கிழித்தெறிகின்றது.

இது போன்ற எண்ணற்ற கொடுமைகளை மத்ஹபுகளும் மத்ஹபுவாதிகளும் பெண்களுக்கு இழைத்து வருகின்றனர்.

உத்திரபிரதேசத்தில் நடந்த இம்ரானா விவகாரம் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பேசப் படுகின்றது. அதற்குக் காரணம் தேவ்பந்த் மதரஸாவின் மார்க்கத் தீர்ப்பு தான்.

ஏற்கனவே இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பழமை வாதம் என்று இஸ்லாத்திற்கு எதிராக தீ(ய)க் கருத்துக்களைக் கக்கிக் கொண்டி ருக்கும் செய்தி ஊடகங்களுக்கு இம்ரானா விவகாரம் ஒரு தீனியாக ஆனது.

இதற்கு செய்தி ஊடகங்களை ஒரேயடியாகக் குறை கூறி விடவும் முடியாது. வரம்பு கடந்து வாய் நீட்டிய வம்புக்கார செய்தி ஊடகங்களைத் தவிர்த்து நியாயமான விமர்சனங்களைச் செய்த ஊடகங்களை நாம் குறை சொல்ல முடியாது.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பது போல், இங்குள்ள முல்லாக்களிடம் குறையை வைத்துக் கொண்டு, மத்ஹபுகள் என்ற குப்பைகளை வைத்துக் கொண்டு நாம் ஊடகங்களைக் குறை கூறி அழுவதில் பயனில்லை.

செய்தி ஊடகங்களைக் குற்றம் சொல்வதை விட்டு விட்டு இங்குள்ள குப்பைகளைக் கொண்டு தொட்டியில் கொட்டும் பணியை நாம் செய்தாக வேண்டும்.

இப்போது ஒரு கேள்வி எழலாம். சில அமைப்புகள் இம்ரானாவின் ஊருக்குச் சென்று அந்தக் குடும்பத்தாரிடம் பேட்டி கண்டு, அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் பத்திரிகைகள் தான் திரித்து செய்திகளை வெளியிட்டு விட்டதாகவும் கூறியுள்ளன. மேலும் இம்ரானாவே தொலைக்காட்சிப் பேட்டிகளில், தன் மாமனார் தன்னைக் கற்பழிக்கவில்லை என்று கூறியுள்ளாரே! இப்போது இந்த விவாதம் தேவை தானா? என்பது தான் அந்தக் கேள்வி.

தேவை புலன் விசாரணை அல்ல தெளிவான தீர்ப்பு தான்

இங்குள்ள விவகாரம் இம்ரானா கற்பழிக்கப்பட்டாளா? இல்லையா? என்று புலன் விசாரணை நடத்துவதல்ல. மாறாக இம்ரானா என்ற பெண் கற்பனைப் பாத்திரமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஒரு மாமனார் மருமகளை, அதாவது மகனின் மனைவியைக் கற்பழித்து விட்டால் அதற்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? இதற்கு ஹனபி மத்ஹபின் சட்டம் என்ன தீர்ப்பு வழங்குகின்றது? என்பது தான் இங்குள்ள விவகாரம்.

இந்த விவகாரத்திற்கு, மாமனார் மருமகளைக் கற்பழித்ததால் இனி அந்தப் பெண் தனது கணவனுடன் சேர்ந்து வாழ முடியாது, அவளுடன் உறவு கொள்வது தடுக்கப்பட்ட காரியம் என்று ஹனபி மத்ஹபு நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதைத் தான் இம்ரானா விவகாரத்தில் தேவ்பந்த் மதரஸா தன் ஃபத்வாவில் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தையும் சமர்ப்பித்துள்ளது.

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.

(அல்குர்ஆன் 4:22)

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள தன்கிஹூ என்ற வார்த்தையின் வேர்ச் சொல் நிகாஹ் என்பதாகும். அதற்கு அகராதியில் ஒப்பந்தம் என்பது மட்டும் பொருளல்ல, உடலுறவையும் குறிக்கும் என்றெல்லாம் இவர்கள் விளக்கம் கூறியுள்ளனர். இந்த விளக்கம் சரியா? இந்த வசனத்தில் நிகாஹ் என்பது எதைக் குறிக்கின்றது? என்பதற்கான விளக்கத்தையும், மத்ஹபு நூல்களில் பெண்களைப் பற்றி இன்னும் என்னென்ன கேலிக் கூத்தான, அசிங்கமான சட்டங்கள் எல்லாம் கூறப்பட்டுள்ளன? என்பதையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

EGATHUVAM JUL 2005