Mar 16, 2017

ஆஷூரா நோன்பு

ஆஷூரா நோன்பு

அல்லாஹ்வுடைய மாதமாகிய புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்பு தான் முஹர்ரம் பத்தாவது நாள் நோற்கின்ற ஆஷூரா நோன்பாகும். ஆஷூரா என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் பத்தாவது என்று பொருளாகும். முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் இந்நோன்பு வைக்கப்படுவதால் இதற்கு ஆஷூரா நோன்பு அதாவது பத்தாவது நாள் நோன்பு என்று பெயர் வைக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1592

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறாôர்கள்:
அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1901

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன்?

நபி (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்தவர்கள் திருவிழாக்களின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்களையும் அவர்கள் திருவிழாவாக, கந்தூரியாகக் கொண்டாட வேண்டும் என்று கருதிய நாட்களையும் அது நமக்கும் சிறப்பிற்குரியதாக இருந்தால் அந்த நாளில் நோன்பு நோற்பதைத் தான் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.

யூதர்களில் ஒருவர் உமர் (ரலி)யிடம், "அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டி ருப்போம்''என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அது எந்த வசனம்?'' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்: "இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக் கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன் (5:3)என்ற திரு வசனம் தான் அது)''

அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவ்வசனம் எந்த நாளில், எந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெரு வெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ்வசனம் இறங்கியது)'' என்றார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: புகாரி (45)

யூதர்கள் பெருநாளாக கொண்டாடி யிருப்போம் என்று கருதிய அரஃபா நாளன்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு நோன்பு நோற்பதை வழிகாட்டி யிருக்கிறார்கள். அது போன்று யூதர்கள், ஆஷூரா நாளையும் திருவிழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆஷூரா நாளை யூதர்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: புகாரி 2005, 2006

கைபர் வாசிகளான (யூதர்கள்) ஆஷூரா நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர். இன்னும் அதனைப் பெரு நாளாகவும் கொண்டாடினார்கள். அந்நாளில் அவர்களுடைய பெண்களுக்குத் தங்களுடைய நகைகளையும் தங்களுக்குரிய அழகூட்டும் ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு வையுங்கள் என (எங்களுக்குக்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
நூல்: முஸ்லிம் 1913

ஆஷூரா நாளைப் பெருநாளாகக் கொண்டாடுவது யூதர்களுடைய கலாச்சாரமாகும். இத்தகைய யூதர்களுடைய கலாச்சாரம் நம்முடைய இஸ்லாமியர்களையும் பீடித்து இன்றைக்கு இஸ்லாமிய கலாச்சார மாகவே மாறி விட்டது.

முஸ்லிம்கள் ஆஷூரா நாளில் முஹர்ரம் பண்டிகை என்ற பெயரில் அதனைப் பெருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். அத்தகைய வழி கேடுகளை விட்டும் சமுதாயத் தவர்களை எச்சரிக்கை செய்வது அறிந்தவர்களின் மிக முக்கியக் கடமையாகும்.

ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்''என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3397

நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.

 

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
நூல்: புகாரி 2006

நாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறோம். அதனை அன்றே நாம் மறந்தும் விடுகின்றோம். நாம் பெரிதாகச் செய்த பாவங்களுக்காக மட்டும் தான் பாவமன்னிப்புத் தேடுகின்றோம். இதனால் சிறு பாவங்கள் அப்படியே கூடிக் கொண்டே வருகின்றன.

இது போன்ற சிறு பாவங்களை நாம் செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹ் மன்னிக்கின்றான். இப்படிப்பட்ட நல்லறங்களில் ஒன்று தான் ஆஷூரா நோன்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1976

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977

அல்லாஹ் அளவற்ற அருளாளன் என்பதற்கு மேற்கண்ட செய்தியும் ஒரு சான்றாகும்.

யூதர்களுக்கு மாறு செய்வோம்

 

ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று,நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால்,ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1916, 1917

நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

10வது நாளும் 11வது நாளும் நோன்பு நோற்கலாமா?

சிலர் 9,10 அல்லது 10,11 வது நாள் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: அஹ்மத் 2047, பைஹகீ

இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

முஹர்ரம் 9,10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும். எனவே, 10,11வது நாள் நோன்பு நோற்பது கூடாது.

குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தல்
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் இது போன்ற சுன்னத்தான நோன்புகளில் குழந்தைகளுக்கும் நோன்பு நோற்க பயிற்சி அளித்துள்ளனர்.

ருபய்யிவு பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் துôதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் 10வது) நாளன்று காலையில் மதினா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி (இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர் தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள்.

நாங்கள் அதன் பின்னர், அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் அல்லாஹ் நாடினால் நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும் போது, நோன்பு திறக்கும் வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
நூல்: முஸ்லிம் 1919

சிறப்பு மிக்க இந்த ஆஷூரா நோன்பை நோற்று இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!


EGATHUVAM FEB 2005