Mar 22, 2017

தொழுகையின் சட்டதிட்டங்கள் (பி. ஜைனுல் ஆபிதீன்) - PART 11 உளூவை நீக்குபவை

தொழுகையின் சட்டதிட்டங்கள்  (பி. ஜைனுல் ஆபிதீன்) -   PART 11 உளூவை நீக்குபவை

இரத்தம் வெளியேறுதல்

உளூச் செய்த பின்னர் உடலிலிருந்து இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

இரத்தம் வெளிப்படுவதால் உளூ நீங்கும் எனக் கூறுவோர், "இரத்தம் நஜீஸ் எனும் அசுத்தமாகும். எனவே மலஜலத்தைப் போன்றே அசுத்தமான இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்கி விடும்'' என்று வாதிடுகின்றனர்.

இரத்தம் அசுத்தமானது என்ற காரணத்தைக் கூறி இவ்வாறு வாதிடுவோர் இரத்தம் அசுத்தமானது என்பதற்கு சில சான்றுகளையும் முன் வைக்கின்றனர்.

திருக்குர்ஆனில் 2:173, 5:3, 6:145, 16:115 ஆகிய வசனங்களில் தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதோருக்குப் படையல் செய்யப் பட்டவை ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ளான். இந்த நான்கில் இரத்தத்தையும் அல்லாஹ் குறிப்பிடுவதால் இரத்தம் அசுத்தமானது என்பதில் சந்தேகமில்லை என்பது இவர்களின் வாதம்.

இந்த வாதம் ஏற்புடையது தானா? என்பதை முதலில் ஆராய்வோம்.

இந்த வசனங்கள் எவற்றை உண்ணக் கூடாது என்பதைத் தான் கூறுகின்றன. மேற்கண்ட நான்கும் அசுத்தமானவை என்று இவ்வசனங்கள் கூறவில்லை.

உண்பதற்குத் தடை செய்யப் பட்டால் அது அசுத்தமாகத் தான் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுவது தான் இந்த வாதத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.

உண்பதற்குத் தடை செய்யப் பட்ட அனைத்தும் அசுத்தமானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

விஷப் பற்கள் உடைய பிராணிகளை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். பூனைக்கு விஷப் பற்கள் உள்ளதால் அதை உண்ணக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம்.

உண்பதற்குத் தடை செய்யப் பட்ட பூனை தண்ணீரில் வாய் வைத்து விட்டால் அந்தத் தண்ணீர் அசுத்தமாகி விடுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கும் போது, "பூனைகள் அசுத்தமானவை அல்ல! அவை உங்களைச் சுற்றி வரக் கூடியவை'' என்று விடையளித்தார்கள். (திர்மிதீ 85, நஸயீ 67, அபூதாவூத் 68, இப்னுமாஜா 361, அஹ்மத் 21490, 21535, 21586, முஅத்தா 38, தாரமீ 729)

பூனை வாய் வைத்த தண்ணீர் என்ற தலைப்பில் முன்னரும் இந்த ஹதீஸை நாம் குறிப்பிட்டுள்ளோம்.

உண்பதற்குத் தடை செய்யப் பட்டவைகளில் ஒன்றாக உள்ள பூனைகள் அசுத்தமானவை அல்ல என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே அறிவித்து விட்டனர். எனவே உண்பதற்குத் தடை செய்யப் பட்ட அனைத்தும் அசுத்தமானவை என்பது ஏற்க முடியாததாகும்.

மனிதனின் உயிரைப் பறித்து விடக் கூடிய கொடிய விஷம் உண்பதற்குத் தடை செய்யப் பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். இதன் காரணமாக கொடிய விஷம் அசுத்தமானது என்று கூற முடியாது. கொடிய விஷத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தொழுதால் தொழுகை நிறைவேறுமா? என்று கேள்வி கேட்டால் நிறைவேறும் என்று இவர்கள் விடையளிக்கிறார்கள். விஷம் அசுத்தம் என்று இவர்கள் கருதினால் அசுத்தத்தைச் சுமந்து கொண்டு தொழக் கூடாது என்று இவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும்.

வட்டி வாங்குவது மார்க்கத்தில் தடுக்கப் பட்டுள்ளது. வட்டியாக வாங்கப் பட்டது அசுத்தம் என்பது இதற்குக் காரணம் அல்ல! அது சுரண்டல் என்பதே இதற்குக் காரணமாகும்.

திருடிச் சாப்பிட மார்க்கத்தில் தடை உள்ளது. திருடப்படும் பொருள் ஹலாலாக இருந்தாலும் திருடிச் சாப்பிடக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. அசுத்தம் என்பதற்காக இந்தத் தடை விதிக்கப் படவில்லை. சமூகப் பாதுகாப்பு கருதியே தடை செய்யப் பட்டுள்ளது.

ஆண்கள் பட்டாடை அணிவதற்குத் தடை செய்யப் பட்டுள்து. அசுத்தம் என்பது இதற்குக் காரணம் இல்லை. அவ்வாறு இருந்தால் அது பெண்களுக்கும் தடுக்கப் பட்டிருக்கும்.

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் உள்ளன.

எனவே இரத்தம் தடை செய்யப்பட்ட பொருள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதன் காரணத்தால் அது அசுத்தமான பொருள் என்று கூறுவது தவறாகும்.

இவர்கள் ஆதாரமாகக் காட்டும் வசனங்களில் 6:145 வசனமும் உள்ளது. இந்த வசனத்தில் தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றி ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட இறைவன், "அசுத்தமானது' என்ற அடைமொழியை பன்றிக்கு மட்டும் பயன்படுத்தியுள்ளான். பன்றியின் இறைச்சியைக் குறிப்பிட்டு விட்டு, "அது அசுத்தமானது' என்று கூறுகின்றான். "அவை அசுத்தமானவை' என்று பன்மையாகக் கூறவில்லை.

"தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப் பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 6:145)


சில தமிழ் மொழி பெயர்ப்புகளில் பன்றி, இரத்தம், தாமாகச் செத்தவை ஆகிய மூன்றும் அசுத்தமானவை என்ற கருத்தைத் தரும் வகையில், "அவை அசுத்தமானவை'' என்று குறிப்பிட்டுள்ளனர். இது மிகப் பெரிய தவறாகும். மூலத்தில், "ஃப இன்னஹூ' என்று ஒருமையாகத் தான் குறிப்பிடப் பட்டுள்ளது.

இப்னு கஸீர் பாகம் 2 பக்கம் 8, குர்துபீ பாகம் 2, பக்கம் 228 மற்றும் எல்லா விரிவுரைகளிலும் அசுத்தமானது என்பது பன்றியை மட்டும் தான் குறிக்கிறது எனக் குறிப்பிடப் பட்டுள்ளன. பன்றியின் இறைச்சி அசுத்தமானது என்று பொருள் கொள்வதா? முழுமையாக பன்றி அசுத்தமானது என்று பொருள் கொள்வதா? என்பதில் மட்டுமே கருத்து வேறுபாடு உள்ளது.

6:145 வசனத்தைச் சிந்தித்தால் இரத்தம் அசுத்தமானது இல்லை என்று தான் முடிவு செய்ய முடியும். தடை செய்யப்பட்ட மூன்று பொருள்களைக் குறிப்பிட்ட இறைவன் அவற்றில் ஒன்றை மட்டும் அசுத்தம் என்று கூறுகின்றான் என்றால் மற்ற இரண்டும் அசுத்தம் என்பதற்காகத் தடுக்கப் படவில்லை என்பது தான் பொருள்.


எனவே இரத்தம் அசுத்தமானது என்ற காரணத்தைக் கூறி அதனால் உளூ நீங்கி விடும் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.

இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்கும் என்று வாதிடுவோர் மற்றொரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அபூஹுபைஷின் மகள் ஃபாத்திமா வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு தொடர் உதிரப் போக்கு உள்ளது. நான் ஒரு நாளும் சுத்தமாவதேயில்லை. எனவே நான் தொழுகையை (எப்போதும்) விட்டு விடலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கூடாது! அது நோயின் காரணமாக வெளிப்படும் இரத்தமாகும். மாதவிடாய் இரத்தம் அல்ல! எனவே மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! மாதவிடாய் நின்றதும் இரத்தத்தைக் கழுவி விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து தொழு!'' என்று கூறினார்கள்.
(புகாரி 228)

மற்றொரு அறிவிப்பில் உனக்கு ஏற்கனவே மாதவிடாய் வந்த நாட்களின் அளவுக்கு தொழுகையை விட்டு விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

(புகாரி 325)

இந்த ஹதீஸிலிருந்து இவர்கள் எவ்வாறு வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வோம்.

ஒரு பெண்ணுக்கு அன்றாடம் இரத்தம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இதை மாதவிடாய் என்று முடிவு செய்து தொழுகையை விட்டுவிடலாமா? என்ற கேள்விக்குத் தான் மேற்கண்ட ஹதீஸில் விடையளிக்கப் பட்டுள்ளது.

இத்தகைய பெண்களுக்கு, இந்த நோய்க்கு ஆளாவதற்கு முன்னால் எத்தனை நாட்கள் மாதவிடாய் வந்ததோ அத்தனை நாட்களை இப்போதும் மாதவிடாய் எனக் கருதிக் கொண்டு மற்ற நாட்களில் தொழ வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தருகின்றார்கள்.

இவ்வாறு விளக்கம் தரும் போது, "ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து விட்டுத் தொழ வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு தடவை உளூச் செய்து விட்டால் அது நீங்கினால் தான் மீண்டும் உளூச் செய்ய வேண்டும். ஒரு தடவை உளூச் செய்து விட்டு அது நீங்காமல் இருந்தால் எத்தனை தொழுகைகளையும் நாம் தொழலாம்.

அவ்வாறிருக்கும் போது, "ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து விட்டுத் தொழு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

இரத்தம் வெளிப்படுவதால் அப்பெண்களின் உளூ நீங்கி விடுவதால் தான் அடுத்த தொழுகைக்கு மீண்டும் உளூச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.

உளூச் செய்த உடனேயே அந்தப் பெண்களின் உளூ நீங்கி விடுகின்றது. ஆனாலும் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப் படுத்த மாட்டான் என்ற அடிப்படையில் அந்த நிலையில் ஒரு தொழுகையைத் தொழ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கின்றனர். அடுத்த தொழுகையைத் தொழுவதாக இருந்தால் மீண்டும் உளூச் செய்தாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இரத்தம் வெளிப்படுவதால் உளூ நீங்காது என்றால் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் என்று அவர்கள் கூறியதிலிருந்து இரத்தம் வெளிப்படுவது உளூவை நீக்கி விடும் என்று அறியலாம் என்பது இவர்களின் வாதம்.

இந்த வாதம் ஏற்புடையது தான் என்றாலும் இதற்கு மாற்றமான கருத்தைத் தரும் ஹதீசும் உள்ளது. அதையும் பார்த்து விட்டு இரண்டுக்கும் பொதுவான விளக்கத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

"தாதுர் ரிகாவு' எனும் போருக்காக நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது (முஸ்லிம்) ஒருவர், இணை வைப்பவர்களைச் சேர்ந்த ஒருவரின் மனைவியை (அப்போரில்) தாக்கி விட்டார். அவளுடைய கணவன் வெளியூர் சென்றிருந்தான். அவன் ஊர் வந்து தனது மனைவி தாக்கப் பட்டதை அறிந்ததும், "முஹம்மதுடைய தோழர்களின் இரத்தம் சிந்தாமல் நான் ஓய மாட்டேன்' என்று சத்தியம் செய்தான்.

போரை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் தோழர்களையும் அவன் பின்தொடர்ந்து வந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தோழர்களும் ஒரு இடத்தில் இளைப்பாறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இன்றிரவு நமக்காகக் காவல் காப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். முஹாஜிர்களில் ஒருவரும் அன்சார்களில் ஒருவரும் முன் வந்தனர். "இந்தக் கணவாயின் நுழைவு வாயிலில் நீங்கள் இருவரும் காவல் இருங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இருவரும் கணவாயின் நுழைவாயிலுக்குச் சென்றனர். "இரவின் முதல் பாதியில் காவல் காப்பது உமக்கு விருப்பமா? இரண்டாம் பகுதி விருப்பமா?'' என்று முஹாஜிரிடம் அன்சார் கேட்டார். இரண்டாம் பகுதியை முஹாஜிர் தேர்வு செய்து கொண்டு முதல் பாதியில் தூங்கினார். முதல் பாதியில் காவல் காத்த அன்சார் எழுந்து தொழுகையில் ஈடுபட்டார்.

நபிகள் நாயகத்தைப் பின்தொடர்ந்து வந்த அப்பெண்ணின் கணவன் அங்கே வந்தான். ஒரு மனிதரின் தலையை அவன் கண்டவுடன் அவர் தான் அந்தக் கூட்டத்தின் கண்காணிப்பாளர் என்று நினைத்துக் கொண்டு அவர் மீது அம்பெய்து துல்லியமாகத் தாக்கினான். அன்சார் தோழர் அந்த அம்பைப் பிடுங்கி எறிந்து விட்டு தொழுகையைத் தொடர்ந்தார். இவ்வாறு மூன்று தடவை அவன் அம்பெய்தான். மூன்று தடவையும் அம்பைப் பிடுங்கி எறிந்து விட்டு அன்சாரித் தோழர் தொழுகையைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்த தோழர் விழித்து விட்டார். அவரைக் கண்டதும் அனைவரும் விழித்து விட்டதாக எண்ணிய அம்மனிதன் ஓடி விட்டான். அன்சாரியின் உடலில் இரத்தம் வழிந்து கொண்டிருந்ததைக் கண்ட முஹாஜிர் தோழர், "அவன் முதல் அம்பை எய்த போதே என்னை எழுப்பியிருக்க மாட்டீரா?'' என்று கடிந்து கொண்டார். நான் ஒரு அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். அதை முடிக்காது தொழுகையை முறிக்க நான் விரும்பவில்லை'' என்று விடையளித்தார்.

இந்த ஹதீஸ் இப்னுகுஸைமா பாகம் 1 பக்கம் 24, இப்னு ஹிப்பான் பாகம் 3 பக்கம் 375, ஹாகிம் பாகம் 1 பக்கம் 258, பைஹகீ பாகம் 1 பக்கம் 140, பாகம் 9 பக்கம் 150, தாரகுத்னீ பாகம் 1 பக்கம் 223, முஸ்னத் அஹ்மத் 14177, அபூதாவூத் 170 ஆகிய நூற்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.

இரத்தம் வெளிப்படுவது உளூவை நீக்கும் என்றால் அந்தத் தோழர் தொடர்ந்து தொழுதிருக்க முடியாது. இரத்தம் வெளிப்படுவது உளூவை நீக்காது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இது நபித்தோழரின் செயல் தான். இந்தச் சம்பவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று கூற முடியாது என்று சில அறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

அந்த வாதம் ஏற்க முடியாததாகும். ஏனெனில் அவ்விருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப் படியே காவல் இருந்தார்கள். தன்னால் காவலுக்கு நிறுத்தப் பட்டவர் காயம் பட்டிருக்கும் போது, பாதுகாப்பு சம்பந்தப் பட்ட இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிவிக்கப் பட்டிருக்கும் என்பது சாதாரணமாகவே விளங்கும். அவர் இரத்தம் வடியும் நிலையில் தொழுதது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் சுட்டிக் காட்டியிருப்பார்கள். சுட்டிக் காட்டியிருந்தால் அது நமக்கு அறிவிக்கப் பட்டிருக்கும். அவ்வாறு எந்த அறிவிப்பும் கிடைக்காததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவத்தை சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் நமக்கு அறிவிக்கவில்லை. அவர்களுடன் போரில் கலந்து கொண்ட ஜாபிர் (ரலி) தான் அறிவிக்கின்றார். அவ்விருவரும் நபிகள் நாயகத்திடமும் சக தோழர்களிடமும் தெரிவித்திருப்பதால் தான் இதை ஜாபிர் (ரலி) அறிவித்திருக்க முடியும்.

எனவே இரத்தம் வெளிப்பட்டால் உளூவும் நீங்காது. தொழுகையும் பாதிக்காது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்தச் செய்தியும், உதிரப் போக்குடைய பெண்ணைக் குறித்த செய்தியும் முரண்பட்ட கருத்தைத் தருவது போல் தோற்றம் தருகின்றன. ஆயினும் இவ்விரண்டும் முரண்படாத வகையில் இரண்டுக்கும் பொதுவான விளக்கத்தை நம்மால் கண்டறிய இயலும்.

உதிரப் போக்குடைய பெண்ணின் இரத்தம் அசுத்தங்கள் வெளியாகும் பாதையில் வருகின்றது. அன்சாரித் தோழரின் இரத்தம் மலஜலப் பாதையிலிருந்து வெளிப்பட்டதல்ல. எனவே மலஜலம் வெளிப்படும் பாதை வழியாக இரத்தம் வெளிப்பட்டால் அப்போது உளூ நீங்கும். அவ்வாறு இல்லாமல் மூக்கு உடைந்து இரத்தம் வெளிப்பட்டாலோ, பற்கள் உடைவதால் இரத்தம் வெளிப்பட்டாலோ, காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வெளிப்பட்டாலோ, புண்களிலிருந்து இரத்தம் வெளிப்பட்டாலோ, இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்தம் வெளிப்பட்டாலோ, இரத்தம் சோதிப்பதற்காக இரத்தம் எடுக்கப் பட்டாலோ உளூ நீங்காது.

இவ்வாறு புரிந்து கொண்டால் இரண்டு ஹதீஸ்களும் கூறுகின்ற சட்டத்தை நாம் மதித்தவர்களாவோம். இவ்வாறு புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் இந்த ஹதீஸ்களும் அமைந்துள்ளன.

இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்கும் எனக் கூறுவோர் வேறு சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். அவை அனைத்துமே பலவீனமானவையாக அமைந்துள்ளன.

யாருக்காவது வாந்தி அல்லது பித்த வாந்தி அல்லது மூக்குடைந்து இரத்தம் வெளிப்பட்டால் அல்லது மதீ வெளிப்பட்டால் அவர் தொழுகையை முறித்து விட்டு உளூச் செய்து மீண்டும் தொழ வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னுமாஜா 1211 ஹதீஸ் கூறுகின்றது.

இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் அறிவிக்கும் இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதையும் அதற்கான காரணத்தையும் சென்ற இதழில் நாம் விளக்கியுள்ளோம்.

மூக்குடைந்து இரத்தம் வெளிப்பட்டால் தொழுகையை முறித்து விட வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ் பைஹகீ பாகம் 2, பக்கம் 255லும், தாரகுத்னீ பாகம் 1, பக்கம் 154லும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீசும் முந்தைய ஹதீஸில் இடம் பெற்ற இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் வழியாகவே அறிவிக்கப் படுகின்றது.

இவர் ஹிஜாஸ்வாசிகள் வழியாக அறிவிப்பவை ஏற்கப்படுவதில்லை என்பதைச் சென்ற இதழில் விளக்கியுள்ளோம். இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் என்ற ஹிஜாஸ்வாசி வழியாகவே இவர் அறிவித்துள்ளார்.

ஒரு மனிதருக்கு மூக்குடைந்த போது புதிதாக மீண்டும் உளூச் செய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் ஒரு ஹதீஸ் உள்ளது. இது தாரகுத்னீ பாகம் 1, பக்கம் 156ல் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதை அபூகாலித் அல்வாசிதி என்பார் அறிவிக்கின்றார். இவர் பெரும் பொய்யர் என்று அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் முயீன் ஆகியோர் விமர்சனம் செய்ததாக இந்த ஹதீஸின் அடியில் தாரகுத்னீயே குறிப்பிட்டுள்ளார். எனவே இதுவும் ஆதாரமாக ஆகாது.

உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது மூக்கிலிருந்து இரத்தம் வந்தாலோ, வாந்தி எடுத்தாலோ தொழுகையை முறித்து விட்டு உளூச் செய்து விட்டு, விட்டதிலிருந்து முழுமைப்படுத்தட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ள ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். தாரகுத்னீ பாகம் 1 பக்கம் 155லும், தப்ரானியின் கபீர் பாகம் 11 பக்கம் 165லும் இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதை சுலைமான் பின் அர்கம் என்பார் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதே கருத்தைக் கூறும் மற்றொரு ஹதீஸ் தாரகுத்னீ பாகம் 1 பக்கம் 156ல் உமர் பின் ரபாஹ் வழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இவரும் பலவீனமானவர். பெரும் பொய்யர்.

அபூபக்ர் அத்தாஹிரி என்பார் அறிவிப்பதாக மற்றொரு ஹதீஸ் தாரகுத்னீ பாகம் 1, பக்கம் 157ல் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவரும் பலவீனமானவர்.

இந்தக் கருத்தில் எந்தவொரு ஹதீசும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை. பொய்யர்களாலும் பலவீனர்களாலும் அறிவிக்கப்படும் இத்தகைய செய்திகளை நாம் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இதுபோல் இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்காது என்று வாதிடுவோரும் பலவீனமான சில ஹதீஸ்களை முன் வைத்துள்ளனர். இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்காது என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் உறுதிப் படுத்தப்பட்டு விட்டதால் அதுவே போதுமானதாகும்.

உமர் (ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட சுப்ஹ் தொழுதார்கள். (பைஹகீ, பாகம் 1, பக்கம் 357)

முஸ்லிம்கள் (ஸஹாபாக்கள்) காயங்களுடன் தொழுபவர்களாக இருந்தனர் என்று ஹஸன் பஸரீ கூறியுள்ளார். இது புகாரியில் உளூ அத்தியாயத்தில் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.

இவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர்பில்லாத செய்தியாக உள்ளதால் தனி ஆதாரமாக ஆகாது என்றாலும் நபிவழியில் நிரூபணமான சட்டத்தை மேலும் உறுதிப் படுத்தக் கூடியதாக உள்ளது.

உமர் (ரலி) சுப்ஹ் தொழுதது நபித்தோழர்கள் முன்னிலையில் நடந்ததாகும். எந்த நபித்தோழரும் இதை ஆட்சேபணை செய்யவில்லை என்பதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்காது என்பது அனைவருக்கும் தெரிந்த சாதாரண சட்டமாக இருந்துள்ளது என்பதை அறியலாம்.

உளூவை நீக்கும் காரியங்கள் இன்னும் என்னென்ன உள்ளன என்பதை அடுத்த இதழில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

EGATHUVAM MAR 2004