Apr 3, 2017

அறிவியல் அற்புதங்கள் 1 - அற்பத் தேனீயின் அற்புத ஆட்சி

அறிவியல் அற்புதங்கள் 1 - அற்பத் தேனீயின் அற்புத ஆட்சி
எம். ஷம்சுல்லுஹா

பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!

அல்குர்ஆன் 6:38

என்று அல்லாஹ் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து தமது இறக்கைகள் மூலம் பறந்து செல்லும் தேனீக்கள் உண்மையில் ஒரு வியக்கத்தக்க சமுதாயம் தான். மனிதன் உற்று நோக்க வேண்டிய உன்னத சமுதாயம்.

அறிவியல் அடிப்படையில் தேனீ பூச்சியினமாக இருந்தாலும் திருக்குர்ஆனின் இந்த வசனம், தரையில் வாழ்வன, ஆகாயத்தில் பறப்பன என்ற ரீதியில் தான் பிரித்துக் கூறுகின்றது. அந்த அடிப்படையில் ஆகாயத்தில் பறக்கும் இனமான தேனீ என்ற சமுதாயத்தைப் பற்றி நமது பார்வையைச் செலுத்துவோம்.

நாட்டுக்குள் ஒரு குடியாட்சி

ஒரு நாடு என்றால் மக்கள் வாழ்வர். அம்மக்களுக்கென்று ஓர் ஆட்சி இருக்கும். அதை ஆள்வதற்கு ஓர் அரசன் அல்லது அரசி அல்லது ஆட்சித் தலைவர் இருப்பார். அவருக்கென்று அதிகாரம் இருக்கும். அதிகாரிகள், அலுவலர்கள் இருப்பார்கள். நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு இராணுவ வீரர்கள் இருப்பார்கள். உள்நாட்டு விவகாரங்களைக் கவனிப்பதற்குத் தனி அதிகாரிகள், களப்பணியாற்றும் பணியாளர்கள் இருப்பார்கள்.

ஆட்சித் தலைவருக்கென்று கோட்டை, கொத்தளம் இருக்கும். அந்தத் தலைமைச் செயலக செங்கோட்டையிலிருந்து அவர் ஆட்சி செய்து கொண்டிருப்பார். ஆட்சித் தலைவர் தன் நாட்டைக் காப்பதற்காக ஆயுதங்களும் வைத்திருப்பார். போர் வீரர்களும் போர்க் கருவிகளைப் பெற்றிருப்பார்கள்.

அரசாங்கம் என்று ஒன்று இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான கருவூலங்களையும், மக்களுக்குத் தேவையான உணவுகளையும் காலம் காலம் காக்கின்ற உணவுக் களஞ்சியங்கள், நிதியாதாரங்களைக் காக்கின்ற வங்கிகள் போன்றவற்றை அந்த அரசாங்கம் தன்னகத்தே கொண்டிருக்கும்.

இதுவெல்லாம், தான் கண்டிருக்கும் சமூகக் கட்டமைப்பு என்று நாட்டுக்குள் வாழும் மனித சமுதாயம் தன்னைத் தானே மெச்சிக் கொண்டிருக்கின்றது. அடுக்கடுக்கான ஆட்சிக் கூட்டமைப்புகளை எண்ணிப் பார்த்து மனிதன் பெருமையடைந்து கொள்கிறான்.

கூட்டுக்குள் ஒரு குடியாட்சி

ஆனால் அல்லாஹ்வின் இந்த அற்புதப் படைப்பான தேனீயானது, மனிதன் கொண்டிருக்கும், இப்போது புதிது புதிதாகக் கண்டிருக்கும் நிர்வாக சீராட்சி, சிறப்பாட்சியை என்றோ கண்டிருக்கின்றது.

ஆட்சியின் அலுவல்களை, அதற்கான அமைச்சகங்களைப் பிரித்துப் பணியாற்றும் இந்த அற்புதக் கலையை தேனீக்கள் தாம் வாழ்கின்ற கூட்டுக்குள் கொண்டிருக்கின்றன. தேனீக்களின் கூட்டு வாழ்க்கைக்குள் கொஞ்சம் நாம் உள்ளே போய் வந்தால் இந்த உண்மை நமக்குப் புரியும்.

தேனீக்களின் ராணி

தேனீக்களின் இந்தச் சமுதாயத்திற்கு ராணி இருக்கின்றது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை அன்றே கூறியிருக்கின்றார்கள்.

"மழை பொழியுமாறு தஜ்ஜால் வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும். முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது முளைப்பிக்கும். பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள். பாழடைந்த இடத்திற்குச் சென்று, "உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்து'' என்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களின் ராணிகள் போன்று அவனைப் பின் தொடரும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூல்: முஸ்லிம் 5228

இந்த ஹதீஸில் யஆஸிபி நஹ்ல் - தேனீக்களின் ராணிகள் என்ற வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

தேனீக்கள் (கிளம்புவது) போல்... என்று சொல்லாமல், தேனீக்களின் ராணிகள் (கிளம்புவது) போல்... என்று குறிப்பிடுகின்றார்கள்.

ராணி தேனீக்கள் கிளம்பி விட்டால் மற்ற தேனீக்களும் கிளம்பி விடுகின்றன. ராணி தேனீக்கள் கிளம்பவில்லை என்றால் மற்ற தேனீக்கள் கிளம்புவதில்லை. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் என்பதை நாம் விளங்க முடிகின்றது.

இன்றைய அறிவியல் உலகம் இதை உறுதி செய்கின்றது.

ராணித் தேனீயின் பணி

ராணித் தேனீயின் தலையாய பணி நிர்வாகம் தான். உடையவன் இல்லை என்றால் ஒரு முழம் கட்டை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஒரு காரியம் உருப்பட வேண்டும் என்றால் உடையவன் இருக்க வேண்டும். தான் இருப்பதாக அவன் உணர்த்திக் கொண்டு இருக்க வேண்டும்.

வீட்டு நிர்வாகத்தில் வீட்டுத் தலைவன், தான் இருப்பதை பிள்ளைகளிடம் உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் ஆட்டம் தாங்க முடியாமல் வீடு அமர்க்களப்படும். இது போல் ஒரு நாட்டுத் தலைவன், தான் இருப்பதாக உணர்த்த வேண்டும். அப்போது தான் நாடு உருப்படும்.

சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் மாபெரும் ஆட்சியை வழங்கியிருந்தான். ஜின்களும் அவர்களுடைய ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. பைத்துல் மக்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டிருந்த போது சுலைமான் நபியவர்கள் இறந்து விடுகின்றார்கள். அவர் இறந்து விட்டது தெரியாமலேயே ஜின்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:11-14

தங்களைக் கண்காணிக்க எவருமில்லை என்றிருந்தால் பணியாளர்கள் பணி புரிய மாட்டார்கள் என்ற உண்மையை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது. இந்தக் கண்காணிப்புப் பணியைத் தான் ராணித் தேனீ மிக அற்புதமாகத் தன் கூட்டுக்குள் செய்கிறது.

மக்களைக் கட்டுப்படுத்த மன்னர்களிடம் அதிகாரம் இருக்கின்றது. இந்த ராணியிடம் தனக்குக் கீழுள்ள தேனீக்களைக் கட்டுப்படுத்த, ஆட்சி செலுத்த என்ன இருக்கின்றது?

ஓர் ஆரோக்கியமான தேன் கூட்டில் மொய்த்து நிற்கும் தேனீக்களின் எண்ணிக்கை இருபதாயிரம் முதல் எண்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் ஆகும். இந்த அளவுக்கு உள்ள கூட்டத்தைத் தான் இந்த ராணித் தேனீ கட்டுப்படுத்த வேண்டும்.

அவ்வாறு கட்டுப் படுத்துவதற்கு ராணித் தேனீயிடம் என்ன உள்ளது? மாயக் கோலா? அல்லது மந்திரச் சொல்லா? இரண்டுமல்ல! மாறாக, டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்று சொல்லப்படும் வேதிப் பொருள் உள்ளது. இது திரவம் அல்லது ஆவி வடிவத்தில் வெளிப்படுகிறது. இதை வேதியியல் வாசனை அல்லது இரசாயன செய்தித் தூதர் என்று கூறலாம்.

தேனீக்கள் இந்தச் செய்தித் தூதுக்களை தங்களிடம் உள்ள ஆண்டெனா (தகவல் பெறும் உணர்வு இழைகள்) மூலமும் மற்ற உறுப்புகள் மூலமும் பெற்றுக் கொள்கின்றன.

இது தேனீயின் தலையிலிருந்து வாய்க்கு அருகில் தொங்குகின்ற தாடை சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. இது தான் ராணித் தேனீயின் செங்கோலாக செயல்படுகிறது. தேன் கூட்டின் சட்ட ஒழுங்கைக் காக்கும் கட்டுப்பாட்டுக் கருவியாகச் செயல்படுகின்றது. ராணித் தேனீக்கு உள்ள வேதியியல் பொருள் மற்ற தேனீக்களுக்கும் உண்டு. ஆனால் அந்தந்த தேனீயின் பணிக்குத் தக்க அமைந்து விடுகின்றது.

ஆனால் ராணித் தேனீயிடம் கிளம்புகின்ற இந்த வேதியியல் தூது கொஞ்சம் வித்தியாசமானது. இரு வகையானது.

ஒன்று தேனீக்களின் தற்காலிக மாற்றத்தையும் தாக்கத்தையும் தரக் கூடியது. உதாரணமாக தேன் கூட்டிற்குள் அந்நிய சக்திகள், மிருகங்கள், மனிதர்கள், பிற தேனீக்கள், குளவிகள் வந்தால் உடனே இரசாயன தூதுச் செய்தி ராணித் தேனீயிடமிருந்து மின்னல் வேகத்தில் பறக்கும்.

உடனே அந்த அந்நிய சக்திகள் தாக்கப்படுவார்கள். ஆக்கிரமிப்பு அல்லது அபகரிப்பு செய்வதை விட்டும் எதிரிகள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இது தற்காலிகமான தாக்கத்தைத் தரக் கூடிய இராசயன தூதுச் செய்தி ஆகும். இதை இங்ட்ஹஸ்ண்ர்ழ்ஹப் டட்ங்ழ்ர்ம்ர்ய்ங்ள் என்று குறிப்பிடப்படுகின்றது.

மற்றொன்று நிரந்தர தாக்கத்தைத் தரக் கூடியது.

தன்னுடன் பாட்டாளித் தேனீக்களை இனச் சேர்க்கைக்கு அழைப்பது, தேன் கூட்டைப் பராமரிப்பது, பாட்டாளித் தேனீக்களை சுயமாகக் கருவுற்று இனப்பெருக்கம் செய்யாமல் தடுத்து, தான் மட்டுமே இனப் பெருக்க சக்தியாக இருக்கும் ஏகபோக உரிமையைத் தக்க வைப்பது போன்ற காரியங்களை இந்த வேதியியல் திரவம் அல்லது ஆவியின் மூலம் செய்து தேன் கூட்டை நிர்வகித்து வருகின்றது.

மொத்தத்தில் இனச் சேர்க்கை, எச்சரிக்கை, பாதுகாப்பு, உணவு உற்பத்தி, இலட்சக்கணக்கில் வாழும் தேனீக்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் போன்ற மனித சமுதாயத்திற்கு அறைகூவல் விடுக்கும் அரியணை ஆட்சியை ராணித் தேனீ நடத்துகின்றது.

இதனால் தான் அல்லாஹ் இந்தத் தேனீயைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற வகையில் அத்தாட்சி மிக்க அற்புதப் படைப்பாகப் படைத்திருக்கிறான். இந்த வகையில் தேனீக்கள் மனித சமுதாயத்தை விஞ்சி நிற்கின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள் தொடர் - 4

ஹெச். குர்ஷித் பானு, பி.ஐ.எஸ்.சி.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 60:10

இந்த வசனத்தில் இணை வைப்பவர்களிடமிருந்து விலகி சத்தியத்தின் பக்கம் வந்த பெண்களை மீண்டும் அந்த இணை வைப்பாளர்களிடம் அனுப்பி விடாதீர்கள்; இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று அல்லாஹ் கூறுகின்றான்.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தம் இல்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

அல்குர்ஆன் 24:26

நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்குத் தகுதியானவர்கள்; கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்குத் தகுதியானவர்கள் என்று இந்த வசனத்தில் கூறுகிறான்.

இந்த இறைக் கட்டளையை நாம் ஏற்றுச் செயல்படுகிறோமா? இல்லை. அதனால் தான் இணை வைப்பிலிருந்து மீண்டு, ஏகத்துவத்திற்கு வந்த பெண்களை விட்டு விட்டு, எந்தப் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று இறைவன் கூறுகின்றானோ அந்த இணை வைக்கும் பெண்களைத் தேடிச் செல்கிறோம்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெண்கள், ஏகத்துவ மாப்பிள்ளைக்காக காத்திருந்து முதிர் கன்னிகளாகி, ஊராரின் இழி சொற்களுக்கு ஆளாகி, கடைசியில் இறைவன் தடை செய்துள்ள கெட்ட ஆண்களிடத்தில் அந்த நல்ல பெண்கள் போவதற்குக் காரணமாக நாம் ஆகி விடுகின்றோம்.

60:10 வசனம் இறங்கியதும் உமர் (ரலி) அவர்கள் தமக்கு விருப்பமான இரண்டு மனைவியரை விவாகரத்துச் செய்தார்கள். "இணை வைக்கக் கூடியவர்கள்; இவர்களுடன் வாழ்வதை இறைவன் தடை செய்துள்ளான்'' என்று கூறி தன்னுடைய மனைவியரை தலாக் விட்டார்களே அந்த உமர் (ரலி) அவர்களிடம் இருந்த உறுதி நம்மிடம் இருக்கிறதா? இல்லை.

அந்த உறுதி நம்மிடம் இருந்தால், மார்க்கம் என்று வருகின்ற போது சொந்தம், பந்தம் எதுவும் வேண்டாம்; நீ வேறு, நான் வேறு என்று கூறி, இணை வைக்கும் பெண்களைப் புறக்கணித்து விட்டு ஏகத்துவப் பெண்களைத் தேர்ந்தெடுத்திருப்போம். ஏகத்துவப் பெண்களும் தேங்கிக் கிடக்க மாட்டார்கள்.

ஏகத்துவ வாதிகள் என்று சொல்லிக் கொண்டு, இணை வைக்கும் பெண்களை சிலர் திருமணம் செய்கிறார்கள் என்றால், வேறு சிலர் அழகும், செல்வமும், குலப் பெருமையும் உள்ள பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஏகத்துவக் கொள்கையுடைய பெண்களைத் தான் திருமணம் செய்வோம் என்று கூறிக் கொண்டு, மேற்கண்ட நிபந்தனைகளை இடுகின்றனர்.

நாங்களும் ஏகத்துவ வாதிகள் தான். பத்து, பதினைந்து வருடங்களாக ஏகத்துவத்தில் இருக்கிறோம் என்று கூறுவார்கள். மேலும் எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்போம் என்றும் கூறுவார்கள். ஆனால் தங்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் என்று வந்து விட்டால் இஸ்லாம் சொல்கின்ற அடிப்படையில் மணப் பெண்ணைத் தேர்வு செய்வார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது, அவள் நல்லவளா? பண்புள்ளவளா? மார்க்கப் பற்றுள்ளவளா? என்று கவனிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

1. அவளது செல்வத்திற்காக

2. அவளது குடும்பத்திற்காக

3. அவளது அழகிற்காக

4. அவளது மார்க்கத்திற்காக

மார்க்கம் உடைய பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5090

அழகு, செல்வம், குடும்பப் பாரம்பரியம், மார்க்கம் ஆகிய    நான்கு நோக்கங்களுக்காகப் பெண் மணமுடிக்கப்படுகிறாள் எனவும், மார்க்கப் பற்றுள்ளவளை மணப்பவரே வெற்றியடைபவர் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

ஆனால் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர், பெண்ணைத் தேர்வு செய்யும் போது, பண்பானவளா? மார்க்கப் பற்றுள்ளவளா? என்று பார்ப்பதில்லை. மாறாக, நம்முடைய குடும்ப அந்தஸ்துக்கும், பாரம்பரியத்திற்கும் தகுதியானவளா? நல்ல அழகுள்ளவளா? தண்ணீர் குடித்தால் அது தொண்டையில் இறங்குவது தெரியும் அளவுக்கு நிறமுடையவளா? என்றெல்லாம் பார்க்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் எங்கள் ஊரில் ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் பெண் வீட்டாரிடம், "நான் மஹர் கொடுத்து உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்கிறேன்; சீர் எதுவும் தர வேண்டாம்' என்று கூறியுள்ளார். அந்தப் பெண் ஏகத்துவக் கொள்கை உடையவள் இல்லை. முழுக்க முழுக்க இணை வைப்பில் மூழ்கிய பணக்கார வீட்டுப் பெண். மாப்பிள்ளை வீட்டாரோ தங்களைத் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

இவர்கள் மஹர் கொடுத்து, சீர் வரிசைகள் வேண்டாம் என்று கூறி இணை வைப்பில் உள்ள இந்த பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவளது செல்வம் தான்.

இது ஓர் உதாரணம் தான். இன்னும் எத்தனையோ பேர் அழகையும் செல்வத்தையும் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றார்கள். அதைத் தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெண்கள், மணந்தால் ஏகத்துவ மாப்பிள்ளையைத் தான் மணப்பேன்; இல்லையேல் காலம் முழுவதும் கன்னியாகவே இருப்பேன் என்ற கொள்கை உறுதியோடு இருக்கிறார்கள். இந்தப் பெண்களை நீங்கள் புறக்கணிப்பதற்குக் காரணம் இவர்களிடம் அழகில்லை; அழகு இருந்தாலும் செல்வம் இல்லை என்பதால் தானே!

மஹர் கொடுத்து, பணக்காரப் பெண்ணைத் தேடிச் சென்று திருமணம் செய்வதற்குக் காரணம், நாம் கேட்கவில்லை என்றாலும் பெண்ணுக்குத் தாங்களாக நகை போடுவார்கள்; பிற்காலத்தில் சொத்து கிடைக்கும். சொந்த பந்தங்களைப் பகைத்துக் கொண்டு, அல்லாஹ்வுக்காக மட்டுமே காத்திருக்கும் இந்தப் பெண்களை மணந்து கொண்டால் என்ன சொத்தா கிடைக்கப் போகின்றது?

அன்று சத்திய மார்க்கத்திற்காக பிறந்த ஊரை விட்டு, தங்கள் தாய், தந்தையரை, மனைவி மக்களை, சொத்து சுகம் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு, எதுவுமே இல்லாத ஏழைகளாக ஹிஜ்ரத் செய்தார்களே! அந்த சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளை ஒவ்வொரு மேடைகளிலும் கேட்கும் நீங்கள் அந்த வரலாறுகளிலிருந்து படிப்பினை பெற்றீர்களா? அவ்வாறு படிப்பினை பெற்றிருந்தால் இன்று அழகிற்கும், செல்வத்திற்கும், குலப் பெருமைக்கும், குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்களா?

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள்!


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM MAY 2007