Apr 18, 2017

முதஷாபிஹாத் தொடர் 12 - இஸ்லாமும் அத்வைதமும்

முதஷாபிஹாத் தொடர் 12 - இஸ்லாமும் அத்வைதமும்

பி. ஜைனுல் ஆபிதீன்

முதஷாபிஹாத் வசனங்களை விளங்கிட இயலுமா? இயலாதா? என்பது பற்றி எழுந்துள்ள ஐயங்களுக்கும் ஆட்சேபணைகளுக்கும் விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்னர் மேலும் சில முதஷாபிஹ் வசனங்களைக் காண்போம்.

இறைவனும், இறைவனது அடிமைகளாகிய மனிதர்களும் இரண்டறக் கலந்து விட முடியும்; அதாவது மனிதனே சில சமயம் இறைவனாகி விட முடியும் என்ற அத்வைதக் கொள்கை இஸ்லாத்தின் பெயரால் ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் உருவெடுத்தது. இஸ்லாத்திற்கும் அத்வைதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றாலும் முதஷாபிஹான சில வசனங்களுக்குத் தவறான பொருள் கொண்டதால் வழிகேடர்கள் இஸ்லாத்திலும் அத்வைதம் உண்டு எனச் சாதிக்கலானார்கள்.

சூஃபிஸம் என்ற பெயரால் இக்கொள்கையுடையவர்கள் உளறிக் கொட்டியவை ஏராளம். இஸ்லாத்தைப் பற்றிய சாதாரண அறிவு படைத்தவனும் கூட ஜீரணிக்க முடியாத அளவுக்கு அவர்களின் உளறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்தன.

"ஃபஇன் தஅய்த்து குன்துல் முஜீப'' என்று இப்னுல் ஃபாரில் எனும் சூபிக் கவிஞன் கூறுகின்றான். இதன் பொருள் "நான் பிரார்த்தனை செய்தால் அதற்குப் பதிலளிப்பவனும் நானே!'' என்பதாகும்.

"வமா கான லீ ஸல்லா ஸிவாய வலம் தகுன்ப் ஸலாதீ லி கைரீ ஃபீ அதா இ குல்லி ஸஜ்தத்தீ'' என்றும் இவன் குறிப்பிட்டுள்ளான். இதன் பொருள், "என்னைத் தவிர வேறு யாரையும் நான் தொழவில்லை. ஒவ்வொரு ஸஜ்தாவையும் நான் நிறைவேற்றும் போது என்னைத் தவிர வேறு யாரையும் நான் தொழவில்லை'' என்பதாகும்.

தொழுகின்ற அடிமையும் நானே, தொழப்படும் இறைவனும் நானே என்று கூறுகின்றான். பிரார்த்தனை செய்பவனும், பிரார்த்தனை செய்யப்படுபவனும் நானே என்று கூறுகிறான். அதாவது, தானே இறைவனாகி விட்டதாக இவன் கூறுகின்றான்.

(பார்க்க: இப்னுல் ஃபாரில் எழுதிய "தாஇய்யா'')

"ஃபயஹ்மதுனீ வ அஹ்மதுஹு வயஃபுதுனீ வஅஃபுதுஹு'' என்றான் மற்றொரு சூபிக் கவிஞனான இப்னு அரபி என்பவன். இதன் பொருள், "என்னை அவன் புகழ்கிறான்; நான் அவனைப் புகழ்கிறேன். என்னை அவன் வணங்குகிறான்; நான் அவனை வணங்குகிறேன்'' என்பதாகும். அடிமையும் நானே! எஜமானும் நானே! வணங்குபவனும் நானே! வணங்கப்படுபவனும் நானே! என்ற கருத்தில், "ஃபுஸுஸுல் ஹிகம்' என்ற தனது நூல் நெடுகிலும் இவனது உளறலைக் காணலாம்.

"லியல் முல்கு ஃபித்தாரைனி லம் அர ஃபிஹிமா ஸிவாய ஃபஅர்ஜு ஃபழ்லஹு அவ் ஃபஅஹ்ஷாஹு'' என்றான் அப்துல் கரீம் ஜியலீ என்பவன். "இரு உலக ஆட்சியும் எனக்கே உரியது. இரு உலகிலும் என்னைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை. எனது அருளையே நான் எதிர்பார்க்கிறேன்; அல்லது எனக்கே நான் அஞ்சுகிறேன்'' என்பது இதன் பொருள்.

ஃபிர்அவ்ன் எப்படித் தன்னை இறைவன் என வாதிட்டானோ அதே போல் இவனும் இறைத் தன்மைக்கு உரிமை கொண்டாடுவதை இவனது "அல்இன்ஸானுல் காமில்' என்ற நூல் முழுவதும் காணலாம்.

இதுபோன்ற ஃபிர்அவ்னிய்யக் கொள்கையைக் கொண்டவர்கள் ஏராளமாக இருந்துள்ளனர். அப்துல்கனி அன்னாபிலிஸீ, ஹஸன் ரிள்வான், அல்காஷானீ, அபூஸயீத் அல்ஹர்ராஸ், ஹுஸைன் இப்னு மன்சூர் அல்ஹல்லாஜ், இப்ராஹீமுல் கவ்வாஸ், முஹம்மது இப்னு இஸ்ஹாக் அல்கூனவீ, அப்துஸ்ஸலாம் இப்னு பஷீஷ், இப்னு அஜீபா, அத்தப்பாக், துன்னூன் அல்மிஸ்ரீ, அபூயஸீத் அல்பிஸ்தாமீ என்று இவர்களின் பட்டியல் நீளும்.

ஒரு சில அறிவீனர்கள் இவர்களை மகான்கள் என்று வர்ணித்தாலும், இவர்களின் போதனைகள் முற்றிலும் ஃபிர்அவ்னுடையதாக இருக்கின்றன. அவன் எவ்வாறு தன்னை இறைவன் என்று பிரகடனம் செய்தானோ அதே போல் இவர்களும் பிரகடனம் செய்திருக்கின்றார்கள். வித்தியாசம் என்னவென்றால் இவர்கள் தங்களது அத்வைதக் கொள்கைக்கு - தாங்களே இறைவனாகி விட்டதற்கு (?) திருக்குர்ஆன் வசனங்களையே சான்றாகக் காட்டினார்கள்.

பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள் கைப்பிடி அளவுக்கு சிறு கற்களை எதிரிகள் மேல் எறிந்தனர். அவை அனைத்து எதிரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காணப்படும் உண்மை. இது பற்றி இறைவன் குறிப்பிடும் போது,

அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 8:17)

என்று திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

"நபி (ஸல்) அவர்கள் தம் கையில் கற்களை அள்ளி எறிந்திருக்கும் போது, அல்லாஹ், தானே எறிந்ததாகக் கூறுகின்றான். எனவே அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கே நபி (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. அல்லாஹ் நபிக்குள் புகுந்து விட்டான். நபியே அல்லாஹ்வாக, அல்லாஹ்வே நபியாக இரண்டறக் கலந்து விட்டதையே இங்கே குறிப்பிடுகின்றான்' என்றனர் இந்த வழிகேடர்கள்.

நபித்தோழர்கள் தங்கள் உயிரையும் இறைவனுக்காக அர்ப்பணிப்பதாக மரத்தடியில் உறுதிமொழி எடுத்தனர். பைஅத்துர்ரிள்வான் எனும் இவ்வுறுதிமொழியின் போது நபித்தோழர்களின் கைகள் மீது தம் கையை வைத்து நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இது பற்றி இறைவன் குறிப்பிடும் போது,

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான். (அல்குர்ஆன் 48:10)

என்று திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

உண்மையில் நபி (ஸல்) அவர்களின் கை தான் நபித்தோழர்களின் கைகள் மேல் இருந்தது. ஆனால் அல்லாஹ் நபியின் கையைத் தனது கை என்று கூறுகின்றான். இதிலிருந்து அந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வே நபியாக, நபியே அல்லாஹ்வாக இரண்டறக் கலந்து விட்டனர் என்று இந்த வழிகேடர்கள் விளக்கம் தந்தனர்.

முதஷாபிஹான இவ்விரு வசனங்களுக்கும் தவறான விளக்கம் அளித்ததுடன் முதஷாபிஹான ஒரு ஹதீஸையும் தங்களின் நவீன விளக்கத்திற்குத் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள்.

"என் அடியான் என்னிடம் நெருங்கி விடும் போது அவன் பிடிக்கும் கையாக, நடக்கின்ற காலாக, பார்க்கின்ற பார்வையாக, கேட்கின்ற செவியாக நான் ஆவேன்'' என்று இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் தான் அது! (புகாரி, முஸ்லிம்)

இறைவனுடன் நெருங்கிவிட்ட அடியார்களுக்கு இறைவனே கண்ணாக, காதாக, காலாக, கையாக ஆகி விடுகின்றான் என்றால் இறைவன் அடியானுடன் இரண்டறக் கலந்து விடுவதைத் தானே இது விளக்குகின்றது என்பது இவர்களின் வாதம்.

இந்த வசனங்களை இவர்கள் இவ்வாறு புரிந்து கொண்டதற்குக் காரணம், இவர்களின் உள்ளங்களில் குடிகொண்டு விட்ட வழிகேடும், ஏனைய வசனங்களில் இதுபற்றிக் கூறப்படுவது என்ன என்பதைப் பற்றிய அறியாமையுமே ஆகும். "கலிமத்துல்லாஹ்' என்பதைக் கிறித்தவர்கள் புரிந்து கொண்டதற்கும், இவர்களின் இந்த விளக்கத்திற்கும் இது தான் காரணம்.

"உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை'' (3:128) என்றும், "சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்'' (69:46) என்றும், "அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்று கூறுவீராக'' (7:188) என்றும், "நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது!'' (28:56) என்றும், அற்புதங்கள் நிகழ்த்துமாறு காஃபிர்கள் கேட்ட போது, "என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!'' (17:93) என்றும், "எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன்' என்று கூறுவீராக'' (48:9) என்றும், "எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!' என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை'' (3:79) என்றும் இறைவன் பல்வேறு இடங்களில் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனங்கள் இறைவன், இறைவன் தான்; நபிமார்களேயானாலும் அவர்கள் இறைவனின் அடிமைகள் தான் என்று தெளிவாக அறிவிக்கின்றன. இவற்றுக்கு ஏற்ப அந்த இரு வசனங்களை வழிகேடர்கள் விளங்க முயலவில்லை.

ஒரு மனிதர் எறிந்தால் சாதாரணமாக என்ன விளைவு ஏற்படுமோ அதைவிடப் பெரும் விளைவை கைப்பிடிக் கற்கள் ஏற்படுத்தியதால், அதில் தன்னுடைய தனிப்பட்ட கவனம் இருந்ததையே 8:17 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இறைவன் நினைத்தால் எதன் மூலமும் பெரும் விளைவுகளை ஏற்படுத்திட முடியும் என்பதைக் காட்டவே அவ்வாறு கூறுகிறான் என்று அறிவுடையோர் புரிந்து கொள்வர்.

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ருக்களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (3:123)

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. (9:25)

எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. (2:249)

இந்த வசனங்களின் மூலம் எப்படி அல்லாஹ் தன் வல்லமையை உணர்த்துகின்றானோ அதுபோன்ற வசனமே 8:17 வசனமாகும்.

இறைவனது தூதரிடம் செய்யும் உறுதிமொழி யாவும் இறைவனிடமே செய்யும் உறுதிமொழியாகும். ஏனெனில் இறைத்தூதர்கள் தன் சொந்த லாபத்திற்காக எந்த உறுதிமொழியும் எடுக்கவில்லை. இறைவனின் மார்க்கத்திற்காகவே உறுதிமொழி எடுத்தனர். எனவே அல்லாஹ்விடமே அந்த உறுதிமொழி எடுத்ததாகக் கருதி உறுதியாக அதை நிறைவேற்றுங்கள் என்பதைக் காட்டவே 10:48 வசனத்தில் தன் கை அவர்களின் கை மேல் இருந்தது என்று இறைவன் கூறுகின்றான். அறிவுடையோர் எவரும் இவ்வாறே உணர்வர்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் ஊடுறுவ இயலாத போது, மனிதனால் அதையே தாங்கிக் கொள்ள முடியாது எனும் போது இறைவன் ஊடுறுவி விட்டான் என்றால் இது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது என்பதை வழிகேடர்கள் உணர்வதில்லை.

இவ்வசனங்களை தங்களின் அத்வைதக் கொள்கைக்குச் சான்றாகக் காட்டுபவர்கள் செய்யும் மோசடிகள் இவர்களின் போலித்தனத்தை நன்கு அடையாளம் காட்டி விடும்.

ஹராமானவற்றைச் செய்யும் போதும், கடமைகளை அலட்சியம் செய்யும் போதும், மனிதர்களிடம் அதிகப்படியான மரியாதையை எதிர்பார்க்கும் போதும் இறைவன் தம்மிடம் இரண்டறக் கலந்து விட்டதாகச் சாதிக்கின்றனர் இந்த சூபிகள்! இவர்கள் இறைத்தன்மை பெற்றுவிட்டதாகக் கூறும் அதே சமயத்தில் உண்ணுகின்றனர்; அருந்துகின்றனர்; மனைவியுடன் சல்லாபிக்கின்றனர்; உறங்குகின்றனர்; மலஜலம் கழிக்கின்றனர்; குழந்தை குட்டிகள் பெறுகின்றனர்.

இறைவனே இவர்களிடம் வந்து விட்டால் இந்தச் செயல்களில் ஈடுபட முடியுமா? இறைத் தன்மைக்கு மாற்றமான இக்காரியங்களை இவர்கள் செய்வதிலிருந்து வேண்டுமென்றே, மக்களை வழிகெடுப்பதற்காகவே இந்த வேஷத்தைப் போடுகின்றனர் என்பது தெளிவு.

இன்னும் சொல்வதென்றால் இறைத் தன்மை இவர்களிடம் குடிகொண்டுள்ளது உண்மையென்றால் அவர்களுக்கு இறப்பு ஏற்படக் கூடாது. அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டால் இறைவனே இறந்து விட்டதாக ஆகாதா? இப்படியெல்லாம் அறிவுடையோர், கல்வியில் சிறந்தோர் விளங்கி அவ்வசனங்களின் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்வார்கள்.


வளரும் இன்ஷா அல்லாஹ்!

EGATHUVAM JUN 2010