Apr 30, 2017

பொருளியல் தொடர் 17 - அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

பொருளியல் தொடர் 17 - அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

ஹராம், ஹலால் என்றால் என்ன?

ஒரு பொருளைத் திரட்டுவதாக இருந்தால் ஹராமான வழியில் திரட்டக்கூடாது. பொருளைத் திரட்டுவது ஹலாலான அடிப்படையில் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அனுமதித்த காரியம் ஹலால் ஆகும். ஒருவரின் பொருளை அவரது அனுமதியுடன் பெற்றுக் கொள்வதும் ஹலாலாகும்.

மற்றவரின் பொருள் நமக்கு ஹராம் ஆகும். அந்தப் பொருள் பணமாகவோ, பொருளாகவோ, நகையாகவோ, எதுவாக இருந்தாலும் சரியே. அது நமக்கு ஹலால் ஆகாது.

பிறருடைய பொருள் நமக்கு எந்த அளவிற்கு ஹராம்?

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி பேருரையில் இதைப் பற்றி வன்மையாக கண்டித்துள்ளார்கள்.

...(ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள்  எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, "இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம்.  அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது துல்ஹஜ் இல்லையா?'' என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம்'' என்றோம். (பிறகு,) "இது எந்த நகரம்?'' எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது (புனித மிக்க) நகரமல்லவா?'' எனக் கேட்க, நாங்கள், "ஆம்'' என்றோம். மேலும், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம்.  அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?'' எனக் கேட்க, நாங்கள், "ஆம்'' என்றோம். (பிறகு,) "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் - உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான்.  அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரை விட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம். பிறகு, நபி (ஸல்) அவர்கள், "நான் உங்கüடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா?'' என்று இரண்டு  முறை கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி)

நூல்: புகாரி 67, 105, 1741, 4406, 550, 7447

புனிதம் என்றால் என்ன?

புனிதமாக கருத வேண்டும் நபி (ஸல்) அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், மனிதன் புனிதம் என்று ஒரு பொருளை நினைத்தால் தவறு செய்வதை விட்டும் விலகியிருப்பான்.

உதாரணமாக, திருடனை எடுத்துக்கொண்டால் வீட்டில் உள்ள பொருளைத் திருடுவான். ஆனால் பள்ளியில் உள்ள பொருளைத் திருடமாட்டான். ஏனென்றால் அதைப் புனிதமாகக் கருதியிருக்கின்றான். இவ்வாறே அடுத்தவர் பொருளை நினைக்க வேண்டும்.

அடுத்தவர் பொருளை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அடையலாமா?

பிறரின் பொருளை அநியாயமான முறையில் பெறுவதற்க்காக நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடாது என்று திருக்குர்ஆன் 2:188 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!

அல்குர்ஆன் 2:188

வீதியில் நிற்கும் ஆட்டில் பால் கறந்து குடிக்கலாமா?

ஆடு வீதியில் தான் நிற்கின்றதே, இதற்கு ஏன் அனுமதி கேட்க வேண்டும்? என்று பாலை கறக்கக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரின் கால்நடையிடம் அவரது அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்கüல் எவரும் அவரது சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரது உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரது உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்கüன்  கால்நடைகளுடைய மடிகள் அவர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் ஒருவரது கால்நடையிடம் அவரது அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 2435

அடுத்தவர் பொருளை அபகரித்துவிட்டால் அதற்குரிய பரிகாரம் என்ன?

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்üக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.) (ஏனெனில், மறுமை நாüல்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.  அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2449, 6534

இன்று நாம் அறியாமையில் இருக்கும் அடுத்தவரின் பொருளை அபகரித்திருப்போம். நம்மை விட்டும் அந்தப் பாவம் நீங்க வேண்டும் என்றால் ஒன்று, அதைக் கொடுப்பதற்குரிய சக்தி இருந்தால் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு சக்தி பெறவில்லை என்றால் அவரிடம் மன்னிப்புக் கேட்டு சமரசம் செய்து கொள்ள வேண்டும். இதுவே இதற்குரிய பரிகாரம் ஆகும்.

இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும் என்று சொல்வதன் காரணம் என்ன?

ஏனெனில், அந்த எண்ணத்தை ஷைத்தான் சில மணி நேரத்திற்குள் கலைத்து விடக் கூடும் என்பதே இதற்குப் பிரதான காரணம் ஆகும். தமிழ் வழக்கில் ஒரு பழமொழி சொல்வதுண்டு. ஒன்றே செய்! நன்றே செய்! அதுவும் அன்றே செய் என்பதைப் போன்றதாகும்.

பேச்சு திறமையால் பிறரின் சொத்தை அபகரித்தல்

பேச்சு திறமையால் பிறரது சொத்தை ஒருவன் அபகரித்தால் அவன் அந்தச் சொத்தை அபகரிக்கவில்லை. அவன் நரக நெருப்பைத் தான் சேமிக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்கüல் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பüத்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நூல்: புகாரி 2680, 7169, 7181, 7185, 6967

அடுத்தவர் பொருளில் அனுமதிக்கப்பட்டவை

ஸகாத், ஸதகா, அன்பளிப்பு, தகப்பன் விட்டுச் சென்ற சொத்துக்கள் இவையெல்லாம் பிறருடையதாக இருந்தாலும் இவைகளுக்கு அனுமதி இருக்கின்றது. சில பொருள்களுக்குப் பொதுவான அனுமதி உள்ளது.

இதற்குச் சொல்வதாக இருந்தால் உதாரணங்களைச் சொல்லிக் கொன்டே செல்லலாம். வீதியில் நடப்பது, பீச்சில் அமர்வது, பள்ளியில் உள்ள தண்ணீரை அருந்துவது இவைகளுக்கெல்லாம் பொதுவான அனுமதி வழங்கப்படடுள்ளது. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

பராஉ பின் ஆசிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்!'' (2:267) என்ற வசனம் பேரீச்சை மரங்களுக்கு சொந்தக்காரர்களாகிய அன்சாரிகளாகிய எங்களுடைய விஷயத்தில் இறங்கியதாகும். பேரீச்ச மரங்கள் அதிகமாக இருப்பவரும், குறைவாக இருப்பவரும் அதனுடைய அளவிற்கு அதிலிருந்து கொண்டு வருபவராக இருந்தார். ஒரு மனிதர் ஒன்று அல்லது இரண்டு குலைகளை கொண்டு வந்து அதைப் பள்ளிவாசலில் தொங்க விடுபவராக இருந்தார். திண்ணை ஸஹாபாக்கள் எந்த உணவும் இல்லாதவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு பசித்தால் அந்தக் குலையின் பக்கம் வந்து அதை தன் கைத்தடியால் அடிப்பார். அதிலிருந்து பிஞ்சுகளும், பழங்களும் விழும். அதை அவர் சாப்பிடுவார். நல்ல விஷயங்களில் நாட்டமில்லாத சில மனிதர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு மனிதர் ஒரு குலையை கொண்டு வருவார். அதில் விளையாத மற்றும் அழுகிய பழங்களும் இருந்தன. இன்னும் உடைந்த குலையையும் கொண்டு வந்து அதைத் தொங்க விடுவார். எனவே அல்லாஹ் "நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்''  (2:267) என்ற வசனத்தை அருளினான். அதற்குப் பிறகு எங்களில் ஒருவர் தன்னிடம் இருப்பதில் மிகச் சிறந்ததையே கொண்டு வருவார்.

நூல்: திர்மிதி 2913

பொதுவான மரத்தில் ஒரு சில கனிகளைச் சாப்பிடலாம். அதை முடிந்து எடுத்து வருவதற்குத் தடை உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்-ம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது  ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.

அறிவிப்பவர்:  அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2320, 6012

உப்பாதா பின் சுர்ஹபீல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எங்களுக்கு பசிக் கொடுமையான ஒரு வருடம் பீடித்தது. நான் மதீனாவிற்கு வந்து அங்குள்ள தோட்டங்களில் ஒரு தோட்டத்திற்குச் சென்று கதிர்களை பிடுங்கி அதிலுள்ள தானிங்களை எடுத்து அதைச் சாப்பிட்டேன். இன்னும் என்னுடைய ஆடையிலும் சேகரித்துக் கொண்டேன். தோட்ட உரிமையாளர் வந்து என்னை அடித்தார். என்னுடைய ஆடையையும் பிடுங்கினார். நான் நபியவர்களிடம் வந்து அவர்களிடம் நடந்தவற்றை அறிவித்úன். நபியவர்கள் அம்மனிதரிடம், "அவர் பசியோடு இருக்கும் போது நீ அவருக்கு உணவளிக்கவுமில்லை. அவர் அறியாதவராக இருந்த போது நீ அவருக்கு கற்றுக் கொடுக்கவுமில்லை'' என்று கூறி என்னுடைய ஆடையை என்னிடம் திருப்பிக் கொடுக்குமாறும்  ஒரு வஸக் உணவுப் பொருளை எனக்குத் தருமாறும் அவருக்கு கட்டளையிட்டார்கள்.

நூல்: இப்னு மாஜா 2289


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM NOV 2011