Apr 5, 2017

அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் 34 - சரணாகதி அடைந்த ஹீரா

அபூபக்ர் (ரலி) வரலாறு  தொடர் 34 - சரணாகதி அடைந்த ஹீரா

எம். ஷம்சுல்லுஹா

"இஸ்லாம் அல்லது ஜிஸ்யா வரி அல்லது போர் என்ற மூன்று தான் உங்கள் முன் உள்ளன. இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்'' என்று சரணடைய மறுத்தவர்களிடம் தளபதி காலித் தெரிவித்தார். இதற்காக ஒரு நாள் அவர்களுக்கு அவகாசம் அளித்தார். இம்மூன்றில் அவர்கள் போர் புரிவதையே தேர்வு செய்தனர்.

உலக ஆசையில் ஊறிப் போன இவர்களே போரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் எனும் போது மறுமை வாழ்வில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இதற்குச் சளைத்து விடவா போகிறார்கள்? நிச்சயமாக இல்லை!

உடனே முஸ்லிம்கள் போர்க்களத்தில் குதிக்கிறார்கள். கோட்டைகள் முஸ்லிம்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. தாக்குதல் தொடுத்த மாத்திரத்திலேயே, கொஞ்ச நேரத்திலேயே கோட்டையிலிருந்து அபயக் குரல்கள் எழுகின்றன.

அந்த அபயக் குரல்களை எழுப்பியவர்கள் வேறு யாருமில்லை. கிறித்தவப் பாதிரிகளும், துறவிகளும் தான்.

உயிர்ப் பலிகளைக் கண்டவுடன் அவர்கள் அலறியடித்துக் கொண்டு பரிதாபக் குரல்களை எழுப்புகின்றனர். "நீங்கள் வேண்டுமானால் எங்களைக் கொன்று விடுங்கள். முஸ்லிம்கள் எங்களைக் கொன்று விட வேண்டாம்'' என்று அவர்கள் தங்கள் படையினரிடம் கூறுகின்றனர்.

இப்போது தான் கோட்டைத் தலைவர்கள் உணரத் தலைப்படுகிறார்கள். இஸ்லாமியப் படைகளை எதிர்த்து நிற்பது வீண் என்று இப்போது தான் அவர்களுக்கு உரைக்க ஆரம்பிக்கிறது.

"அரபுப் படையினரே! இப்போது நாங்கள் சமாதானத்தைத் தெரிவு செய்து கொள்கிறோம். நாங்கள் இப்போது காலிதைச் சந்திக்க வேண்டும்'' என்று கோட்டையில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்தனர். முதலில் சவால் விட்டவர்கள், முடிவில் சமாதானம் மற்றும் சரணடைய வந்தனர்.

ஏற்கனவே காலித், ஒவ்வொரு கோட்டைக்கும் சென்று, "நீங்கள் அரபுகள் என்றால் உங்களைப் போன்ற அரபுகளாகிய எங்களை ஏன் பழி வாங்கத் துடிக்கிறீர்கள்? நீங்கள் அந்நியர்கள் என்றால் அநீதி, அநியாயத்திற்கு எதிராக ஏன் கிளம்புகிறீர்கள்?'' என்று ஒரு போர் யுக்தி மொழியைப் பேசுகிறார். அது அவர்களிடம் எடுபட ஆரம்பித்தது.

"ஆம்! ஒன்று ஆரிபா! மற்றொன்று முஸ்தரிபா என்ற இரு வகை அரபியர் தாம் நாம்'' என்று அவர்கள் பதிலளித்தனர்.

ஆரிபா என்றால் யஃரிப் பின் கஹ்தான் என்ற கிளையினர் பேசிய பழமை வாய்ந்த அரபியாகும். முஸ்தரிபா என்றால் இஸ்மாயீல் (அலை) அவர்கள் பேசிய புதிய அரபு மொழியாகும்.

அதாவது தாங்கள் யஃரிப் பின் கஹ்தான் மொழி வகையைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், காலித், இஸ்மாயீல் (அலை) அவர்களின் மொழி வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் உணர்த்தினர்.

"நீங்கள் சொல்வது உண்மையானால் எங்களுடன் ஏன் மோதல் போக்கைக் கடைப் பிடிக்கிறீர்கள்? எங்களுடைய செயல்பாட்டை ஏன் வெறுக்கிறீர்கள்?'' என்று காலித் கேட்டார். அதற்கு அவர்கள், "நாங்கள் அரபியர்கள் தான். எங்களுக்கு அரபியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாது என்று உணர்த்துவதற்காகத் தான் இவ்வாறு இழுத்தடித்தோம்'' என்று பதில் கூறினர்.

இப்போது காலித் ஏற்கனவே முன் வைத்த மூன்று வாய்ப்புகளை மீண்டும் முன்வைக்கிறார்.

1. எங்களுடைய மார்க்கமான இஸ்லாமில் இணைந்து விடுங்கள். சாதனைகளிலும், சோதனைகளிலும் நீங்கள் எங்களுடைய சகோதரர்கள். 2. ஜிஸ்யா, 3. போர்.

இம்மூன்றில் அவர்கள் ஜிஸ்யா வரி கொடுப்பதையே தேர்வு செய்தனர்.

ஒரு லட்சத்துத் தொன்னூறாயிரம் திர்ஹம் ஆண்டு தோறும் ஹீரா ஆட்சியாளர்கள் மத்திய இஸ்லாமிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும்.

அந்நிய ஆதிக்க சக்திகள் படையெடுப்பை விட்டும் இஸ்லாமிய அரசு, ஹீராவைக் காக்க வேண்டும். இவ்வாறு காக்கத் தவறினால் ஹீரா, இஸ்லாமிய அரசுக்கு வரி செலுத்தாது.

இவ்வாறு உடன்பாடு கையெழுத்தானது.

இஸ்லாமிய அரசின் சார்பாக தளபதி காலிதும், ஹீராவின் சார்பாக அதிய்யின் மக்களான அதீ மற்றும் அம்ர், அம்ர் பின் அப்துல் மஸீஹ், இயாஸ் பின் கபீஸா, ஹைர் பின் உக்காழ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.

ஹீரா மக்கள் தங்கள் காணிக்கை மற்றும் அன்பளிப்புகளை காலிதுக்கு வழங்கினர். தளபதி காலித், அந்த ஒப்பந்தத்தை ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அத்துடன் மக்களின் அன்பளிப்புகளையும், காணிக்கைகளையும் ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து, அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM NOV 2007