Apr 6, 2017

அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் 37 - முற்றுகையை முறியடிக்க காலிதுக்கு அழைப்பு

அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் 37 - முற்றுகையை முறியடிக்க காலிதுக்கு அழைப்பு

எம். ஷம்சுல்லுஹா

அன்பார், அய்னுத்தமர் போர் முடிந்ததும் அதில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு போர்ச் செல்வங்களை ஆட்சித் தலைவருக்கு காலித் அனுப்பி வைக்கின்றார்.

இந்தப் பொறுப்புக்காக நியமிக்கப்பட்ட வலீத் பின் உக்பா இந்தச் செல்வங்களை ஆட்சித் தலைவரிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார். கூடவே அவர், காலிதின் மன வேதனையையும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார்.

"ஆட்சித் தலைவர் அபூபக்ர் அவர்கள் எனக்கு இப்படி ஒரு கட்டளை இட்டிருக்கக் கூடாது. இதன் காரணத்தால் ஓராண்டு காலமாக முற்றுகையில் முடங்கிக் கிடக்கும் இயாள் பின் கனமை என்னால் காப்பாற்ற முடியவில்லை.

ஹீரா வெற்றிக்குப் பிறகு, பாரசீகத்தின் பிடியிலுள்ள மற்ற நகரங்களை என்னால் கைப்பற்றவும் முடியவில்லை. (காரணம், இயாள் வராமல் அடுத்தக்கட்டத் தாக்குதல் கூடாது என்ற கலீபாவின் கட்டளை தான்) மொத்தத்தில் ஹீராவில் நான் தங்கிய இந்த ஆண்டு, ஒரு போர் வீரனுக்குரிய ஆண்டல்ல! ஒரு பெண்ணுக்குரிய ஆண்டு!''

காலிதின் இந்த வேதனை வரிகளை வலீத் பின் உக்பா அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கின்றார்.

ஒரு பக்கம் தூமத்துல் ஜன்தலைச் சுற்றிலும் முடிவுக்கு வராத முற்றுகை! மறு பக்கம் இராக்கில் முடங்கிக் கிடக்கும் காலிதின் மன வருத்தம். இந்த இரண்டுமே கலீபாவைக் கவலையடையச் செய்தது. இயாளின் ஓராண்டு கால முற்றுகை ஆட்சித் தலைவரைச் சடையவும், சளைக்கவும் வைத்தது.

இந்த முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஆட்சித் தலைவர், வலீத் பின் உக்பாவை இயாளுக்கு உதவியாக தூமத்துல் ஜன்தலை நோக்கி அனுப்பி வைக்கின்றார். வலீதும் தூமத்துல் ஜன்தலை வந்தடைகின்றார்.

அப்போது தான் அவருக்கு ஓராண்டு கால முற்றுகைக்கான மர்ம முடிச்சு அவிழ்கின்றது. தூமத்துல் ஜன்தல் மக்களை, இயாளின் படை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறது. இயாளின் படையை தூமத்துல் ஜன்தலின் ஒரு படை சூழ வளைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி ஓர் இக்கட்டில் சிக்கியதால் தான் முற்றுகை முடிவுக்கு வராமல் நீடிக்கின்றது என்பதை உணர்ந்த வலீத், ஒரு யோசனை வழங்குகின்றார்.

வலிய படையும் எளிய யோசனையும்

ஒரு சில கட்டங்களில் வலிய படையை விட ஓர் எளிய யோசனை சிறந்ததாக அமைந்து விடும். அந்த எளிய யோசனை வேறொன்றும் இல்லை. காலிதை வரவழைப்பது தான்.

வறட்டுக் கவுரவம், முரட்டுப் பிடிவாதம் எதையும் பார்க்காமல் காலிதுக்கு, வலீத் பின் உக்பா ஓர் அவசரக் கடிதம் வரைகின்றார்.

அன்பார், அய்னுத்தமர் போர்களை முடித்த அடுத்த கணத்தில், அடுத்தக் களம் என்ன? என்று யோசித்துக் கொண்டிருந்த காலிதின் கையில் இந்தக் கடிதம் கிடைக்கிறது. போர்ச் சிங்கம் காலிதைக் களத்திற்கு அழைக்கும் செய்தியைத் தான் கடிதம் தாங்கியிருந்தது.

கண்ணைப் பறிக்கும் வாட்களுடன்

கர்ஜிக்கும் சிங்கங்களைத் தாங்கிய வண்ணம்

பகை நடுங்க படைகள் வந்து குவிய இருக்கின்றன

கொஞ்சம் காத்திரு!

என்று கவிதை வரிகளில் காலித் பதில் அனுப்புகின்றார். பின்னர் புறப்படுவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கலானார். அதன் முதற்கட்டப் பணியாக உவைமின் பின் அல்காஹில் அல் அஸ்லமியை அய்னுத் தமரின் பொறுப்பாளராக நியமித்தார். அடுத்த கட்டப் பணியாக காலிதின் பயணம் தொடங்கியது.

இராக்கிலிருந்து தூமத்துல் ஜன்தல் முன்னூறு மைல் தொலைவு. சிரியாவின் பாலைவனத்தில் சிறிதும் பயமின்றி அந்தச் சிங்கம், பத்து நாட்களில் தூமத்துல் ஜன்தலை அடைந்தது.

அன்னார் தூமத்துல் ஜன்தலுக்கு அருகில் வந்த மாத்திரத்திலேயே, இயாளைக் கருவருப்பதற்காக வந்திருந்த பல்வேறு கிளையாரின் படைகள் ஆட்டம் கண்டன; அரளத் துவங்கின.

பனூகலப், பஹ்ராஃ, கஸ்ஸான் ஆகியோர் தான் அந்தக் கிளையினர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே காலிதிடம் படுதோல்வியைக் கண்டவர்கள். அதனால் தான் இயாள் தலைமையிலான படையைப் பழிவாங்குவதற்காக தூமத்துல் ஜன்தலில் களமிறங்கியிருந்தனர்.

ஓட்டமெடுக்கும் உகைதிர்

களமிறங்கியிருக்கும் படையின் வீரர்களுக்குக் காலிதை அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தூமத்துல் ஜன்தலின் அதிபர் உகைதிர் பின் அப்துல் அஜீஸ் அல்கின்தி என்பவர் காலிதை நன்கு தெரிந்து வைத்திருந்தார்.

"நான் காலிதை நன்கு அறிந்தவன். அவர் அருள் பாலிக்கப்பட்ட ஓர் அருட் பறவை! அவரைப் போன்று போர் பற்றிய கூர் பார்வை கொண்டவர் வேறு யாரும் இலர்! கூடவோ, குறையவோ அவர் முகத்தைப் பார்க்கும் படையினர் ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லை. மக்களே! பல்வேறு குலப் படையினரே! என் சொல்லைக் கேளுங்கள். எனக்குக் கட்டுப்படுங்கள். காலிதிடம் உடன் படிக்கை செய்து கொள்ளுங்கள்'' என்று உகைதிர் கூறுகின்றார்.

ஆனால் அவரது சொல் அங்கு எடுபடவில்லை. அதை உணர்ந்த அவர், "இனி மேல் காலித் மீது போர் தொடுப்பதை என்னால் தடுக்க முடியாது. நான் ஒதுங்கிக் கொள்கிறேன்' என்று உகைதிர் கூறி விட்டு, தூமத்துல் ஜன்தலை விட்டுத் தப்பி ஓடலானார்.

ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. காரணம், அவரது ஓடு பாதையில் காலித் ஒரு முட்டுக்கட்டையைப் போட்டு விட்டார். அவரை இடை மறித்து, கைது செய்து விட்டார்.

(கைது செய்த உகைதிருக்கு, காலித் மரண தண்டனை வழங்கினார் என்று ஒரு கருத்து உள்ளது. உகைதிர் மதீனாவுக்கு அனுப்பப்பட்டார்; உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டு இராக்கிற்குச் சென்றார்; பின்னர் அய்னுத் தமரில் தமது இறுதி நாட்களைக் கழித்தார்; தாம் தங்கிய இடத்திற்கு தூமத் என்று பெயரிட்டுக் கொண்டார் என்று ஒரு கருத்து உள்ளது. இவ்வாறு உகைதிர் பற்றி இரு வேறு கருத்துக்கள் வரலாற்றில் நிலவுகின்றன)

உகைதிர், காலிதை எதிர் கொள்வது இது இரண்டாவது தடவை என்றும், ஏற்கனவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உகைதிரை ஒரு முறை சந்தித்தார் என்றும் வரலாற்று நூற்களில் இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்திகள் நபி (ஸல்) அவர்கள் தொடர்புடையவையாக இருப்பதாலும் அவற்றுக்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் இல்லாததாலும் அது பற்றிய விபரத்தை அடிக்குறிப்பில் இடம் பெறச் செய்துள்ளோம்.*

உகைதிர் பற்றி ஹதீஸ் நூற்களில் இடம் பெறும் ஆதாரப்பூர்வமான செய்தி இது தான்.

தூமத்துல் ஜந்த-ன் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பüப்புகளை அனுப்பினார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2616

"தூமத்துல் ஜந்தல்' பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை  அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டு விடுங்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 3863

இந்தச் செய்திகள் மட்டுமே உகைதிர் குறித்து நபி (ஸல்) அவர்கள் காலத்துடன் தொடர்புடைய செய்திகளில் ஆதாரப்பூர்வமானவை. ஏனைய செய்திகள் பலவீனமாக இருந்தாலும் அவற்றை அடிக்குறிப்பாக இங்கு குறிப்பிடக் காரணம்,

நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே தூமத்துல் ஜன்தலைக் கைப்பற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதால் அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் இந்தச் சம்பவங்களை வரலாற்றுத் தொடரில் இடம் பெறச் செய்துள்ளனர்.

தூமத்துல் ஜன்தல் விஷயத்தில் இஸ்லாமிய அரசுகள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தது ஏன்? என்பதற்கான விடையை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காணலாம்.

* நபி (ஸல்) அவர்கள் காலிதை, தூமத்துல் ஜன்தலில் இருந்த உகைதிரிடம் அனுப்பி வைக்கிறார்கள். இன்தாவைச் சார்ந்த அவரது பெயர் உகைதிர் பின் அப்து பின் மலிக். அவர் கிறித்தவர். அவர் தான் தூமத்துல் ஜன்தலின் அரசர் ஆவார். "அவர் ஒரு மாட்டை வேட்டையாடும் போது நீ காண்பாய்' என்று காலிதிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

காலித் புறப்பட்டு கோட்டைக்கு அருகில் வந்து விட்டார். கோட்டை இப்போது காலிதின் பார்வைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. அது நல்ல பவுர்ணமி இரவு! அப்போது அரசர் தன் மனைவியுடன் மாடியில் இருந்தார். அப்போது கோட்டையின் வாசலில் ஒரு மாடு தன் கொம்புகளை வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த அவரது மனைவி, "இதைப் போன்ற ஒரு காட்சியை இதுவரை நீங்கள் கண்டதுண்டா?'' என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதுவரை இவ்வாறு கண்டதில்லை'' என்றார். "அப்படியானால் இந்த மாட்டை யார் கொண்டு வந்து விட்டிருப்பார்கள்?'' என்று கேட்டாள். "யாரும் விட்டிருக்க மாட்டார்கள்'' என்று அவர் பதில் கூறினார்.

உடனே கீழே இறங்கி, தன் குதிரையைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அதற்குச் சேணம் போடப்பட்டதும் அதில் ஏறி, மாட்டை வேட்டையாட உகைதிர் புறப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தாரும் புறப்பட்டனர். அவருடைய சகோதரரும் அவருடன் இருந்தார். அவரது பெயர் ஹஸ்ஸான். தங்கள் படையுடன் வாகனத்தில் புறப்பட்டதும், நபி (ஸல்) அவர்களின் குதிரைப் படை அவரைக் கைது செய்தது. அவருடைய சகோதரர் ஹஸ்ஸானும் கைது செய்யப்பட்டார்.

அவர் மேனியில் கிடந்த சட்டை தங்கத்தால் இழையப்பட்ட பட்டாடை ஆகும். காலித் அதை உருவிக் கொண்டார். நபி (ஸல்) அவர்களைச் சென்று சந்திப்பதற்கு முன்னால் அந்தச் சட்டையை அனுப்பி வைத்தார். பின்னர் உகைதிரை நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் காலித் ஆஜர்படுத்தினார்.

நபி (ஸல்) அவர்கள், உகைதிரின் உயிருக்குப் பாதுகாப்பு அளித்து, இஸ்லாமிய அரசுக்குத் திரை செலுத்துமாறு உடன்படிக்கை செய்து அவரை விடுதலை செய்தார்கள். இதன் பின்னர் உகைதிர் தனது ஊருக்குத் திரும்பி விட்டார்.

இவ்வாறு இப்னு இஸ்ஹாக் அறிவிக்கின்றார்.

நூல்: ஸாதுல் மஆத்

பாடம்: தபூர் போக்

"இரண்டாயிரம் ஒட்டகங்கள், எண்ணூறு ஆடுகள், நானூறு உருக்குச் சட்டைகள் தர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உகைதிரிடம் உடன்படிக்கை செய்தார்கள்' என்ற குறிப்புடன் இதே செய்தி இப்னு ஸஅதின் தபகாத்துல் குப்ராவில் பதிவாகியுள்ளது.

நூல்: ஸாதுல் மஆத்

மேற்காணும் இந்தச் சம்பவம் ஹிஜ்ரி 9ல் நடைபெற்றுள்ளது என்று அறிய முடிகின்றது. ஏனெனில் தபூக் போர் ஹிஜ்ரி 9ல் தான் நடைபெற்றது.

இதற்கு முன்பு தூமத்துல் ஜன்தலுக்கு நபி (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு படை சென்றுள்ளது. இது பற்றி இப்னு கஸீரின் அல்பிதாயா வன்னிஹாயாவில் இடம் பெறும் செய்தி:

நபி (ஸல்) அவர்கள் சிரியாவின் தாழ்வுப் பகுதிகளுக்குச் செல்ல விரும்பினார்கள். அப்போது, தூமத்துல் ஜன்தலில் ஒரு பெருங் கூட்டம் உள்ளது, அந்தக் கூட்டம் அவ்வூரைத் தாண்டிச் செல்லும் மக்களிடம் கொள்ளையடிக்கின்றது என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கின்றது. உடனே ஆயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தூமத்துல் ஜன்தலை நோக்கிப் புறப்பட்டார்கள்.

இந்தப் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை மேற் கொண்டார்கள். பகல் முழுவதும் ஓய்வெடுத்துக் கொண்டு இரவில் மட்டும் பயணம் மேற்கொண்டார்கள்.

(தூமத்துல் ஜன்தல், மதீனாவிலிருந்து 900 கி.மீ. என்பதால்) நபி (ஸல்) அவர்கள் ஒரு வழிகாட்டியை நியமித்திருந்தார்கள்.

தூமத்துல் ஜன்தலை நெருங்கியதும், பனூ தமீம் கிளையாரின் ஆட்டு மந்தை மற்றும் ஒட்டக மந்தையை அந்த வழிகாட்டி நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அதன் மீது தாக்குதல் தொடுத்து அவற்றைக் கைப்பற்றினார்கள். பிடிபட்டவர் பிடிபட்டனர்; தப்பி ஓடியவர்கள் தப்பி விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் தூமத்துல் ஜன்தலில் களமிறங்கினார்கள். ஆனால் அங்குள்ளவர்கள் ஊரைக் காலி செய்து விட்டு ஓடி விட்டனர். சில நாட்கள் நபி (ஸல்) அவர்கள் அங்கேயே தங்கி, காலி செய்து விட்டுப் போனவர்களைக் கண்டுபிடித்து வருமாறு தமது படைகளைப் பல்வேறு திசைகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் படையினர் முஹம்மது பின் ஸலமா என்பரைக் கைது செய்தனர். அவரிடம் அந்த ஊர்வாசிகளைப் பற்றி வினவிய போது, நேற்றே அவர்கள் ஓடி விட்டனர் என்று கூறினார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்கவே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இது தான் அல்பிதாயா வன்னிஹாயா என்ற நூலில் இடம் பெற்றுள்ள செய்தியாகும்.

இது ஹிஜ்ரி 5ல் நடந்ததாக இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவங்களின் மூலம் நபி (ஸல்) அவர்கள் முதல் தடவையாகவும், காலித் தலைமையிலான படையை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தது இரண்டாவது தடவையாகவும் ஏற்கனவே தூமத்துல் ஜன்தலுக்குப் படையெடுத்துச் சென்றதாக இந்தச் சம்பவங்களில் கூறப்பட்டுள்ளது.

படிப்பதற்குச் சுவையாகவும், சுறுசுறுப்பாகவும் அமைந்த இந்தச் சம்பவங்கள் வரலாற்று நூற்களில் தான் இடம் பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்பு உடையவையாக இருப்பதால் அந்தச் செய்திகளை ஏற்றுக் கொள்வதற்கு ஹதீஸ் கலை அறிஞர்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளார்கள்.


அந்த விதிமுறைகளுக்கு உட்படாத செய்திகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. தூமத்துல் ஜன்தல் தொடர்பாக நபி (ஸல்) அவர்களுடன் இணைத்து வரும் செய்திகள், சரியான அறிவிப்பாளர் தொடரில் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்படவில்லை. எனவே இவற்றை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நபி (ஸல்) அவர்கள் பற்றி இடம் பெறும் செய்திகள் ஒரு சிறு குறிப்பாக இருந்தாலும் சரியான அறிவிப்பாளர் வழித்தடத்தில் வந்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதே நமது நிலைபாடு. எனவே இந்தச் செய்திகளை நாம் தொடரில் இடம் பெறச் செய்யவில்லை.

EGATHUVAM APR 2008