நிர்வாகவியல் தொடர்: 5
தொடர்புத் திறன்
ஹாமீன் இப்ராஹீம்
நிர்வாகவியல் தொடரில் இதுவரை, ஒரு நிர்வாகம் வெற்றிகரமாக இயங்குவதற்கு அந்நிர்வாகத்தின் அங்கங்களான
நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய ஆளுமைப் பண்புகள் பற்றிப் பார்த்தோம்.
எப்படி ஒரு தனி மனிதர் தன்னளவில் சிறந்த பண்பாளராக, ஒழுக்கம் உடையவராக, திறமைகள் நிறைந்தவராகத் திகழ வேண்டுமோ அது போல் அவர் பிறரிடம்
உள்ள தொடர்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும். அந்த அடிப்படையில் தற்கால நிர்வாகவியல்
கல்வியின் இன்னொரு பகுதியான தொடர்புத் திறன் (ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ள்ந்ண்ப்ப்ள்)
பற்றி இனி பார்ப்போம்.
ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பதை, அந்நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கத்தை வைத்துத்
தான் முடிவு செய்ய முடியும். அதனால் தான் மக்கள் ஆதரவு இல்லாத கட்சிகள் லட்டர் பேடு
கட்சிகள் என்று ஏளனம் செய்யப்படுகின்றன. மக்கள் ஆதரவு இல்லாத தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
ஒருவரோடு ஒருவருக்குள்ள தொடர்புகள் சீராக இல்லாத காரணத்தால் குடும்பங்கள் சீரழிகின்றன.
வெற்றி பெற்ற நிர்வாகம் என்பது, நிர்வாகத்துக்கும்
மக்களுக்கும் உள்ள நெருக்கமான, விரைவான
தொடர்பில் தான் உருவாகின்றது.
தலைவர்கள் எனப்படுவோர் சிறந்தத் தொடர்பாடல் திறமை கொண்டவர்கள்.
தங்களது கொள்கைகளையும் எண்ணங்களையும் திட்டங்களையும் மக்களின் உணர்வுகளைத் தொடும் வண்ணம்
பரப்பத் தெரிந்தவர்கள்.
தற்கால ஆய்வுகளின்படி சிறந்த நிர்வாகி அல்லது தலைவர்கள் பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகிய இரண்டிலுமோ அல்லது இரண்டில் எதாவது ஒன்றிலோ
சிறந்து விளங்குகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பேசும் போது அடுக்கு மொழிகளை உயர்ந்த இலக்கிய நடையில் உரையாற்றி
சிறந்த பேச்சாளர் என்று பெயர் வாங்குவது பெரிதல்ல. உங்கள் பேச்சைக் கேட்டவர்கள் உங்கள்
கருத்தை நோக்கி எந்த அளவு நகர்கின்றார்கள் என்பது தான் நீங்கள் எவ்வளவு சிறந்த பேச்சாற்றல்
கொண்டவர் என்பதை முடிவு செய்யும்.
வளவளவெனப் பேசி மக்களுக்கு எரிச்சலூட்டி, சோர்வடையச் செய்யும் வகையில் தெரிந்த விஷயங்களையெல்லாம் கொட்டித்
தீர்ப்பது, அல்லது படபடவென குறுஞ்செய்தி
போல் முடித்து விடுவது சிறந்ததல்ல.
பேசப் போகும் விஷயத்தை முன் கூட்டியே தயாரித்தல், நமக்கு முன் அமர்ந்திருக்கும் மக்களின் அறிவுத் திறன், கல்வித் தகுதி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குப்
புரியும் விதத்தில் செய்திகளை எளிமையாக விளக்குதல் அவசியம். கேட்பவர்களை ஆர்வமூட்டுதல், இடைவெளி விட்டுப் பேசுதல், வார்த்தைக்குத் தகுந்தாற்போல் உடல் பாவனைகளுடன் குறைந்த நேரத்தில்
முடித்துக் கொள்வது போன்றவை சிறப்பு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சு, கேட்கும் அனைவரும் எளிதில் விளங்கும் விதத்தில் தெளிவான வார்த்தைகளாக
இருந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத்
நபி மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை சந்திக்கப் பல முன்னேற்பாடுகளைச்
செய்தார்கள். அதில் ஒன்று, மிகத் தெளிவாகப்
பேசும் ஆற்றலுடைய தமது சகோதரர் ஹாரூனை உதவியாக அனுப்பும்படி அல்லாஹ்விடம் கேட்டுப்
பெற்றார்கள். என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன்
உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள்
என்று அஞ்சுகிறேன் (என்றும் கூறினார்).
அல்குர்அன் 28:34
மற்றவர்களைப் புரிந்து கொள்தல்
ஒரு நிர்வாகி, தலைவர் தன் நிலையிலிருந்து பணியாற்றுதல், மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமை போன்ற காரணங்களால்
சர்வாதிகாரம் செலுத்துபவர் போல் தோன்றும். நாளடைவில் அவரை சக நிர்வாகிகளும் மக்களும்
வெறுக்கும் சூழ்நிலை உருவாகும்.
அதனால் இன்று மற்றவர்களைப் புரிந்து கொள்வது தொடர்புத் திறனின்
அடிப்படையாகக் கருதப்படுகிறது. இது பெரும்பாலும் தனக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள
சிறப்புத் தகுதி என்று பெரும்பாலானோர் எண்ணுவதைப் பார்க்க முடியும். பிறரைப் புரிந்து
கொள்வதென்பது அறிவுக்குப் புலப்படாத அற்புதம் ஒன்றும் இல்லை.
பிறரைப் புரிந்து கொள்ள அவர் பேசுவதை நன்றாகக் கேட்பது, அவருடைய நடவடிக்கைகள் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனிப்பது, அவரைப் பற்றி விசாரிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் எளிதில்
தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் பேசுவதைச் செவிமடுப்பது
சிலர் பேசிக் கொண்டேயிருப்பார்கள். பிறரைப் பேசவும் விட மாட்டார்கள்.
எதிரில் அமர்ந்திருப்பவர் சிரமப்பட்டுப் பேசத் துவங்கினாலும் இடையில் குறுக்கிட்டு
மீண்டும் தனது பேச்சை தொடருவர். எனவே பிறர் பேசுவதை செவிமடுக்க வேண்டும். அவ்வாறு கேட்கும்
போது,
அவருடைய சிந்தனை ஓட்டம், அனுபவம், பலம், பலவீனங்கள் முதலியவை தெளிவாகப் புரிந்துவிடும். எனவே உரையாடும்போது
எதிரிலிருப்பவரை முழுமையாகப் பேசவிட்டு உங்கள் பேச்சைத் துவங்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம் மற்றவர்களுடைய பேச்சுக்குச் செவிசாய்ப்பதை, கவனித்தல், உள்வாங்கிக்
கொள்ளுதல், கேட்பதைப் போல் நடித்தல்
எனப் பல வகைகளாகப் பிரிக்கின்றனர். இதில் நீங்கள் எந்த வகை?
திருக்குர்ஆன் கூறுகின்றது:
அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள்.
அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள்.
அல்குர்ஆன் 39:18
நடவடிக்கைகள் பழக்க வழக்கங்களைக் கவனித்தல்
ஒருவருக்கு நெருக்கமாக இருக்கும் அளவுக்கு அவரைப் பற்றிப் புரிந்து
கொள்ள முடியும். ஒரு மனிதனின் பொறுமை, வாக்குறுதிகளைக் காப்பாற்றும் திறன், உதவி செய்தல், உடல் வலிமை போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள்
அழகான வழிமுறைகளைக் காட்டினார்கள்.
அதாவது ஒருவருடன் பயணம் செய்வது, கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வது இந்த இரண்டு தொடர்புகளும்
வைத்துக் கொண்டாலேயே பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் மனதில் சம்பந்தப்பட்ட
நபரைப் பற்றிய முடிவுக்கு வந்துவிடுவீர்கள்.
மற்றவர்களைப் பற்றி விசாரித்து அறிதல்
பல நேரங்களில் ஒரு தனி நபர் சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய
நிலைக்கு ஒரு நிர்வாகமோ அல்லது தனி நபர்களோ தள்ளப்படுகின்றோம். அப்போது அவரை நன்றாகத்
தெரிந்தவர்களிடம் முறையாக விசாரிப்பது அவரைப் பற்றி அறிந்து கொள்ள வழிவகுக்கும்.
(விவாகரத்துச் செய்யப்பட்ட) நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா
பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப்
பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார்.
(கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து
விடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்
என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
நீ உசாமாவை மணந்துகொள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை
வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அறிவிப்பவர்: ஃபத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2709
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுபவர்களில் நான் யாரைத்
தேர்வு செய்யட்டும் என்று கேட்ட போது நபி அவர்கள் தெளிவாகக் கருத்துக் கூறியது ஒரு
சிறந்த முன்மாதிரி.
ஆகையால் ஒருவருக்கு இருக்க வேண்டிய தொடர்புத் திறனில் மற்றவர்களைப்
புரிந்து கொள்வது முதல் நிலை என்பதை அறிந்து தொடர்பு கொள்வோம்.
ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறரை எடை போடுகின்றோம்
என்று நமக்குப் பிடிக்காதவர்களின் குறைகளைப் பேசித் திரியக் கூடாது.
மனதைத் தூண்டுதல்
ஒரு நிர்வாகம் எப்பொழுது சீராக இயங்கும் என்றால் சாதாரண மனிதர்களைக்
கொண்டு மாபெரும் பணிகளை செய்து முடிக்கக் கூடிய நிர்வாகிகளைப் பெற்றிருப்பதன் மூலமே!
ஒரு இயக்கத்தை அல்லது நிறுவனத்தை வழி நடத்தும் நிர்வாகி தானே
தூங்கிக் கொண்டிருந்தால் நிறுவனத்தின் அல்லது அந்த இயக்கத்தின் எந்த பணிகளும் நடைபெறாது.
சுயமாக, தானே
சிந்தித்து, வசதியிருந்தால் சுற்றியிருக்கும்
நடப்புகளைக் கவனித்துத் தகவல் கூற உதவியாகச் சிலரை வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்தின், இயக்கத்தின் அங்கங்களை ஓயாமல் இயக்க வேண்டும். இத்தகையோர் தலைவர்களாக
இருக்கும் இயக்கமோ நிர்வாகமோ தான் எதிர்காலத்தில் தனது இலக்கை அடையும். இவர்களது சிந்தனையில்
வேகம்,
விவேகம், வீரியம், சுறுசுறுப்பு, உரிய நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு, எப்போதுமே சக ஊழியர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, அவர்கள் சோர்வடையும் நேரங்களில் புத்துணர்ச்சியூட்டுதல் என ஒரு
நிர்வாகியின் அத்தனை நடவடிக்கைகளும் அவரது சக நிர்வாகிகளைத் தூண்டி பணிகளை முடிப்பதிலேயே
குறியாக இருக்கும்.
இந்தத் திறமைகளை, ஆற்றலை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முழுவதும் நாம் காண முடிகின்றது.
எந்த வகையிலும் ஒப்பிட முடியாத பலம் கொண்ட ஒரு படையை எதிர்த்துப் போரிட பத்ருக் களத்தை
நோக்கிப் படை நடத்திய போது தம்முடனிருந்த தோழர்களை நபியவர்கள் தயார் படுத்திய விதம், உற்சாகப்படுத்திய விதம், அவர்களுக்கு ஆர்வமூட்டிய விதத்தை நாம் கூறவும் முடியுமா?
இதோ அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார்.
நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர்.
நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும்
உடையவர்.
அல்குர்ஆன் 9:128
ஆக ஒரு சிறந்த தலைவன் என்பது தடையில்லா மின்சாரம் பாய்ச்சும்
மனதுக்குச் சொந்தக்காரன்.
மனித வளம்
உலகில் எத்தனை புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும், விதவிதமான ரோபோக்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும் மனிதனின் அறிவுக்கு
இணையான ஒன்றை மனிதனால் உருவாக்க முடியாது. ஆகையால் எந்த ஒரு நிர்வாகத்திற்கும் அந்த
நிர்வாகத்திற்காக உழைக்கும் ஊழியர்கள் தான் முதல் வளமும் முழு வளமும் ஆகும். இதைப்
புரிந்து கொள்ளாதவர்கள் நிர்வகிக்கும் நிர்வாகம் சண்டைகளின் கூடாரமாகக் காணப்படும்.
மனித வளங்களைத் திரட்டுவதும், தேர்வு செய்வதும், அவர்களைப் பயிற்றுவிப்பதும், பணிகளைப் பகிர்ந்தளித்து அதை நேர்த்தியாக நிறைவேற்றுபவராக மாற்றுவதும்
ஒரு தலைவனின் திறமைகளில் முதல் திறமையாக இருக்க வேண்டும்.
பெரும் பெரும் தொழில் நிறுவனங்களைப் பொறுத்த வரை இது உலகெங்கும்
நடக்கின்றது. இஸ்லாமிய இயக்கங்களுக்கு இது பெரும்பாலும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதனால்
தான் நிலைக்காது என்று தெரிந்தும் பொய்யைக் கூறி தங்கள் கொள்கைகளை மறந்து கட்சிக்கு
ஆள் சேர்க்கின்றனர்.
பல தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ள உறுப்பினர்களை அதிகாரம்
செய்வது தான் தலைவரின் வேலை என நினைக்கின்றார்கள். மேலும் பலர் தங்களது கட்சிகளின்
பாரம்பர்யம் பற்றிப் பேசுவார்கள். ஆனால் மக்கள் இருக்க மாட்டார்கள்.
ஆகையால் மனித வளம் நிறைந்த ஒரு நிறுவனம், ஒரு கட்சி அல்லது இயக்கம் தான் உயிரோட்டமுள்ளதாக இயங்கும். இத்தகைய
சிறந்த வளத்தைத் தங்கள் பேச்சால், எழுத்தால், நடைமுறையால், முன்மாதிரி ஒழுக்க வாழ்க்கையால் மக்களைச் சுண்டி இழுப்பவர்கள்
தான் தலைவர்கள், நிர்வாகிகள்.
இப்படி இணைபவர்களின் சுக துக்கங்களில் நிர்வாகிகள் பங்கு வகிக்க
வேண்டும். அவர்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். முடிந்த வரை உதவிகள்
செய்ய வேண்டும். அவர்களைப் பயிற்றுவித்துத் திறமையானவர்களாக (ஊச்ச்ண்ஸ்ரீண்ங்ய்ற்)
மாற்ற வேண்டும்.
இதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் காண
முடியும். நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் தூதுத்துவத்தை அறிமுகப்படுத்தும் போது அவ்வூரில்
சூதாட்டம், மது, விபச்சாரம், வன்முறை இன்னும் என்னென்ன சமூகக் கொடுமைகள் உள்ளனவோ அத்தனையும்
சூழ்ந்து கிடந்தது.
அங்கு தனது பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரையும் தொண்டர்களாக
அல்லாமல் தோழர்களாக மாற்றி, அற்ப விஷயங்களுக்காக
அடித்துக் கொண்டிருந்தவர்களை அடி வாங்கும் போதும் பொறுமை காப்பவர்களாக மாற்றி, பொறுமையின் உச்சக்கட்டத்தை அடைந்தவர்களைப் போர் வீரர்களாகவும்
மாற்றி உலக வரலாற்றைப் புரட்டிப் போட்டதன் பின்னணி, நபி (ஸல்) அவர்கள் மனித வளத்தைப் பயன்படுத்திய விதம் தான்.
இறைவன் நாடினால் இன்னும் வரும்
ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 16
நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா?
எஸ். அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.சி.
சூனியம் என்பது கற்பனையல்ல; மெய்யான அதிசயமே! அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம்.
படுத்த படுக்கையில் தள்ளலாம் என்றெல்லாம் பல அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள்
கூற்றை நிரூபிக்கச் சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள். புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபி (ஸல்)
அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. தங்களின் கருத்தை மெய்யாக்குவதற்கு
இவற்றை ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள். அந்த ஹதீஸ்கள் வருமாறு:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. தாம்
செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள்
என்னை அழைத்தார்கள். எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டி விட்டான் என்பது
உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள்.
இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப் பகுதியில் அமர்ந்து
கொண்டார். மற்றொருவர் என் கால் பகுதியில் அமர்ந்து கொண்டார். இந்த மனிதருக்கு ஏற்பட்ட
நோய் என்ன? என்று ஒருவர் மற்றவரிடம்
கேட்டார். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் விடையளித்தார். இவருக்குச்
சூனியம் செய்தவர் யார்? என்று முதலாமவர்
கேட்டார். லபீத் பின் அல்அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான் என்று இரண்டாமவர் கூறினார்.
எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது? என்று
முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர், சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும்
சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று விடையளித்தார். எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது? என்று முதலாமவர் கேட்டார். தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது
என்று இரண்டாமவர் கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர்
அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்குள்ள பேரீச்சை மரங்கள்
ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னிடம் கூறினார்கள். அதை அப்புறப்படுத்திவிட்டீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள், இல்லை! அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில்
தீமையைப் பரப்பக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் அந்தக்
கிணறு மூடப்பட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3268
தம் மனைவியிடத்தில் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக
நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரி 5765
நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக
ஒரு செய்தி கூறுகிறது. நூல்: அஹ்மத் 23211
நபி (ஸல்) அவர்களே தன்னிலை மறக்கும் அளவிற்கு ஆறு மாத காலம்
சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது
என்று இவர்கள் வாதிடுகிறார்கள். மேற்கண்ட ஹதீஸைப் பார்க்கும் போது இது சரியான கருத்து
போன்று தோன்றலாம். ஆனால் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம்
வைக்கப்பட்டிருக்கவோ அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்திற்குத்
தான் வந்தாக வேண்டும். பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக
அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது; அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது; தான் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு
அமைந்திருந்தது என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால்
அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன. திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும்
பாதிப்பு முதலாவது பாதிப்பாகும். சூனியம் வைக்கப்பட்டதன் காரணமாக, தான் செய்யாததைச் செய்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால்
அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ (இறைச் செய்தி) சந்தேகத்திற்குரியதாக
ஆகிவிடும்.
தம் மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபட்டதை அல்லது ஈடுபடாமல்
இருந்ததைக் கூட நபி (ஸல்) அவர்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையென்றால் இறைவனிடம்
வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம். தமக்கு வஹீ வந்திருந்தும் வரவில்லை
என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில்
அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும். எந்த ஆறு மாதம்
என்று தெளிவாக விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் இந்த ஆறு
மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். இஸ்லாம் உண்மையான
மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் இருக்கும் ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில்
சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். திருக்குர்ஆனில்
பொய்யோ கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தை தான் என்று திருக்குர்ஆன்
பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப்
பாதுகாப்போம்.
அல்குர்ஆன் 15:9 அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும்
இல்லாத குர்ஆனை (அருளினோம்.)
அல்குர்ஆன் 39:28
இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து
அருளப்பட்டது.
அல்குர்ஆன் 41:42
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான
முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் 4:82
பாதுகாப்பு ஏற்பாடுகள்
குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன்
அடைத்து விட்டான். இது இறை வேதமாக இருக்காது என்ற சந்தேகம் எள் முனையளவும் ஏற்படக்
கூடாது என்பதற்காகப் பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான். நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத்
தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனுடைய
வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். முஹம்மது தனது புலமையைப் பயன்படுத்தி உயர்ந்த
நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார் என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள்.
இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு இறைவன் எழுத்தறிவை வழங்கவில்லை
என்று கூறுகிறான். (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக
இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால்
வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் 29:48
எழுத்தறிவு வழங்குவது பெரும் பாக்கியமாக இருந்தும் அந்தப் பாக்கியத்தை
வேண்டுமென்றே நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கவில்லை. திருக்குர்ஆனில் சந்தேகம்
ஏற்படக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்துள்ளான் என்று மேலுள்ள வசனம் கூறுகிறது.
திருக்குர்ஆன் இறைவனுடைய வார்த்தையா? அல்லது மனிதனின் கற்பனையா? என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை
உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ அல்லது செய்ததைச்
செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறியது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.
நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாகக்
கூறும் குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே நபி (ஸல்) அவர்களின் மன
நிலை பாதிக்கப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நபி (ஸல்) அவர்களின் அழைப்புப்
பணியை முடக்குவதற்குப் பலர் முயற்சித்த போதும் அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை.
அழைப்புப் பணிக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மக்கள்
செய்யும் தீமைகளிலிருந்து நபி (ஸல்) அவர்களைக் காத்துக் கொள்வதாக அல்லாஹ் உத்தரவாதம்
தருகிறான். எனவே நபியவர்களின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்குரியதாக ஆக்கும் சூனியத்தை
எந்த முஸ்லிமும் நம்பிவிடக் கூடாது. தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை
எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக
மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு
அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 5:67
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM JUL 2009