Apr 9, 2017

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார் தொடர் – 5

மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார் தொடர் 5
எம். ஷம்சுல்லுஹா

மக்காவில் நபி (ஸல்) அவர்களை எதிர்த்தவர்கள் காஃபிர்கள். அவர்கள் மறுமையை நம்பாதவர்கள். இந்த உலமாக்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் மறுமை நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களும் அவர்களும் எப்படி ஒன்றாவார்கள்?

மக்கத்துக் காஃபிர்களுக்கு மறுமை நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் தெளிவான நம்பிக்கையில் இருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் இன்றைய காலத்து இந்த இணை வைப்பு ஆலிம்களை விட அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி மிக மிகத் தெளிவான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதை நாம் திருக்குர்ஆனில் விளக்கமாகப் பார்க்கலாம்.

அவர்களைப் படைத்தவன்

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

அல்குர்ஆன் 43:87

வானங்களைப் படைத்தவன்

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்'' எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 43:9

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அல்லாஹ் தான் என்பதை அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.

மேலும் அல்லாஹ்வை அஸீஸ், அளீம் - மிகைத்தவன், அறிந்தவன் என்பதையும் மக்கத்து முஷ்ரிக்குகள் ஒப்புக் கொண்டிருந்தனர்.

பூமி அவனுக்கே சொந்தம்

"பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "அல்லாஹ்வுக்கே'' என்று அவர்கள் கூறுவார்கள். "சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:84, 85

அர்ஷின் நாயன்

"ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:86, 87

மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வையும், அவனது அர்ஷையும் நம்பியிருந்தார்கள் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.

பாதுகாப்பு அளிப்பவன்

"பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)'' என்று கேட்பீராக! "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:88, 89

அல்லாஹ்வை இப்படியெல்லாம் நம்பியிருந்த அந்தக் காஃபிர்கள், சாதாரண காலங்களில் மற்ற தெய்வங்களை அழைத்துப் பிரார்த்திப்பார்கள். மிக நெருக்கடியான காலகட்டங்களில் அல்லாஹ்வை மட்டும் தான் அழைத்தார்கள். இதைப் பின்வரும் வசனத்தில் பார்க்கலாம்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

அல்குர்ஆன் 31:32

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

அல்குர்ஆன் 29:65

இப்படி சோதனையான காலத்தில் அந்தக் காஃபிர்கள் இறைவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்தித்தனர். ஆனால் இன்றோ இவர்கள் சாதாரண காலத்திலும், அசாதாரண காலத்திலும் அதாவது ஆபத்துக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு நிற்கும் போதும் அல்லாஹ்வை அழைக்காமல் முஹ்யித்தீனை அழைக்கின்றனர்.

குறிப்பாக பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகப் பயங்கரமான கட்டம்! அந்த நெருக்கடியான, இக்கட்டான கட்டத்தில் இந்தப் பெண்கள் "யா முஹ்யித்தீன்' என்று அழைக்கிறார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் மக்கா காஃபிர்களை விடவும் கேடு கெட்டவர்கள். இணை வைப்பில் அவர்களை விட மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள். மற்ற வகையில் அவர்களுக்கு எல்லா வகையிலும் ஒப்பானவர்களாக இருக்கிறார்கள்.

பரிந்துரை செய்யும் அவ்லியாக்கள்

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்கு வார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 39:3

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 10:18

இதே வாதத்தைத் தான் இன்றைய இணை வைப்பாளர்களும் முன்வைக்கிறார்கள்.

"நாங்கள் கேட்பதை இந்த அவ்லியாக்கள் தருவார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. இவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள்' என்று மக்கா காஃபிர்கள் சொன்னதைப் போல் சொல்கிறார்கள்.

மக்கா காஃபிர்கள் அல்லாஹ்வின் படைப்பாற்றலை நம்பியிருந்தார்கள். அவர்கள் கண்களால் காணாத, மறுமையில் மட்டுமே பார்க்கக் கூடிய அர்ஷை நம்பியிருந்தார்கள்.

ஆனால் அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப் பிரார்த்தித்தார்கள்.

அந்தத் தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்று நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பினார்கள்.

இந்த நம்பிக்கை கொண்டவர்களைத் தான் காஃபிர்கள், இணை வைப்பாளர்கள் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான்.

அப்படியானால் இதே கொள்கையைக் கொண்டிருக்கும் இந்த இணை வைப்பாளர்களை, இதைப் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை எப்படி முஸ்லிம்கள் என்று கூற முடியும்?


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM SEP 2008