ஈட்டி முனையில் நிறுத்திய போதும்...
அபூராஜியா
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ்நாடு
தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிரான அவதூறுப் பிரச்சாரமும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு கோரி, கும்பகோணத்தில் பல இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பேரணி
மாநாட்டை நாம் நடத்தினோம். இட ஒதுக்கீடு வழங்கும் கட்சியைத் தான் ஒட்டு மொத்த முஸ்லிம்களும்
ஆதரிப்போம் என்று அந்த மாநாட்டிலேயே தெளிவாக அறிவித்தோம்.
இதன் எதிரொலியாக புதுவையில் முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு
வழங்கக் கோரும் தீர்மானத்தை அங்குள்ள காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. அந்த அறிவிப்பு
வெளியான மாத்திரத்தில், வரும் சட்டமன்றத்
தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் கூட்டணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்று
அறிவித்தோம்.
அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு
வழங்குவதைப் பற்றி ஆராயும் ஆணையத்தை அதிமுக அரசு அமைத்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டவுடன்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்தோம்.
ஆதரிப்பதோடு மட்டும் நின்று விடாமல், இந்த அரசு அமைத்துள்ள ஆணையத்தின் பரிந்துரைகள் சட்டமாக்கப்பட
வேண்டும் என்றால், மீண்டும் அதிமுக
ஆட்சி அமைவது தான் வழி என்பதைக் கருத்தில் கொண்டு, அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்ய வேண்டும் என
19.03.06 அன்று சேலத்தில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொய் மற்றும் அவதூறை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வரும்
நமது முன்னாள் சகாக்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இட ஒதுக்கீடு வழங்குபவர்களைத் தான் ஆதரிப்போம் என்று தவ்ஹீது
ஜமாஅத்திற்குப் போட்டியாக ஒரு புறம் அறிக்கை விட்டுக் கொண்டு, மறு புறம் திமுக மாநாடுகளில் போய், நீங்கள் தான் அடுத்த முதல்வர் என்று ஜால்ரா தட்டிக் கொண்டு வரும்
முன்னாள் சகாக்களுக்கு, ஒட்டுமொத்த
முஸ்லிம் சமுதாயமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பின்னால் திரள்வதைப் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை.
திமுகவை ஆதரிப்பதற்கு நியாயமான எந்தக் காரணமும் கிடைக்காத நிலையில்
நம்மைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவதை தற்போது முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏகத்துவத்தில் நாம் எழுதிய
தலையங்கத்தில் ஒரு பகுதியை எடுத்து பிரசுரமாக வெளியிட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 2004 ஏகத்துவத்தில், நாடாளுமன்றத் தேர்தலும் நமது நிலையும் என்ற தலைப்பில் வெளியான
செய்திகள் இதோ:
ஒரு முஸ்லிமின் உயிர்நாடிக் கொள்கை ஏகத்துவம் தான்! இந்த ஏகத்துவத்தை
ஒரு முஸ்லிம் ஒரு போதும் யாரிடமும் சமரசம் செய்து கொள்ள மாட்டான். ஏகத்துவம் என்று
வந்து விட்டால் ஊரையும் துறப்பான்; உயிரையும் துறப்பான். இதைத் திருக்குர்ஆனில் குகைவாசிகளின் வரலாற்றில்
நாம் காணலாம்.
திருமணம் முடித்து உல்லாசமாக வாழ வேண்டிய வாலிப வயது வட்டத்தினர், தங்களின் ஊர் மக்களிடம் மிகைத்திருந்த "ஷிர்க்'கைக் கண்டு, பொங்கி எழுந்து, அந்த ஊரையே புறக்கணித்து வெளியேறி குகையில் தஞ்சம் அடைகின்றார்கள். இதோ அந்தப் புரட்சி இளைஞர்கள், இறைவனுக்கு இணை வைப்பைக் கண்டு, பொறுக்க முடியாமல் பொரிந்து தள்ளிய அக்னிப் பொறிகளைப் பற்றி
திருக்குர்ஆன் கூறுகின்றது.
அவர்கள் எழுந்து "நமது இறைவன் வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாவான். அவனன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க
மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்று அவர்கள் கூறிய போது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.
இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக்
கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும்
அநீதி இழைத்தவன் யார்?
"அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றையும் விட்டு விலகி அந்தக்
குகையில் ஒதுங்குங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான்.
உங்கள் பணியை எளிதாக்குவான்'' (எனவும்
கூறினர்)
அல்குர்ஆன் 18:14,15,16
முன்னூற்றுக்கும் மேற்பட்ட வருடங்கள் என்று சொல்லப்படும் அளவுக்கு
அந்த இளைஞர்களை அல்லாஹ் குகையில் வைத்துக் காத்தான். காரணம் ஒன்றே ஒன்று தான்! அவர்கள்
ஷிர்க்கை எதிர்த்து நின்றது தான்.
அந்த ஒன்றுக்காக அல்லாஹ் அவர்களது வாழ்வைப் பிரகாசிக்கச் செய்து
விட்டான். இதை நமக்கு அல்லாஹ் கூறிக் காட்டுவதன் நோக்கம், ஷிர்க்கை எதிர்த்து ஊர் துறக்க வேண்டுமெனில் இந்தக் குகைவாசிகளான
இளைஞர்களைப் போன்று நாமும் துறக்க வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் ஊரை மட்டுமல்ல! உயிரைத் துறக்க வேண்டும்
என்றாலும் துறக்க வேண்டும். இதற்குக் குர்ஆன், ஹதீஸில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.
யாஸிர் (ரலி), சுமைய்யா (ரலி) போன்றோர் உயிர் துறந்தும் இந்தக் கொள்கையைக்
காத்தனர். அதனால் தான் "ஈட்டி முனையில் நிறுத்தினாலும் ஈமானை இழக்க மாட்டோம்'' என்ற வீர வரிகளைக் கவிஞன் பாடி வைத்திருக்கின்றான்.
இந்த வீர வரிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு களப்பணியாற்றத் துவங்கியவர்கள்
தான் முஸ்லிம் லீக் அணியினர். ஆனால் ஈட்டி முனை வேண்டாம், தேர்தல் போட்டி முனையிலேயே ஈமானை இழந்து விடுகின்றனர். இதில்
முஸ்லிம் லீக்கினர் மட்டுமல்ல! களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை
இழந்து விடுகின்றனர்.
நி வணக்கத்திற்குரிய
நாயன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் என்று ஈமான் கொண்டோர் வார்த்தைக்கு வார்த்தை வணக்கம்
கூறி,
இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தை அடியார்களுக்குச் செலுத்த
ஆரம்பித்து விடுகின்றனர்.
நி இது போதாது என்பதற்காக
கையெடுத்துக் கும்பிடவும் செய்கின்றனர். இதன் மூலம் பிற மதத்தவர் செலுத்துகின்ற வணக்கத்தை
இவர்களும் செயல்பூர்வமாக செய்யத் துவங்கி விடுகின்றனர்.
நி தான் ஒரு மதத்துக்குச் சார்பாக இருக்க மாட்டேன் என்பதை நிரூபிப்பதற்காக
கோயிலில் போய் சிலைகளை வழிபட்டு, நெற்றியில்
பொட்டும் வைத்துக் கொள்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு வரவேற்பு கொடுத்து தன்னை ஒரு
மதச்சார்பற்ற முஸ்லிம் என்று நிரூபிக்க முனைகின்றனர்.
நி ஒரே மேடையில் உட்கார்ந்து
கொண்டு தங்களுக்கு "சீட்' கொடுத்த
தலைவரை கடவுள் நிலைக்கு அல்லது நபி (ஸல்) அவர்களின் நிலைக்குக் கொண்டு போய் நிறுத்தி
விடுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்
லீக் தலைவர் காதர் முஹைதீன் அண்மையில் கருணாநிதியை வலியுல்லாஹ்வாக ஆக்கி மகிழ்ந்ததைக்
கூறலாம்.
நி தேர்தல் என்று வந்ததும்
அரசியல் கட்சியினர் தாங்கள் பதுக்கி வைத்திருந்த பண மூட்டைகளைத் தேர்தல் களத்தில் வந்து
கொட்டுகின்றனர். தண்ணீராய்ப் பாய்ச்சுகின்றனர். இதில் பரிசுத்த முஃமினும் ஈமானைப் பறி
கொடுத்து விடுகின்றான்.
பாருங்கள்! தேர்தல், ஒரு முஸ்லிமை என்ன பாடுபடுத்துகின்றது என்று பாருங்கள்! இதில் எதுவுமே கற்பனையில்லை. நம் கண் முன்னால் நடந்த
நிகழ்வுகள். எதற்கும் விலை போகாத ஓர் இறை விசுவாசி, இணை வைப்பை எதிர்ப்பதற்காக, ஏகத்துவத்தைக் காப்பதற்காக தன் இன்னுயிரையும் அர்ப்பணிக்கக்
கூடியவன்,
குகைவாசிகளைப் போன்று ஊரையே துறக்கக் கூடியவன், தேர்தலில் களப்பணி ஆற்றுகின்ற போது எப்படி ஆகி விடுகின்றான்
என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மற்றவர்கள் வரம்பு மீறிப் போயிருக்கலாம். ஆனால் நாம் அப்படியல்லவே!
நாம் தான் ஏகத்துவத்தில் உறுதியானவர்களாக இருக்கின்றோமே! நாம் களமிறங்கினால் என்ன தவறு? என்று கேட்கலாம். நாம் என்ன தான் உறுதியானவர்களாக இருந்தாலும், நம்மீது நமக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தாலும்,
"யார் வேலியைச் சுற்றி மேய்கின்றாரோ அவர்
வேலிக்குள்ளேயே சென்று விடக் கூடும்' (புகாரி 2051) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் நிலைக்கு நாம்
ஆளாக மாட்டோம் என்பது என்ன நிச்சயம்?
தேர்தலில் களப்பணி ஆற்றும் போது கொள்கை அடிப்படையில் முதலில்
ஷிர்க்குடன் சமரசம், அதன் பின்
சங்கமம் என்று ஷிர்க்கில் ஐக்கியமாகி விடுகின்றான் என்பதைக் கடந்த கால வரலாறுகள் நிதர்சனமாக
எடுத்துக் காட்டுகின்றன. அல்லாஹ் இது போன்ற நிலை ஏற்படுவதை விட்டும் நம்மைப் பாதுகாக்க
வேண்டும்.
இந்த இஸ்லாமிய சகோதரன் புறப்பட்டது என்னவோ எதிரிகளைக் காணாமல்
ஆக்குவதற்காகத் தான். ஆனால் தேர்தல் களத்தில் இவனே காணாமல் போய் விடுகின்றான். இந்த
நிலை ஏற்படாமல் தேர்தல் களத்தில் ஒரு முஃமின் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இதுவே
ஏகத்துவவாதிகளுக்கு ஏகத்துவம் விடுக்கும் வேண்டுகோளாகும்.
ஏகத்துவம், ஏப்ரல்
2004
இந்தக் கட்டுரையை முழுமையாக வெளியிடாமல் இதன் ஒரு பகுதியை மட்டும்
வெளியிட்டு, "பார்த்தீர்களா!
இவர்கள் அன்று தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று சொன்னார்கள். இப்போது தேர்தல்
பிரச்சாரம் செய்யப் போகின்றார்கள்'' என்ற கருத்தில் பிரசுரம் வெளியிட்டு வருகின்றனர்.
தேர்தல் குறித்து அன்று நாம் எந்த நிலைப்பாட்டில் இருந்தோமோ
அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் இருக்கின்றோம். கொள்கை மாறியவர்கள் யார் என்பதை ஊரறியும்.
தேர்தல் பிரச்சாரம் செய்யவே கூடாது என்பது நமது நிலைப்பாடு அல்ல.
அந்தக் கட்டுரை வெளியாவதற்கு முன்பு வரை தேர்தல் பிரச்சாரத்தில் நாமும் ஈடுபட்டவர்கள்
தான்.
தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, ஷிர்க்குடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது; தேர்தல் களத்தில் ஈமானை இழந்து விடக் கூடாது என்பதைத் தான் அந்தக்
கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இன்றும் அதைத் தான் கூறுகின்றோம்.
அதனால் தான் இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் அமைக்கும் மேடைகளில், அவர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்யாமல், தனி மேடை அமைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து
உள்ளோம்.
இட ஒதுக்கீடு, தேர்தல் வெற்றி எல்லாவற்றையும் விட நமக்கு மறுமை வெற்றி தான்
முக்கியக் குறிக்கோள் என்பதை நாம் எப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது. தேர்தல் கூட்டணிக்காக
கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
கூட்டணித் தலைவர் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தால் நாமும் எழுந்து
நின்று,
அவர் சிறுநீர் கழித்து விட்டு வரும் போதும் எழுந்து நிற்கும்
சுய மரியாதை இல்லாத பிண்டங்களாக ஒரு போதும் நாம் மாற மாட்டோம்.
கூட்டணிக் கட்சியின் மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டுக் கொண்டு
முன்னே செல்ல, தாரை தப்பட்டை முழங்க,
"வாடி பொட்டப் புள்ள...' என்று இன்னிசை கீதம் இசைக்க, கை கூப்பிக் கொண்டு செல்லும் வேட்பாளருடன் தானும் நின்று ஓட்டுப்
பொறுக்கும் கேடு கெட்ட கலாச்சாரத்திற்கு ஒரு போதும் சென்று விட மாட்டோம்.
ஒவ்வொரு டிசம்பர் 6ன் போதும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே முஸ்லிம்களைக் கைது செய்து
சிறையிலடைத்தது, விநாயகர் சதுர்த்தி, நவம்பர் 29, பிப்ரவரி
14 என்று எண்ணற்ற முன்னெச்சரிக்கைக் கைதுகள், வாஜ்பாய் சென்னை வந்தால் முஸ்லிம்கள் கைது, அத்வானி வந்தாலும் நரேந்திர மோடி வந்தாலும் முஸ்லிம்கள் மீது
முன்னெச்சரிக்கைக் கைது நடவடிக்கை, வாழ்வுரிமை மாநாட்டைச் சீர் குலைக்க, வெடிக்காத குண்டுகளைக் காரணம் காட்டி கைதுப் படலங்கள், கோவையில் 19 முஸ்லிம்களைக்
கொன்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வு அளித்தது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பார்க்கக் கூட வராதது, ஒரு நபர் கமிஷன் அமைத்து, "முஸ்லிம்களைக் கொன்றது சரி தான்' என்று சொல்ல வைத்தது, நம்மைத் தீவிரவாதிகள் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தது என
எண்ணிலடங்காத கொடுமைகளைக் கருணாநிதி செய்திருந்தாலும்,
"அவர் ரொம்ப நல்லவர், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை மதிப்பவர்' என்று சர்ட்டிபிகேட் கொடுத்து நமது முன்னாள் சகாக்கள் தமது மாஊ
பத்திரிகையில் எழுதினார்கள்.
இது போன்ற கடைந்தெடுத்த முனாஃபிக் தனத்தை ஒரு போதும் நாம் செய்ய
மாட்டோம். இன்னும் சொல்லப் போனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்கும் அதே கூட்டத்தில்
ஜெயலலிதா முஸ்லிம்களுக்குச் செய்த தீமைகளையும் சொல்லிக் காட்டுவோம். முஸ்லிம்கள் மீது
இழைக்கப்பட்ட கொடுமைகளையெல்லாம் கூட்டணி தர்மத்திற்காக மறைத்து, நயவஞ்சக நாடகம் ஆட மாட்டோம்.
இது போன்ற இழி நிலைக்கு ஆளாகி விடக் கூடாது என்று தான் நாடாளுமன்றத்
தேர்தலின் போதும் நாம் சொன்னோம். இப்போதும் சொல்கிறோம்.
அன்று நாம் எழுதியதற்கும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு நாம் எழுதுவதற்கும் ஒரேயொரு வித்தியாசம்
தான் உள்ளது.
தேர்தல் களத்தில் ஈமானை இழப்பதற்கு முஸ்லிம் லீக் தலைவர்களை
அன்று உதாரணம் காட்டினோம். இன்று நமது முன்னாள் சகாக்களை உதாரணம் காட்டுகிறோம்.
எதற்காகவும், யாருக்காகவும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்ற
நிலையில் நாங்கள் எள்ளளவும் பிசகவில்லை. அற்ப ஆதாயங்களுக்காக அரசியல் தலைவர்களிடம்
சுயமரியாதையை இழக்கும் இழிநிலையை இறைவன் அருளால் ஒரு போதும் நாங்கள் அடைய மாட்டோம்
என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்.
EGATHUVAM APR 2006