Apr 29, 2017

மாற்று மதத்தினருடன் நட்பு

மாற்று மதத்தினருடன் நட்பு

எஸ். அப்பாஸ் அலீ

முந்தைய காலங்களில் நமது சமுதாயத்தில் பலர், மாற்று மதத்தவர்களிடம் சரிவரப் பழகாமல் அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் ஏகத்துவ எழுச்சி தமிழகத்தில் பரவத் தொடங்கியது முதல் மாற்றாருக்கும் நமக்கும் மத்தியில் நல்லதொரு நட்பு ஏற்பட்டிருக்கின்றது.

மாற்று மதத்தவர்களுடன் அழகிய முறையில் பழகுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதுமில்லை. நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த, இஸ்லாத்தைத் தழுவாத மக்களிடம் அன்பாகப் பழகியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவுக்கு வந்த போது யூத மதத்தினர் முஸ்லிம்களுக்குத் துன்பம் கொடுத்தனர். முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டி, போர் புரிந்தனர். இப்படிப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களில் யாரேனும் தன்னிடம் அன்பாகப் பழக முன்வரும் போது அவர்களின் நட்பை நபியவர்கள் உதறித் தள்ளவில்லை.

நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு "இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!'' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், "அபுல் காசிம் (என்ற) நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!'' என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், "இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகலப் புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 1356

நபியவர்களுக்குப் பணிவிடை செய்யும் அளவிற்கு யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்கள். இந்த நெருக்கத்தினால் தான் யூதச் சிறுவன் நோய்வாய்ப்படும் போது அவனை நலம் விசாரிக்கச் செல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சிறுவனைப் பார்த்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொள் என்று கூறிய மாத்திரத்தில் அவனுடைய தந்தை ஏற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கிறார் என்றால் பெருமானார் மீது அவர் எவ்வளவு மரியாதை வைத்திருப்பார்? நபியவர்கள் அவரிடத்தில் அழகிய முறையில் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.

ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களை விருந்துக்காக அழைத்த போது  நபியவர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்கüடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பüப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதி-ருந்து (சிறிது) உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று (நபி (ஸல்) அவர்கüடம்) கேட்கப்பட்டது. அவர்கள், "வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கüன் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

நூல்: புகாரி 2617

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மாற்றுக்கொள்கையைக் கொண்ட மன்னர்கள் இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அளித்தனர். நபியவர்கள் அந்த அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டதோடு அந்த மன்னர்களுக்கு தன் புறத்திலிருந்து அன்பளிப்புகளை அனுப்பியும் வைத்தார்கள்.

தூமத்துல் ஜந்தல் என்ற நாட்டின் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பüப்புகளை அனுப்பினார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 2616

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டோம். "அய்லா'வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு (தல்தல் எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பüப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குச் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும் அவருக்கு எழுதினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி),

நூல்: புகாரி 3161

அழைப்புப் பணிக்குச் சிறந்த வழி
மாற்று மத நண்பர்களிடம் அழகிய முறையில் நாம் பழகுவது அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு முக்கியக் காரணமாகும். எனவே தான் அவர்கள் நம்மிடம் உதவி கேட்டு வந்தால் அவர்களுக்கு உதவலாம் என்று மார்க்கம் கூறுகின்றது.

இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 9:6)

மேலும் ஜகாத்தை மாற்றார்களுக்குத் தருவதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறது. அவர்களுக்கு ஜகாத் போன்ற உதவி கிடைக்கும் போது இஸ்லாத்தின் மீது ஒருவிதமான நல்லெண்ணம் ஏற்பட்டு இஸ்லாம் மனித நேயமிக்க மார்க்கம் என்பதை அறிந்து கவரப்படுவார்கள்.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)

இன்றைக்குத் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருக்கின்றோம். நாம் அனைவரும் அரபு நாட்டிலிருந்து இங்கே இறக்குமதி செய்யப்படவில்லை. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் நமது மூதாதையர் இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்திருப்பர்.

இஸ்லாத்தைப் பரப்புவதற்காக வெளிநாட்டிலிருந்து புறப்பட்டு வந்த ஓரிரு நபர்களால் நம் மூதாதையர் இஸ்லாத்தைத் தழுவினர். நம் நாட்டுக்கு இஸ்லாத்தைக் கொண்டு வந்த அந்த நல்லவர்களின் அழகிய பழக்க வழக்க முறைகளைக் கண்டே இவர்கள் கவரப்பட்டார்கள்.

மாற்று மத மக்களுடன் அவர்கள் நல்ல முறையில் பழகிய காரணத்தாலே இப்படிப்பட்ட சிறந்த மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் வெகுவாகப் பரவி இருக்கின்றது.

இஸ்லாம், இந்த மார்க்கத்தை மனித சமுதாயம் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என உத்தரவிடுகின்றது. இந்தப் பொறுப்பை முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது.

மாற்று மதத்தவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் நாம் வாழ்ந்தால் இந்தப் பணியை நம்மால் செய்ய முடியாது. அவர்களுடன் அழகிய முறையில் பேசுவது பழகுவது ஆகியவற்றின் மூலமே இப்பணி சிறப்பாக நடைபெறும். நல்ல மாற்றமும் ஏற்படும்.

தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தவறான கருத்துக்களை பலர் திட்டமிட்டு பரப்பினர். இதனால் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் தவறான கருத்துக்கள் அவர்களுடைய மனதிலே விதைக்கப்பட்டிருந்தது.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்கும் நமக்கும் இடையே சந்திப்புகள் ஏற்பட்டது. இந்த சந்திப்புகளால் தான் அவர்களின் சந்தேகங்களுக்குச் சரியான விளக்கத்தை நம்மால் கொடுக்க முடிந்தது.

இஸ்லாமிய மார்க்கம் பற்றி அவர்களுக்கு நல்லதொரு அபிப்ராயம் ஏற்படவும் முஸ்லிம்களை எதிர்க்கும் போக்கை அவர்கள் கைவிடவும் இது காரணமாக இருக்கின்றது.

யாருடைய நட்பு கூடாது
திருக்குர்ஆனில் இறை மறுப்பாளர்களை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றிய சரியான விளக்கம் இல்லாதவர்கள், முஸ்லிமல்லாதவர்களிடம் நட்பு கொள்ளக் கூடாது என்று இவ்வசனங்கள் கூறுவதாகக் கருதுகின்றனர்.

ஆனால் இதன் சரியான விளக்கத்தைக் குர்ஆனில் இடம்பெற்றுள்ள பின்வரும் வசனம் விளக்குகின்றது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 60:8, 9)

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள்.

எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர்.

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அழிக்க நினைக்கும் இத்தகையவர்களுடனே நட்பு கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குத் தீங்கிழைக்க நாடாத மாற்று மதத்தவர்களுடன் அழகிய முறையில் பழகுவதை மார்க்கம் அனுமதிக்கின்றது. மேலுள்ள வசனம் இந்த வித்தியாசத்தைத் தெளிவுபடுத்துகின்றது.

நட்பு எல்லை கடந்துவிடக் கூடாது
அதே நேரத்தில் மாற்று மதத்தவர்களுடன் நாம் கொள்ளும் நட்பு இஸ்லாமிய வரம்புகளையும் விதிமுறைகளையும் கடந்து விடக்கூடாது. உதாரணமாக அவர்களுடைய திருவிழாக்களிலும் கோயில் விஷேசங்களிலும் மத நம்பிக்கையுடன் அரங்கேறும் வைபவங்களிலும் கலந்துகொள்ளுமாறு அவர்கள் நம்மிடம் கூறினால் இப்போது நட்பைக் காரணம் காட்டி இவற்றில் கலந்து கொள்வது கூடாது.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை நாம் செய்யக்கூடாது என்று நமக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் அக்காரியங்கள் நடைபெறும் சபையில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கின்றான்.

தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் வைபவங்களில் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையை செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.  (அல்குர்ஆன் 4:140)

பொதுவாக அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்யும் வகையிலும் அதை மறுக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும் அவர்களுடன் சேர்ந்து நாம் அமரக்கூடாது என்று இவ்வசனம் கூறுகின்றது. இத்தடையை மீறி அமர்ந்தால் நாமும் அவர்களைப் போன்றவர்களே என்று எச்சரிக்கின்றது.

தீமை நடக்கக் கண்டால் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி),

நூல்: முஸ்லிம் 70

முடிந்தால் கையால் தடுக்க வேண்டும். இதற்கு இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் வெறுத்து ஒதுங்க வேண்டும்.

மூன்றாவதாகக் கூறப்பட்ட வெறுத்து ஒதுங்குவது என்ற நிலை கூட பலவீனமான நிலை என்று கூறப்படுகின்றது. மார்க்கத்திற்குப் புறம்பான சபைகளை வெறுப்பதென்றால் அதில் நாம் பங்கெடுக்காமல் இருப்பதாகும். அந்தச் சபைகளில் கலந்து அவற்றுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டு "நான் மனதால் வெறுத்து விட்டேன்' என்று கூற முடியாது.

மாற்று மதத்தவர்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சிகளில் இணைவைப்பு, மூடநம்பிக்கைகள், இசை போன்ற அனாச்சாரங்கள் நிறைந்திருக்கும். இந்நிகழ்ச்சிகளில் நாம் பங்கெடுத்துவிட்டு வந்தால் இத்தீமைகளை நாம் ஆதாரித்ததாக ஆகிவிடும். நாமே இவற்றைச் செய்த குற்றமும் ஏற்படும்.


மாற்றார்களின் திருமணத்தில் பங்கெடுக்கக்கூடாது என்றாலும் திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ தீமைகள் அரங்கேறாத போது மணமக்களைப் பார்த்து விட்டு வந்தால் அது மார்க்கத்தில் தவறல்ல.

EGATHUVAM JUL 2011