தூதர் வழியில் ஒரு தூய அமைப்பு
எம். ஷம்சுல்லுஹா
தமிழகத்தில் இன்று காளான்கள் போன்று பல்வேறு இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் முளைத்துள்ளன. ஏற்கனவே
பல்வேறு அமைப்புகள் மார்க்கம், அரசியல், சமுதாயம் போன்றவற்றின் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு இயக்கமும் தாங்கள் தான் நேரிய பாதையில் இருப்பதாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தாம் நேர்வழியில் செல்வதற்கு எந்த இயக்கத்தில் இணைவது? என்ற ஓர் இக்கட்டிற்கு ஒரு முஸ்லிம் ஆட்பட்டே தீர்வார். அப்போது
அவருக்கு ஓர் அற்புத வழிகாட்டியாகத் திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் திகழ்கின்றது.
"என் சமுதாயமே! நான் இறைவனிடமிருந்து சான்றைப் பெற்றிருந்து, அவன் தனது அழகிய செல்வத்தை எனக்கு வழங்கியுமிருந்தால் (உங்கள்
நிலை என்ன என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்! எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ
அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே
விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே
மீளுகிறேன்''
என்றும் கூறினார்.
அல்குர்ஆன் 11:88
இது இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள், தமது சமுதாய மக்களை நோக்கிக் கூறிய போதனை!
இந்த உரைக் கல்லில் தவ்ஹீத் ஜமாஅத்தை உரசிப் பார்த்தால் அவருக்கு
ஓர் உண்மை புலப்படும்.
இதற்கு வரதட்சணையை எடுக்காட்டாகக் கொள்வோம்.
1980களில் இந்த இயக்கம் வரதட்சணைக் கொடுமையைப் பற்றி மக்களிடம் மிக
வீரியமாக எடுத்துச் சென்றது.
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!
அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
அல்குர்ஆன் 4:4
இந்த வசனம் தான் மேடைகள் தோறும் ஆட்சி செலுத்தியது. வரதட்சணைக்கு
எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மூட்டிய தீ தமிழகமெங்கும் பற்றிப் பரவ ஆரம்பித்தது. அந்த நேரத்தில்
ஆலிம் வர்க்கம்,
குர்ஆன் கொடுக்கச் சொல்கின்றது; ஆனால் வாங்காதே என்று சொல்கிறதா? பெண் வீட்டிலிருந்து வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா?' என்று அறியாமையை வெளிப்படுத்தினர். அப்போது நாம் எழுப்பிய கேள்வி:
யாசகம் கேட்பவனுக்குக் கொடுக்கச் சொல்கின்றது; அவனது தட்டிலிருந்து
நாம் எடுப்பதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேள்வி
கேட்பது எப்படியோ அப்படித் தான் இவர்களது கேள்வி என்று முகத்தில் அறைந்தாற்போல் பதிலளித்தோம்.
வாயடைத்துப் போனார்கள் உல(க)மாக்கள்.
புடமாக்கிய புறக்கணிப்புக்கள்
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில்
ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப்
போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
அல்குர்ஆன் 4:140
வரதட்சணை வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் மேற்கண்ட வசனத்தின்
அடிப்படையில் அத்தகைய திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது; விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற புறக்கணிப்புக் கொள்கையை
தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதை இன்று வரை கடைப்பிடித்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
அன்றிலிருந்து இன்று வரை அந்தக் கொள்கையிலிருந்து மாறவில்லை. அத்துடன் திருமணம் மிக
எளிமையாகவும்,
மிகச் சிக்கனமாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் போதித்தோம்.
இன்று வரை தவ்ஹீத் ஜமாஅத்தினர் திருமணத்தில் எளிமையிலும் எளிமையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
விளைவு! இன்று ஒரு ஜமாஅத், சமுதாயமாகப்
பரிணமித்து நிற்கின்றனர் இந்தக் கொள்கைவாதிகள். இந்தக் கொள்கை கால் ஊன்றி, கால் நூற்றாண்டு கடந்து விட்டது. இன்று அடுத்தக்கட்டத் தலைமுறையினர்
இந்தக் கொள்கையின்படி திருமணம் முடிக்கின்றனர். எளிமையான முறையில் திருமணம் முடிக்கின்றனர்.
அண்மையில் சகோதரர் பி.ஜே.யின் மகன் மற்றும் மகளுக்குத் திருமணம் நடைபெற்றது. தொண்டியில்
நடைபெற்ற இந்தத் திருமணம் மிக எளிமையாக நடத்தப்பட்டது. பி.ஜே. ஒன்றும் அனாமதேயம் அல்ல!
தமிழகம் முழுவதும் அறிமுகமானவர் தான். அவர் நினைத்தால் ஊரை அழைத்து விருந்து போட்டு
திருமணத்தை நடத்தலாம். ஆனால் அவர் இருக்கும் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுக்குக் கூடத்
தெரிவிக்காமல் மிக எளிமையான முறையில் திருமணம் நடத்தினார். அதற்குக் காரணம் 11:88 வசனம் தான். இதுபோல் தான் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்கள் யாரும்
திருமணங்களைப் பெரிய அளவில் பிரகடனப்படுத்தி பிரஸ்தாபிப்பதில்லை. காரணம், இந்த வசனம் தான்.
மகளின் திருமணத்தில் மார்க்கத்திற்கு மாற்றம்
ஜமாஅத்துல் உலமாவின் முன்னாள் மாநிலத் தலைவர் மறைந்த எஸ்.ஆர்.
ஷம்சுல்ஹுதா அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் எளிமையான திருமணத்தைப் பற்றிப் பேசினார்.
அவர் அந்த உரையில் குறிப்பிட்ட செய்தி இது தான்:
என் நண்பர் ஒருவர் ஹாங்காங்கில் இருக்கிறார். அவர் தன் மகனுக்குத்
திருமணம் முடித்த போது, வெறும் ரோஸ் மில்க் மட்டும்
கொடுத்து திருமணத்தை நடத்தினார். எனக்கு அந்தக் கல்யாணம் மிகவும் பிடித்திருந்தது.
இதுபோன்று எளிமைத் திருமணங்கள் நடந்தால் பெண்கள் தேங்க மாட்டார்கள்.
இதுதான் அவர் ஆற்றிய உரையின் கருத்துச் சாரம்! இப்படிப் பேசிய
அவர், தனது மகளுக்கு மாங்குடி என்ற ஊரில் திருமணம் நடத்தினார். மணமகன்
தப்ஸ் முழக்க ஊர்வலத்துடன் பள்ளிவாசலை நோக்கிப் பவனி வந்தார். தமிழகமெங்கும் உள்ள அவரது
விசுவாச உலமா பரிவாரங்கள் படையெடுத்து வந்திருந்தனர். மறைந்த அறிஞர் பி.எஸ். அலாவுதீன்
அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். நானும் அழைக்கப்பட்டு ஓர் அன்பளிப்புடன் சென்றிருந்தேன்.
அது ஜமாஅத்துல் உலமாவை விட்டு நாங்கள் வெளிவராத காலம். தவ்ஹீதுக் கருத்து எங்களிடம்
குருத்து விட்டு முளைத்துக் கொண்டிருந்த காலம். என்னுடைய சக்திக்கு, பெரிய எவர்சில்வர் ஸஹ்னை வைத்துக் கொண்டு, அதை ஷம்சுல்ஹுதாவிடம் கொடுப்பதற்குக் காத்திருந்தேன். அன்பளிப்புகளை
வாங்குவதற்குக் கூட அவரால் முடியவில்லை. அந்த அளவுக்கு பிஸி!
சொல் ஒன்று! செயல் வேறு!
கடைசியில் ஒருவாறாக அவரது கையில் அன்பளிப்பைக் கொடுத்து விட்டு
வெளியே வந்தேன். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பொதுமக்களிடம்
எதைப் போதித்தாரோ அதை அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் செயல்படுத்த முடியவில்லை. இது
அழைப்பாளனுக்குரிய பண்பல்ல! மார்க்க அடிப்படையிலான ஓர் அமைப்பிற்குரிய பண்புமல்ல!
இப்படிப்பட்டவர்கள், இத்தகைய அமைப்புகள்
தவறான வழியில் இருக்கிறார்கள் என்பதற்கு ஷுஐப் (அலை) அவர்களின் இந்த வாதம் சிறந்த உரைகல்லாகும்.
விடியலும் வைகறையும்
திருமணம் என்பது ஓர் அழைப்பாளனின் தூய பிரச்சாரத்தின் நுழைவு
வாயில்! தலை வாயில்! அதில் தலை தட்டியவர்கள் ஒருபோதும் அழைப்புப் பணியில் ஈடுபட முடியாது.
இன்னும் ஒரு சில அழைப்பாளர்கள் வெளியூரில் எடுபடுகின்றனர். உள்ளூர் வட்டாரத்தில் எடுபடவில்லை, செல்லுபடியாகவில்லை. காரணம் வரதட்சணை வாங்கியது தான். சரி! தான்
வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்து சரி செய்து விட்டால், அவர்கள் தங்கள் மகன், மகள் திருமணத்தில்
சரியாக நடக்க வேண்டும். அதிலும் சறுகினால் இந்தச் சத்தியப் பிரச்சாரப் பாதைக்குச் சற்றும்
தகுதியற்றவர்களாகின்றனர்.
தவ்ஹீத் ஜமாஅத் தன் பயணத்தின் ஊடே பல்லாயிரம் இளைஞர் பட்டாளத்தை
வசப்படுத்தியது;
வசீகரித்தது. இந்தப் பட்டாளத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக
தஸ்கியா, பைஅத், ஜிஹாத் என்ற பல அடுக்குகளை வைத்து
இந்த இயக்கத்திலிருந்து சில இளைஞர்களைக் களவாடிச் சென்றனர் அன்றைய விடியல், இன்றைய வைகறை! இதன் தலைவர் சறுக்கியது திருமண விவகாரத்தில்!
அவரது அமைப்பினராலேயே சகிக்க முடியாமல் கசக்கி வெளியே வீசப்படுகின்றார்.
அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற சிக்கலில் மாட்டவில்லை.
காரணம், இந்த இயக்கமே ஷுஐப் (அலை) அவர்கள் கூறிய அந்த மந்திரத்தை வேதமாகக்
கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். தமிழகத்தில் மூலை முடுக்குகள் தோறும் படை, பற்று போல் படர் தாமரையாகப் பெருகி வரும் இயக்கங்களுக்கு மத்தியில்
எந்த இயக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினாலும் அவர் அந்த இயக்கத்தை
11:88 என்ற சோதனைக்குழாயில், உரைக் கல்லில்
போட்டுப் பரிசோதனை செய்து பார்க்கட்டும். அந்தப் பரிசோதனையில் பழுதின்றி பாதிப்பின்றி
இந்த இயக்கம் தான் வெற்றி பெறும்.
போக்காகிப் போன ஜாக்
இங்கு ஒரு சந்தேகம் எழலாம். அப்படியானால் நீங்கள் எல்லோரும்
சேர்ந்து தோற்றுவித்த ஜாக் இயக்கத்தின் கதை என்ன? என்று
கேட்கலாம். பெண் வீட்டு விருந்தை ஜாக் பகிரங்கமாக ஆதரித்து, தான் கிளம்பிய ராஜபாட்டையை விட்டு மாறிச் சென்று விட்டது. ஷுஐப்
(அலை) கூறும் அந்த அளவுகோலில் இந்த அமைப்பு நிலைக்கவில்லை; நிலை மாறி விட்டது.
திருமண சம்பந்தங்கள் விஷயத்தில் அந்த அமைப்பின் தலைவர்களிடம்
தவ்ஹீது முதன்மை அளவுகோலாகப் பார்க்கப்படவில்லை என்பதை அவர்கள் நடத்திய திருமணங்கள்
மூலம் உணர்ந்து கொள்ளலாம். அல்லாஹ்வின் கிருபையால் இந்தத் தவ்ஹீது ஜமாஅத் மட்டும் தன்
நிலைப்பாட்டில் பிழைபாடின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. திருமணம் என்பது இங்கு
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கணக்கில் அலசப்படுகின்றது.
சமூக அந்தஸ்து, பந்தா, சுய விளம்பரம், பணம் அத்தனையும்
வெளிக்காட்டும் தலமாகவும், களமாகவும் திருமணம் அமைவதால்
இதில் பலர் வழுக்கி விடுகின்றனர். தான் செய்த பிரச்சாரத்திற்கு நேர் மாற்றமான செயல்பாட்டைத்
திருமணத்தில் காட்டி, 11:88 வசனம் கூறும் உன்னத பண்பிற்கு
உலை வைத்து விடுகின்றனர். அதனால் தான் திருமணத்தை மையமாக வைத்து இந்தக் கட்டுரை சுழல்கின்றது.
டமார் டிமார் பார்ட்டிகள்
இன்று புற்றீசல் போன்று என்று சொல்வதை விட சர வெடிகள் போன்று
டமார், டிமார், டெமாக்ரெடிக் என்று வெடித்துக்
கிளம்பும் இயக்கங்கள் என்று கூடக் கூறலாம். இந்த அமைப்புகளை ஆய்வு செய்ய இந்தப் பரிசோதனைக்
குழாய் தேவையில்லை.
இந்த அமைப்பின் கூட்டத்தைத் துவக்கும் போதே வான் அதிரும் வாத்திய
இசை முழக்கத்துடன் துவக்குவதிலிருந்து இந்த இயக்கங்களெல்லாம் எடுத்து எடுப்பிலேயே தூக்கி
எறிய வேண்டியவை என்று விளங்கிக் கொள்ளலாம்.
நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில்
சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக்
கருதுவார்கள்... (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூஆமிர் (ரலி)
நூல்: புகாரி 5590, பைஹகீ, பாகம்: 3, பக்கம்: 272
நட்சத்திர விடுதி அழைப்புப் பணி
உடையில் ஷேர்வானி, உணவில் பிரியாணி
என்று உள்ள ஒரு மேல்தட்டு அமைப்பின் நட்சத்திர விடுதி அழைப்புப் பணியினர் மாநாடு நடத்துகின்றனர்.
இவர்கள் கப்ர் வணக்கத்தைக் கண்டித்துப் பேசுவதை, கூவத்தை
வாயில் போட்டுக் கொப்பளிப்பது போன்று கருதுவர். இவர்கள் பேசுவதெல்லாம் இஸ்லாமிய ஆட்சி, அதிகாரம், இஸ்லாமிய அரசியல் சாசனம் என்ற
உயர்மட்டப் பேச்சுக்கள் பேசுவர். ஷிர்க், இணை வைத்தல்
எல்லாம் இவர்களுக்கு சாதாரண விஷயம். அதைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஆனால் ஜனநாயகத்தை
இணை வைப்பு என்று பேசுவார்கள்.
இந்த நட்சத்திர விடுதி அழைப்பாளர்கள் சமீபத்தில் நடத்திய ஒரு
மாநாட்டில்,
தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பாலியல் குற்றச்சாட்டின் பேரில் நீக்கப்பட்ட
பலான ஆசாமிக்கு மேடையைப் பகிர்ந்து கொடுத்தனர். இந்த ஒன்று போதும், இவர்களின் அழைப்புப் பணியின் இலட்சணத்தைப் பார்ப்பதற்கு!
ஒழுக்க மாண்பு என்று இந்த அமைப்பினர் பேசுவது எல்லாம் வெறும்
வார்த்தை ஜாலமும் ஒய்யாரமும் தான் என்பதை இதை வைத்தே புரிந்து கொள்ளலாம். இவர்கள் 11:88 வசனம் கூறும் வரையறைக்குள் வரமாட்டார்கள் என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.
சமுதாயப் பணியிலும் சரியான உரைகல்
இந்த வசனத்தில் ஷுஐப் (அலை) அவர்களின் சூத்திரம் சத்தியப் பிரச்சாரப்
பணிக்கு மட்டுமல்ல! சமுதாயப் பணிக்கும் இது தான். சத்தியப் பணிக்கு ஓர் உரை கல், சமுதாயப் பணிக்கு வேறோர் உரை கல் என்பது கிடையாது.
சமுதாயப் பணிக் களத்தில்,
எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வர மாட்டோம்; தேர்தலில் போட்டியிட மாட்டோம்; வாரியம் கோர மாட்டோம்; வேறெந்த அரசுப்
பதவியும் கேட்க மாட்டோம் என்று மக்களிடம் வாக்குக் கொடுத்தோம். இந்த வாக்குறுதியை மீறினால்
உங்களிடம் வந்தால் எங்களை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் முழங்கினோம்.
அந்த வாக்குறுதியில் அல்லாஹ்வின் கிருபையால் இன்று வரை நிற்கின்றோம்.
கேட்டும், கேட்காமலும் சிறிய, பெரிய பதவிகளுக்கான
சூழல் பிரகாசமாக இருந்தும் நெருப்பு போல் அவற்றைக் கண்டு நமது ஜமாஅத்தினர் ஒதுங்கினர்; ஓடினர். இதற்கு அடிப்படைக் காரணம் திருக்குர்ஆனின் 11:88 வசனம் தான்.
காரணம், நாம் சொல்வது தூதுச் செய்தி
எனும் தூய பணி! அந்தப் பணிக்கு எந்தக் குந்தகமும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்
தான்.
இப்படி ஒரு தூய்மையைக் கடைப்பிடிக்கும் அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்! இதற்கு வெளியில் இருப்போர் இம்மை, மறுமையில்
வெற்றி பெறத் தேர்வு செய்ய வேண்டிய அமைப்பு இந்த அமைப்பு தான் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இந்த அமைப்பின் உள்ளே இருப்பவர்கள், இது தான் நாம் இருப்பதற்குச் சிறந்த அமைப்பு, இதை விட்டு வெளியில் சென்றால் நாம் காணாமல் போய்விடுவோம், கொள்கைச் சூனியமாகி விடுவோம் என்பதை உணர வேண்டும்.
EGATHUVAM APR 2010