Apr 17, 2017

பரவும் காய்ச்சலில் பறிபோகும் சிந்தனைகள்

பரவும் காய்ச்சலில் பறிபோகும் சிந்தனைகள்

தமிழகம் முழுவதும் ஒரு விதமான மர்மக் காய்ச்சல் பரவி வருகின்றது. இது மக்களைப் பலி கொண்டும் வருகின்றது. இதல்லாமல் சிக்குன்குனியா என்ற காய்ச்சலும் தனது முழு வீரியத்தையும் காட்டி மக்களைப் படுக்க வைப்பதுடன் அவர்களைப் பாதி முடமாகவும் ஆக்கி விடுகின்றது.

டெங்கு காய்ச்சலும் தன் பங்குக்கு தனது விஷ விளையாட்டைக் காட்டி ஓடி விளையாடும் குழந்தைகளின் உயிர்களைக் கொள்ளை கொண்டு செல்கின்றது.

மருத்துவத்திற்கே இந்தக் காய்ச்சல் ஒரு சவாலாகக் கிளம்பியுள்ள நேரத்தில் மக்களில் சிலர் இயல்பாகவே மாந்திரீகத்தின் பக்கம் செல்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த மந்திரவாதிகளையே இந்த முடக்குக் காய்ச்சல் முடமாக்கி மருத்துவமனையில் படுக்க வைத்திருக்கின்றது. இந்த உண்மை கூட சிந்தனை முடமாகிப் போன மக்களுக்குப் புரியவில்லை.

இந்நேரத்தில் மக்கள் பார்க்க வேண்டியது மருத்துவமே தவிர மாந்திரீகம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது மட்டுமின்றி மக்கள் வேறொரு வகையிலும் ஏமாந்து கொண்டிருக்கின்றனர். அது என்ன?இப்போது பள்ளிகள் தோறும் மவ்லவிகள் விஷக் காய்ச்சலுக்காக விஷேச ராத்திபுகள்ஸலாத்துன்னாரிய்யாக்கள் அபூர்வ துஆக்கள் என்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். மந்திரக்காரர்கள் போலவே இந்த மவ்லவிகளும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் இவர்களும் அந்த மந்திரத் தொழிலைச் செய்பவர்கள் தான். அதனால் இவர்கள் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல!

பஞ்சம் ஏற்பட்டால் அதற்கு மழைத் தொழுகையையும் கிரகணம் ஏற்பட்டால் அதற்கு கிரகணத் தொழுகையையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போல் தொற்று நோய் ஏற்பட்டால் அதற்கு ஒரு கூட்டுப் பிரார்த்தனையையோ ராத்திபுகளையோ காட்டித் தரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்கன் ஒரு கூட்டத்தார் மீது.... அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது.... (அவர்களுடைய அட்டூழியங்கள் அதிகரித்து விட்ட போது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவி விட்டால் அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெயேறாதீர்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா (ரலி)
நூல்: புகாரி 3473

இப்படி ஒரு பரிகாரத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்களே தவிர இதற்கென்று தனியாக ஒரு வணக்க முறையைக் காட்டித் தரவில்லை. இதற்குக் காரணம் திருக்குர்ஆன் இதற்கான சரியான வழிமுறையை நமக்குக் காட்டித் தந்திருப்பது தான்.

ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும்அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 2:155-157

இதுபோன்ற சோதனைகளில் உயிர்ப் பலிகள் ஏற்படும் போது இந்த இறை வசனம் நமக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாக அமைகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்குர்ஆன் 2:153

இந்தச் சோதனையிலிருந்து பாதுகாவல் தேடி அவரவர் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். (நபியவர்கள் கற்றுத் தந்த துஆக்கள் இவ்விதழில் வேதனை தீர்க்கும் விஷேச பிரார்த்தனைகள் என்ற தனித் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.)

அதனால் தான் இதற்கென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்தவொரு கூட்டுப் பிரார்த்தனையையும் கற்றுத் தரவில்லை. அப்படி ஒரு கூட்டுப் பிரார்த்தனையை கூட்டு வணக்கத்தை இந்த மவ்லவிகள் நபிவழியிலிருந்து எடுத்துக் காட்ட முடியாது.

இந்த உண்மை தெரிந்தும் மவ்லவிகள் இப்படியொரு கூட்டுப் பிரார்த்தனையை கூட்டு வணக்கத்தை ஒரு புதிய பித்அத்தைச் செய்கிறார்கள் என்றால் இது பகிரங்க ஏமாற்று வேலைமோசடியைத் தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும்?

எனவே இவர்களது ஏமாற்று வலையில் மக்கள் விழுந்து விடக் கூடாது என்று எச்சரிக்கின்றோம்.

வேதனை தீர்க்கும் விஷேச துஆக்கள்

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்குர்ஆன் 2:153

ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 2:155-156

பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று இவ்வசனங்கள் கூறுவதுடன் அந்தச் சோதனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளையும் சொல்ல வேண்டிய வார்த்தைகளையும் சொல்லித் தருகின்றன.

இப்ராஹீம் நபி அவர்களுக்கும் அவர்களது துணைவியார் சாரா அவர்களுக்கும் மிகக் கடுமையான சோதனை ஏற்படுகின்றது. அந்நேரத்தில் அவர்கள் தொழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன்இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் செய்து இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) என் சகோதரி என்று சொன்னார்கள். பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் (அலை) அவர்கள் நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூமின்) யாரும் இல்லை என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன் அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான்.

மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக் கொண்டான்.

மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள் என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிம் திரும்பி வந்து அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2217

இன்று தமிழகத்தில் பரவி வரும் டெங்கு சிக்குன்குனியா மற்றும் விஷக் காய்ச்சல் போன்றவற்றுக்காக அவரவர் தனியாக விரும்பிய நேரமெல்லாம் தொழுது இறைவனிடம் பிரார்த்திக்கலாம்.

சில சமயங்களில் தொழுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமல் போகலாம். அது போன்ற சந்தர்ப்பங்களிலும் ஏனைய எல்லாக் காலங்களிலும் சொல்லக் கூடிய துஆக்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

அந்த துஆக்களில் ஒன்று தான் மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்பதாகும்.

இந்தக் காய்ச்சல் எல்லாம் அல்லாஹ்வின் சோதனையாகும். இந்தச் சோதனையின் போது பொறுமையை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைச் சொல்லாமல்சோதனைகளைத் தாங்கிக் கொண்டு தொழ வேண்டும். இந்த துஆ வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.

அல்லாஹ் கூறும் இந்த வழிமுறைகளைக் கையாள்பவர்களுக்கு அவன் வழங்குகின்ற அருட்கொடைகளை அடுத்த வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 2:157

இவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள் என்ற புகழாரத்தையும் அல்லாஹ் சூட்டுகின்றான்.

இதற்கு அணி சேர்க்கும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னொரு மணியான துஆவையும் இந்த துஆவுடன் சேர்த்து ஓதுமாறு கற்றுத் தருகிறார்கள்.

ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும் போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும்

அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா (இறைவா எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால் அதற்கு ஈடாக அதை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்த போது நான் அபூசலமாவை விட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்து வந்த குடும்பம் (அவருடைய குடும்பம் தான்) என்று கூறினேன். ஆயினும் இன்னாலில்லாஹி... என்று (மேற்கண்ட பிரார்த்தனையை) நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான்.

அறிவிப்பவர்: உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 1674)

இது போன்ற சோதனைகளின் போது நமக்கு ஏற்பட்டுள்ள நோய்க்குப் பகரமான உடல் நலத்தைஅல்லது வேறு விதமான நன்மையை வழங்குவான் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் துன்பம் ஏற்படும் போது கூறுவதற்காக மற்றொரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர் வரப்புல் அர்ஷில் கரீம்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது ஓதுவார்கள். பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 6346

அல்லாஹும்ம இன்னீ அப்து(க்)க வப்னு அப்தி(க்)க வப்னு அம(த்)தி(க்)க நாஸிய(த்)தீ பியதி(க்)க மாலின் ஃபிய்ய ஹுக்மு(க்)க அத்லுன் ஃபிய்ய களாவு(க்)க அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹு ல(க்)க ஸம்மை(த்)த பிஹி நஃப்ஸ(க்)க அவ் அல்லமத்ஹு அஹதன் மின் கல்கி(க்)க அவ் அன்ஸல்(த்)தஹு ஃபீ கிதாபி(க்)க அவ் இஸ்தஃர(த்)த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்த(க்)க அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ வநூர ஸத்ரீ வ ஜிலாஅ ஹுஸ்னீ வ தஹாப ஹம்மீ.

(பொருள்: இறைவா! நான் உன் அடிமை! உன் அடியாரின் மகன்; உன் அடியாளின் மகன். என் நெற்றி முடி உன் கையில் இருக்கிறது. உன் முடிவே என்னிடம் நடக்கிறது. உன் தீர்ப்பு என்னிடம் நியாயமானது. குர்ஆனை என்னுடைய இதயத்தின் வசந்தமாகவும் என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும் என் கவலையை களையக் கூடியதாகவும் என் துக்கத்தைப் போக்கக் கூடியதாகவும் நீ ஆக்கி வைக்க வேண்டும் என்று உனக்கு நீயே வைத்துக் கொண்ட அல்லது உனது படைப்பில் நீ யாருக்கேனும் கற்றுக் கொடுத்த அல்லது உன் வேதத்தில் இறக்கியருளியஅல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் தேர்வு செய்த உனக்குரிய ஒவ்வொரு பெயரையும் வைத்துக் கேட்கிறேன்.)

இவ்வாறு துக்கமும் கவலையும் ஏற்பட்ட ஒருவர் சொன்னால் அல்லாஹ் அவருடைய துக்கத்தையும் கவலையையும் போக்கி விடுகின்றான். அவருக்கு மகிழ்ச்சியை அதற்குப் பகரமாக்கி விடுகின்றான்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் கற்றுக் கொள்ளக் கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! அதைச் செவியுற்றவருக்கு அதைக் கற்றுக் கொள்வது அவசியமாகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: அஹ்மத் 3528

மீன்வாசி (யூனுஸ் நபி) மீன் வயிற்றில் இருந்த போது செய்த பிரார்த்தனை:

லா இலாஹ இல்லா அன்(த்)த சுப்ஹான(க்)க இன்னீ குன்(த்)து மினல் ளாலிமீன்

(பொருள்: உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்)

எந்தவொரு சோதனையிலும் ஒரு முஸ்லிம் இதைக் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவருக்கு அல்லாஹ் பதிலளித்தே விடுகின்றான்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: திர்மிதி 3427

மணி மணியான இந்த துஆக்கள் அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் நமக்குக் கற்றுத் தரப்பட்டவை. ஒப்புக் கொள்ளப்படும் இந்த அரும் பெரும் துஆக்களை இந்தச் சோதனையிலும் வேறெந்தச் சோதனையிலும் ஓதி சுகம் பெறுவோமாக!

மர்மக் காய்ச்சல் தண்டனையா? சோதனையா?

ஏற்கனவே டெங்கு மலேரியா மூளைக் காய்ச்சல் எனப் பல்வேறு காய்ச்சலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கையில் புதுப் புது ரகமாய் வெளியாகும் நோக்கியா போன் வரிசையைப் போன்று இப்போது புதுப்புது பெயர்களில் காய்ச்சல்கள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. பறவைக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் சிக்குன்குனியா போன்றவை இந்த வரிசையில் உள்ள காய்ச்சல்களாகும்.

இறக்கை கட்டி வந்து மக்களைத் தாக்கி முடமாக்கி தற்காலிகமாகப் படுக்க வைத்தும்நிரந்தரமாகப் படுக்க வைத்தும் வேடிக்கை பார்க்கும் இந்த ராட்சஷப் பறவையைப் பார்த்து மக்கள் பயத்தில் ஆடிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

இது அல்லாஹ்வின் தண்டனை என்று ஒரு சில அசத்தியவாதிகள் கூறியும் திரிகின்றனர். ஏகத்துவவாதிகள் அவ்லியாக்களைத் திட்டுவதால் தான் இவ்வகைக் காய்ச்சல்கள் தலை காட்டுகின்றன என்று சொல்லி அசத்தியவாதிகள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இறந்து விட்ட நல்லடியார்களை இறைவனுக்கு நிகராகக் கருதி அவர்களிடம் உதவி தேடுவதையும் அவர்களுக்கு விழா எடுப்பதையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் விமர்சிக்கிறோம். இதைத் தான் இவர்கள் அவ்லியாக்களைத் திட்டுவதாகக் கூறுகின்றனர்.

சரி! இதனால் தான் இந்த விஷக் காய்ச்சல் வந்து விட்டது என்று ஒரு வாதத்திற்கு ஒத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் மட்டும் இவ்வகைக் காய்ச்சல்கள் நடமாடுவதில்லை.

பன்றிக் காய்ச்சல் பறவைக் காய்ச்சல் போன்றவை உலகளாவிய காய்ச்சல்கள் ஆகும். அப்படியானால் உலகெங்கும் தவ்ஹீதுவாதிகள் அவ்லியாக்களைத் திட்டுகிறார்கள் என்று கூறுவார்களா?

இவர்கள் இவ்வாறு சொல்வதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. இறைத் தூதர்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட வாதங்கள் தாம் இவை!

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் அது எங்களுக்காக (கிடைத்தது) எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை

அல்குர்ஆன் 7:131

ஸாலிஹ் (அலை) அவர்களை நோக்கியும் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர்.

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.

என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? நீங்கள் அருள் செய்யப்பட அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட மாட்டீர்களா? என்று அவர் கூறினார்.

உம்மையும் உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 27:45-47

யாஸீன் அத்தியாயத்தில் மூன்று இறைத் தூதர்களின் வரலாற்றை இறைவன் குறிப்பிடுகின்றான். அந்த வரலாற்றிலும் இறைத் தூதர்களை நோக்கி எதிரிகள் இதே வாதத்தைச் சொன்னதாகத் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

சத்தியப் பாதையில் இதுபோன்ற குற்றச்சாட்டை வாதத்தை ஏகத்துவவாதிகள் சந்திக்க வேண்டும். அதைத் தான் நாம் சந்திக்கிறோம். இது நாம் சத்தியத்தில் இருக்கிறோம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தண்டனையா? சோதனையா?

ஏகத்துவப் பிரச்சாரம் வந்ததால் தான் இந்தத் தண்டனை என்று கூறுகின்ற இவர்களிடம் மார்க்க அறிவு கடுகளவுக்குக் கூட இல்லை என்று நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தண்டனை என்றால் என்ன? சோதனை என்றால் என்ன? என்ற வித்தியாசம் இவர்களுக்குப் புரியவில்லை.

அல்லாஹ் இட்ட கட்டளையை அடியார்கள் செய்யாத போது அல்லது அவனது கட்டளையை மீறும் போது அல்லாஹ் இறக்கக் கூடிய வேதனைக்குப் பெயர் தான் தண்டனை.

அல்லாஹ்வை மட்டும் தான் அடியார்கள் வணங்க வேண்டும் என்று அடியார்களுக்கு அல்லாஹ் உத்தரவு போடுகின்றான். அதுபோல் தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று தடையும் போடுகின்றான். அடியார்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்காததுடன் அவன் போட்ட தடையையும் மீறினார்கள். அதனால் அவர்கள் மீது வேதனை இறக்கப்படுகின்றது.

நூஹ் நபியின் சமுதாயம் வெள்ளத்தில் அழிக்கப்பட்டது. ஹூது நபியின் ஆது சமுதாயம் காற்றில் அழிக்கப்பட்டது. ஸமூது சமுதாயம் பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டது. லூத் நபியின் சமுதாயம் கல்மாரி பொழிந்து அழிக்கப்பட்டது. ஷுஐப் நபியின் சமுதாயம் வெப்ப மழையால் அழிக்கப்பட்டது. இவையெல்லாம் தண்டனைகளாகும். இந்தத் தண்டனைகள் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களைப் படிப்பவர்கள் இரண்டு நியதிகளைத் தெளிவாகப் பார்க்கலாம்.

1. ஒரு சமுதாயம் அழிக்கப்படுவதற்கு முன்னால் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதருக்கு இது குறித்த எச்சரிக்கை வரும். அந்த எச்சரிக்கையை இறைத் தூதர் மக்களுக்குத் தெரிவிப்பார். ஆனால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்வர். இறுதியில் அந்த வேதனை வந்து அம்மக்களை அழிக்கும். இது ஒரு நியதி!

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம் என்று அவர் கூறினார். இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்! (என்றும் கூறினார்)

அல்குர்ஆன் 11:38 39

2. தீயவர்கள் அழிக்கப்படும் போது இறைத் தூதரும் அவரை நம்பியவர்களும் அவ்வூரில் இருக்க மாட்டார்கள். திரும்பிக் கூடப் பார்க்காமல் நல்லவர்கள் ஊரைக் காலி செய்து விட வேண்டும்.

லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?என்றனர்.

அல்குர்ஆன் 11:81

நூஹ் நபியின் காலத்தில் வெள்ளப் பிரளயம் என்பதால் நூஹையும் அவரது சமுதாயத்தையும் அல்லாஹ் கப்பலில் ஏறச் செய்து அதாவது நல்லவர்களை மட்டும் பிரித்தெடுத்து காப்பாற்றுகின்றான். இது இரண்டாவது நியதி.

படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்.

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் அது எங்களுக்காக (கிடைத்தது) எனக் கூறுகின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை

எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும் நாம் உம்மை நம்பப் போவதில்லை என்று அவர்கள் கூறினர்.

எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு வெட்டுக்கிளி பேன் தவளைகள் இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்.

அவர்களுக்கு எதிராக வேதனை வந்த போதெல்லாம் மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம் என்று அவர்கள் கூறினர்.

அவர்கள் அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர்களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மாறினர்.

அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கருதி அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம்.

அல்குர்ஆன் 7:130-136

இந்த வசனங்களில் ஃபிர்அவ்னின் சமுதாயத்தினரை மட்டும் வேதனை செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான். அந்த வேதனையை மாற்றி மாற்றிச் செய்ததாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இன்று ஏற்படுகின்ற இந்தக் காய்ச்சல்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் முஸ்லிம் கிறித்தவர்கள்இறை மறுப்பாளர்கள் என அனைவரையும் சேர்த்தே பீடிக்கின்றன. அதனால் இதைத் தண்டனை என்று ஒரு போதும் கூற முடியாது.

இந்தத் தண்டனையைப் பற்றி அறிவிப்பதற்கு இறைத் தூதர்கள் இருந்தாக வேண்டும். காரணம் அவர்கள் வஹீயின் தொடர்பில் இருப்பதால் அல்லாஹ் அவர்களிடம் தான் அது பற்றி அறிவிப்பான்.

இந்த நியதிகளின் அடிப்படையில் அமைந்தால் தான் மக்களுக்கு ஏற்படும் வேதனையை அல்லாஹ்வின் தண்டனை என்று சொல்ல முடியும். இல்லையென்றால் அது சோதனையாகும்.

சோதனை

தண்டனை என்பது ஒருவர் செய்த தீமைக்குப் பரிசாக வழங்கப்படும் வேதனை! இதைத் தான் நபிமார்களின் வரலாறுகளில் நாம் கண்டோம். இதை இன்னும் தெளிவுபடுத்துவதற்காக பனூ இஸ்ரவேலர்கள் குரங்குகளாக மாற்றப்பட்ட வரலாற்றைக் குறிப்பிடலாம்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்? என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும் அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்) எனக் கூறினர்.

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.

தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்! என்று அவர்களுக்குக் கூறினோம்.

அல்குர்ஆன் 7:163-166

சனிக்கிழமையன்று வணங்க வேண்டும் என்ற கட்டளையை பனூ இஸ்ரவேலர்கள் செய்யாததுடன் அந்நாளில் மீன் பிடிக்கக் கூடாது என்ற தடையையும் மீறினார்கள். இதனால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இறைவனின் கட்டளையைச் செய்யாமல் அவன் விதித்த தடையையும் மீறியதற்காக இந்தத் தண்டனை.

சோதனை என்பது இரு விதங்களில் அமையும்.

1. திருத்துவது.

2. தேர்வு செய்தல் பரிசளித்தல்

திருத்துதல்

திருத்துதல் என்பது காஃபிர்களுக்குரியதாகும்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். (அல்குர்ஆன் 29:65)

கடலில் பயணம் செய்யும் போது அல்லாஹ் கடுமையான புயலை அனுப்புகின்றான். அதன் மூலம் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கின்றான். அவர்கள் திருந்தவில்லை எனில் அவர்களுக்கு மறுமையில் நிரந்தர நரகத்தைக் கூலியாக வழங்குகின்றான்.

தேர்வு செய்தல் பரிசளித்தல்

இது இறை நம்பிக்கையாளர்களுக்குரியதாகும்.

இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மிகப் பெரும் அந்தஸ்தை அளிக்கின்றான். தலைவர் என்ற பதவியை அளித்தான். அந்தப் பதவிக்கு அவரைத் தேர்வு செய்வதற்கு முன்னால் பல விதமான சோதனைகளைச் செய்கிறான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன் என்று அவன் கூறினான். எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 2:124

அந்தச் சோதனைகளில் மகத்தான சோதனை இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகனை அறுத்துப் பலியிட வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையாகும். அந்தக் கட்டளையை நிறைவேற்ற முன்வந்து அந்தச் சோதனையில் வெற்றியும் அடைகின்றார்.

அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம் என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

அல்குர்ஆன் 37:101-107

பயிற்சிப் போட்டிகள்

ஒரு விளையாட்டுப் போட்டிக்குச் செல்வதற்கு முன்னால் பல்வேறு பயிற்சிப் போட்டிகள் நடக்கின்றன. அதன் பின் கால் இறுதி அரையிறுதிப் போட்டிகள். அவற்றில் வெற்றி பெற்றால் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். இதுபோன்று ஒரு போர்க்களத்தில் கலந்து கொள்வதற்கு முன்னரும் அல்லாஹ் ஒரு சில சோதனைகளை வைக்கிறான்.

தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அல்லாஹ் உங்களை ஒரு நதியின் மூலம் சோதிக்கவுள்ளான். அதில் அருந்துபவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர். அதை உட்கொள்ளாதவர் என்னைச் சேர்ந்தவர்; கை அளவு அருந்தியவர் தவிர என்றார். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதில் அருந்தினார்கள். அவரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்த போது ஜாலூத் மற்றும் அவனது படையினருடன் (போரிட) இன்று எங்களுக்கு எந்த வலிமையும் இல்லை என்றனர். அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம் என்று நம்பியோர்எத்தனையோ சிறு படைகள் பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான் என்றனர்.

ஜாலூத்தையும் அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்த போது எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! என்றனர்.

அல்குர்ஆன் 2:249 250

போர்க்களத்திலும் போர்க் காலத்திலும் மட்டுமல்லாது சாதாரண ஹஜ் போன்ற வணக்கத்திலும் அல்லாஹ் சோதனை வைக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்? என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 5:94

ஹாஜிகளிடமிருந்து ஹஜ் என்ற வணக்கத்தை ஏற்றுக் கொள்வதற்கும் அல்லாஹ் இந்தத் தேர்வை நடத்துவதைப் பார்க்கிறோம்.

இதுபோன்று பரிசு சன்மானம் வழங்குவதற்கும் பாவத்தை அழிப்பதற்கும் அல்லாஹ் சோதனையை வைக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்கடம் நான் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ஆம்; உங்கல் இரு மனிதர்கள் காய்ச்சலால் அடைகின்ற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகின்றேன் என்று சொன்னார்கள்.

நான் (இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ஆம்; அது அப்படித் தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5648 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சோதிக்கப்படுகிறார்கள்; அதிலும் கடுமையாகச் சோதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

நபி (ஸல்) அவர்களுக்கும் முஃமின்களுக்கும் ஏற்படுகின்ற சோதனை அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பரிசைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சோதனையாகும். இதைத் தான் அல்லாஹ் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 2:155 156

இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தக் காய்ச்சல் இறை நம்பிக்கையாளர்களையும் பிடித்திருக்கின்றது;இறை மறுப்பாளர்களையும் பிடித்திருக்கின்றது. எனவே இதை அல்லாஹ்வின் தண்டனை என்று கூற முடியாது. இது இறைவன் வைத்திருக்கும் சோதனை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.


இந்தச் சோதனை மூலம் இறை நம்பிக்கையாளர்களுக்கு அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். இறை மறுப்பாளர்களுக்கு இதன் மூலம் திருந்துவதற்கான வாய்ப்பை அளிக்கின்றான் என்று விளங்கிக் கொள்வோமாக!

EGATHUVAM FEB 2010