Apr 29, 2017

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய வாழ்வுரிமை

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய வாழ்வுரிமை

இன்று இந்தியாவில் பெண்களின் வாழ்வுரிமை கருவறையிலிருந்து கல்லறை வரை பல்வேறு கட்டங்களில் பறிக்கப்படுவதைப் பார்த்தோம்.

இது போன்ற ஓர் அநியாயம், அரக்கத்தனம் அன்று அரபகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதை அல்குர்ஆன் அழகாக விவரித்துச் சொல்கின்றது.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 16:58, 59

இது அன்றைய நிலை! இன்றைய நிலை என்ன?

ஒரு தம்பதியருக்குப் பத்து பெண் குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் கூடக் கவலைப்படுவதில்லை. மாறாக அவர்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள். காரணம் என்ன? ஒரு பெண்ணை மணமுடிக்க வேண்டுமென்றால் மாப்பிள்ளை தான் அவளுக்கு லட்சக்கணக்கில் அளிக்க கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!

அல்குர்ஆன் 4:4

என்று அல்குர்ஆன் ஆணையிடுகின்றது. எனவே அங்கு பெண் குழந்தை பிறந்தால் வரவு! இங்கு பெண் குழந்தை பிறந்தால் செலவும் இழவும் ஆகும். இந்தியாவைப் போன்று வரதட்சணைக் கொடுமை என்பது ஒரு வாடைக்குக் கூடக் கிடையாது. அதனால் பெண் குழந்தைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.



பொதுவாக அரபக முஸ்லிம்கள் ஆண் குழந்தையானாலும் சரி! பெண் குழந்தையானாலும் சரி! அதை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம் அல்குர்ஆன் தான்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 42:49, 50

இப்படி ஒரு பக்குவத்தையும் பண்பையும் அவர்களுடைய உள்ளத்தில் அல்குர்ஆன் ஊட்டி விடுகின்றது. அதனால் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

(உம்ராவுக்காக வந்த) நபி (ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று நாட்களில் மக்காவை விட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்கüன் (அனாதை) மகள், "என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!'' என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின் தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கüடம், "இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைச் சுமந்து கொள்'' என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், "அவளை நான்தான் வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். அலீ (ரலி) அவர்கள், "நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்'' என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்கள், "இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்'' என்று கூறினார்கள். ஸைத் (ரலி) அவர்கள், "(இவள்) என் சகோதரரின் மகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் (ரலி) அவர்கள் அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பüத்தார்கள். மேலும், "சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்'' என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்களை நோக்கி, "நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்'' என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களை நோக்கி, "நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கின்றீர்கள்'' என்று சொன்னார்கள். மேலும் ஸைத் (ரலி) அவர்களை நோக்கி, "நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எமது பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2699

பெண் குழந்தைகளைப் புதைத்துக் கொண்டிருந்த ஒரு சமுதாயம், அந்தப் பெண் குழந்தையை அரவணைப்பதற்கும் அன்பு செலுத்தி வளர்ப்பதற்கும் முன் வருவது ஏன்? திருக்குர்ஆன் அவர்களுடைய உள்ளத்தில் ஊட்டிய மறுமை உணர்வு தான்.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

அல்குர்ஆன் 81:7, 8

திருக்குர்ஆனின் இந்த வசனம் - நாளை மறுமையில் நாம் பதில் சொல்ல வேண்டும் என்ற இறையச்சம் - தான் மிருக நிலையில் இருந்த அவர்களை மனிதர்களாக மாற்றியது. அத்துடன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், "பெண் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் காவல் அரண்களாக, கவசங்களாகத் திகழும்' என்று சொன்னதால் பெண் குழந்தைகளைப் பேணி வளர்க்கத் துவங்கினார்கள்.

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், "இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1418

"இரு பெண் குழந்தைகளைப் பருவமடைகின்ற வரை யார் பாதுகாத்து வளர்க்கின்றாரோ அவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு வருவோம்'' என்று நபி (ஸல்) அவர்கள் தமது இரு விரல்களை இணைத்துக் காட்டிச் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4765

தனது இரு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓர் ஏழைப் பெண் என்னிடத்தில் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீத்தம்பழங்களைக் கொடுத்தேன். அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு பேரீத்தம்பழத்தைக் கொடுத்து விட்டு ஒரு பேரீத்தம்பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக வாயை நோக்கி உயர்த்தினார். அப்போது அவரது இரு பெண் குழந்தைகளும் அதையும் சாப்பிடத் தருமாறு கேட்டனர். தான் சாப்பிட விரும்பிய அந்தப் பேரீத்தம்பழத்தை இரண்டாகப் பிய்த்துக் கொடுத்து விட்டார். அவரது இந்தச் செயல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் செய்த இந்தக் காரியத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். "அவர் செய்த இந்தக் காரியத்தின் காரணமாக அவருக்குச் சுவனம் உறுதியாகி விட்டது" அல்லது "அவர் செய்த இந்தக் காரியத்தின் காரணமாக அவரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 4764

இன்று கடுமையான வறுமையின் காரணமாகத் தன் பெண் குழந்தைகளைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களைப் பத்திரிகைகளில் பார்க்கிறோம். ஆனால் இந்தத் தாயோ தனக்கு இல்லாவிட்டாலும் தன் பெண் குழந்தைகளுக்கு வழங்குகின்றார்.

இப்படி ஒரு மாற்றம் அவரிடத்தில் வருவதற்கு முக்கியக் காரணம் இஸ்லாம் அவர்களுடைய உள்ளத்தில் பதிய வைத்த மறுமை வாழ்க்கை தான்.

இதயத்தில் பதியப்படும் இறையச்சம்

தாங்கள் மறுமையில் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்ற பயம் தான் மக்களை சரியான பாதைக்குக் கொண்டு செல்லும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: அறிந்து கொள்க! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 52

இந்த யுக்தியைத் தான் இஸ்லாம் கைக்கொண்டது.

இஸ்லாம் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தாலும் உள்ளத்தில் மறுமை பற்றிய பயத்தைப் பதிய வைப்பதில் தான் அதிகக் கவனம் செலுத்துகின்றது. அதனால் இஸ்லாமிய அரபுலம் அன்றும் இன்றும் பெண் குழந்தைகள் மீது எந்த வெறுப்பையும் வேறுபாட்டையும் காட்டுவதில்லை.

இந்தியாவில் இப்படி ஒரு மாற்றம் வேண்டும் என்றால் இஸ்லாமிய மயமாவது தான் வழி.

ஓரிறைக் கொள்கை

இவை அனைத்தையும் விட, எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாம் கொண்டு வந்த கடவுள் கொள்கை! ஓரிறைக் கொள்கை தான் மக்களை மக்களாக வாழ வைக்கும். பல தெய்வக் கொள்கை தான் பாழாய் போன அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகின்றது.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

அல்குர்ஆன் 6:137

குழந்தைகளைக் கொல்வதற்கு மக்களின் கொள்கையும் கோட்பாடும் முக்கியக் காரணமாக அமைகின்றது. கோணலான, கோளாறான கடவுள் கொள்கை இந்தக் கொடுமைகள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணமாகின்றது.

மூடப் பழக்கங்கள், முடைநாற்ற சிந்தனைகள் தான் தாங்கள் பெற்ற பிள்ளைகளைக் கொல்ல வைக்கின்றது. இதை அல்குர்ஆன் அழகாக விளக்குகின்றது.

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.

அல்குர்ஆன் 6:140

உயிர் காக்கும் உயர் கொள்கை

இன்று முஸ்லிம்களும் கருக் கொலையில் ஈடுபடுகின்றார்கள். பெண் குழந்தைகளை அழிக்கின்றார்கள். வரதட்சணை போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றார்கள். உண்மையான ஓரிறைக் கொள்கையுடையவர்கள் இந்தக் காரியங்களிலும் அதன் காரணிகளிலும் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.

ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, "குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்கüல் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடக்கவில்லை'' என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். மேலும், அவர், உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், "அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்'' என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளது தந்தையிடம்(சென்று), "நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளது செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்)க் கொள்கிறேன்'' என்று சொல்வார்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

நூல்: புகாரி 3828

இன்று இஸ்லாமிய சமுதாயம் இப்ராஹீம் என்று பெயர் வைப்பதில் குறை வைப்பதில்லை. ஹஜ் பெருநாள் வந்ததும் குர்பான் கொடுப்பதிலும் குறை வைப்பதில்லை. ஆனால் இப்ராஹீம் நபியின் கொள்கையைப் பின்பற்றுவதில் மட்டும் குறை வைத்து விட்டனார். அவரது கொள்கைகளைப் பின்பற்றினால் கருவறை முதல் கல்லறை வரை குழந்தைகளைக் கொல்வதற்குக் காரணமான வரதட்சணை போன்ற காரியங்களில் ஒருபோதும் இறங்க மாட்டார்கள்.

மேற்கண்ட செய்தியில் இஸ்லாம் வருவதற்கு முன்பே ஜைத் பின் அம்ர் என்பார் பெண் குழந்தைகளைக் கொல்லாமல் காக்கின்றார் என்றால் அவரை இந்தக் குணத்தில் கொண்டு அமைத்தது அவர் கொண்ட ஏகத்துவக் கொள்கை தான்.

எனவே இந்த ஓரிறைக் கொள்கை தான் உயிர் காக்கும் உயர் கொள்கையாகும். அந்தக் கொள்கையை மக்கள் கடைப்பிடித்தால் பெண்களின் வாழ்வுரிமை காக்கப்படும். பெண்களின் கண்ணியம் போற்றப்படும்.

கற்பழிப்பு இல்லை! கருக்கலைப்பு இல்லை!

சவூதியில் பொதுவாக கருக்கலைப்பு என்பது இல்லை. அதனால் பெண் குழந்தைகள் என்று கண்டறிந்து கருவைச் சிதைப்பது என்பது அறவே இல்லை. பெண் சிசுக் கொலை, கருக்கலைப்புக்கு அடிப்படைக் காரணம் வரதட்சணைக் கொடுமை தான். அந்த வரதட்சணை அங்கு இல்லை எனும் போது பெண் கருவா என்று கண்டுபிடிக்கும் பேச்சுக்கே இடமில்லை.

பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள்; கொலை செய்யப்படுவார்கள் என்ற கவலையும் அங்கு இல்லை. காரணம் இஸ்லாத்தின் இலக்கே ஒரு பெண் தனியாகச் செல்லும் போது அவள் பாதுகாப்பாகச் சென்று வருவது தான். இதை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.

நான் நபி (ஸல்) அவர்கüடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்கüடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்கüடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ "ஹீரா'வைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது'' என்று பதிலüத்தேன். அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள். -நான் என் மனத்திற்குள், "அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட "தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளை யர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?'' என்று கேட்டுக் கொண்டேன்.- நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), "நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ(பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்'' என்று சொன்னார்கள். நான், "(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)'' என்று பதிலüத்தார்கள். (மேலும் சொன்னார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தனது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்üயை எடுத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்பவரைத் தேடியலைவார். ஆனால் அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்கüல் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாüல், அவருக்கும் அவனுக்குமிடையே மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், "நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?'' என்று கேட்பான். அவர், "ஆம், (எடுத்துரைத்தார்)'' என்று பதிலüப்பார். பிறகு அல்லாஹ், "உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்தவில்லையா?'' என்று கேட்பான். அவர், "ஆம் (உண்மைதான்)'' என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப் பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)'' என்று சொல்லக் கேட்டேன்.

மேலும், "ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்கüல் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் "ஒருவன் தங்கத்தையோ வெள்üயையோ கைநிறைய அள்üக் கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்'' என்று அபுல் காஸிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடை முறையில்) காண்பீர்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 3595

இந்த ஒரு நிம்மதி அந்த நாட்டில் நிலவுகின்றது. இதற்கு மற்றொரு காரணம் மிகக் கடுமையான குற்றவியல் சட்டம் தான்.

திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்; திருமணம் முடிக்காதவர்களாக இருந்தால் 100 கசையடிகள் கொடுத்து அவர்களை ஒரு வருடத்திற்கு நாடு கடத்த வேண்டும். இப்படிக் கடுமையான சட்டம் இருப்பதால் இதுபோன்ற குற்றங்கள் உலக நாடுகளை விட அங்கு குறைவாக உள்ளது. அந்நாடு மட்டும் முழுமையான அளவில் இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்துவார்களானால் இன்னும் மிக மிகக் குறைவான அளவிலேயே குற்றங்கள் இருந்திருக்கும்.

ஆடை கட்டுப்பாடு

பெண்கள் உயிர் காப்பதற்கு இஸ்லாம் மேற்கொண்டிருக்கும் மிக முக்கியமான நடவடிக்கை பெண்களின் ஆடைக் கட்டுப்பாடாகும்.

பெண்கள், அவர்களின் உடல் முழுவதையும் மறைக்கின்ற கண்ணியமான ஆடையை அணியச் செய்கின்றது.

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:60

இன்று ஆண்களைக் கவர்ந்திழுப்பதில் கவர்ச்சிகரமான, ஆபாசமான, அரைகுறை ஆடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே இஸ்லாம் கண்ணியமான ஆடை மூலம் இந்தக் காம வாசலை அடைத்து விடுகின்றது.

அதுமட்டுமில்லாமல் ஆண், பெண் ஆகிய இரு சாராரும் தங்களுக்கு மத்தியில் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படி திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் 24:30, 31

ஆண்கள், பெண்களின் பார்வைக்கு இவ்வாறு ஒரு கட்டுப்பாடு விதித்து இரு பாலரின் கற்பு நெறியை பரஸ்பரம் பாதுகாக்கும் வகையில் பார்வைக்குக் கடிவாளம் போடுகின்றது.

குடும்பக் கொலைகள்

பெண்களுக்கு எதிரான கொலைகள் வீதியில் மட்டும் நடைபெறவில்லை. வீட்டிற்குள்ளும் நடைபெறுகின்றன. இந்தக் குடும்பக் கொலைகளுக்கு எதிராக இஸ்லாம் போதிய நடவடிக்கையை மேற்கொள்கின்றது. இதுபோன்ற கொலைகள் இஸ்லாமிய நெறிக்கு மாற்றமாக வாழும் குடும்பங்களில் தான் நடைபெறுகின்றன. அண்ணன் மனைவியை தம்பி அனுபவித்தான்; தம்பி மனைவியை அண்ணன் அனுபவித்தான் என்ற காரணங்களால் தான் இந்தக் கொலைகள் நிகழ்கின்றன. இந்த வாசலையும் இஸ்லாம் அடைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரி 5232

இன்னும் இதுபோன்ற எண்ணற்ற சட்ட மற்றும் ஒழுக்க நெறிகள் மூலமாக இஸ்லாம் பெண்களுக்குக் கருவறை முதல் கல்லறை வரை வாழ்வுரிமையை வழங்குகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக ஓரிறைக் கொள்கை, மறுமை வாழ்க்கை எனும் உயர்ந்த உன்னத நம்பிக்கை மூலமாகப் பெண்களை கண்ணியமான முறையில் பாதுகாக்கின்றது.


இந்தியா இந்த இஸ்லாத்தைப் பின்பற்றாத வரை இந்நாட்டுப் பெண்களுக்கு விமோச்சனமும் விடுதலையும் இல்லை.

EGATHUVAM JUL 2011