உரிய நீதி வழங்குமா உச்ச நீதிமன்றம்?
செப்டம்பர் 30, 2010 அன்று
பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்
நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கின்றது. இது இந்திய
முஸ்லிம்களின் பார்வையை மட்டுமல்ல! உலக முஸ்லிம்களின் பார்வையையும் உச்ச நீதிமன்றத்தை
நோக்கித் திருப்பியுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட
அநீதி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் சரி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் 1994ல் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு அதே உச்ச நீதிமன்றத்தின் மூலம் அது சரி செய்யப்பட்டது.
அதுவும் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி நடத்திக் கொண்டிருந்த போது உச்ச நீதிமன்றம் இந்தத்
தீர்ப்பை வழங்கி நீதியை நிலைநாட்டியது.
பாபரி மஸ்ஜித் வழக்கில் இன்னும் சரி செய்யப்படாத அநீதிகள் பல
இருந்தாலும்,
2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட
இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாபரி மஸ்ஜிதைச் சுற்றியுள்ள நிலத்தை
குறுக்கு வழி மூலம் விஹெச்பி கைப்பற்ற நினைத்ததை அந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம்
முறியடித்தது.
தமிழ் ஏடுகள் எவற்றிலும் இதுவரை வெளிவராத இந்த விளக்கங்களை ஏகத்துவம்
உங்கள் முன்னிலையில் தருகின்றது.
குடியரசுத் தலைவரின் ஆணை மூலம் மத்திய அரசு 1993ல் பாபரி மஸ்ஜித் நிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலத்தைக்
கையகப்படுத்தியதை நாம் அறிவோம்.
இதன் பின்னர் மத்திய அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்
கருத்துக் கேட்டது. 1994ல் உச்ச நீதிமன்றம் அது தொடர்பாகத்
தனது தீர்ப்பையும் அளித்தது. இந்தத் தீர்ப்பு வெளிவந்த பின்பு விஷ்வ ஹிந்து பரிஷத், பாபரி மஸ்ஜிதிற்கு அருகிலுள்ள இடத்தைத் தன்னிடம் திரும்ப ஒப்படைக்க
வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. அதற்கு இரு விதமான காரணங்களை முன்வைத்தது.
1. பாபரி மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள நிலம், ராம ஜென்ம பூமி நியாஸ்க்கு உரியது.
2. இதை ராம ஜென்மபூமி நியாஸ், விஷ்வ
ஹிந்து பரிஷத் அமைப்புகளுக்குத் திரும்பக் கொடுப்பதால் பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான
வழக்குக்கு இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னால் விஹெச்பி இவ்விரு
வாதங்களையும் முன் வைப்பதற்குக் காரணம் என்ன?
உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதிகளில்
ஒருவரான ஜகதீஸ் சரண் வர்மா (ஜே.எஸ். வர்மா) அளித்த தீர்ப்பு இது தான்.
"சர்ச்சைக்குரிய நிலத்தில் பள்ளி இடிக்கப்படுவதற்கு முன்னால்
அப்பள்ளி அமைந்திருந்த இடத்தில் மட்டும் தான் முஸ்லிம்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு
எதிராக இந்துக்கள் எழுப்புகின்ற ஆட்சேபணை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும். 1993 அயோத்தியா நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாபரி மஸ்ஜித்
இடத்தைத் தவிர எஞ்சியிருக்கும் இடத்தில் முஸ்லிம்கள் எவ்வித உரிமையும் கோரவில்லை. இந்துக்களின்
சொத்துக்கள் அடங்கிய அந்த எஞ்சியுள்ள நிலத்தின் பெரும்பகுதி இந்துக்களுக்குச் சொந்தமானது.
அவை சர்ச்சைக்குரிய பகுதி அல்ல!''
வர்மாவின் இந்தத் தீர்ப்பு தான் விஹெச்பியின் கோரிக்கைக்கு அஸ்திவாரமாக
அமைந்தது.
விடுவார்களா விஹெச்பி?
அவ்வளவு தான்! விஹெச்பி வரிந்து கட்டிக் கொண்டு, பள்ளிக்கு அருகில் அமைந்த நிலத்தைக் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
மத்திய அரசாங்கம் மொத்தம் 67.703 ஏக்கர் நிலத்தை 1993ல் கையகப்படுத்தியது. இதில் விஹெச்பி 43 ஏக்கர் நிலத்தை திரும்பக் கோரியது. இதற்குத் தான் மேற்கண்ட
இரண்டு வாதங்களை முன்வைத்தது.
இப்போது விஹெச்பி கோருகின்ற 43 ஏக்கர்
நிலத்தின் பின்னணியைப் பார்ப்போம்.
இந்த நிலம் உ.பி. அரசாங்கத்தால் ராம ஜென்மபூமி நியாஸ், விஹெச்பிக்கு சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகக் குத்தகைக்குக்
கொடுக்கப்பட்டது. ராமர் கோயில் கட்டுவது அந்த நோக்கங்களில் அறவே இடம் பெறவில்லை.
இதைத் திட்டமிட்டு மறைத்தே உ.பி. அரசிடமிருந்து ராம ஜென்மபூமி
நியாஸ், விஹெச்பி இந்த நிலத்தை குத்தகைக்குப் பெற்றது.
1992ல் இந்த அமைப்புகளின் நோக்கம் பள்ளியை இடித்து விட்டு கோயிலைக்
கட்டுவது தான். அதே நோக்கத்திற்காகவே பள்ளிக்கு அருகிலுள்ள நிலத்தை திரும்பத் தரும்படி
மத்திய அரசிடம் கேட்டது.
அப்போதைய பிஜேபி தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகிறார்:
உண்மையில் சர்ச்சைக்குரிய பகுதி பாபரி மஸ்ஜித் இருந்த 80க்கு 40 அடி கொண்ட பகுதி மட்டும் தான்.
மீதியுள்ள நிலப் பகுதி சர்ச்சைக்குரிய பகுதி அல்ல! இது ராம ஜென்மபூமி நியாஸ், விஹெச்பியால் வாங்கப்பட்ட நிலமாகும். எனவே ராம ஜென்மபூமி நியாஸ், விஹெச்பி இந்த நிலத்தைத் திரும்பக் கேட்பதில் ஓர் அடிப்படை இருக்கின்றது.
(தி இன்டியன் எக்ஸ்பிரஸ், 06.02.2002)
ஆனால் மார்ச், 4, 2002 அன்று
பிரதமர் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து:
கையகப்படுத்தப்பட்ட, சர்ச்சைக்குரிய
67 ஏக்கர் நிலத்தில் ராம ஜென்மபூமி நியாஸ், விஹெச்பி 42 ஏக்கருக்கு நிரந்தர குத்தகைதாரர்.
அத்துடன் கையகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்.
இவ்வாறு தெரிவித்த வாஜ்பாய், என்ன
நிபந்தனைகளின் அடிப்படையில் உ.பி. அரசு நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்தது என்பதைத்
தெரிவிக்காமல் விட்டு விட்டார். அதைத் தெரிவித்தால் விஹெச்பியின் மோசடி அப்போதே வெளிச்சத்திற்கு
வந்திருக்கும்.
ராமர் கதா பூங்கா
சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஸ்ரீராம் கதா பூங்காவை
அமைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் உ.பி. அரசாங்கம் ராமஜென்ம பூமி நியாசுக்கு
அந்த நிலத்தை குத்தகைக்குக் கொடுக்கின்றது. குத்தகையின் நிபந்தனை இது தான்.
தனது சொந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை செயல்படுத்தப்
போவதாகவே குத்தகைதாரரான ராமஜென்ம பூமி நியாஸ் தெரிவித்திருந்தது. இதன் பேரில் தான்
உ.பி. அரசு 42 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட்டது.
குத்தகைதாரர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று
குத்தகை ஒப்பந்த விதி எண்: 3 தெரிவித்தது.
குத்தகைக்கு விடுபவர், அதாவது மாநில
அரசாங்கம் தான் இந்த நிலத்தின் உரிமையாளர் என்று விதி எண்: 4 தெரிவித்தது. அதன் உரிமையாளர் என்ற அடிப்படையில் நிலத்தில்
சோதித்துப் பார்ப்பதற்கு அதிகாரம் அளித்தது.
1895ஆம் ஆண்டில் அரசு வழங்கல்கள் சட்டத்தின்படி நிலம் குத்தகைதாரருக்கு
வழங்கப்பட்டது என்று தெளிவாக அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகின்றது.
ஏற்கனவே 1882ஆம் ஆண்டின் சொத்து மாற்றச்
சட்டப்படி குத்தகைதாரருக்கு (தான் வழங்கிய சொத்தை அரசு தன்னிச்சையாகப் பறிக்காமல் இருப்பதற்காக)
ஒரு பாதுகாப்பு இருந்தது.
1895ஆம் ஆண்டில் அரசு வழங்கல் / கொடைகள் சட்டம், குத்தகைதாரருக்கு வழங்கப்பட்டிருந்த அந்தப் பாதுகாப்பை நீக்கி
விட்டது.
குத்தகைதாரர், ஒப்பந்தத்தை
மீறினால் அரசு தன் விருப்பப்படி தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தை உடனே ரத்துச் செய்து
விடலாம் என்று அந்தச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் உ.பி. அரசு அந்த ஒப்பந்தத்தை
ரத்துச் செய்யாமல் கோயில் கட்டும் நோக்கத்திற்காகவே ராமஜென்மபூமி நியாஸிடம் விட்டு
வைத்திருந்தது.
பச்சைப் பொய்! பகிரங்கப் பொய்!
இந்தச் சட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு, ராம ஜென்மபூமி நியாஸ், உ.பி. அரசிடமிருந்து
குத்தகை நிலத்தை எந்த அடிப்படையில் பெற்றது என்பதைப் பார்ப்போம்.
ராமர் கதா பூங்காவை அமைப்பது, அதை
அழகுபடுத்துவது,
புராண காவியமான ராமாயணத்தின் கலாச்சார கண்ணோட்டங்களைக் காணச்
செய்வது என்ற அடிப்படையில் தான் ராம ஜென்மபூமி நியாஸ் அந்த நிலத்தை குத்தகைக்குப் பெற்றது.
உ.பி. அரசின் சுற்றுலாத் துறையும் இந்த நோக்கத்திற்காகத் தான் கொடுத்தது.
இது ஓர் ஒன்பதாண்டு காலத் திட்டம் என்பதாலும் பொதுக் காரியம்
என்பதாலும்,
அந்த நிலத்தை ஒரு ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் கூட குத்தகைக்கு
விடாமல் நிரந்தரக் குத்தகைக்கு விட்டது.
இதில் ராம ஜென்மபூமி நியாஸ் சொந்தமாக வாங்கியது ஒரே ஒரு ஏக்கர்
நிலம் தான். மீதமுள்ள 42.09 ஏக்கர் நிலம் உ.பி. அரசுக்குச்
சொந்தமானது.
1989ஆம் ஆண்டு ஜனவரி 20, 23 மற்றும்
செப்டம்பர் 27 ஆகிய தேதிகளில் ராம் கதா பூங்காவுக்காக பாபர் மஸ்ஜிதுக்கு அப்பால்
55.674 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசாங்கம் கையகப்படுத்தியது.
ஆட்சிக்கு வந்த பிஜேபி
ஜூன் 24, 1991ல் உத்தர பிரதேசத்தில்
பிஜேபி ஆட்சிக்கு வந்தது. ஜூலை 31, 1991 அன்று கவர்னர் உரையில்
ராமர் கோயில் கட்டுவோம் என்ற உறுதிமொழி இடம்பெற்றது.
அக்டோபர் 7, 1991ல் பாபரி மஸ்ஜிதைச் சுற்றியுள்ள
2.77 ஏக்கர் நிலத்தை முறையின்றி உ.பி. அரசு கையகப்படுத்தியது. எதற்காக? சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும், பக்தர்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் இந்த
நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அரசின் இந்த நிலப் பறிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுக்கப்பட்டது. அப்போது அதற்குப் பதிலளித்து ஜனவரி 3, 1992ல் தாக்கல் செய்த பிரமாணத்தில் உ.பி. அரசு தெரிவித்ததாவது:
ராமஜென்ம பூமியை (ராமர் பிறந்த இடம் மற்றும் அதைச் சுற்றிலும்
அமைந்த பகுதி) உள்ளடக்காமல் ராம் கதா பூங்காவை அமைக்க எந்தத் திட்டமும் இல்லை. காரணம்
ராம் கதா பூங்கா அமைக்கப் போவதே ராம ஜென்ம பூமியைச் சுற்றித் தான். இந்த முடிவைக் கருத்தில்
கொண்டு தான் ஓர் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவதற்காக வேண்டி மாநில அரசு 2.77 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது.
பகவான் ராமர் விராஜ்மான் கோயில் கட்டுவதற்காக வேண்டி ராம ஜென்மபூமியின்
ஒரு குறிப்பிட்ட பகுதி கட்டாமல் காலியாக விடப்படும்.
இது தான் நீதிமன்றத்தில் உ.பி. அரசு தாக்கல் செய்த வாக்குமூலமாகும்.
அரசு நிலத்தை ராம ஜென்மபூமி நியாஸ் குத்தகைக்கு எடுத்ததற்கான
குறுகிய நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விட்டது. ராம ஜென்மபூமி நியாஸின் அப்பட்டமான பச்சைப்
பொய்யை, பகிரங்கப் பொய்யை அம்பலப்படுத்தி விட்டது.
ராமர் கதை பூங்கா என்பதெல்லாம் வெறும் கதையளப்பு! பள்ளியை இடித்து
விட்டுக் கோயில் கட்டுவது தான் அதன் நோக்கம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
அத்துடன் பள்ளிக்கு அருகில் உள்ள நிலம் சர்ச்சைக்குரியது தான்
என்பதும் இங்கு உறுதியாகி விட்டது. அது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலம் என்ற சங் பரிவாரத்தின்
வாதம் பொய் என்பதும் ஊர்ஜிதமாகி விட்டது.
அம்பலப்படுத்திய ஹைகோர்ட்
இந்த உண்மையை உயர் நீதிமன்றமும் அம்பலப்படுத்தியது. உ.பி. அரசால்
கையகப்படுத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு
உயர் நீதிமன்றத்திற்கு வந்த போது, அது ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின்
அறக்கட்டளை விதிகள் குறித்து தனது பார்வையைச் செலுத்தியது.
டிசம்பர் 18, 1985ல் செயலாக்கம் கண்ட இந்த
அறக்கட்டளை விதிகளின் முக்கிய நோக்கமே ராமர் கோயிலைக் கட்டுவது தான். அதன் அறங்காவலர்கள்
அனைவருமே தெளிவான விஹெச்பி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்டவர்கள்.
இது தொடர்பாக நீதிபதி எஸ்.சி. மாத்தூர் குறிப்பிட்டதாவது:
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட ராமர் கதா பூங்காவும், அண்மையில் கையகப்படுத்தப்பட்ட (2.77) நிலமும் ஒரே நோக்கத்திற்காகத் தான் பயன்படுத்தப்படவுள்ளது. ராமர்
கதா பூங்காவிற்கான நிலம் ஒப்படைக்கப்பட்ட டிரஸ்ட், விஹெச்பி
உறுப்பினர்களின் ஆதிக்கத்தைக் கொண்ட டிரஸ்ட் ஆகும். அதன் நோக்கமும், குறிக்கோளும் மத ரீதியிலானது. அக்டோபர் 1991ல் கையகப்படுத்தப்பட்ட 2.77 நிலத்தை மார்ச்
20, 1992 அன்று ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பிற்குக் கொடுத்தது கோயில்
கட்டுதல் என்ற ஒரேவிதமான நோக்கத்திற்காகவும் நடவடிக்கைக்காகவும் தான். எனவே அது செல்லாது.
இவ்வாறு நீதிபதி எஸ்.சி. மாத்தூர் குறிப்பிடுகின்றார்.
"பள்ளிவாசலும், அதற்கு அருகிலுள்ள
அடக்கத்தலமும் முஸ்லிம்களின் வழிபாட்டுடன் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றுடன் மற்றொன்று
பின்னிப் பிணைந்தது. அடக்கத்தலம் என்பது முஸ்லிம்களின் வக்ஃப் சொத்தாகும். பள்ளியில்
இறந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி விட்டு இந்த அடக்கத்தலங்களில் அவர்களை முஸ்லிம்கள்
அடக்கம் செய்வார்கள். முஸ்லிம்களுக்கு அந்த அடக்கத்தலத்தில் சட்டப்பூர்வமான அக்கறையும்
ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள்'' என்று நீதிபதி எஸ்.ஹெச்.ஏ. ரஜா
தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடுகின்றார்.
இதற்கு 1885ல் ஒரு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட
வரைபடத்தையும் மேற்கோள் காட்டியிருந்தார். நான்கு பக்கங்களிலும் உள்ள அடக்கத்தலங்கள்
பள்ளியின் வெளிப்புற எல்லை நோக்கி அமைந்திருந்ததை அந்த வரைபடம் காட்டியது.
இந்தத் தீர்ப்பு, பள்ளியைச்
சுற்றி அமைந்திருந்த நிலங்கள் அடக்கத்தலம் என்றும், ராம
ஜென்மபூமி நியாஸின் அறக்கட்டளை விதிகள் மோசடி என்றும் அம்பலப்படுத்தியது.
ஆனால் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை டிசம்பர் 11, 1992 அன்று தான் அளித்தது. அப்போது பள்ளிவாசல் கயவர்களால் தரைமட்டமாக்கப்பட்டு
விட்டது.
இந்தத் தீர்ப்பு உ.பி. அரசு, ராம
ஜென்மபூமி நியாஸிற்கு 42 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்தது
செல்லாது என்று அறிவித்தாலும், குத்தகை ஒப்பந்தத்தின் பித்தலாட்டத்தை
அம்பலப்படுத்தினாலும் சட்டப்பூர்வமாக அந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யவில்லை.
இத்தனைக்குப் பிறகு அதற்கு உயிர் இல்லாவிட்டாலும் அந்தக் குத்தகை
ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு தான் ராம ஜென்ம பூமி நியாஸ் 42 ஏக்கர் நிலத்தைத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கின்றது.
வர்மாவின் வார்த்தைகள்
ராம ஜென்மபூமி நியாஸ் மற்றும் விஹெச்பி அமைப்புகளை இவ்வாறு கோர
வைத்தது நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் தீர்ப்பில் இடம் பெற்ற வாசகங்கள் தான்.
"அயோத்தியா நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பாபரி மஸ்ஜித்
இடத்தைத் தவிர எஞ்சியிருக்கும் இடத்தில் முஸ்லிம்கள் எவ்வித உரிமையும் கோரவில்லை. இந்துக்களின்
சொத்துக்கள் அடங்கிய அந்த எஞ்சியுள்ள நிலத்தின் பெரும்பகுதி இந்துக்களுக்குச் சொந்தமானது.
அவை சர்ச்சைக்குரிய பகுதி அல்ல!''
நீதிபதி வர்மா எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு குறிப்பிடுவது
தான் விஹெச்பிக்குத் தூண்டுகோலாகவும் ஊன்றுகோலாகவும் ஆகிவிட்டது. நீதிபதி வர்மா தனது
தீர்ப்பில்,
பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக பொம்மை வெளியிட்ட அறிக்கையை
அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றார்.
பொம்மை அறிக்கை
பாபரி மஸ்ஜிதின் மூன்று பக்கங்களும் பழமை வாய்ந்த மையவாடியில்
தான் அமைந்திருக்கின்றது. பக்கா மற்றும் கச்சாவான ஆயிரம் கப்ர்கள் இந்த மையவாடியில்
இருக்கின்றன. காஜி கித்வாவின் கப்ரும் இங்கு தான் இருக்கின்றது. அண்மைக் காலம் வரை
இடம் பெற்றிருந்த கப்ருகள் தான் மார்ச் 20, 1992ல்
அடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டன.
இவ்வாறு ஏப்ரல் 7, 1992 அன்று
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் அவர் வெளியிட்ட அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் 42.09 ஏக்கரை
ராம ஜென்மபூமி நியாஸிற்குக் குத்தகைக்கு விட்ட மாத்திரத்தில் அது செய்த முதல் வேலை
அங்கிருந்த சிறு சிறு கோயில்களையும் முஸ்லிம்களின் மையவாடியையும் இடித்துத் தரைமட்டமாக்கியது
தான்.
இவ்வாறு மார்ச் 10, 2002 இன்டியன்
எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவிக்கின்றது.
இந்தச் சிறு சிறு கோயில்களை இடித்த மாதிரியே பாபரி மஸ்ஜிதும்
இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விடும் என்ற பயம் முஸ்லிம்கள் அதிகமாக ஆட்கொண்டது என்றும்
பொம்மை தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முஸ்லிம்களின் மையவாடி வக்ஃப் சொத்தாகும். ஆனால் "பள்ளிக்கு
அருகில் அமைந்த இந்த நிலத்தின் மீது முஸ்லிம்கள் உரிமை கொண்டாடவில்லை' என்று தனது தீர்ப்பில் போகிற போக்கில் ஒரு குண்டைத் தூக்கிப்
போட்டு விட்டுப் போய் விட்டார் ஜே.எஸ். வர்மா! இது விஹெச்பிக்கு ஊட்டச்சத்தைக் கொடுத்தது.
பூஜைக்கு அனுமதி கோரல்
வர்மாவின் தீர்ப்பு வந்தது தான் தாமதம்! ராம ஜென்மபூமி நியாஸ்
மற்றும் விஹெச்பியினர் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் மார்ச் 15, 2002ல்
பாபரி மஸ்ஜிதுக்கு அருகில் பூமி பூஜை நடத்தப் போவதாக விஹெச்பி அறிவித்தது.
பூஜை நடத்துவதற்கு அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த பிஜேபி
அரசு அதற்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்தது.
இதற்காக அருகிலுள்ள சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தை (முஸ்லிம்களின்
அடக்கத்தலம் அமைந்த இடம் என்பதால் இதுவும் சர்ச்சைக்குரிய நிலம் தான் என்பதை மேலே கண்டோம்)
ராம ஜென்மபூமி நியாஸிற்கு மாற்றக் கோரி மத்திய அரசு, மார்ச்
13 அன்று உச்சநீதிமன்றத்தை அணுகியது என்று ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை
தெரிவிக்கின்றது.
கூலிக்கு மாரடித்த சோலி சொராப்ஜி
பிஜேபி அரசின் அட்டார்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) பதவியில்
நியமிக்கப்பட்ட சோலி சொராப்ஜி, பாபரி மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள
நிலத்தில் பூமி பூஜை செய்ய உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.
சர்ச்சைக்கு அப்பாற்பட்ட, அருகிலுள்ள
நிலத்தில் தற்காலிகமாக பூமி பூஜை நடத்துவது தடை செய்யப்பட்ட காரியமல்ல! அது அங்கு நீடித்து
வரும் ஸ்டேட்டஸ் கோ நிலையை மீறியதாகவும் ஆகாது என்று தெரிவித்தார்.
சுதாரித்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்
தான் அளித்த தீர்ப்பில் ஏதோ தப்பு இருக்கின்றது; அல்லது ஆட்சியிலிருக்கும் பிஜேபி மற்றும் சங் பரிவாரங்களால்
தங்களுக்குச் சாதகமாக நமது தீர்ப்பு வளைக்கப்படுகின்றது; திரிக்கப்படுகின்றது என்று தெரிந்து கொண்ட உச்ச நீதிமன்றம் பூமி
பூஜைக்கும்,
பாபரி மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள நிலத்தை ஆட்டையைப் போடுகின்ற அபாய
சிந்தனைக்கும் ஆப்பு வைத்து மார்ச், 13, 2002 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு
இதோ:
மதம் தொடர்பான எந்தவித அடையாள பூஜையோ, பூமி அல்லது ஷிலா பூஜை உட்பட வேறெந்த பூஜையுமோ யாராலும் சம்பந்தப்பட்ட
இடத்தில் செய்வதற்குத் தடை விதிக்கப்படுகின்றது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் எந்த ஒரு பகுதியையும் யாருக்கும்
மத்திய அரசு கொடுக்கக் கூடாது. அந்த நிலத்தின் எந்தவொரு பகுதியையும் யாரும் ஆக்கிரமிப்பு
செய்வதற்கு அல்லது மதம் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் அதில் செய்வதற்கு முற்றிலும்
இந்த நீதிமன்றத்தால் தடை விதிக்கப்படுகின்றது.
எங்களுடைய கட்டமைப்பின் அடிப்படையே மதச் சார்பின்மை தான். மதச்
சார்பின்மையைப் பாதிக்கச் செய்கின்ற எந்தவொரு காரியத்தையும் அனுமதிக்க மாட்டோம்.
இன்னொரு டிசம்பர் 6 நடப்பதற்கு
அனுமதிக்க மாட்டோம் என்று பூஜை தொடர்பான அரசின் முறையீடுகளுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளித்தது.
இந்துத்துவா சக்திகள் இப்படிக் கிளம்பி அருகிலுள்ள நிலத்தை அபகரிக்க
முனைந்ததற்கு அடிப்படைக் காரணம் 1994ல் வர்மா கொடுத்த ஒரு பிடி தான்.
இதை சுப்ரீம் கோர்ட் சரி செய்தாலும் அது ஒரு தற்காலிக அடிப்படையில் தான்.
ஏனெனில் உச்ச நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவை மார்ச் 13, 2002ல் வழங்கியவுடன் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த பிஜேபி அரசாங்கத்திலுள்ள
தலைவர்கள்,
உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கி விட்டால் 42 ஏக்கர் நிலத்தையும் ராம ஜென்மபூமி நியாஸிடம் ஒப்படைத்து விட
வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எனவே உச்ச நீதிமன்றத்திடமிருந்து நடுநிலையாளர்கள் எதிர்பார்ப்பது
இது தான்.
1. ஏற்கனவே ஒரு மதத்தினரை (இந்துக்களை) தற்காலிகக் கோயில் கட்டி
வழிபடச் செய்த தவறைக் களைந்து, மார்ச் 13, 2002ல் காட்டிய அதே மதச் சார்பின்மை அடிப்படையில் பாபரி மஸ்ஜிதை
முஸ்லிம்களிடம் அப்படியே ஒப்படைக்க வேண்டும்.
2. ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புடன் உ.பி. அரசு செய்த ராம் கதா
பூங்கா குத்தகை ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும்.
3. பாபரி மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள, குத்தகைக்கு விடப்பட்ட நிலம் தொடர்பாக 1994ல் நீதிபதி ஜே.எஸ். வர்மா கூறிய தீர்ப்பின் தவறான கருத்துக்களைக்
களைந்து, அந்த நிலத்தை முஸ்லிம்களிடம் அப்படியே ஒப்படைக்க வேண்டும்.
இந்த அம்சங்கள் அடங்கிய மதச் சார்பற்ற, ஓர் உன்னதமான தீர்ப்பை
வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு
அச்சாரமாக செப்டம்பர் 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம்
வழங்கிய கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது ஒரு
நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத்தின் கறை படிந்த மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்டு உண்மையான மதச் சார்பின்மையும்
நீதியும் நிலைநாட்டப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
EGATHUVAM JUN 2011