Apr 3, 2017

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் திருக்குர்ஆன், ஆதாரப்பூர்வமான நபிவழி ஆகிய இரண்டு மட்டுமே என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது. இதில் எள்ளளவும் மாற்றமின்றி நாம் உறுதியாக இருக்கிறோம்.

இவ்விரண்டு அல்லாத மூன்றாவது ஆதாரம் இருப்பதாக நாம் ஒரு போதும் கூறியதில்லை. பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளலாம் என்று ஒரு போதும் நிலை மாறியதுமில்லை.

ஆனாலும் பலவீனமான ஹதீஸ்களில் சிலவற்றை பலமானவை என்றோ, பலமான ஹதீஸ்களில் சிலவற்றை பலவீனமானவை என்றோ எண்ணி சில முடிவுகளை நாம் அறிவித்துள்ளோம் என்பதில் மறுப்பில்லை.

இந்த நிலையைச் சந்திக்காத ஒருவரைக் கூட காண முடியாது. எவ்வளவு பெரிய மேதையாக ஒருவர் இருந்தாலும், அவர் எவ்வளவு கவனத்துடன் ஆய்வு செய்தாலும் இந்தப் பலவீனத்திலிருந்து தப்ப முடியாது.

இது தவிர வேறு பல காரணங்களும் உள்ளன.

எனவே கடந்த காலங்களில் நாம் சான்றாக எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை தாமா என்பதை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது.

குறிப்பாக நோன்பு துறக்கும் போது ஓதும் துஆ பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்பது தெரிய வந்த பின்னர் இந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது.

எனவே இதற்காக ஒரு குழுவை அமைத்து மறு ஆய்வு செய்து வருகின்றோம். பெண்கள் இமாமத் செய்தல், பெண்கள் ஜியாரத் செய்தல், ஜம்ஜம் தண்ணீர், பெண்கள் நகை அணிதல், இசைக் கருவிகள் போன்ற சில ஹதீஸ்கள் குறித்து ஐயங்கள் எழுப்பப்படுவதால் அது பற்றி செய்யப்படும் மறு ஆய்வை ஏகத்துவம் அடுத்த இதழிலிருந்து வெளியிடுகிறோம், இன்ஷா அல்லாஹ்.

இந்த விஷயங்கள் குறித்து மாற்றுக் கருத்துடையவர்கள் எழுப்பும் ஐயங்கள் இந்த மறு ஆய்வில் பரிசீலிக்கப்படும். இது பற்றி குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையில் வாசகர்கள் எழுதி அனுப்பும் கருத்துக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.


மேற்காணும் விஷயங்களில் நமது நிலைபாடு சரியானதாக இருந்தால் எந்த அடிப்படையில் அது சரி என்பது குறித்து விளக்கம் அளிப்போம்; நமது நிலைபாடு தவறாக இருந்து மாற்றுக் கருத்துடையவர்களின் ஆதாரங்கள் சரியானதாக இருந்தால் அதையும் ஏற்றுக் கொண்டு வெளியிடுவோம்.

EGATHUVAM FEB 2007