Apr 22, 2017

பறிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் பள்ளிவாசல்கள்

பறிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் பள்ளிவாசல்கள்

வரலாற்றின் இடைக் காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தான் இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்ற தவறான சரித்திரம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்திருக்கின்றது; படிந்திருக்கின்றது. இது இந்துத்துவா சக்திகள் நீண்ட காலமாகப் பரப்பி வரும் விஷக் கருத்தாகும்.

ஆனால் சரியான வரலாற்று ஆய்வாளர்கள், கோயில் இடிப்பை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று அவர்களின் ஏக போக உரிமையாக்குவது அக்கிரமும் அநீதியுமாகும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு அவர்கள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர்.

1. முஸ்லிம் மன்னர்கள் வருவதற்கு முன்னாலேயே இந்தியாவிலிருந்த ஒவ்வொரு மன்னரும் தங்கள் வெற்றியை நினைவு கூரும் விதமாக பரஸ்பரம் தங்கள் எதிரிகளின் தெய்வங்களை, வழிபாட்டுத்தலங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர்; அழித்து ஒழித்திருக்கின்றனர்.

2. முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்யும் போது அரசாங்க வருவாயில் அல்லது அரசு நிலத்தில் கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால் கோயில்களின் துணையுடன் கலவரத்தில் ஈடுபட்ட போது அந்தக் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதை இஸ்லாத்துடன் முடிச்சு போடக் கூடாது.

இவ்விரு காரணங்களால் கோயில் இடிப்பை முஸ்லிம்களுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பேச முடியாது என்று அந்த வரலாற்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

இதல்லாமல் இந்துக் கொத்தனார்கள், கல் செதுக்கும் சிற்பிகள் தான் பள்ளிவாசல்களைக் கட்டினார்கள். இதைத் தான் இந்துத்துவா சக்திகள் பழங்கால இந்துக் கோயில்களின் இடிபாடுகள் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

எழுப்பிய கட்டடங்களில் கண்ணைக் கவருகின்ற வகையில், உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற விதத்தில் கலை நுணுக்கங்களையும் கைவண்ண வேலைப்பாடுகளையும் அந்தக் கொத்தனார்கள் மற்றும் சிற்பிகள் மூலம் முஸ்லிம்கள் செய்தனர்.

இந்தக் கொத்தனார்களுக்கும் சிற்பிகளுக்கும் இஸ்லாமியக் கலை நுணுக்கமோ, இஸ்லாமிய கட்டடக் கலை வடிவமைப்போ தெரியாது. இருப்பினும் அவர்கள் கட்டிய கட்டடங்களில் தங்கள் கைவண்ணத்தையும் கலை நுணுக்கத்தையும் மிகத் திறம்படப் பதிய வைத்தனர்.

இந்துக் கட்டட அமைப்பிற்கும் இந்துக் கலை நுணுக்கத்திற்கும் அவர்களுடைய கட்டட அமைப்பு ஒத்திருக்கின்றது என்பதை அறவே அவர்கள் பொருட்படுத்தவில்லை.

சில கட்டடங்களில் கை கழுவப்பட்ட, கண்டு கொள்ளாமல் விடப்பட்ட, பாழான பழைய கோயில்களில் உள்ள கட்டடப் பொருட்களை தாங்கள் உருவாக்கிய நினைவுச் சின்னங்களில் பயன்படுத்தியிருக்கின்றனர். இது பிற மத வழிபாட்டுத்தலங்களை அவமதிக்கும் அடிப்படையில் அமையவில்லை. தாங்கள் ஆள்கின்ற, வாழ்கின்ற பகுதியில் கட்டடக் கலையை தங்கள் கட்டட அமைப்பில் பதிய வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.

இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் கோயில்களை இடித்தார்கள் என்பது அபத்தமாகும் என்று வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். உண்மையில் அவர்களின் கருத்துப்படி இது சங்பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபு வாதமாகும்.

வளைத்து, வளைத்து இந்துக்களின் வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம்கள் இடித்தார்கள் என்று சதாவும் குற்றம் சாட்டுகின்ற சங்பரிவார்களுக்கும் அவர்களது சார்பாளர்களுக்கும் நாம் ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம்.

முஸ்லிம் மன்னர்கள் ஒரு வாதத்திற்குக் கோயில்களை இடித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேச்சுக்கு இதை ஒப்புக் கொள்வோம். முஸ்லிம் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் மதச் சார்பின்மை என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியா, மதச் சார்பின்மையை உயிர் மூச்சாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்துத்துவா சக்திகள், அவற்றின் சார்பு சக்திகள் எவற்றை விமர்சனம் செய்தார்களோ அது, அதாவது வழிபாட்டுத் தலங்களை இடிப்பது இப்போது மதச் சார்பின்மை அடிப்படையிலான அரசாங்கத்தின் ஆசியுடன், அனுமதியுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அந்த அக்கிரம, அநியாய அத்தியாயத்தை இப்போது பார்ப்போம்.

1984ல் பாதிப்புக்குள்ளான பொற்கோயில்

1992ல் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித்

1995ல் காஷ்மீரில் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பாதிப்புக்குள்ளான சரார்-இ-ஷெரீஃப்

இந்த வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே நமக்கு வெளியில் தெரிபவை.

இவை தவிர்த்து இன்னும் அழிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், எதிரிடை அனுபவத்தில் அபகரிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றது.

சண்டிகர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய பகுதிகள் அடங்கிய பழைய பஞ்சாபில் 12,000 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன; அல்லது இந்துக் கோயில்களாக, கடைகளாக, வீடுகளாக, மாட்டுத் தொழுவங்களாக அதை விடவும் கேடாக மாற்றப்பட்டுள்ளன.

இதற்குக் கூறப்பட்ட காரணமும், கற்பிக்கப்பட்ட நியாயமும் என்ன?

1947ல் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ள குருத்துவாராக்கள், கோயில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத் தான் என்று பதில் தரப்படுகின்றது.

முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளில் வாழவில்லை என்ற பொய்யான, போலியான காரணங்களைச் சொல்லி, பள்ளிவாசல்களை அவற்றின் பழைய பயன்பாட்டுக்குக் கொண்டு வர விடாமல் அரசியல்வாதிகள் தடுக்கின்றனர்.

ஆனால் உண்மை நிலை என்ன? பீகாரிலிருந்தும் உத்தர பிரதேசத்திலிருந்தும் அதிகமதிகம் முஸ்லிம்கள் பஞ்சாபிற்குக் குடிபெயர்ந்து பண்ணைத் தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் மன்னர் மாநிலங்கள் என்று அழைக்கப்பட்ட ஆல்வார், பாரத்பூர் மாநிலங்களில் இருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் அண்டை மாநிலமான பஞ்பாப் பள்ளிவாசல்கள் சந்தித்த அதே கதியைத் தான் சந்தித்தன.

நாடு விடுதலையின் போது டெல்லியில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன. லாகூரில் உள்ள கோயில் மற்றும் குருத்துவாராக்கள் தாக்கப்பட்டதற்குப் பழி வாங்கும் படலம் தான் என்று இந்த அக்கிரமத்திற்குக் காரணம் சொல்லப்பட்டது.

1947க்குப் பின் நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் பள்ளிவாசல்களும், தர்ஹாக்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

1979ல் மத்திய பிரதேசத்தில் 55 பள்ளிவாசல்கள்!

1989ல் பாகல்பூர் இரத்தக் களரியில், வகுப்புக் கலவரத்தில் 57 பள்ளிவாசல்கள்!

1990ல் ஹைதராபாத் கலவரத்தில் பலியான 77 முஸ்லிம் கட்டடங்கள்!

2002ல் குஜராத் இனப் படுகொலையில் 236 பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் புனிதத் தலங்கள், தர்ஹாக்கள் தகர்த்தெறியப்பட்டன.

குஜராத்தைப் புகழ்ந்து கவிதை பாடிய "வலி தக்கானி' என்பவரின் நினைவுக் கோபுரமும் பெருக்கெடுத்து ஓடிய காவி பயங்கரவாத வெள்ளத்தில் அடித்து நொறுக்கப்பட்டது.

தொல்லியல் துறையின் துரோகத்தனம்

இதல்லாமல் தொல்லியல் துறையும் தன் பங்குக்கு நினைவுச் சின்னம் என்ற பெயரில் முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடைக் கல்லாக நிற்கின்றது.

தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் 118 பள்ளிவாசல்களை வைத்திருக்கின்றது. அந்தப் பள்ளிகளில் தொழுகைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நிஜாம் ஆட்சி செய்த ஹைதராபாத்தின் எல்லைகளில் உள்ள பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

முஸ்லிம் மக்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி பள்ளிவாசல்களைத் தொல்லியல் துறை பூட்டி வைத்திருக்கின்றது. ஆனால் அவ்வூர்களில் முஸ்லிம்கள் வாழத் துவங்கிய பின்னரும் பள்ளிவாசல்களை முஸ்லிம்களிடம் தர மறுக்கின்றது.

மத்திய அரசின் பெரும் துரோகம்

1979ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தொல்லியல் துறையின் கீழிருக்கும் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடையை நீக்குவதாக வாக்களித்தது. அந்த வாக்குறுதியை நம்பி முஸ்லிம்கள் அந்தப் பள்ளிகளில் மீண்டும் தொழச் செல்லும் போது அந்த வாக்குறுதி பொய் என்று புலனானது.

ஒரு பக்கம் தொல்லியல் துறையின் சதி! மற்றொரு பக்கம் இந்துத்துவா சக்திகளின் சதி! மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி தலைமையில் சுமார் 2000 பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், முன்னாள் இந்துக் கட்டட அமைப்புகள் என்று ஒரு பட்டியல் திரட்டி வைத்திருக்கின்றார்கள். முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் மிகப் பெரிய தலங்களும் அவற்றில் உள்ளடங்கும்.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் தவ்லதாபாத் கோட்டையில் இருக்கும் இடைக்கால வரலாற்றுப் பள்ளியான ஜும்ஆ மஸ்ஜிதின் மிஹ்ராபில் சிலைகளைக் கொண்டு வைத்து அதைப் பாரத மாதா கோயில் என்றாக்கி விட்டனர். அதன் பிறகு இதே பாணியை இந்துத்துவா சக்திகள் ஏனைய பள்ளிவாசல்கள் விஷயத்திலும் பின்பற்றத் தொடங்கி விட்டனர்.

ஒரு கட்டடத்தின் தூண் அல்லது அமைப்பு இந்துக் கோயிலுக்கு ஒத்திருக்கின்றது என்றோ, அல்லது அந்தக் கட்டடம் இடிக்கப்பட்ட இந்து ஆலயத்தின் மீது கட்டப்பட்டது என்றோ ஒரு கதை கட்டி விட்டால் போதும். அடுத்த கணம் அது முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடும்.

இந்த அடிப்படையில் தான் ஆந்திராவில் 1970ல் கட்டப்பட்ட பாக்கியலட்சுமி கோயில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சார்மினார் மீது துருத்திக் கொண்டிருக்கின்றது. அலெ நரேந்திரா என்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி. சார்மினாரை இந்துக் கோயிலாக மாற்றுவேன் என்று மிரட்டல் விடுத்தான்.

பி.ஜி. கெஸ்கார் என்பவன் மக்கா மஸ்ஜிதைக் குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று கொக்கரித்தான்.

இவை இந்துத்துவா சக்திகளின் வெறித்தனத்திற்குரிய எடுத்துக்காட்டுகளாகும்.

பள்ளிவாசல்களில் ஒரு தடவை சிலைகள் கொண்டு வைக்கப்பட்டால் போதும். மறுகணம் பூஜை புணஸ்காரம் தொடங்கி விடும். அரசு அதிகாரிகள் அரசியல் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியச் சின்னத்தை அழித்து அதில் இந்துச் சின்னத்தைப் பதிய வைத்து விடுகின்றனர்.

அதிகாரிகளின் ஓர வஞ்சனை

இந்துக்கள் ஆட்சேபணை செய்து விட்டால் போதும். முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி தர மறுத்து விடுகின்றனர்.

இந்தத் தடை எங்கோ இருக்கும் கிராமத்தில் நடைபெறவில்லை. நாட்டின் தலைநகரத்திலேயே நடக்கின்றது. மொத்தத்தில் இந்தப் பாணியும் பணியும் இந்தியாவில் இஸ்லாம் இல்லாத இந்து மயமாக்கும் நாடு தழுவிய சதியாகும்.

இந்துத்துவா சக்திகள் இஸ்லாத்தை வெறுக்கலாம். ஆனால் அவர்கள் பின்பற்றுவதோ அவர்கள் யாரை எதிரிகள் என்று கருதுகிறார்களோ அவர்களுடைய வழியைத் தான்.

டிசம்பர் 21, 2010 அன்று, உண்ள்ழ்ங்ள்ல்ங்ஸ்ரீற் ச்ர்ழ் தங்ப்ண்ஞ்ண்ர்ய் ண்ய் உங்ம்ர்ப்ண்ற்ண்ர்ய் - "ஆலய இடிப்பில் அவமதிக்கப்படும் மதம்' என்ற தலைப்பில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமர் காலித் என்ற கட்டுரையாளர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது!

இந்தியாவில் பாழாக்கப்பட்ட, பறிக்கப்பட்ட 12,000 பள்ளிவாசல்களைப் புள்ளி விபரங்களுடன் தருகின்றார். அதையே இங்கு நாம் ஏகத்துவம் இதழில் தந்திருக்கின்றோம்.

இந்தக் கட்டுரையில் தர்ஹாக்கள் பறிப்பும் இடம் பெற்றுள்ளது. அதனால் தவ்ஹீத் ஜமாஅத், தர்ஹாவை ஆதரிக்கின்றது என்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.


தர்ஹாக்களை அபகரிப்பதை, முஸ்லிம்களின் சின்னத்தை அழிப்பதாக இந்துத்துவா சக்திகள் பார்க்கின்றனர். எனவே ஒரு சொத்து அநியாயமாக முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டால் அதை மீட்பது ஒரு முஸ்லிமின் கடமை என்ற அடிப்படையில் தான் இதைத் தவ்ஹீத் ஜமாஅத் பார்க்கின்றது என்பதை இங்கே பதிய வைக்கின்றோம்.

EGATHUVAM MAR 2011