Apr 3, 2017

பண்டமில்லை! ஆதனால் பதிலுமில்லை!

பண்டமில்லை! ஆதனால் பதிலுமில்லை!

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. அதற்கான ஆதாரம் திருக் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் இல்லை என்பது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் நிலைபாடு!

குர்ஆன், ஹதீஸை ஆராயாமல் ஒரு சிலரின் கூற்றைக் கேட்டு, நுனிப்புல் மேய்ந்து விட்டு இந்த நிலைபாட்டை மக்கள் மத்தியில் நாம் எடுத்து வைக்கவில்லை.

தவ்ஹீது ஜமாஅத் ஆலிம்களின் பல்வேறு அமர்வுகளுக்குப் பிறகு,   தனி மனிதப் பாதிப்புகளுக்கும், தாக்கங்களுக்கும் ஆட்படாமல் அனல் பறக்கும் வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் தான் மக்கள் மன்றத்தில் இந்தக் கருத்தை நாம் முன் வைத்தோம்.

ஏடுகள், ஒலி ஒளி நாடாக்கள் மூலமாக இந்தக் கருத்தை மக்கள் மன்றத்தில் வைக்கும் போது அதன் எதிர் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை நாம் மதிப்பீடு செய்யத் தவறவில்லை.

எதிர்பார்த்தபடியே மாற்றுக் கருத்துடையவர்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தனி மனித வழிபாடு, வழிகேடு என்ற விமர்சனங்களுடன் நின்று விடாமல் இறை மறுப்பு என்ற மார்க்கத் தீர்ப்புகளும் வெளியிட்டனர்.

இவற்றைப் பொருட்படுத்தாது, திறந்த மனதுடன் திறந்த விவாதத்திற்கு நாம் அழைப்பு விடுத்து வந்தோம். நம்மை நேரடியாகக் களத்தில் சந்திக்கத் தயங்கியவர்கள் ஒரு மாத இதழில் நூர் முஹம்மது பாக்கவி மீது சவாரி செய்து நமக்கு ஜவாப்(?) சொல்லியிருந்தார்கள்.

அதற்கும் வரிக்கு வரி ஏகத்துவம் இதழில் பதில் அளித்தோம். அத்துடன் நின்று விடாமல் நம்முடைய விவாத அழைப்பைத் தொடர்ந்து விடுத்துக் கொண்டே இருந்தோம். அதனுடைய ஓர் இறுதி வடிவம் தான் 10.02.07 மற்றும் 11.02.07 ஆகிய இரு தேதிகளில் மதுரையில் நூர் முஹம்மது பாக்கவியுடன் நடைபெற்ற விவாதம்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு நூர் முஹம்மது பாக்கவி சரியான ஒரு சான்றை இந்த விவாதத்தில் எடுத்து வைப்பார் என்று காத்திருந்தோம்.

ஆனால் ஒரு ஆதாரத்தைக் கூட எடுத்து வைக்காதது மட்டுமல்ல! தன்னுடைய நூலில் பலவீனமான ஹதீஸ் என்று ஒப்புக் கொண்ட ஒரு ஹதீஸை விவாதத்தின் போது, பலமான ஹதீஸ் என்று அந்தர் பல்டி அடித்தார்.

முதல் நாள் நடைபெற்ற விவாதத்திலும் சரியான சான்றுகளை எடுத்து வைக்கவில்லை. அடுத்த நாள் நடைபெற்ற பார்வையாளர்கள் கேள்வியின் போதாவது ஏதேனும் சான்றை எடுத்துக் கூறுவார் என்று இரு தரப்பில் உள்ளவர்களும் எதிர்பார்த்தனர்.

நூர் முஹம்மது பாக்கவி தரப்பில் பார்வையாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள் கூட, "சர்ச்சைக்குரிய இந்த ஹதீஸை விட்டு விட்டு வேறு வலுவான ஒரு சான்றைத் தூக்கிப் போடுங்கள்; பிரச்சனை முடிந்து விடும்'' என்று கேள்வி நேரத்தில் கேட்டனர். அதற்கும் அவர், இந்த ஹதீஸ் தான் என்று பழைய பாட்டையே பாடினார்.

இவர்களிடம் விஷயம் எதுவும் இல்லை என்பது இவர்களுடைய ஆதரவாளர்களுக்கே பளிச்சென்று தெரிந்தது.

இது தான் மதுரை விவாதத்தின் போது நிரூபணமான உண்மை!

இன்னும் சொல்லப் போனால், ஜகாத் குறித்த நமது நிலைபாட்டை வெளியிடுவதற்கு முன்னால் அது குறித்து ஆய்வு செய்வதற்காக தவ்ஹீது ஜமாஅத் அறிஞர்கள் நடத்திய பல்வேறு அமர்வுகளில் எழுப்பப்பட்ட வாதங்கள், கேள்விகள் கூட இந்த மதுரை விவாதத்தின் போது எழுப்பப்படவில்லை.

இதன் மூலம் ஜகாத் விஷயத்தில் நமது நிலைபாடு மிகச் சரியானது என்பது நன்கு உறுதியாகி உள்ளது.

இந்த நிலைபாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்களிடம் பண்டமில்லை; அதனால் பதிலும் இல்லை. இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. இந்த அளவுகோலை எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையிலேயே குறிப்பிடுகின்றான்.

அவர்கள் உமக்குப் பதிலளிக்கா விட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 28:48, 49, 50

மனோ இச்சைகளைப் பின்பற்றும் இவர்களிடம் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்? இருப்பினும் இவர்களிடம் இன்னும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் நிலைபாட்டிற்கு மாற்றமாக ஒரேயொரு ஆதாரப்பூர்வமான நபிமொழியை எடுத்து வைத்து விட்டால், அதற்குப் பிறகும் முயலுக்கு மூன்று கால் என்று நிற்க மாட்டோம்.

சுய கவுரவத்தைச் சுருட்டி எறிந்து விட்டு, சத்தியக் கருத்தைப் பின்பற்றக் கடுகளவும் தயங்க மாட்டோம் என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.

EGATHUVAM MAR 2007