தஞ்சை மாநாடு மக்கள் வெள்ளமும் மயங்கும் உள்ளமும்
ஹுனைன் போரின் போது, ஹவாஸின் குலத்தாரும்
கத்ஃபான் குலத்தாரும் மற்றவர்களும் தம் கால்நடைகள் மற்றும் குழந்தை குட்டிகளுடன் (போர்க்
களத்தில்) நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம்
பேர்களும் (மக்கா வெற்றியில்) மன்னிப்பüக்கப்பட்டு
(புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்கüல் பலரும் இருந்தனர். அவர்கள்
நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுப் பின்வாங்கிச் சென்று விட்டனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள்....
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 4337
ஹுனைன் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பெருந்தொகையினர்
புறப்பட்டுச் சென்றதை இந்த ஹதீஸ் கூறுகின்றது. இந்த எண்ணிக்கை இஸ்லாமிய ராணுவத்திற்கு
ஒரு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. போர் உக்கிரமான கட்டத்தை
அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் மட்டும் தனியாக நிற்க வேண்டிய ஒரு கொடுமையான சூழ்நிலை
ஏற்பட்டது.
இதைத் தான் அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் கண்டிக்கிறான்.
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன்
(போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும்
உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
அல்குர்ஆன் 9:25
ஒவ்வொரு போரையும் முடித்து விட்டுத் திரும்பும் போது, இறைவனைப் புகழ்ந்து, துதித்தவர்களாகத்
திரும்பும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி இந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ திரும்பும் போது மேடான இடங்களில்
ஏறும் போதெல்லாம் மூன்று தக்பீர்கள் கூறுவார்கள்.
மேலும், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை! அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை! அவனுக்கே ஆட்சியும் புகழும்! அவன்
அனைத்தின் மீதும் போராற்றலுடையோன்; நாங்கள், தவ்பா செய்தவர்களாகவும், எங்கள் இரட்சகனை
வணங்கியவர்களாகவும், சஜ்தா செய்தவர்களாகவும்; அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம்! அல்லாஹ் தனது
வாக்குறுதியை உண்மைப்படுத்தி விட்டான்! தன் அடியாருக்கு உதவி செய்து விட்டான்! அவன்
ஒருவனே (எதிரிகளின்) படைகளைத் தோற்கடித்து விட்டான்!'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல்: புகாரி 1797
போரில் வெற்றி பெற்றுத் திரும்பும் போது கூட இத்தகைய பணிவான
வார்த்தைகளைக் கூறும் அல்லாஹ்வின் தூதரையும் தோழர்களையும் நோக்கி, "கூட்டம் உங்களுக்கு மமதையளித்தது'' என்ற கண்டனத்தைப் பதிவு செய்கிறான்.
தஞ்சையில் நாம் நடத்திய ஏகத்துவ எழுச்சி மாநாட்டை இந்த வசனம்
மற்றும் ஹதீஸின் வெளிச்சத்தில் சற்று உற்று நோக்குவோம்.
ஏகத்துவ எழுச்சி மாநாட்டிற்காக நாம் மக்களை அழைத்தோம். அலை கடலென
மக்கள் படையெடுத்து வந்தனர்.
வந்த இம்மக்கள் போர் புரிவதற்காக வரவில்லை. மாநாட்டு நிகழ்ச்சிகளில்
பங்கேற்கத் தான் வந்தார்கள். போர் என்று அழைத்தால் இதில் நூற்றில் ஒரு பங்கு தேறுவார்களா
என்று சொல்ல முடியாது. இது தான் யதார்த்தம். வந்தவர்கள் அனைவருமே ஏகத்துவவாதிகள் என்றும்
சொல்லி விட முடியாது.
எனவே உண்மை இப்படியிருக்கும் போது, நம்மிடத்தில் பெரும் மக்கள் சக்தி இருப்பதாக ஒரு மாய எண்ணம்
தோன்றி விடக் கூடாது. மக்கள் வெள்ளம் பொங்கி வரும் போது, "ஆஹா! எவ்வளவு மக்கள்!
எத்தனை லட்சம் பேர் நமக்குப் பின்னால் இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் அந்த இயக்கத்திற்கு
இல்லை. இந்த இயக்கத்திற்கு இல்லை'' என்ற எண்ணம் நிச்சயமாக நம் அடிமனதில்
தோன்றும்.
இந்த எண்ணம் உள்ளத்தில் எப்போது தோன்றுகிறதோ அப்போது உள்ளம்
ஒருவித மயக்கத்திற்கு உள்ளாகும்.
மதுவை மிஞ்சும் போதை
மக்கள் செல்வாக்கு என்ற போதை மதுவை விடக் கொடிய போதையாகும்.
அந்தப் போதைக்கு ஆட்பட்டவர்கள் நிச்சயமாகப் பாதை மாறுவர்.
இட ஒதுக்கீட்டிற்கான தஞ்சைப் பேரணிக்கு வந்த சொற்பக் கூட்டம்
தான் தமுமுகவைத் தடம்புரளச் செய்தது. தவ்ஹீதுவாதிகளைத் தூக்கி வீசச் செய்தது.
அப்படிப்பட்ட ஒரு மயக்கம் ஒரு போதும் எந்தவொரு ஏகத்துவவாதிக்கும்
வந்து விடக் கூடாது. அப்படி வந்தால் நாம் பார்க்க வேண்டிய வசனம் இது தான்.
ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த
போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும்
உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
அல்குர்ஆன் 9:25
இது போன்ற அகந்தை, ஆணவம் நம்மை
மயக்கத்தில் தள்ளி விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த மாநாட்டில் அல்லாஹ், தண்ணீர் பாக்கியத்தைத் தர மறுத்து விட்டானோ என்று நாம் கருத
வேண்டியுள்ளது.
இப்படி ஒரு சோதனையைக் கொடுத்து, அந்த மயக்கத்திலிருந்து அல்லாஹ் நம்மைக் காத்திருக்கின்றான்.
அதற்காக அந்த நாயனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
பல லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டாலும், இன்னும் பொதுக் கூட்டம் நடத்த முடியாத பல ஊர்கள் இருக்கின்றன.
அந்த ஊர்களிலெல்லாம் இன்னும் நுழைய முடியாமல் இருக்கிறோம்.
அந்த ஊர்களில் ஏகத்துவம் போய்ச் சேர வேண்டும். பயணம் செய்த தூரத்தை
விட இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது.
அந்த இலக்கை அடைகின்ற வரை நாம் மகிழ்ச்சியடைய முடியாது. மயக்கத்தில்
ஆழ்ந்து விட முடியாது என்பதைக் கவனத்தில் வைப்போமாக!
EGATHUVAM JUN 2008