முஸ்லிம்களின் உரிமை காத்த அடிமை இந்தியா
முஸ்லிம்களுக்கு முழுவதும் சொந்தமான பள்ளிவாசலையும் அதற்குரிய
இடத்தையும் அபகரிக்கும் வகையில் அநியாயத் தீர்ப்பை 30.09.2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியது.
முஸ்லிம்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களது உயிரையும், உடமையையும் இழந்து போராடினர். காரணம், தங்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக!
ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் சொத்துரிமை அநியாயமாகப்
பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக உள்ளது.
பாபரி மஸ்ஜிதின் இதே விவகாரம், சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1885ல் நீதிமன்றத்திற்கு வந்தது.
வழக்கு எண் 61/280/1885ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை மஹாந்த் ரகுபர் தாஸ் என்பவர் தாக்கல்
செய்தார். 21 அடி கிழ மேலாகவும், 17 அடி தென்வடலாகவும்
அமைந்த ராமர் பாதம் பதிந்த ராம சபுத்ரா எனும் மேடை தான் ராமர் பிறந்த இடமாகும். தாங்க
முடியாத வெப்பம் மற்றும் குளிரால் அங்கு வணங்க முடியவில்லை. அதனால் அந்த மேடைக்கு மேலாக
ஒரு கோயிலை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டிருந்தார்.
அப்போது பைசாபாத்தின் உதவி நீதிபதியாக இருந்த பண்டிட் ஹரி கிருஷ்ணன்
பிப்ரவரி 24,
1885ல் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து, அதாவது கோயில் கட்ட அனுமதி மறுத்து தீர்ப்பளித்தார். அனுமதி
மறுத்ததற்கான காரணத்தையும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
கோயில் கட்டுவதற்கு அனுமதியளிப்பது நாம் கொண்டிருக்கக் கூடிய
பொதுவான கொள்கைக்கு எதிரானதாகும். அவ்வாறு கோயில் கட்ட நாம் அனுமதித்தால் இந்துக்கள்
கோயிலில் மணியடிப்பார்கள்; சங்கு ஊதுவார்கள். இது இந்த
வழியே தாண்டிச் செல்லும் முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். இதில் இரு சமுதாயமும்
அடித்துக் கொண்டு கலவரம் ஏற்பட்டு, அதில் இரு
தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாக நேரிடும். அதனால் கோயில் கட்ட அனுமதி என்பது கலவரத்திற்குப்
போடும் அஸ்திவாரம் ஆகும்.
இவ்வாறு அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன்
சபுத்ரா அமைந்திருக்கும் இடம் ரகுபர் தாஸிற்குச் சொந்தமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதல் மேல் முறையீடு
இதை எதிர்த்து ரகுபர் தாஸ், பைசாபாத்
மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கு எண் 27/1886ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி
எஃப்.இ.ஏ. சேமியர், பாபரி மஸ்ஜித் இடத்திற்கு நேரடி
வருகையளித்துப் பார்வையிடுகின்றார்.
அவ்வாறு பார்வையிட்டு விட்டு மார்ச் 18, 1886ல் இந்த மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, பைசாபாத் உதவி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தார்.
மஹாந்த் ரகுபர் தாஸிற்கு சபுத்ரா அமைந்திருக்கும் இடம் சொந்தமானது
என்ற உதவி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து விடுகின்றார்.
"இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடத்தில் பள்ளி கட்டப்பட்டிருப்பது
மிகவும் துரதிஷ்டமானது. ஆனால் இது 356 ஆண்டுகளுக்கு
முன்பு நடந்த ஒரு நிகழ்வு. இதற்கு இப்போது பரிகாரம் காண முடியாது. காரணம், இது மிகவும் காலம் கடந்தது'' என்று
அவர் தனது தீர்ப்பின் போது தெரிவித்தார். மேலும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாம் மேல் முறையீடு
மகாந்த் ரகுபர் தாஸ் இதை எதிர்த்து ஆவுத் நீதி ஆணையரிடம் இரண்டாம்
மேல் முறையீடு செய்கிறார். ஆவுத் நீதிபதி டபுள்யூ. யங்க் (W.Young) இந்த
இரண்டாம் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து நவம்பர் 1, 1886 அன்று தீர்ப்பளிக்கின்றார். அவர் அளித்த தீர்ப்பிலும் நீதிபதி
எஃப்.இ.ஏ. சேமியர் போன்றே சில கருத்துக்களைப் பதிவு செய்கின்றார்.
"சபுத்ரா நிலம் தனக்குச் சொந்தமானது என்று மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார்.
ஆனால் ஆவணங்களின்படி மனுதாரருக்கு இந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. அத்துடன்
சிவில் அதிகாரிகள் (ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்) சரியான விதத்திலேயே
மனுதாரரின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்'' என தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
இது இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் பாபரி மஸ்ஜித்
தொடர்பாக நடந்த வழக்கு விபரம். வெள்ளையர்கள் நீதித் துறையிலும் நிர்வாகத் துறையிலும்
மதத்திற்கு அப்பாற்பட்டு நடந்திருக்கின்றனர். அவர்களுக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளும்
அதே கொள்கையின்படி நடந்திருக்கின்றனர்.
வெள்ளையர் காலத்தில் நீதிபதிகள் நீதித்துறையின் வேலையைச் செய்தனர்.
அதனால் இப்படி ஓர் அற்புதமான தீர்ப்பை அவர்கள் வழங்கி, நாட்டைச் சரியான முறையில் ஆட்சி செய்தனர்.
இந்த வழக்கை முதன் முதலில் விசாரித்த உதவி நீதிபதி பண்டிட் ஹரி
கிருஷ்ணன் ஒரு பிராமணர் ஆனாலும் அவர் தனது நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பளிக்காமல்
சட்டத்தின் அடிப்படையில் இப்படி ஒரு அருமையான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
நீறு பூத்த நெருப்பாக உள்ள ஒரு விஷயத்தை நீரூற்றி அணைக்கும்
வேலையைச் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்றுள்ள நீதிபதிகள் நீறு பூத்த நெருப்பை ஊதி
பெரு நெருப்பாக ஆக்கியிருக்கின்றனர்.
இன்றைய நீதிபதிகள் கருப்பு உடை அணிவதற்குப் பதிலாக காவி உடை
அணிந்து இந்துத்துவாவின் திட்டங்களை அரங்கேற்றுகின்றனர்
இதன் மூலம் இந்த நாட்டுக்காக உயிர், உடைமையை அர்ப்பணித்த முஸ்லிம்களின் உரிமையைப் பறித்துள்ளனர்.
அடிமை இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை காக்கப்பட்டது. ஆனால்
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இதற்காகவா நாம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து, தியாகம் செய்து சுதந்திரம் வாங்கினோம் என்று முஸ்லிம்கள் ஆழ்ந்த
வருத்தத்தில் உறைந்து கிடக்கின்றனர்.
EGATHUVAM NOV 2010