மானமிழந்த ம.ம.க.
1992, டிசம்பர் 6 அன்று
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு இந்திய முஸ்லிம்கள் அனைத்து அரசியல் கட்சிகள் மீதும்
நம்பிக்கை இழந்து விட்டனர். தமிழக முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல!
தமிழகத்தில் அப்போது வீரியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது
தவ்ஹீது இயக்கம் மட்டும் தான். தவ்ஹீதுப் பொதுக்கூட்டங்கள் மட்டும் தான் அதிகமான மக்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருந்தன.
இந்நேரத்தில் மக்களிடம் ஓர் ஏக்கமும், எதிர்பார்ப்பும் இருந்தது.
சமுதாயத்திற்காக யாரேனும் குரல் கொடுக்க மாட்டார்களா? என்பது தான் அந்த ஏக்கமும் எதிர்பார்ப்பும்!
அப்போது நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் என்ற ஊரில் நாம் நடத்திய
தடா பேரணி, மக்களின் இந்தத் தாகத்தை
உணர்த்தியது.
தமிழகமெங்கும் தன் கால் படாத இடமில்லை, தவ்ஹீது கருத்தைப் பதிவு செய்யாத பகுதி இல்லை என்று சொல்லும்
அளவுக்குப் பிரச்சாரம் செய்த சகோதரர் பி.ஜே. அவர்கள், சமுதாயத்தின் இந்தத் தேட்டத்தையும் வாட்டத்தையும் உணர்ந்தார்.
அதனால் அவர் தனது தவ்ஹீது பிரச்சாரங்களில் சமுதாயப் பிரச்சனைகளையும் எடுத்து வைத்தார்.
மக்கள் கூட்டம் பெருக்கெடுத்தது; வெள்ளமெனப் பெருகியது.
இப்படிக் குரல் கொடுப்பவரைத் தான் எதிர்பார்த்தோம் என்பது போல்
மக்களுடைய வரவேற்பு அமைந்தது.
சமுதாயப் பணிகளையும் தவ்ஹீது இயக்கத்தின் செயல் திட்டமாக ஆக்கிக்
கொண்டால் ஏகத்துவக் கொள்கை வளர்ச்சியடையும் என்ற யோசனையை அப்போதைய தலைமையிடம் பி.ஜே.
முன் வைத்தார்.
சம்பளத்திற்குப் பணியாற்றும் அந்தத் தலைவர் இதற்குச் செவிசாய்க்கவில்லை.
இதன் பின்னணியில் உதயமானது தான் தமுமுக!
முழுக்க முழுக்க தவ்ஹீதுவாதிகளால் சமுதாயத்திற்காகத் துவக்கப்பட்ட
இயக்கம் அது! ஏற்கனவே முஸ்லிம் அரசியல் கட்சிகளின் மீது சலிப்புத் தட்டிய மக்களிடம், அதுவும் தவ்ஹீதுவாதிகளாக நாம் எப்படி இந்த இயக்கத்தைக் கொண்டு
செல்ல முடியும்? என்ற தயக்கம் தமுமுகவின்
நிறுவனர்களை நன்கு யோசிக்கவும் பலமுறை ஆலோசிக்கவும் வைத்தது.
ஆழ்ந்த ஆய்வுக்கும் ஆலோசனைக்கும் பின்னர் கிடைத்த விடை தான்
தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற முடிவு!
தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற முடிவை மக்கள் முன் வைத்தால்
அது செல்லுபடியாகும். முஸ்லிம் கட்சிகள் செல்லாக் காசானதற்கும் செல்லரித்துப் போனதற்கும்
காரணம்,
அவை தங்கள் பதவி நலனுக்காக சமுதாய நலனை மறந்தது தான். இந்தக்
குறைபாடு மக்களின் மனதில் வடுவாகப் பதிந்து விட்டது. அந்த ரணத்தைக் குணப்படுத்த ஒரே
வழி நாம் பதவி ஆசை இல்லாதவர்கள் என்பதை நிலைநாட்டுவது தான் என்று முடிவெடுத்தோம்; சமுதாயத்தின் முன்னால் வந்தோம்.
தேர்தலில் நிற்க மாட்டோம் என்று சாதாரணமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வின்
மீது ஆணையிட்டுச் சொன்னோம். வாக்கு மீறி, மனம் மாறி தேர்தல் களத்தில் எங்களுக்காக வாக்குக் கேட்டு வந்தால்
செருப்பால் அடியுங்கள் என்று சொன்னோம். மக்கள் நம்பினார்கள். அழைக்கும் இடத்திற்கு
எல்லாம் அலை கடலாக வந்தார்கள். சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டிற்கு வந்தார்கள்.
தஞ்சைப் பேரணிக்கு வந்தார்கள்.
இதன் பின்னர் அரசியல்வாதிகளின் தொடர்பு, சகவாசம் கிடைத்தது. அவர்களது சுக போகம் தமுமுக தலைவர்களை மயக்கியது.
கொள்ளை ஆசையுடன் தேர்தல் களத்தில் இறங்கத் துடித்தனர்.
அந்த நேரத்தில் இதற்குத் தடையாக, முட்டுக்கட்டையாக இருப்பவர் பி.ஜே. என்று எண்ணி, அவரை வெளியேற்ற அனைத்து ஏற்பாடுகளையும் கன கச்சிதமாகச் செய்து
முடித்து,
தருணத்திற்காகக் காத்திருந்தனர். தருணமும் வந்தது. உங்கள் தவ்ஹீதுக்
கொள்கை தமுமுக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றது என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்து
வெளியேற்றினர்.
எஸ்.ஐ.எம். என்ற குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய வாத்தியாரையும், விசா வியாபாரத்தில் நசிந்து போய்க் கிடந்த முகம் தெரியாத முகவரையும்
மக்கள் முன் கொண்டு நிறுத்திய பி.ஜே.வின் முதுகில் குத்தினார்கள். பதவி பெற மாட்டோம்
என்ற வாக்குறுதியை மீறி வாரியத்தை வாங்கினார்கள். தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற
வாக்குறுதிக்கு மாறு செய்து தேர்தலிலும் குதித்தார்கள்.
இவர்கள் அளித்த வாக்குறுதியை இவர்கள் மறந்து விட்டாலும் மக்கள்
மறக்கவில்லை. மக்கள் தங்களது வாக்கு வங்கி எனும் தண்டவாளத்தில் இவர்களது பொம்மை எஞ்சினை
ஏற்றாமல்,
இவர்களது வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றி விட்டார்கள்.
மானம் காக்க, மாற்றம் காணப் புறப்பட்ட இவர்கள் மானம் போய், நாற்றம் கண்டு கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள்
மூன்றாகும். அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (எதையேனும்) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 33
தங்கள் பதவி ஆசைக்காக சமுதாய மானம் காப்பதாகப் பொய் சொன்னார்கள்.
தேர்தலில் நிற்க மாட்டோம் என்று சொன்ன வாக்குறுதிக்கு மாறு செய்தார்கள்.
இவர்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட சுனாமி நிதியை மோசடி செய்தார்கள்.
நயவஞ்சகர்களின் இந்த மூன்று அடையாளங்களையும் முழுமையாகப் பெற்ற
இவர்கள் இனியாவது பாடம் பெறுவார்களா? இந்த ஏமாற்றுப் பேர்வழிகளை நம்பி இவர்களுக்குப் பின்னால் செல்பவர்கள்
இனியாவது திருந்துவார்களா?
EGATHUVAM JUN 2009