ஐம்பது நேரத் தொழுகை ஐந்தான அருட்கொடை
பொதுவாக மனிதனுக்கு ஒரு பணியை முதலில் குறைத்துக் கொடுத்து விட்டு, அதன் பின்னர் அதை அதிகப்படுத்தினால் அவன் அதைத் தாங்கிக் கொள்ள
மாட்டான். அது தான் மனித இயல்பு!
எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு எட்டு மணி நேர வேலையைக் கொடுத்து
விட்டு, பின்னர் அதை 12 மணி நேர வேலையாக
ஆக்கும் போது அவனது இயல்பு அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தனக்கு அந்த வேலை பறி போய்
சும்மா இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அந்தப் பணியை விட்டே விலகி விடுகின்றான்.
ஒருவருக்கு 12 மணி நேர வேலையைக்
கொடுத்து விட்டு, அதை அவன் தாங்க முடியவில்லை
எனும் போது,
8 மணி நேரமாகக் குறைத்தால் ஆயிரம் சலாம் போட்டு
அதை ஏற்றுக் கொள்வான். இந்த மனித இயல்பின் அடிப்படையில் தான் மார்க்கத்தின் முக்கியக்
கடமைகளில் ஒன்றான தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.
என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச்
சென்று மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், "என்ன
செய்தீர்கள்?''
என்று கேட்டார்கள். நான், "என் மீது ஐம்பது
தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன'' என்று பதிலளித்தேன். அதற்கு
அவர்கள், "எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான்
பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்)
தாங்க மாட்டார்கள். ஆகவே உமது இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் குறைத்துத் தரும்படி
கேளுங்கள்''
என்று சொன்னார்கள்.
நான் திரும்பச் சென்று இறைவனிடம் அவ்வாறே கேட்டேன். அதை அவன்
நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் முப்பதாக ஆக்கினான்.
மீண்டும் அதைப் போலவே நடக்க இறைவன் இருபதாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம்
சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல, (இறைவனிடம்
நான் மீண்டும் குறைத்துக் கேட்ட போது) அவன் அதை ஐந்தாக ஆக்கினான்.
பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், "என்ன செய்தீர்கள்?'' என்று கேட்க, "அதை இறைவன் ஐந்தாக ஆக்கி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள் முன்பு கூறியதைப் போலவே கூறினார்கள்.
அதற்கு, "நான் ஒப்புக் கொண்டு விட்டேன்'' என்று பதிலளித்தேன்.
அப்போது, "நான் எனது விதியை அமல்
படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு இலேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து
நன்மைகளை வழங்குவேன்'' என்று அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 3207
முதலில் ஐம்பது நேரத் தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்குகிறான். அந்தக்
கடமையை அப்படியே பெற்று விட்டு முஹம்மத் (ஸல்) அவர்கள் திரும்ப வருகின்ற போது மூஸா
(அலை) அவர்கள் வழிமறித்து, விசாரிக்கிறார்கள். 50 நேரத் தொழுகை என்ற சொன்ன மாத்திரத்திலேயே, "உடனே திரும்பிச் செல்லுங்கள்'' என்று
மூஸா நபி கூறி விடுகிறார்கள்.
இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களிலேயே மக்களிடம் பெருத்த சோதனைகளைச்
சந்தித்த இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள் தான். இதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.
(பார்க்க புகாரி 3405)
மக்களிடம் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து அவர்களின் மன ஓட்டங்களைப்
புரிந்த மூஸா நபியவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களைத் திரும்ப
அனுப்பி வைக்கிறார்கள். ஒரு முறை, இரண்டு முறையல்ல! இவ்வாறு 9 தடவை திரும்ப அனுப்புகிறார்கள். இதனால் 45 நேரத் தொழுகைகள் குறைகின்றன. ஐந்து நேரத் தொழுகைகள் மட்டும்
எஞ்சின. இருப்பினும் ஒன்றுக்குப் பத்து நன்மை என்ற விகிதத்தில் 5 நேரத் தொழுகைகளுக்கும் 50 நேரத்
தொழுகைகளுக்கான நன்மைகளை அளிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், முதலில் நமக்குக் கடமையாக்கப்பட்டது 50 நேரத் தொழுகைகள் தான். இதைப் பெற்றுக் கொண்டு நபியவர்கள் வரும்
போது, மூஸா நபியவர்களை அல்லாஹ் சந்திக்கச் செய்கிறான். இந்தச் சந்திப்பு
அல்லாஹ்வின் மிகப் பெரிய ஏற்பாடாகும். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவாகக்
கூறுகிறான்.
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில்
நீர் சந்தேகம் கொள்ளாதீர். அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு வழி காட்டியாக்கினோம்.
அல்குர்ஆன் 32:23
இந்தச் சந்திப்பின் மூலம் தொழுகையைக் குறைத்து, "உங்கள் மீது கடமையாக்கப்பட்டது 50 நேரத் தொழுகைகள் தான்; மூஸாவின் தலையீட்டால்
இதை ஐந்தாகக் குறைத்திருக்கிறேன். இதை நீங்கள் நிறைவேற்றத் தவறி விடாதீர்கள்'' என்று மனோதத்துவ ரீதியாக நமக்கு இறைவன் உணர்த்துகிறான்.
சலுகையுடன் கூடிய இந்தத் தொழுகையை இனியும் தவற விடலாமா?
EGATHUVAM OCT 2007