பாதை திரும்பிய பகுத்தறிவாளர்
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ
அதைப் போல,
எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன.
விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம்
குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ
ஆக்கி விடுகின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம்.
இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும்
இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் எனும்
(30:30ஆவது) இறை வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.
நூல்: புகாரி 1358, 1359, 1385, 4775
பிறக்கும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் பிறக்கும் குழந்தைகளை, பெற்றோர் தான் தங்களுடைய மார்க்கத்திற்கு மாற்றி விடுகின்றனர்
என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதையே ஒரு கவிஞன் கொஞ்சம் மாற்றி, எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே!
அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே! என்று சொல்கின்றான்.
ஒருவர் செல்கின்ற வாழ்க்கைப் பாதை சரியான பாதையாக இருக்க வேண்டும்.
அது இஸ்லாம் எனும் பாதை தான் என்பதையே இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விளக்குகின்றார்கள்.
உலகில் பிறந்த ஒருவருக்கு இஸ்லாமியப் பாதை தான் இயற்கையான பாதை! மனித இயல்புக்கு இசைவான
பாதை! நல்ல ஒரு சிந்தனையாளர் சிந்தித்துப் பார்த்தால் அவருக்கு இஸ்லாம் தான் சீரிய
பாதையாகத் தெரியும்.
* இம்மார்க்கத்தின் உயர் கொள்கையும் உயிர்க் கொள்கையுமான ஓரிறைக்
கொள்கை
* சாதி பேதமற்ற சமுதாயம்
* நீதி மிக்க குற்றவியல், உரிமையியல்
சட்டங்கள்
* மறுக்க முடியாத மறு உலகக் கொள்கை
* இவை அனைத்தையும் தன்னுடைய அறிவுப்பூர்வமான அழகிய வாதங்கள் மற்றும்
அறிவியல் ரீதியில் முன்வைக்கும் அல்குர்ஆன்.
இதையும் அல்குர்ஆன் வெறுமனே வைக்கவில்லை. ஓர் அறைகூவலுடனே வைக்கின்றது.
இந்தக் குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றைய அறிவியல் உலகம் வரை இந்த அறைகூவல்
எதிர்கொள்ளப்படவே இல்லை. இஸ்லாம் தான் உலகில் சரியான பாதை என்பதற்கு இந்த ஒன்றே சான்றாக
அமைகின்றது.
இப்படிப்பட்ட இயற்கையான பகுத்தறிவு மார்க்கத்தை விட்டுத் தான்
திருவாரூர் அருகிலுள்ள அடியக்காமங்கலத்தில் பிறந்த கலிக்குஸ்ஸமான் என்ற சகோதரர் திராவிடர்
கழகத்திற்குச் செல்கிறார்.
முஸ்லிமாகப் பிறந்த அவருக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரியாததால்
அவர் நாத்திக இயக்கத்திற்குப் பாய்ந்து விடுகின்றார். எழுபதுகளில் வேலூர் லிப்டன் கம்பெனியில்
வேலைக்குச் சேர்ந்த அவரது வாழ்க்கைப் பயணம், நாத்திகத்திலேயே
நகர்ந்தது.
நாத்திகத்திற்கு நல்லதொரு பதில்
2007ல் பி.ஜே. அவர்கள் எழுதிய ஒரு புத்தகம் அவருக்குக் கிடைக்கின்றது.
அந்தப் புத்தகம் அவரது நாத்திகக் கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் பதில் அளித்தது.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சியின் ஒளி ஒலி நாடாப் பதிவுகள் அவரது உள்ளத்தில்
ஒளிக்கதிர்களைப் பதிய வைக்கின்றன. பகுத்தறிவுக்குத் தேவை விளக்கமான, விரிவான, அறிவியலுக்கு வேட்டு வைக்காத
அரிய பதில்கள் தான். அந்தப் பதில் தவ்ஹீது ஜமாஅத் மூலம் அவருக்குக் கிடைத்தது. அவ்வளவு
தான்! குர்ஆன் அவரது உள்ளத்தில் குடியமர்ந்தது.
வினாக்களுக்கு விடை தந்த விமானப் பயணம்
இந்நிலையில் அமெரிக்காவில் பணியாற்றும் அவரது மகளார், இவரை அமெரிக்காவுக்கு வருகை தர அழைக்கின்றார். அமெரிக்காவில்
வீட்டில் இருக்கும் போது அதிகமாகப் போரடிக்கும். அதனால் வரும் போது புத்தகங்கள் வாங்கி
விட்டு வாருங்கள் என்று மகளார் அவரிடம் தெரிவித்திருந்தார்.
அது போல் அவர் மண்ணடிக்குச் சென்று பி.ஜே. எழுதிய நூல்களை வாங்கிக்
கொண்டு விமானத்தில் ஏறுகின்றார். பறக்கின்ற விமானத்துடன் அவரது சிந்தனை விமானமும் சிறகடித்துப்
பறக்கின்றது.
அல்குர்ஆனின் வானம் தொடர்பான வசனங்கள், வானத்தில் பறக்கும் அவரது மனதில் படுகின்றன. அடுக்கடுக்கான அகன்ற
வானங்களைப் பற்றி, தன்னுடைய வாழ்நாளில் இன்றைய
நவீன வாகனங்களில் பறந்திராத, இது பற்றிப் படித்திராத, எழுதப் படிக்கத் தெரிந்திராத முஹம்மது நபிக்கு எப்படிச் சொல்ல
முடிந்தது?
இது மனித ஆற்றலுக்கு உட்பட்டதல்ல! மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட
ஒரு ஆற்றல்,
சக்தி தான் இந்தக் குர்ஆனை அருளியிருக்க முடியும் என்று, விமானம் அமெரிக்க எல்லையைத் தொடுமுன், அவரது சிந்தனை விமானம் எல்லையைத் தொட்டு விட்டது. அதன் பின்னர்
தான் அவருடைய வாழ்க்கையில் முழு மாற்றம். அந்த மாற்றத்திற்கு ஆதாரமாக அவரது வெண்தாடித்
தோற்றம் அமைந்திருக்கின்றது.
முதன் முதலில் முப்பது நோன்பு
அது வரை நோன்பு பிடித்திராத அவர் கடந்த ரமளானில் முப்பது நோன்புகளை
நோற்று முடித்தார். மேற்கு நோக்கி வணங்குபவர்களே! கஅபாவை நோக்கித் தொழுபவர்களே! விமானம்
கஅபாவிற்கு மேல் பறக்கும் போது எதை நோக்கித் தொழுவீர்கள்? என்று வினா எழுப்பி, விடைத்தவர்
இன்று விடை கண்டு தவ்ஹீதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
அண்மையில் பிப்ரவரி மாதம் வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீது
ஜமாஅத்தின் பயிற்சி முகாமில் முழுமையாகப் பங்கெடுத்த போது அவர், நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு வந்த வரலாற்றை நம்மிடம்
பரிமாறிக் கொண்டார். வீரமணிக்கு நெருக்கமான அந்தப் பகுத்தறிவாளர், போலிப் பகுத்தறிவுக் கொள்கையிலிருந்து, உண்மையான பகுத்தறிவான ஏகத்துவக் கொள்கையை ஏற்றது நம் அனைவருக்கும்
மகிழ்வைத் தரும் நிகழ்வாகும்.
தெருத் தெருவாக நாத்திகப் பிரச்சாரம் செய்த அவர் இன்று வேலூரில்
தெருத் தெருவாக ஏகத்துவப் பிரச்சாரம் செய்து வருவது நம்மை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது.
அல்லாஹ் அவருக்கும் நமக்கும் ஏகத்துவத்திலேயே மரணிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக!
EGATHUVAM MAR 2009