Apr 17, 2017

ஆட்சி மாற்றம் தந்த ஆஷுரா

ஆட்சி மாற்றம் தந்த ஆஷுரா

உங்களை ஊரை விட்டும் துரத்தி விடுவோம்; உங்களை நாடு கடத்துவோம்'' என்று இறைத் தூதர்களுக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எச்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் ஒரு வாக்குறுதியை அளிக்கின்றான்.



உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.

அல்குர்ஆன் 14:13, 14

நானும் எனது தூதர்களுமே மிகைப்போம்'' என்று அல்லாஹ் விதித்து விட்டான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 58:21

நமது அடியார்களான தூதர்களுக்கு நமது கட்டளை முந்தி விட்டது. அவர்களே உதவி செய்யப்படுவார்கள். நமது படையினரே வெல்பவர்கள்.

அல்குர்ஆன் 37:171-173

ஸபூர் வேதத்தில் அறிவுரைக்குப் பின் பூமியை எனது நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்'' என்று எழுதியிருந்தோம். அல்குர்ஆன் 21:105

இவை அனைத்தும் அல்லாஹ் அளித்திருக்கின்ற பொதுவான வாக்குறுதிகள்! நபி மூஸா (அலை) அவர்களுக்கென்று குறிப்பிட்டும் அல்லாஹ் வாக்குறுதியளித்தான்.

இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். அவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண் (மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.

நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்'' என்று அவர்கள் கூறினர். உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்'' என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 7:127-129

 அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறும் நேரமும் வந்தது.

மூஸாவையும் அவரை நம்பிய இஸ்ரவேலர்களையும் நாட்டை விட்டு விரட்ட ஃபிர்அவ்ன் நினைத்த போது அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியது.

அவர்களை அப்பூமியை விட்டு வெளியேற்ற அவன் நினைத்தான். அவனையும், அவனுடன் இருந்த அனைவரையும் மூழ்கடித்தோம்.

அல்குர்ஆன் 17:103

அந்தப் பூமியில் இஸ்ரவேலர்களை அல்லாஹ் குடியமர்த்தினான்.

பூமியில் வசியுங்கள்! மறுமை பற்றிய வாக்கு நிறைவேறும் போது உங்களை ஒரு சேரக் கொண்டு வருவோம்'' என்று இதன் பின்னர் இஸ்ராயீலின் மக்களிடம் கூறினோம்.

அல்குர்ஆன் 17:104

 ஃபிர்அவ்னின் ஆட்சியை அழித்து, இஸ்ரவேலர்களுக்கு ஆட்சியை வழங்கினான். இந்த அற்புதம் நடந்த நாள் தான் ஆஷுரா எனும் முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

இதன் நினைவாகத் தான் நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் 9, 10 ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதை வழிமுறையாக்கியுள்ளார்கள்.

ஏகத்துவம் வென்ற நாளை, அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறிய நாளை, வரலாற்றில் என்றும் நின்று நிலைக்கின்ற நாளாக ஆக்கியுள்ளார்கள்.

இது, மூஸா நபி விஷயத்தில் நிறைவேறிய இறைவனின் வாக்குறுதியாகும்.

இது போன்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியிருக்கின்றது.

(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் 17:76)

 மூஸா நபியவர்களைப் போன்று முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியது. இந்த வாக்குறுதி நமக்கு ஒன்றை நினைவுபடுத்துகின்றது.

இறுதியில் ஏகத்துவம் தான் வெற்றி பெறும். இவ்வளவு பெரிய வலிமை மிக்கக் கொள்கை தான் ஏகத்துவக் கொள்கை! அந்தக் கொள்கையைத் தான் நாம் பிரச்சாரம் செய்கிறோம். அதனால் தான் இந்தப் பிரச்சாரம் செய்யும் நம்மை நோக்கி ஊர் நீக்கம், சிறைச்சாலை என்று பல்வேறு சோதனைகள் பாய்கின்றன.

இந்தச் சோதனைகளில் நாம் உறுதியாக நின்று கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டால் இறுதியில் ஏகத்துவம் வெற்றி பெறும். அதற்கு மூஸா (அலை), முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாறுகள் சிறந்த எடுத்துக்காட்டுகள்.


 நம்மைக் கடந்து சென்றுள்ள ஆஷுரா நாள் இந்தச் சிந்தனையை நம்மிடம் புதுப்பித்து விட்டுச் சென்றிருக்கின்றது. இந்தப் புத்துணர்வுடன், புது வேகத்துடன் புரட்சி மிகு தவ்ஹீதுக் கொள்கைப் பிரச்சாரக் களத்தில் பயணிப்போமாக! 

EGATHUVAM JAN 2010