Apr 6, 2017

மறு ஆய்வு ஹதீஸ்கள் – நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்

மறு ஆய்வு  ஹதீஸ்கள் நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்

பி. ஜைனுல் ஆபிதீன்

தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம்.

இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டி தொழுது வருகின்றனர். இது தவறானது என்றும் இந்தக் கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக உள்ளன என்றும் நாம் கூறி வருகிறோம்.

அல்லாஹ்வின் பேரருளால் தவ்ஹீத் எழுச்சியின் விளைவாக அனேக முஸ்லிம்கள் நெஞ்சின் மீது கைகளைக் கட்டி தொழ ஆரம்பித்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்!

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்ட வேண்டும் என்ற கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள், இந்த எழுச்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல், "தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்றால், நெஞ்சில் கை கட்டும் ஹதீஸும் பலவீனமானது தான்'' என்று எதிர்ப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்குச் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ்கள் பலவீனமானவை என்றாலும், இது பற்றி ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமானது என்று இன்னும் சிலர் வாதிட்டு வருகின்றனர்.

எனவே நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் உண்மையாகவே பலவீனமானது தானா? என்பதையும், தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் உண்டா? என்பது பற்றியும் மறு ஆய்வு செய்ய நாம் முன் வந்தோம்.

மறு ஆய்வுக்குப் பின்னரும் நமது முந்தைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற முடிவுக்கே மீண்டும் வருகிறோம்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது குறித்த ஹதீஸ்கள் அனைத்துமே பலவீனமானவை என்பதையும், நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸ்களில் ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது என்பதையும் மீண்டும் நாம் உறுதி செய்கிறோம். இது பற்றி விபரமாக நாம் காண்போம்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுதல்

முதலாவது ஹதீஸ்

தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: அபூதாவூத் 645

அலீ (ரலி) கூறியதாக இதை அறிவிப்பவர் அபூஜுஹைஃபா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் நமக்கு மறுப்பு இல்லை.

அபூஜுஹைஃபா கூறியதாக இதை அறிவிப்பவர் ஸியாத் பின் ஸைத் ஆவார். இவரது நம்பகத் தன்மையிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஸியாத் பின் ஸைத் கூறியதாக இதை அறிவிப்பவர் கூஃபா நகரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் ஆவார். இவரது நம்பகத் தன்மையில் நமக்கு மறுப்பு உள்ளது.

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் அபூதாவூத் அவர்கள், இதற்கு இரண்டு ஹதீஸ்களுக்குப் பின்னர் (அபூதாவூத் 649ல்) இவரைப் பற்றி விமர்சிக்கும் போது, "கூஃபாவைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்'' என்று கூறியுள்ளனர்.

இந்த ஹதீஸ் அபூதாவூதில் மட்டுமின்றி அஹ்மத் 998, பைஹகீ 2170, 2171, தாரகுத்னீ 9 (பாகம்: 1, பக்கம்: 286), தாரகுத்னீ 10 (பாகம்: 1, பக்கம்: 286) ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூல்கள் அனைத்திலுமே அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷைபாவின் தந்தை (அபூ ஷைபா) என்றும் குறிப்பிடப்படும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார், நம்பகமானவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு முரணாக அறிவிக்கும் பொய்யர் (முன்கர்) என்று அபூஹாத்தம், அஹ்மத் பின் ஹம்பல் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்னு மயீன் கூறுகிறார். இவர் விஷயத்தில் ஆட்சேபணை உள்ளது என்று புகாரி கூறுகிறார். இவரது ஹதீஸ்களை ஏற்காது விட்டு விட வேண்டும் என்று பைஹகீ கூறுகிறார். ஹதீஸ் கலை அறிஞர்களின் ஒருமித்த முடிவுப்படி அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார் பலவீனமானவர் என்று இமாம் நவவீ கூறுகிறார்.

இவரை நம்பகமானவர், நாணயமானவர் என்று யாருமே விமர்சனம் செய்யவில்லை. பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமானவையே என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை.

தொப்புளுக்குக் கீழே கட்டுவதற்குரிய மற்றொரு ஆதாரம்

தொழுகையில் ஒரு முன் கையை மற்றொரு முன் கையால் பிடித்துக் கொண்டு, தொப்புளுக்குக் கீழே வைக்க வேண்டும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாயில்,

நூல்: அபூதாவூத் 647

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் மேலே நாம் கூறிய அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக இச்செய்தியும் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல.

மேலும் இச்செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவோ, கூறியதாகவோ மேற்கண்ட செய்தியில் கூறப்படவில்லை.

மூன்றாவது ஆதாரம்

மூன்று காரியங்கள் நுபுவ்வத்தின் அம்சங்களில் உள்ளவை. 1. நோன்பு துறப்பதை விரைவுபடுத்துதல், 2. ஸஹர் செய்வதைத் தாமதப்படுத்துதல், 3. தொழும் போது தொப்புளுக்குக் கீழே இடது கை மீது வலது கையை வைத்தல்.

இந்தச் செய்தியை இப்னு ஹஸ்மு அவர்கள் எவ்வித அறிவிப்பாளர் தொடருமின்றி குறிப்பிடுகிறார். இதன் அறிவிப்பாளர்கள் யார் என்பது பற்றி எந்த விபரத்தையும் அவர் கூறவில்லை.

இதை அறிவித்த நபித்தோழர் யார்? அவரிடம் கேட்டவர் யார்? நூலாசிரியர் வரை உள்ள அறிவிப்பாளர் பட்டியல் என்ன? என்பதை ஹனபிகள் எடுத்துக் காட்டுவதில்லை. அறிவிப்பாளர் இல்லாமல் கூறப்படும் எந்தச் செய்தியும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.

நான்காவது ஆதாரம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மேல் வைத்து அதைத் தொப்புளுக்குக் கீழே வைத்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 1/343

இதன் அறிவிப்பாளரான வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நம்பகமானவர்.

அவர்கள் கூறியதாக அறிவிக்கும் அவர்களது மகன் அல்கமாவும் நம்பகமானவர்.

அல்கமா கூறியதாக அறிவிக்கும் மூஸா பின் உமைர் என்பாரும் நம்பகமானவர்.

அவர் கூறியதாக அறிவிக்கும் வகீவு என்பாரும் நம்பகமானவர்.

அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக உள்ளதால் இதை ஆதாரமாகக் கொண்டு தொப்புளுக்குக் கீழே தான் கைகளைக் கட்ட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட அறிவிப்பாளர் வரிசையுடன் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த வாதம் ஏற்கத்தக்க வாதம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முஸன்னப் இப்னு அபீஷைபா என்று நூலின் பழைய பிரதிகளில் மேற்கண்டவாறு எந்த ஹதீஸும் இல்லை. ஒரே ஒரு அச்சுப் பிரதியில் மட்டுமே மேற்கண்டவாறு அச்சிடப்பட்டுள்ளது.

முஸன்னப் இப்னு அபீஷைபாவின் பல்வேறு பிரதிகளில் இல்லாத இந்த ஹதீஸ் பிற்காலத்தில் அச்சிடப்பட்ட பிரதியில் மட்டும் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்த அறிஞர்கள் - குறிப்பாக ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள்  - இது இடைச் செருகல் என்பதைத் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர்.

முஹம்மத் ஹயாத் ஸின்தீ என்ற ஹனபி மத்ஹப் அறிஞர் இதற்காகவே ஒரு சிறு நூலை எழுதியுள்ளார். அந்த நூலை மேற்கோள் காட்டி துஹ்பதுல் அஹ்வதி என்ற நூலில் அதன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

முஸன்னப் இப்னு அபீஷைபா நூலின் சரியான மூலப் பிரதியை நான் பார்வையிட்டேன். அதில் கீழ்க்கண்டவாறு இரண்டு செய்திகள் அடுத்தடுத்து உள்ளன.

இவ்விரு செய்திகளின் தமிழாக்கம்:

1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மீது வைத்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறுகிறார்.

2. இப்ராஹீம் (நகயீ) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து தொப்புளுக்குக் கீழே வைத்தார்.

மேற்கண்ட இரண்டு செய்திகளையும் கவனியுங்கள். முதல் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்புடையது. அச்செய்தியில் தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை இல்லை. இரண்டாவது செய்தியில் தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை உள்ளது. ஆயினும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர்புடையது அல்ல. இப்ராஹீம் நகயீ என்பார் தொப்புளுக்குக் கீழே கை வைத்தார் என்று தான் கூறப்பட்டுள்ளது. இவர் நபித்தோழர் கூட அல்லர். முஸன்னப் இப்னு அபீஷைபாவில் மேற்கண்டவாறு தான் உள்ளது. ஆயினும் பிரதி எடுத்த யாரோ ஒருவர், ஒரு வரியை விட்டு விட்டு, இரண்டாவது அறிவிப்பில் உள்ள "தொப்புளுக்குக் கீழ்' என்பதை முதல் செய்தியுடன் சேர்த்து எழுதி விட்டார். இப்ராஹீம் நகயீயின் செயல் நபிகள் நாயகத்தின் செயலாகக் காட்டப்பட்டு விட்டது. இது, எடுத்து எழுதியவரின் தவறுதலால் ஏற்பட்டது என்று ஹயாத் ஸின்தீ விளக்கியுள்ளார்.

அத்துர்ரா என்று நூலாசிரியர் தனது நூலில் கீழ்க்கண்டவாறு கூறுவதாகவும் துஹ்பதுல் அஹ்வதி நூலாசிரியர் விளக்குகிறார்.

முஸன்னப் இப்னு அபீ ஷைபா நூலின் எந்தப் பிரதியில், "தொப்புளுக்குக் கீழே' என்ற வார்த்தை நபிகள் நாயகத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதோ அந்தப் பிரதியில் இப்ராஹீம் நகயீ தொடர்பான செய்தி இல்லை.

எந்தப் பிரதியில் இப்ராஹீம் நகயீ தொடர்பான செய்தி உள்ளதோ அதில், "தொப்புளுக்குக் கீழே' என்ற வார்த்தை நபிகள் நாயகத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. இப்ராஹீம் நகயீயின் செயலாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இரண்டு செய்திகளை வெட்டி ஒட்டியதால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று அத்துர்ரா நூலாசிரியர் விளக்குகிறார்.

இது தவிர முஸன்னப் இப்னு அபீஷைபாவில் உள்ள செய்தி அதே அறிவிப்பாளர் தொடருடன் முஸ்னத் அஹ்மதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது கை மீது வலது கையை வைத்தார்கள் என்று மட்டும் தான் உள்ளது. தொப்புளுக்குக் கீழே என்ற வாசகம் முஸ்னத் அஹ்மதில் இல்லை.

மேற்கண்ட இதே செய்தி, இதே அறிவிப்பாளர் வரிசையுடன் தாரகுத்னீயிலும் பதிவாகியுள்ளது.

தாரகுத்னீயிலும் "தொப்புளுக்குக் கீழே' என்ற வாசகம் இல்லை.

மேலும் ஹனபி மத்ஹபின் நிலைபாடுகளை ஆதரித்து எழுதுவதில் வல்லவரான இப்னுத் துர்குமானி என்பார், தமது "அல்ஜவ்ஹருன்னகீ' என்ற நூலில் தொப்புளுக்குக் கீழே கையைக் கட்ட வேண்டும் என்பதையும் ஆதரித்து எழுதியுள்ளார்.

அதில் நாம் மேலே சுட்டிக்காட்டிய அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியையும், மூன்றாவது ஆதாரமாக நாம் குறிப்பிட்டுள்ள செய்தியையும் அடிப்படையாக வைத்து, தொப்புளுக்குக் கீழே கை கட்டுவதை நியாயப்படுத்தியுள்ளார். மேலும் தொப்புளுக்குக் கீழே கை கட்ட வேண்டும் என்று அபூமிஜ்லஸ் என்பார் (தாபியீ) கூறியதாக முஸன்னப் இப்னு அபீஷைபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் தொடர்பில்லாத அந்தச் செய்தியையும் இப்னுத் துர்குமானி ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

முஸன்னப் இப்னு அபீஷைபாவின் பழைய பிரதிகளில், தொப்புளுக்குக் கீழே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளைக் கட்டியதாக ஹதீஸ் இருந்தால் அதை விட்டு விட்டு, பலவீனமான இரண்டு செய்திகளை இப்னுத் துர்குமானி ஆதாரமாகக் காட்டி தமது மத்ஹபை நிலைநாட்டி இருக்க மாட்டார். மேலும் முஸன்னப் இப்னு அபீஷைபா நூலில் தனக்கு ஆதாரமாக ஏதாவது கிடைக்கிறதா? என்று தேடிப் பார்த்தவருக்கு, அபூமிஜ்லஸ் என்பாரின் சொந்தக் கூற்று தான் கிடைத்தது. எனவே அதை எடுத்துக் காட்டியுள்ளார்.

எனவே, தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை முஸன்னப் இப்னு அபீஷைபாவின் மூலப் பிரதிகளிலும், பழைய பிரதிகளிலும் இல்லை. அது பிற்காலத்தில் வெட்டி ஒட்டி தயாரிக்கப்பட்டுள்ளது என்பது மேலும் உறுதியாகின்றது.

மேற்கண்ட அந்த நான்கு ஆதாரங்களைத் தான் தொப்புளுக்குக் கீழே கை கட்ட வேண்டும் என்போர் கூறுகின்றனர்.

1. முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் மூலம் அறிவிக்கப்படுவதால் அது ஆதாரமாகாது.

2. இரண்டாவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் அதே நபர் மூலம் அறிவிக்கப்படுவதாலும், அபூஹுரைராவின் சொந்தக் கூற்று என்பதாலும் அதுவும் ஆதாரமாகாது.

4. மூன்றாவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லாததால் அதுவும் ஆதாரமாக ஆகாது.

3. நான்காவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்ட கற்பனைச் செய்தியாக உள்ளதால் இதுவும் ஆதாரமாக ஆகாது.

நெஞ்சில் கைகளைக் கட்டுதல்

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டுதல் பற்றிய ஹதீஸ்கள் எதுவுமே ஆதாரமாக இல்லாததால் அதை நாம் நடைமுறைப்படுத்தக் கூடாது. அப்படியானால் நெஞ்சில் கைகளைக் கட்டுவது தொடர்பான ஹதீஸ்கள் மட்டும் ஆதாரமாகவுள்ளதா? என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர்.

நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸிலும் பலவீனங்கள் உள்ளதாக அவர்கள் பட்டியல் போட்டுள்ளனர். அந்த ஹதீஸையும் அது குறித்து மாற்றுக் கருத்துடையோர் எழுப்பும் விமர்சனங்களையும் நாம் விரிவாக ஆய்வு செய்வோம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் தமது வலது கையை இடது கையின் மேல் வைத்து நெஞ்சின் மேல் வைத்தார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1/243

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறியதாக இதை அறிவிப்பவர் குலைப் என்பார்.

குலைப் கூறியதாக அறிவிப்பவர் அவரது மகன் ஆஸிம் என்பார்.

ஆஸிம் கூறியதாக அறிவிப்பவர் சுஃப்யான் என்பார்.

சுஃப்யான் என்பார் கூறியதாக அறிவிப்பவர் முஅம்மல் பின் இஸ்மாயீல் என்பார்.

முஅம்மல் பின் இஸ்மாயீல் கூறியதாக அறிவிப்பவர் அபூமூஸா என்பார்.

அபூமூஸா என்பார் கூறியதாக அறிவிப்பவர் அபூபக்ர் என்பார்.

அபூபக்ர் என்பவர் கூறியதாக அறிவிப்பவர் அபூதாஹிர்.

அபூதாஹிரிடம் நேரடியாகக் கேட்டு இப்னு குஸைமா தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட அறிவிப்பாளர்களில் முஅம்மல் பின் இஸ்மாயீலைத் தவிர மற்ற அனைவருமே நம்பகமானவர்கள்.

முஅம்மல் பின் இஸ்மாயீல் உண்மையாளர் என்றாலும் நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் பலவீனமானவர்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவதை அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவரைப் போல் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் அல்ல. நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் பலவீனமானவர். ஆயினும் நினைவாற்றல் குறைவு என்பதும் பலவீனம் தான். முஅம்மல் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது பலவீனமான ஹதீஸ் என்பதை நாமும் கடந்த காலங்களில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் இதை நாம் ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தாலும், இவர் பலவீனமானவர் என்பது தெரிந்த பின், பல வருடங்களாக இதை ஆதாரமாக நாம் எடுத்துக் காட்டுவதில்லை.

இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை நாமே தெளிவுபடுத்தி விட்டோம். அப்படியிருந்தும் இதை நாம் ஆதாரமாக எடுத்துக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு, நெஞ்சில் கை கட்டுவது தொடர்பான ஹதீஸும் பலவீனமானது என்று கூறி வருகின்றனர்.

மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்றாலும் பலவீனமில்லாத ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸும் உள்ளது. நெஞ்சில் கை கட்டுவதற்கு அதையே நாம் ஆதாரமாக எடுத்துக் காட்டி வருகிறோம்.

முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்றுள்ள பின்வரும் ஹதீஸ் தான் அது.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பியதை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர்கள் இதைத் தமது நெஞ்சின் மீது வைத்ததையும் நான் பார்த்துள்ளேன்'' என்று ஹுல்ப் அத்தாயீ (ரலி) அறிவிக்கிறார்.

யஹ்யா என்ற அறிவிப்பாளர் "இதைத் தமது நெஞ்சின் மீது'' என்று கூறும் போது, வலது கையை இடது கை மணிக்கட்டின் மேல் வைத்து விளக்கிக் காட்டினார்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 22610

"ஒரு கையை மற்றொரு கையின் மணிக்கட்டில் வைத்து இரண்டையும் சேர்த்து நெஞ்சின் மீது வைத்தார்கள்'' என்று கூறுவதை விட அவ்வாறு செய்து காட்டி, "இதை நெஞ்சில் வைத்தார்கள்'' என்று கூறுவது எளிதாகவும், நேரில் பார்ப்பவர் புரிந்து கொள்ள ஏற்றதாகவும் அமையும்.

எனவே தான், "இதை'' என்று சொல்லும் போது, ஒரு கை மீது மற்றொரு கையை வைத்து யஹ்யா விளக்கிக் காட்டியிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் யஹ்யா என்ற அறிவிப்பாளர் வார்த்தையால் விளக்குவதை விட செய்முறையால் விளக்குவதை வழக்கமாகக் கொண்டவர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் கல் எறிதல் பற்றிச் செய்து காட்டியதை விளக்கும் போது, சிறு கல்லை எடுத்துச் சுண்டி விட்டு, "இப்படிச் செய்தார்கள்'' என்று யஹ்யா விளக்கினார். (நூல்: நஸயீ 3009)

தலைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸஹ் செய்ததை வாயால் கூறாமல் அதைச் செய்து காட்டி, "இப்படி நபிகள் நாயகம் மஸஹ் செய்தார்கள்'' என்று விளக்கியுள்ளார். (நூல்: அஹ்மத் 1107)

துவக்க காலத்தில் ருகூவின் போது மூட்டுக் கால்கள் மீது கைகளை வைக்காமல் இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இரு கைகளையும் சேர்த்து வைக்கும் வழக்கம் இருந்தது. இதைப் பற்றி யஹ்யா அறிவிக்கும் போது, வார்த்தையால் கூறாமல் இரண்டு கைகளையும் தொடைகளுக்கு மத்தியில் வைத்துக் காட்டி, "இப்படிச் செய்தார்கள்'' என்று கூறியுள்ளார். (நூல்: அஹ்மத் 1652)

கியாமத் நாளும், நானும் இப்படி நெருக்கமாகவுள்ளோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது ஆட்காட்டி விரலையும் சேர்த்துக் காட்டினார்கள். இதை யஹ்யா அறிவிக்கும் போது, இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி இப்படிச் செய்தார்கள் என்று விளக்கினார். (நூல்: அஹ்மத் 14047)

"மேற்கண்ட ஹதீஸில், "இதை நெஞ்சில் வைத்தார்கள்'' என்று தான் உள்ளது. கையை வைத்தார்கள் என்று இல்லையே!' என்று சிலர் விதண்டாவாதம் செய்வதால் தான் மேற்கண்ட விபரங்களைக் கூறுகிறோம்.

இதை என்று கூறும் போது அறிவிப்பாளர் என்ன செய்து காட்டினாரோ அந்த நிலை தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இனி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி ஆய்வு செய்வோம்.

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் இது தான்.

ஹுல்ப் என்ற நபித்தோழர் கூறியதாக அறிவிப்பவர் அவரது மகன் கபீஸா ஆவார்.

கபீஸா கூறியதாக அறிவிப்பவர் ஸிமாக் பின் ஹர்பு ஆவார்.

ஸிமாக் பின் ஹர்ப் கூறியதாக அறிவிப்பவர் சுஃப்யான் ஆவார்.

சுஃப்யான் கூறியதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் ஆவார்.

யஹ்யா பின் ஸயீத் கூறியதை நேரடியாகக் கேட்டு இமாம் அஹ்மத் பின் ஹம்பல் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

முதல் அறிவிப்பாளரான ஹுல்ப் அவர்கள் நபித்தோழர் என்பதால் அவரைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லை. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஹதீஸ் கலையில் கருத்து வேறுபாடு இன்றி ஒப்புக் கொள்ளப்பட்ட விதியாகும்.

ஹுல்ப் அவர்கள் கூறியதாக அவரது மகன் கபீஸா அறிவிக்கிறார்.

மேற்கண்ட ஹதீஸைப் பலவீனமாக்க முயற்சிப்பவர்கள் இவரைக் காரணம் காட்டி, இந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று கூறுகின்றனர்.

கபீஸா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று பலரும் கூறியுள்ளனர். எனவே யாரென்று தெரியாத கபீஸா என்பவர் வழியாக மட்டுமே இது அறிவிக்கப்படுவதால் இது பலவீனமான செய்தியாகும் என்பது இவர்களின் வாதம்.

இமாம் நஸயீ, இப்னுல் மதீனி ஆகியோர், "இவர் யாரென்று தெரியாதவர்' என்று கூறியுள்ளதைத் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அறியப்படாதவருக்கான இலக்கணம்

ஒரு அறிவிப்பாளர் பற்றி எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவர் வழியாக ஒரேயொரு அறிவிப்பாளர் தான் அறிவித்துள்ளார் என்றால் அத்தகைய அறிவிப்பாளர், "அறியப்படாதவர்' என்ற நிலையில் வைக்கப்படுவார்.

இந்த அளவுகோலின் அடிப்படையில் கபீஸா என்பவர் வழியாக பல ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஹதீஸ்கள் அனைத்தையுமே ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் தான் அறிவிக்கிறார்.

ஸிமாக் பின் ஹர்ப் என்பாரைத் தவிர வேறு எந்த ஒருவரும் கபீஸா கூறியதாக எந்த ஒரு செய்தியையும் அறிவித்ததில்லை என்பதால் கபீஸா யாரென்று அறியப்படாதவர் என்பதில் சந்தேகமில்லை என்பது இவர்களின் வாதம்.

யாரென்று அறியப்படாதவர் என்பதற்குரிய பாதி இலக்கணத்தை மட்டும் தான் இவர்கள் பார்த்துள்ளனர். முழுமையாகப் பார்க்கவில்லை என்பதால் தான் கபீஸா பற்றி இவ்வாறு கூறுகின்றனர்.

ஹதீஸ் கலையையும், அறிவிப்பாளர்களையும், அவர்களின் தகுதிகளையும் அலசி ஆராயும் அறிஞர்கள் யாரும் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி எந்த நற்சான்றும் அளிக்காமல் இருந்தால், அப்போது தான் குறைந்த பட்சம் அவர் வழியாக இரண்டு பேராவது அறிவித்துள்ளார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

அறிவிப்பாளரை எடை போடும் அறிஞர்கள் யாராவது ஒருவரோ, பலரோ "நம்பகமானவர்' என்று ஒருவரைப் பற்றி முடிவு செய்திருந்தால் அப்போது அவர் வழியாகக் குறைந்தது இரண்டு பேர் அறிவித்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

அறிவிப்பாளரின் அனைத்துக் குறைகளையும், நிறைகளையும் திரட்டி வைத்துக் கொண்டு முடிவு செய்யும் அறிஞர்கள், ஒருவரை நம்பகமானவர் என்று கூறுகிறார்கள் என்றால் அந்த அறிவிப்பாளர் பற்றி அவர்கள் முழு அளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகி விடுகிறது.

எந்த அறிவிப்பாளரைப் பற்றி, "நம்பகமானவர்' என்று யாராலும் முடிவு செய்யப்படவில்லையோ அந்த அறிவிப்பாளர் பற்றித் தான் இரண்டு பேராவது அறிவித்துள்ளார்களா? என்ற விதியைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சில அறிவிப்பாளர்களின் நிலையை நாம் இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.

1. வலீத் பின் அப்துர்ரஹ்மான் அல் ஜாரூதி

இவர் வழியாக இவரது மகன் முன்திர் என்பார் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை.

அப்படியிருந்தும் இவர் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் (4621) பதிவாகியுள்ளது.

ஒருவர் மட்டுமே இவர் வழியாக அறிவித்திருப்பதால் அறியப்படாதவர் ஆவார் என்றால் புகாரி எப்படி இவரது ஹதீஸைப் பதிவு செய்திருப்பார்கள்? இவர் வழியாக ஒருவர் மட்டுமே அறிவித்திருந்தாலும் இவரது நம்பகத்தன்மைய வேறு வழியில் புகாரி அறிந்து கொண்டிருப்பதால் தான் பதிவு செய்துள்ளார்.

2. ஹுசைன் பின் முஹம்மத் அல் அன்ஸாரி என்பார் வழியாக ஸுஹ்ரி என்பவரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. ஆயினும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரி 425, 4010, 5401 முஸ்லிம் 1052 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

3. ஜுவைரியா பின் குதாமா என்பார் வழியாக அபூஜம்ரா எனும் நஸ்ர் பின் இம்ரான் என்பவர் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. அப்படியிருந்தும் இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை இமாம் புகாரி (3162) பதிவு செய்துள்ளார்.

4. அப்துல்லாஹ் பின் வதீஆ அல்அன்ஸாரி என்பார் வழியாக அபூஸயீத் அல்மக்புரி என்பார் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. ஆயினும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் (883, 910) பதிவு செய்யப்பட்டுள்ளன.

5. உமர் பின் முஹம்மத் பின் ஜுபைர் பின் ஜுபைர் பின் முத்இம் என்பார் வழியாக ஸுஹ்ரியைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. ஆயினும் இவர் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் (2821, 3148) பதிவு செய்யப்பட்டுள்ளன.

6. முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் என்பார் வழியாக ஸுஹ்ரியைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. அப்படியிருந்தும் இவர் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் 2581 பதிவாகியுள்ளது.

7. ஸைத் பின் ரபாஹ் அல்மதனி என்ற அறிவிப்பாளர் நபித்தோழராக இல்லாமல் இருந்தும், இவர் வழியாக மாலிக் என்பவர் மட்டுமே அறிவித்திருந்தும் இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை இமாம் புகாரி (1190) பதிவு செய்துள்ளார்கள்.

ஒரு அறிவிப்பாளர் வழியாக ஒரேயொருவர் மட்டுமே அறிவித்ததால் அவர் அறியப்படாதவர் என்பது பொதுவான விதியல்ல. யாரைப் பற்றி அறிஞர்கள் எந்த முடிவும் கூறவில்லையோ அத்தகைய அறிவிப்பாளர்களுக்கு மட்டுமே அந்த விதி உரியதாகும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இது பற்றி ஹதீஸ் கலை நூற்களில் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் பின் அஸமா என்பவர் வழியாக ஒருவர் மட்டுமே அறிவித்துள்ளார். அவர்கள் பார்வையில் இவர் யாரென அறியப்படாதவர் ஆவார். ஆயினும் ஒருவர் நாணயம், நேர்மையால் அறியப்பட்டவராக இருந்தால் அவர் வழியாக ஒருவர் மட்டும் அறிவிப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

நூல்: அன்னுகத் - 3/386

எனவே ஒரு அறிவிப்பாளரைப் பற்றி "யாரென அறியப்படாதவர்' என்று முடிவு செய்வதற்கு, அவரிடமிருந்து எத்தனை பேர் அறிவித்துள்ளனர் என்பது இரண்டாம் பட்சமாகக் கவனிக்க வேண்டியதாகும். அவர் நம்பகமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறியிருந்தால், அதன் பின்னர் அவர் வழியாக அறிவிப்பவர் எத்தனை பேர் என்பது கவனிக்கத் தேவையற்றதாகும்.

நெஞ்சில் கை கட்டுவது தொடர்பான ஹதீஸை கபீஸா என்பவர் வழியாக ஸிமாக் பின் ஹர்ப் மட்டுமே அறிவித்துள்ளார் என்பது உண்மை என்றாலும், இவரை இப்னு ஹிப்பான், இஜ்லீ ஆகிய அறிஞர்கள் நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு ஹிப்பான் அவர்கள் யாரையாவது நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

யாரைப் பற்றி எந்த அறிஞரும் குறை கூறவில்லையோ அவர்கள் நம்பகமானவர்கள் என்பது இப்னு ஹிப்பானின் அடிப்படை விதி.

யார் நம்பகமானவராக இருக்கிறாரோ அவரை எந்த அறிஞரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்.

அது போல் யாரென்றே தெரியாதவரைப் பற்றியும் யாருமே குறை கூறியிருக்க மாட்டார்கள்.

இப்னு ஹிப்பானின் அடிப்படை விதியின் படி நம்பகமானவர்களும் நம்பகமானவர் பட்டியலில் இருப்பார்கள். யாரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லையோ அவர்களும் நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

இப்னு ஹிப்பானின் விதியே தவறாக உள்ளதால் ஒரு அறிவிப்பாளரை "நம்பகமானவர்' என்று அவர் கூறியிருந்தால் அதை யாருமே கண்டு கொள்வதில்லை; கண்டு கொள்ளவும் கூடாது.

ஆனால் அவருடன் சேர்ந்து இஜ்லீ அவர்களும் கபீஸாவை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.

இவரும் இப்னு ஹிப்பானைப் போன்றவர் தான் என்று பிற்கால அறிஞர்கள் சிலர் கூறுவது மடமையின் உச்சக்கட்டமாகும்.

யாரெனத் தெரியாதவரையும் நம்பகமானவர் என்று கூறும் எந்த விதியையும் இஜ்லீ அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

யாரைப் பற்றி நம்பகமானவர் என்பதற்கான ஆதாரம் கிடைக்கிறதோ அவரைத் தான் நம்பகமானவர் என்று கூறுவார். அந்த வகையில் இவருக்கும் இப்னு ஹிப்பானுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

அறிவிப்பாளர்களை எடை போடுவதில் இஜ்லீயை விட வல்லவர்கள் "இன்ன அறிவிப்பாளர் நம்பகமானவர் அல்ல'' என்று கூறியிருக்கும் போது, அவர்களுக்கு மாற்றமாக இஜ்லீ கூறினால் மட்டும் தான் அதை அறிஞர்கள் மறுத்துள்ளனர்.

யாரென அறியப்படாதவர் என்று விமர்சிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி இஜ்லீ நம்பகமானவர் என்று கூறினால் அப்போது இஜ்லீயின் கூற்றை முந்தைய அறிஞர்கள் நிராகரிப்பதில்லை.

கபீஸாவைப் பொறுத்த வரை, இவர் பலவீனமானவர் என்றோ, வேறு வகையிலோ குறை கூறப்படவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் "இவர்களுக்கு மாற்றமாக இஜ்லீ கூறுவதை எப்படி ஏற்கலாம்?' என்று கேள்வி எழுப்ப முடியும். ஆனால் கபீஸாவைப் பற்றி யாரும் எந்தக் குறையும் கூறவில்லை.

இமாம் நஸயீ, இப்னுல் மதீனி ஆகியோர், "இவர் யாரென்று தெரியாதவர்' என்று தான் கூறுகின்றனர்.

எனவே அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட இஜ்லீ, "நம்பகமானவர்' என்று நற்சான்று அளிப்பதே போதுமானதாகும். பிற்காலத்தவர்கள் பழி சுமத்துவது போல் இஜ்லீ அவர்கள் சாதாரணமானவர் அல்ல.

"இஜ்லீ அவர்கள் ஹதீஸ் கலை பற்றிய ஆய்வு துவங்கிய, துவக்க காலத்தைச் சேர்ந்தவர். ஹிஜ்ரி 186ல் பிறந்து 261ல் மரணித்தவர். அதிகமாக மனனம் செய்தவர். கூஃபா, பஸரா, பாக்தாத், சிரியா, ஹிஜாஸ், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து தமது காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான அறிஞர்களிடம் கல்வி பயின்றவர்'' என்று அல்இலல் என்ற நூலில் (1/65) அதன் ஆசிரியர் புகழ்ந்துரைக்கிறார்.

"அறிவிப்பாளர் பற்றி விமர்சிக்கும் வகையில் இவர் எழுதிய நூல் மிகப் பயனுள்ளது. இவரது விரிவான நினைவாற்றலுக்குச் சான்றாகத் திகழ்கிறது'' என்று தஹபீ, தமது தத்கிரதுல் ஹுப்பாள் என்ற நூலில் நற்சான்று அளிக்கிறார்.

"அறிவிப்பாளர் பற்றி விமர்சிக்கும் இவரது நூலை நான் பார்வையிட்டேன். அதற்கு அடிக்குறிப்பும் எழுதியுள்ளேன். இவரது ஆழமான ஞானமும், விரிந்த நினைவாற்றலும் அந்த நூலிலிருந்து வெளிப்படுகிறது'' என்று தஹபீ அவர்கள் "ஸியரு அஃலாமுன் நுபலா' என்ற நூலில் பாராட்டுகிறார்.

இப்னுல் இமாத் அவர்களும் தமது ஷத்ராதுத் தஹப் என்ற நூலில் இவ்வாறே இவரைப் புகழ்ந்துரைத்துள்ளார்.

இத்துறையில் நூல் எழுதியவர்களில் காலத்தால் முந்தியவர்கள், அபூஹாத்தம், இஜ்லீ, இப்னு ஷாஹீர் ஆகியோர் என்று சகானி தமது மவ்லூஆத் நூலில் கூறுகிறார்.

எனவே கபீஸா என்பவர் வழியாக ஸிமாக் பின் ஹர்ப் மட்டுமே அறிவித்திருந்தாலும், இவரது நம்பகத்தன்மையை இஜ்லீ அவர்கள் உறுதி செய்திருப்பதால், "யாரென அறியப்படாதவர்' என்ற விமர்சன வட்டத்திற்குள் இவர் வர மாட்டார்.

இஜ்லீ அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஏற்கலாம் என்பதற்கு அறிஞர்களின் பல்வேறு கூற்றுக்கள் சான்றாக உள்ளன.

"...அம்ரு பின் பஜ்தான் என்பவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை இஜ்லீ நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னுல் கத்தான் "இவர் யாரென்று அறியப்படாதவர்'' என்று கவனக் குறைவாகக் கூறி விட்டார்'' என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.

நூல்: தல்கீஸ் 1/287

அம்ரு பின் பஜ்தான் பற்றி இஜ்லீ நம்கமானவர் என்று கூறியிருக்கும் போது அதைக் கவனிக்காமல் "இவர் அறியப்படாதவர்' என்று இப்னுல் கத்தான் கூறியிருப்பது கவனக் குறைவு என்ற இப்னு ஹஜர் அவர்களின் கூற்றிலிருந்து இஜ்லீ அவர்களின் நற்சான்றை அலட்சியப்படுத்த முடியாது என்பதை அறியலாம்.

ஸியாத் பின் நுஐம், அம்ரு வழியாக அறிவிக்கும் ஹதீஸை இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானதாகும். ஸியாத் பின் நுஐமை, இஜ்லீயும், இப்னு ஹிப்பானும் நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தன்கீஹுத் தஹ்கீக் 2/103

ஸியாத் பின் நுஐம் வழியாக இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மட்டுமே அறிவித்திருந்தும் அவர் அறிவிக்கும் ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று தன்கீஹுத் தஹ்கீக் நூலாசிரியர் அறிஞர் இப்னு அப்துல் ஹாதீ (ஹிஜ்ரீ 704) கூறுகிறார். மேலும் இப்னு ஹிப்பான், இஜ்லீ ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் எனக் கூறியுள்ள போதும் ஸியாத் பின் நுஐம் அறிவிக்கும் ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்கிறார்.

இஜ்லீ அவர்களின் நற்சான்றை அலட்சியப்படுத்த முடியாது என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

கபீஸாவை இஜ்லீ மட்டும் நம்பகமானவர் என்று கூறவில்லை. மாறாக வேறு பல அறிஞர்களும் அவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்னத் அஹ்மத் 20965, 20974, 20977 ஆகிய எண்ணுள்ள ஹதீஸ்கள், கபீஸா வழியாக ஸிமாக் அறிவிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து அறிவிப்பும் கபீஸா வழியாக ஸிமாக் அறிவிப்பதாக உள்ளது. இதைப் பற்றி தஹபீ அவர்கள் கூறும் போது,

"இதை அஹ்மத் இமாம் பதிவு செய்துள்ளார்கள்; இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்'' என்று கூறுகிறார்.

இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று தஹபீ கூறுவதன் மூலம் அறிவிப்பாளர்களில் ஒருவரான கபீஸாவும் நம்பகமானவர்கள் என்ற பட்டியலில் அடங்கியுள்ளார். இஜ்லீயைப் போன்று தஹபீயும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

அஹ்மதில் இடம் பெற்ற மேற்கண்ட ஹதீஸ் பற்றி பூசிரி அவர்கள்,

"இதை அபூதாவூத் தயாலிஸி வழியாக அஹ்மத் பின் ஹன்பல் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்'' என்று கூறுகிறார்.

நூல்: இத்ஹாப், பாகம்: 1, பக்கம்: 4

இஜ்லீ அவர்கள் கபீஸாவுக்கு அளித்த நற்சான்றின் அடிப்படையிலேயே தஹபீ, பூசிரி போன்றோர் கபீஸாவை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர்.

அல்பானி போன்றவர்கள் இஜ்லீயை இப்னு ஹிப்பானுடன் சேர்த்திருந்தாலும், தங்கள் நிலைபாட்டுக்கு ஆதரவு என்று வரும் போது மட்டும் இஜ்லீயை ஏற்றுக் கொள்வது வழக்கம்.

"நாஜியா பின் கஅப் என்பவரைத் தவிர அனைவரும் புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர்களும், நம்பகமானவர்களும் ஆவர். இஜ்லீ அவர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் அவர்களும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது என்று அபூதாவூத் கூறுவது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்'' என்று அல்பானி கூறுகிறார்.

நூல்: அஹ்காமுல் ஜனாயிஸ்

இஜ்லீயைத் தவிர யாரும் நம்பகமானவர் என்று கூறாத ஒருவரை அல்பானி ஏற்றுக் கொள்கிறார். (இப்னு ஹஜர் நம்பகமானவர் என்று கூறியிருப்பது, இஜ்லீயின் கூற்றின் அடிப்படையில் தான். ஏனெனில் இப்னு ஹஜர் அவர்கள் பிற்காலத்தவர். அவர் இதை சுயமாகக் கூற முடியாது)

இதே போல் ஹாரிஸா அல்கிந்தீ என்பவரைப் பற்றி அல்பானி கூறும் போது,

"இஜ்லீயும் இப்னு ஹிப்பானும் கூறுவது போல் இவர் நம்பகமானவர்'' என்று அல்பானி கூறுகிறார்.

நூல்: ளிலாலுல் ஜன்னத், 2/80

இது போல் அபுல் முஸன்னா என்பவரைப் பற்றி அல்பானி கூறும் போது,

"இப்னு ஹிப்பானும், இஜ்லீயும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இது ஹஸன் தரத்தில் உள்ளது'' என்றும் அல்பானி கூறுகிறார்.

நூல்: ஸமருல் முஸ்ததாப்

எனவே இஜ்லீயின் விமர்சனத்தைச் சில வேளை ஏற்றும், சில வேளை நிராகரித்தும் பிற்கால அறிஞர்கள் இரட்டை நிலை மேற்கொண்டது இதன் மூலம் அம்பலமாகிறது.

இஜ்லீயைத் தரம் தாழ்த்துவதில் வழிகாட்டியாக இருந்த அல்பானியே தன்னையும் அறியாமல் அவரது கூற்றை மட்டும் நம்பி, அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறார்.

எனவே கபீஸா என்ற அறிவிப்பாளர் மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்ததாக மேற்கண்ட ஹதீஸின் அடுத்த அறிவிப்பாளரான ஸிமாக் பின் ஹர்ப் பற்றியும் சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

கபீஸாவிடமிருந்து அறிவிக்கும் ஸிமாக் அவர்கள் பற்றிப் பாராட்டியும், குறை கூறியும் இரண்டு விதமான விமர்சனங்கள் உள்ளன.

காரணம் இவர் தனது முதுமைக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். அதனால் தப்பும் தவறுமாக அறிவிக்கலானார். அந்த நேரத்தில் இவரைக் கண்டவர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.

முதுமைக்கு முந்தைய காலத்தில் மிகச் சரியாக அறிவிப்பவராக இருந்தார். அந்த நிலையில் இவரைக் கண்டவர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.

இது போன்ற அறிவிப்பாளர்கள் எந்த ஹதீஸை மூளை குழம்புவதற்கு முன் அறிவித்தார்களோ அவை சரியான ஹதீஸ்களாகும்.

மூளை குழம்பிய பின் அறிவித்தவை பலவீனமானவை.

மூளை குழம்புவதற்கு முன்பா, பின்பா என்பது தெரியாவிட்டால் அவை முடிவு ஏதும் இன்றி நிறுத்தி வைக்கப்படும்.

ஷுஃபா, சுஃப்யான் போன்றவர்கள் ஸிமாக் மூளை குழம்புவதற்கு முன்னர் அவரிடம் கேட்டவர்கள். மூளை குழம்பிய பின்னர் அவரிடம் எதையும் கேட்டதில்லை. எனவே இவர்கள் ஸிமாக் வழியாக அறிவித்தால் அவை ஆதாரப்பூர்வமானது.

இவர் மூளை குழம்பிய பின் இவரிடம் கேட்டவர் இக்ரிமா மட்டும் தான். ஸிமாக் வழியாக இக்ரிமா அறிவித்தால் அது பலவீனமானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் தீர்வு கண்டுள்ளனர்.

இந்த ஹதீஸை ஸிமாக்கிடமிருந்து சுஃப்யான் தான் அறிவிக்கிறார். எனவே இது சரியான ஹதீஸ் என்பதில் ஐயம் இல்லை.

அடுத்ததாக மேற்கண்ட ஹதீஸின் அடுத்த அறிவிப்பாளரான சுஃப்யான் அவர்கள் மாமேதையும், இத்துறையின் இமாமும் ஆவார். அது போல் யஹ்யா பின் ஸயீத் அல் கத்தானும் மாமேதையும் இமாமுமாவார்.

எனவே நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர்ர்களும் நம்பகமானவர்களாக உள்ளதால் இது முற்றிலும் ஆதாரப்பூர்வமானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதில் மற்றொரு கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.

வகீஃ, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோரின் அறிவிப்பில் "நெஞ்சின் மீது' என்ற வாசகம் இடம் பெறவில்லை. எனவே ஒரு செய்தியில் மட்டும் இடம் பெறும், "நெஞ்சின் மீது' என்ற வாசகத்தை வைத்து சட்டம் இயற்றுவது சரியல்ல என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

நெஞ்சின் மீது கை வைக்க வேண்டும் என்று அறிவிக்கும் அஹ்மத் அறிவிப்பில் ஸிமாக் என்பவரிடமிருந்து சுஃப்யான், அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோர் அறிவிக்கின்றனர். இதில் அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோரின் அறிவிப்புக்களில், "இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள்'' என்று மட்டும் தான் இடம் பெற்றுள்ளது.

சுஃப்யான் அவர்களின் அறிவிப்பில் மட்டும் "நெஞ்சின் மீது'' என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. இதைப் போன்று சுஃப்யானிடமிருந்து யஹ்யா பின் ஸயீத், வகீஃ ஆகிய இருவர் அறிவிக்கின்றனர். இதில் வகீஃ என்பவரின் அறிவிப்பில், "நெஞ்சின் மீது'' என்ற வாசகம் இல்லை.

ஒரு செய்தியை ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவித்து, எல்லா மாணவர்களும் நம்பகத்தன்மையில் சமமாக இருந்து, ஒருவர் மற்ற ஏனைய மாணவர்களின் அறிவிப்புகளுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவித்தால் அந்தச் செய்தியை ஷாத் என்ற வகையைச் சார்ந்த பலவீனமான செய்தி என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவர்.

இதைப் போன்று நம்பகமான ஒரு அறிவிப்பாளர், அவரை விடக் கூடுதல் நம்பகத்தன்மை உள்ள ஒருவருக்கு முரணாக அறிவித்தால் நம்பகத்தன்மை குறைவாக உள்ளவரின் அறிவிப்பை ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்றும் சொல்வர்.

இந்தச் செய்தியும் ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்று வாதிட முனைகின்றனர். இது கவனமின்மையின் வெளிப்பாடாகும்.

ஒருவரின் அறிவிப்பில் "வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள்'' என்றும், மற்றொரு அறிவிப்பாளரின் செய்தியில், "வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சில் வைத்தார்கள்'' என்றும் இடம் பெறுவது முந்தைய செய்திக்கு முரணானது அல்ல. தேவையான கூடுதல் விளக்கம் தான் இதில் இடம் பெற்றுள்ளது.

ஒருவரின் அறிவிப்பில், "வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள்'' என்றும், இன்னொருவரின் அறிவிப்பில், "இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள்'' என்று அறிவித்திருந்தால் அதை முரண்பாடு என்று சொல்லலாம்.

ஆனால் "வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைத்தார்கள்' என்பது கூடுதலான செய்தியே தவிர முரணான செய்தி அல்ல. மேலும் இந்தச் செய்தியில் தான் சரியான விளக்கமும் உள்ளது.

வலது கையை இடது கையின் மீது வைத்த நபி (ஸல்) அவர்கள் அதை உடலில் எந்த இடத்தில் வைத்தார்கள் என்ற கேள்வி முந்தைய அறிவிப்பின் படி இருந்து கொண்டே இருக்கும். நெஞ்சின் மீது வைத்தார்கள் என்று சொன்னால் தான் அது முழுமை பெற்ற ஹதீஸாக அமையும். ஆகவே "நெஞ்சின் மீது வைத்தார்கள்' என்பது ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது அல்ல!


எனவே நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பது நமது மறு ஆய்விலும் உறுதியாகின்றது.

EGATHUVAM DEC 2007