சக்திக்கு ஏற்ப கடமை
இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு ஒரு வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளது.
இந்த மார்க்கத்தின் கடமைகள் அனைத்தும், "சக்திக்கு
அப்பாற்பட்ட சிரமம் இல்லை' என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
அதாவது இஸ்லாம் கூறும் ஒரு கடமையை, செயலைச் செய்வதற்குப் போதிய சக்தி இல்லாத நிலையில் ஒருவர் அந்தக்
கடமையைச் செய்யாவிட்டால் அவர் மீது குற்றம் ஏற்படாது. இதைத் திருக்குர்ஆன் பல்வேறு
இடங்களில் சுட்டிக் காட்டுகின்றது.
எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த
மாட்டான்.
அல்குர்ஆன் 2:286
திருக்குர்ஆனின் 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்களிலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.
பின்வரும் ஹதீஸ் இது தொடர்பாக மேலும் விளக்கத்தைத் தருகின்றது.
"வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது பற்றி உங்களை விசாரிப்பான்'' எனும் (2:284) வசனம் அருளப்பட்ட போது
மக்களின் உள்ளத்தில் முன்பு ஏற்பட்டிராத (கலக்கம்) ஒன்று ஏற்பட்டது. உடனே நபி (ஸல்)
அவர்கள், "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்; எங்களை ஒப்படைத்தோம் என்று நீங்கள் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
உடனே (மக்கள் அவ்வாறு செய்யவே) அவர்களது உள்ளத்தில் அல்லாஹ்
நம்பிக்கையை ஊட்டினான். மேலும், "எவரையும் அவரது சக்திக்குட்பட்டே
தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும்
அவருக்குரியதே! "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே!'' (என்று பிரார்த்தியுங்கள்) எனும் (2:286) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 179
நாம் வாழ்கின்ற காலம், நாடு, பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இஸ்லாத்தின் சில கட்டளைகளை நிறைவேற்ற
முடியாமல் போகலாம். உண்மையிலேயே இயலாத போது அதைச் செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி ஏதும்
கேட்க மாட்டான்.
அல்லது ஒருவரது உடல் நிலை, நோய், முதுமை போன்றவை காரணமாக சில கட்டளைகளைச் செயல்படுத்த முடியாமல்
போகும். உண்மையாகவே அவருக்கு இயலவில்லை என்ற நிலையில் செயல்படுத்தாதிருந்தால் அவரை
அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.
இஸ்லாம் கூறும் அனைத்துச் சட்டங்களுக்கும், வணக்க வழிபாடுகளுக்கும் இது பொருந்தக் கூடியது என்பதால், இந்த மார்க்கத்திலுள்ள அனைத்துச் சட்டங்களும் எளிமையானவை என்பதற்கு
இதுவே சிறந்த ஆதாரமாகும்.
நினைத்தாலே நன்மை! செய்தால் தான் தீமை!
மனித சுபாவம் தீமையின் பால் ஈர்க்கப்படும் தன்மையுடையதாக இருக்கிறது.
ஓர் அழகிய பெண் நம் கண் முன்னே நகரும் போது எத்தனையோ தவறான எண்ணங்கள் அலைமோதி விட்டுச்
செல்கின்றன. இப்படி மனித மனத்தில் தோன்றுபவை எல்லாம் பாவமாகப் பதியப்பட்டால் மனிதனின்
கதி என்னவாகும்?
நம்முடைய மனம் எண்ணுகின்ற நல்லவற்றையும், தீயவற்றையும் கொஞ்சம் பட்டியல் போட்டுப் பார்த்தோம் என்றால்
தீயவை தான் மிகைத்து நிற்கும். நரகத்திற்குச் செல்வதற்கு வேறெந்த தீமையான செயல்களும்
தேவையில்லை. நமது உள்ளத்தில் தோன்றுகின்ற தவறான எண்ணங்களே போதும். இப்படிப்பட்ட மனித
உள்ளத்தின் சுபாவத்தை நன்கு அறிந்த வல்ல நாயன் அளிக்கும் சலுகையைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச்
செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை
அவன் செய்து விட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக
விட்டு விட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய
எண்ணி, அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள்.
அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக
எழுதுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: புகாரி 7501, முஸ்லிம்
183
மலக்குகளுக்கு அல்லாஹ் இடுகின்ற இந்தக் கட்டளை மனித சமுதாயத்தின்
மன நிலையை அறிந்த மாபெரும் படைப்பாளனின் மகத்தான பேரருட்கொடையாகும்.
இத்தகைய எளிய மார்க்கத்தை அளித்த இறைவா உனக்கே புகழனைத்தும்
என்று போற்றி நிற்போமாக!
இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!
தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித்
தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம்
ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.
உண்மையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.
தொழுகைக்கான பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த ஒருவரிடம் நபி (ஸல்)
அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.
ஒரு கிராமவாசி பள்ளிவாச-ல் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி
தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் நளினமாக
எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நூல்: புகாரி 220
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு எளிமையைப் போதிக்கிறார்கள்; இனிமையைப் போதிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்த போது ஒரு மனிதர் தாறுமாறாக
நடந்து கொள்கிறார். தொழுது முடித்ததும் தன்னை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்
போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, நபியவர்களின் இதமான பேச்சில் தன்னையே பறி கொடுக்கிறார்; அன்னாரைப் பார்த்து பரவசப்பட்டு நிற்கிறார்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்
போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார். உடனே
நான், "யர்ஹமுகுமுல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக' என்று சொன்னேன். உடன்
மக்கள் என் மீது தங்கள் பார்வைகளைச் செலுத்தினர்.
"(உங்கள்) தாய் தொலைந்து போகட்டும்!
உங்கள் செய்தி என்ன? என்னையே பார்க்கிறீர்களே!'' என்று நான் கேட்டேன்.
அதற்கு நபித்தோழர்கள் என்னை (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில் கைகளால்
அடித்துக் காட்டினர். அவர்கள் என்னைப் பேசாமல்
இருக்கச் சொல்கிறார்கள் என்று அறிந்து மவுனமாகி விட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (கடுமையாகப்
பிடிப்பார்கள் என்று நினைத்தேன்) என் தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும் ஓர் ஆசிரியரை
அவர்களுக்கு முன்னரும் பின்னரும் நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை அரற்றவில்லை; என்னை அடிக்கவில்லை; என்னை ஏசவுமில்லை. "நிச்சயமாக இது தொழுகை! இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல் முறையாகாது. நிச்சயமாக தொழுகை என்பது இறைவனைத் துதித்தல், அவனைப் பெருமைப்படுத்துதல், குர்ஆன்
ஓதுதல் ஆகியவை மட்டும் அடங்கியதாகும்'' என்று கூறினார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம்(ர-)
நூல்: முஸ்-ம் 836
இங்கும் நபி (ஸல்) அவர்களின் எளிய அணுகுமுறையைக் கண்டு வியந்து
நிற்கிறோம்.
"நபி (ஸல்) அவர்கள் மீது மரணம் உண்டாகட்டும்' என்று யூதர்கள் தங்கள் வெறுப்பை அள்ளிக் கொட்டுகின்றனர். அந்த
நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய நளினமான, இனிய நடைமுறையைப்
பாருங்கள்.
யூதர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்)'' என்று (முகமன்) கூறினர். உடனே நான், "(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து
உங்களை அப்புறப்படுத்தி, உங்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்'' என்று (அவர்களுக்குப் பதில்) சொன்னேன். (அப்போது) நபி (ஸல்)
அவர்கள், "ஆயிஷா! நிதானம்! நளினமாக நடந்து கொள். மேலும் வன்மையுடன் நடந்து
கொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன்'' என்று சொன்னார்கள்.
அப்போது நான், "அவர்கள்
சொன்னதை நீங்கள் செவியேற்க வில்லையா?'' என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ கேட்கவில்லையா? (வஅலைக்கும் - அவ்வாறே உங்கள் மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு
நான் பதிலளித்து விட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்.
எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படாது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6030
இப்போது சொல்லுங்கள்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? அல்லது நற்குணங்களால் பரப்பப்பட்டதா? இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கமா? அல்லது
எளிய மார்க்கமா?
என்பதைப் புரிந்து கொள்ள இது போன்ற ஏராளமான சம்பவங்களை நபி
(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நாம் எடுத்துக் காட்ட முடியும்.
கொலைக் குற்றத்திலும் ஓர் எளிய சலுகை
உலக நாடுகளிலுள்ள சட்டங்கள் அனைத்தும் கொலைக் குற்றத்திற்கு
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கொடுக்கின்றன. இந்தத் தண்டனையை அரசாங்கமே நிறைவேற்றுகின்றது.
ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே இந்த உரிமையை பாதிக்கப் பட்டவர்களின்
குடும்பத்தாரிடம் கொடுக்கின்றது. குற்றவாளியைத் தண்டிப்பதும், மன்னிப்பதும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைப் பொறுத்தது என்று
தெளிவாக அறிவித்து விடுகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக்
கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்)
சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட
ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத்
துன்புறுத்தும் வேதனை உள்ளது.
அல்குர்ஆன் 2:178
இப்போது கொலையுண்டவரின் குடும்பத்தினர், கொலையாளியை மன்னித்து விட்டால், அதற்காக ஈட்டுத் தொகை வாங்கிக் கொண்டு விடுதலை செய்யச் சொல்கிறது.
இதை இறைவன் நமக்கு எளிமையாக்கிய அருட்கொடை என்று கூறுகிறான்.
குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் இஸ்லாம் ஓர் எளிய
மார்க்கம் என்று உலகுக்கு உணர்த்தி நிற்கின்றது.
உடலை வருத்தும் நேர்ச்சைகள்
மக்கள் தங்களுக்கு ஏதேனும் ஒரு காரியம் நிறைவேற வேண்டுமானால்
அதற்காக நேர்ச்சை செய்வர். அலகு குத்துதல், தீச்சட்டி
கையில் ஏந்துதல், காலில் செருப்பில்லாமல் ஆயிரக்கணக்கான
மைல்கள் நடந்து கோயிலுக்குச் செல்லுதல், கோயிலைச் சுற்றி
அங்கப் பிரதட்சிணம் செய்தல் என்று தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கின்ற நேர்ச்சைகளை
செய்து வருகின்றனர்.
பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விதமான நேர்ச்சைகளைச்
செய்வதை நாம் காண்கிறோம். இது போன்று கடுமையான நேர்ச்சைகளைத் தான் கடவுள் ஏற்றுக் கொள்வார்
என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. அதனால் தான் இவ்வாறு தங்களைத் தாங்களே வருத்திக்
கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்து, அதை நிறைவேற்றவும் செய்கின்றனர்.
மனிதர்களிடம் உள்ள இந்த இயற்கையான உணர்வுகளைப் புரிந்த இயற்கை
மார்க்கமான இஸ்லாம் மார்க்கம், இந்த நேர்ச்சை விஷயத்திலும்
சரியான ஒரு நெறிமுறையை வழங்குகின்றது.
பெற்ற பிள்ளையைப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து நரபலி கொடுக்கும்
கொடுமைகள் நமது நாட்டில் பரவலாக நடைபெறுவதைப் பார்க்கிறோம். இது போன்று பாவமான காரியங்களில்
நேர்ச்சை செய்வதை இஸ்லாம் தடை செய்கிறது. அப்படியே நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக்
கூடாது என்று கட்டளையிடுகிறது.
"அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை
செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை
செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது'' என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர-)
நூல்: புகாரி 6696, 6700
அதே போல் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளையும்
மார்க்கம் தடை செய்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை
நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். "அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல்
நின்று கொண்டிருப்பதாகவும், வெயி-ல் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும்
நேர்ச்சை செய்துள்ளார்'' என்று மக்கள் கூறினார்கள். அப்போது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவரைப் பேசுமாறும், நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும்
நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர-)
நூல்: புகாரி 6704
"இன்ன காரியம் எனக்கு நிறைவேறினால் நான் ஒற்றைக் காலில் நிற்பேன்; தரையில் புரளுவேன்; செருப்பணியாமல்
கொளுத்தும் வெயி-ல் நடப்பேன்'' என்றெல்லாம் சிலர் நேர்ச்சை
செய்கின்றனர்.
இப்படி தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளும் எந்தக் காரியத்தையும்
நேர்ச்சை செய்யக் கூடாது. இதை மேற்கண்ட ஹதீஸி-ருந்தும் அறியலாம். மேலும் பல சான்றுகளும்
உள்ளன.
ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். "இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று விசாரித்தனர். "நடந்தே செல்வதாக இவர் நேர்ச்சை செய்து
விட்டார்'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் "அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத்
தேவையற்றது''
என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ர-)
நூல்: புகாரி 1865, 6701
எனவே நேர்ச்சையின் பெயரால் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளக்
கூடாது. ஒரு பெண் இது போன்று நேர்ச்சை செய்த போது, அதை
நிறைவேற்றுவதற்காக ஒரு எளிமையான தீர்ப்பை நபி (ஸல்) அவர்கள் வழங்குகிறார்கள்.
என் சகோதரி, கஅபா ஆலயத்துக்கு
நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம்
கேட்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி
விளக்கம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவர் (சிறிது தூரம்)
நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி)
நூல்: புகாரி 1866
நேர்ச்சை என்ற பெயரில் மடத்தனமான காரியங்களையோ அல்லது மனிதன்
தன்னை வருத்திக் கொள்கின்ற காரியங்களையோ செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது இறைவனுக்குத்
தேவையில்லை என்று தெளிவாக இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம்
செய்கிறார்கள்.
மக்களுக்கு எளிமையையே இஸ்லாம் போதிக்கின்றது. சிரமத்தைப் போதிக்கவில்லை
என்ற அடிப்படையைத் தன்னகத்தே கொண்டு மக்களைத் தன் பால் விரைந்து வர அழைப்பு விடுக்கின்றது.
இஸ்லாம் காட்டும் எளிய திருமணம்
வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணத்தை நடத்திப் பார்! என்று கூறும்
அளவுக்குத் திருமணம் என்பது மிகவும் சிரமமான காரியமாக ஆக்கப்பட்டு விட்டது. ஒருவன்
திருமணம் முடிக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் தான் திருமணம் முடிக்க
முடியும் என்ற நிலை சமுதாயத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இஸ்லாம் மார்க்கம் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி
வைத்துள்ளது.
அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.
(அல்குர்ஆன் 4:21)
திருமணம் என்றால் லட்சக் கணக்கில் செலவு செய்து நடத்த வேண்டிய
ஒரு நிகழ்ச்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்
தான் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தி உள்ளார்கள்.
"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின்
மறைமுகமான பேரருள்) நிறைந்தது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388
நபி (ஸல்) அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தைப் பாருங்கள்.
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட
(மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன்'' என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப்
பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்து விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்க விட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்
(அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித் தோழர்களில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால் அவரை
எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?'' என்று கேட்டார்கள். அதற்கவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். நபி
(ஸல்) அவர்கள்,
"உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா
என்று பார்!''
என்றார்கள். அவரும் போய் பார்த்து விட்டுத் திரும்பி வந்து
"அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின்
தூதரே!'' என்று சொன்னார். "இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா
என்று பார்!''
என நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். அவர் மீண்டும்
சென்று விட்டுத் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான
மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இதோ இந்த எனது வேட்டி உள்ளது'' என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால் அவள் மீது ஏதும் இருக்காது.
அவள் அணிந்து கொண்டால் உம்மீது ஏதும் இருக்காது'' என்று
கூறினார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு அவர்
எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த போது
அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்ட போது, "உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன'' என்று எண்ணி எண்ணிச் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (ஓதுவேன்)'' என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், "உம்முடன் உள்ள குர்ஆன்
அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 5030
இந்த அளவுக்குத் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ள
இந்த மார்க்கத்தில் இன்று வரதட்சணை, ஆடம்பர விருந்துகள்
போன்ற காரணங்களால் திருமணம் என்றாலே லட்சக் கணக்கில் பணம் வேண்டும் என்ற நிலையை உருவாக்கி
விட்டார்கள்.
இன்னிசைக் கச்சேரிகள், வாண வேடிக்கைகள், வண்ண வண்ண அலங்காரக் கார்கள், ஊரை
வளைத்துப் போடப்பட்ட பந்தல்கள் என்று ஆடம்பரத் திருமணத்தின் பட்டியல்கள் நீண்டு கொண்டே
செல்கின்றன.
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனவுக்கு வந்த போது, அவர்களையும் ஸஅது பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள்
சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், "எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில்
ஒருத்தியை விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்'' என்று கூறினார். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), "உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!
எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்'' என்று கூறினார்.
அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம்
கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம்
நபி (ஸல்) அவர்கள், "என்ன விசேஷம்?'' என்று கேட்டார்கள். அதற்கவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக்
கொண்டேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டார்கள். "ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்'' என்று பதில் கூறினார். அதற்கு, "ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2048, 2049
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் என்ற இந்த நபித்தோழர் திருமணம் செய்து
கொண்ட விபரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் தான் தெரிகின்றது என்றால்
நபியவர்களின் காலத்தில் எந்த அளவுக்கு எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றுள்ளன
என்பதை அறிய முடியும்.
இந்த ஹதீஸில், திருமணத்தின்
போது அதிகப்பட்சமாக மணமகன் ஒரு விருந்தை வழங்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி
உள்ளார்கள். இதுவும் அவரவர் சக்திக்கு ஏற்ப சாதாரண முறையில் தான் அமைய வேண்டுமே தவிர
கடன் வாங்கி,
லட்சக்கணக்கில் செலவு செய்து விருந்து வைப்பதற்கு மார்க்கத்தில்
எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள், (திருமணம் முடித்து
வலீமா விருந்தளித்த போது) பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு
உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை
இட்டார்கள். (ஹைஸ் எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 4213
திருமணத்தில் விருந்து கொடுப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும்
நம்முடைய சக்திக்கு உட்பட்டுத் தான் வைக்க வேண்டும். கடன் வாங்கியோ அல்லது கையில் உள்ளதை
விற்றோ வைக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸைப் பின்பற்றி
நமது சக்திக்கு உட்பட்டு இருப்பதை வைத்து விருந்து கொடுத்துக் கொள்ளலாம்.
இது தான் இஸ்லாம் கூறும் எளிய திருமணமாகும். வரதட்சணை, ஆடம்பரங்கள், சீர் வரிசைகள், பெண் வீட்டு விருந்துகள் என மார்க்கத்திற்கு முரணான செயல்களின்
மூலம் இஸ்லாம் காட்டித் தந்த எளிய திருமணத்தை, சிரமமான காரியமாக
மாற்றியவர்கள் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.
EGATHUVAM OCT 2007