Apr 12, 2017

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை

ஜனவரி 4, 2009 அன்று சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநிலச் செயற்குழுவில், முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கரை தலைமைக் கழகப் பேச்சாளராகப் பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்ததை மாநில செயற்குழு ஒருமனதாக ஒப்புக் கொண்டது. அவர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே ஓர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு வந்தது. அதற்காக 38 நாட்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டு, மீண்டும் பொறுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் மீண்டும் ஷகீலா என்ற பெண் பாக்கர் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றார். அதுவும் ஆதாரப்பூர்வமாக அமைந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு பாக்கர் தகுதியற்றவர் என்று கருதி, அவர் மீண்டும் அந்தப் பொறுப்புக்குத் தேர்தலில் போட்டியிட்டு வராமல் பார்த்துக் கொண்டது. அத்துடன் அவரை அழைப்புப் பணிக்குப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவிலும் இருந்தது.

பொதுக்குழு மூலம் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்ற பின்பு அந்த நிர்வாகமும் இதே காரணத்துக்காக அழைப்புப் பணியில் பாக்கரைப் பயன்படுத்தாமல் இருந்தது. இந்த மறைமுக நடவடிக்கை அனைத்துமே பாக்கரின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதால் தான். ஆனால் பாக்கருக்கு இதைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை! தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக அவர் வெட்கப்படவுமில்லை! மாறாக, கிளைகளுடன் தொடர்பு கொண்டு, மாநிலத் தலைமை தன்னை ஒதுக்கி வைப்பதாகப் புலம்பிக் கொண்டிருந்தார். தலைமைக்கு எதிராகக் கிளைகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்.

ஷகீலாவின் குற்றச்சாட்டு ஓர் அப்பட்டமான நாடகம்; அது ஓர் அவதூறு! பாக்கரின் வளர்ச்சி பி.ஜே.வுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அவரை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட துருப்புச் சீட்டு என்றெல்லாம் பாக்கரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கதை கட்டிக் கொண்டிருந்தனர்.

பாக்கரின் வளர்ச்சி பி.ஜே.வுக்குப் பிடிக்கவில்லை என்றால், கோயம்பேடு முதல் கோவில்பட்டி வரை நந்தினியுடன் சல்லாபப் பயணம் சென்ற பாக்கர் கையும் களவுமாகப் பிடிபட்ட நேரத்தில் அவரை பி.ஜே. தூக்கி எறிந்திருக்கலாம். மாநில, மாவட்ட அழைப்பாளர்கள் அனைவரும் அதைத் தான் பி.ஜே.விடம் வேண்டினார்கள். ஆனால் பாக்கர் திருந்துவதற்கு பி.ஜே. மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். இந்த உண்மையை பாக்கரும், அவரது ஆதரவாளர்களும் வசதியாகவே மறந்து விட்டு, வளர்ச்சி பிடிக்கவில்லை என்ற பொய்க் குற்றச்சாட்டை வாந்தியெடுத்து வருகின்றனர்.

இதன் பின்னரும் பாக்கரிடம் மாநில தாயீக்கள், ஜமாஅத்தின் கண்ணியம் கருதி நான்கு மாதங்கள் ஒதுங்கியிருக்கும்படி கேட்கின்றனர். ஆனால் பாக்கர் அதற்கு இணங்கவில்லை. அவர் இணங்கினாலும் அவருடன் இருந்த சிலர் அவரை இணங்க விடவில்லை.

ஜமாஅத்தின் நிலைபாட்டிற்கு எதிராகவும், பாக்கருக்கு ஆதரவாகவும் முன்னாள் மாநிலச் செயலாளர்கள் முனீர், சித்தீக் ஆகியோர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இக்பால், ஷிப்லி, அபூபைஸல் ஆகியோர் மாநில நிர்வாகக் குழுவிலிருந்து விலகுகின்றனர்.

இறுதியில் பாக்கரையும் அவரது ஆதரவாளர்களையும் சேலம் செயற்குழு நீக்கம் செய்கின்றது. பாக்கரை நீக்கம் செய்தவுடன் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இரண்டாக உடைந்து விடும், ஒரு பெருங்கூட்டம் தன் பக்கம் வந்து சேர்ந்து விடும் என்று அவர்கள் கண்ட கனவு பகல் கனவாய் போனது; பாலைவனக் கானலாய் ஆனது. பாக்கர் விவகாரம் பெண் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்! பளிச்சென்று கண் முன்னால் தெரிகின்ற தெளிவான விவகாரம்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பார்களே! அது போன்ற பட்டவர்த்தனமான விஷயம்! இதற்குப் பின்னரும் இவருக்குப் பின்னால் யாரேனும் செல்கிறார்கள் என்றால் அது தெளிவான வழிகேடு! தனிமனித வழிபாடு!

பாக்கர் விஷயம் உணர்வு வார இதழ் மற்றும் பிரச்சாரங்களில் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. இதற்குப் பிறகு மாநிலத் தலைமை அவர் விஷயமாக எதுவும் எழுதப் போவதில்லை. அவரது தரப்பு வரம்பு மீறினால் மட்டுமே அதற்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும் என்று முடிவெடுத்துள்ளது. அந்த முடிவைத் தான் ஏகத்துவமும் மேற்கொள்ளப் போகின்றது.

பாக்கரின் நீக்கத்திற்குப் பிறகு இந்த இதழ் வெளியாவதால் அது பற்றிய சில விளக்கங்களை இங்கு வழங்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது. குறிப்பாக, தனி மனித வழிபாட்டைப் பற்றி இவ்விதழ் விளக்கவுள்ளது.

பாக்கருடன் இருப்பவர்கள் தியாகம் பற்றிப் பேசுகின்றனர். அந்தத் தியாகத்தையும் அடையாளம் காட்டுவது ஏகத்துவத்தின் கடமையாகின்றது.

இதல்லாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதி, அழைப்பாளரிடம் இருக்க வேண்டிய முன்மாதிரிப் பண்புகள் போன்றவற்றையும் இவ்விதழ் விளக்கவுள்ளது.


பாக்கர் போன்று யாரும் நீக்கப்படலாம். ஆனால் ஏகத்துவம் என்ற கொள்கை இறந்து விடாது என்பதை மையமாகக் கொண்டு இந்த விளக்கங்களை இவ்விதழ் வழங்குகின்றது. இதன் பின்னர் பாக்கர் விவகாரத்தை ஏறிட்டுப் பார்க்காமல் தன் வழக்கமான பயணத்தை ஏகத்துவம் மேற்கொள்ளும் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்.

EGATHUVAM FEB 2009