இனியும் வேண்டாம் இந்த இரவல் தாயீக்கள்
இன்று
அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவ்ஹீது மர்கஸ்கள் (ஏகத்துவப்
பிரச்சார மையங்கள்) சொந்தமாகவோ, அல்லது வாடகைக் கட்டடங்களிலோ அமையப் பெற்றிருக்கின்றன.
ஓர்
ஊர் என்றால் அந்த ஊரிலுள்ள மக்களுக்கு ஏற்படும் உடல் நோய்களைத் தீர்க்க ஒரு மருத்துவர்
கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அது போல் தவ்ஹீத் மர்கஸ் என்றால் அங்குள்ள மக்களின்
உள்ளத்தில் ஏற்படும் சந்தேக நோய்களைத் தீர்ப்பதற்கு மார்க்க அறிஞர் ஒருவர் தேவை! ஏகத்துவக்
கொள்கை வளர்ந்து வரும் ஊர்களில் இதைப் புரிந்தே வைத்துள்ளனர். ஆனால் அதற்காக இரவலாக
வெளியூரிலிருந்து தாயீக்களை (மார்க்க அறிஞர்களை) தேடுகின்றனர். அந்த அழைப்பாளர் களும்
ஜும்ஆவிற்கு மட்டும் வந்து செல்லும் சூழல் தான் உள்ளது.
ஒரு
ஜமாஅத்தின் செயல்பாடு,
பிரச்சாரப் பணி என்பது ஜும்ஆவுடன் நின்று விடுவதில்லை. அது பல்வேறு
ஆக்கப்பூர்வமான வழிமுறைகளில் அமைய வேண்டும்.
குழந்தைகள்
மதரஸா
குழந்தைகளுக்கு
மார்க்கக் கல்வியைப் போதிக்கும் பகுதி நேர மதரஸாக்களை காலையிலும், மாலையிலும்
நடத்த வேண்டும். இது தான் நம்முடைய சந்ததிகள் சத்திய வார்ப்புகளாக உருவாகும் படைக்
களமாகும்; பயிற்சித் தளமாகும்.
வயது
வந்தோர் கல்வி
மாலை, இரவு
நேரங்களில் வயது வந்தவர்கள் மற்றும் முதியோருக்காக குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள்
நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் குர்ஆன் ஓதத் தெரியாதவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுப்பதுடன், அவர்களைக்
கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக ஆக்க முடியும்.
குர்ஆன், ஹதீஸ்
வகுப்புகள்
வாரத்தில்
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களைத் தேர்வு செய்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்க வகுப்புகள்
நடத்தப்பட வேண்டும்.
இது
போன்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் தான் நமதூர் மக்களை ஏகத்துவத்தில் பிடிமானம்
கொண்டவர்களாக மாற்ற முடியும். ஊரில் ஒரு தாயீ இருந்தால் தான் இந்தக் காரியங்களைத் தடையின்றிச்
செயல்படுத்த முடியும்.
இதற்கு
நாம் வெளியூரிலிருந்து தாயீக்களை இரவலாகத் தருவிக்காமல் சொந்த ஊரிலேயே உருவாக்க வேண்டும்.
இந்த ஏகத்துவக் கொள்கையை நாம் இறந்த பிறகும் நமது மக்களிடம் என்றென்றும் தொடரச் செய்ய
வேண்டும்.
EGATHUVAM JUL 2006